லஸ்ஸி ஒரு பாரம்பரிய பானங்களுள் ஒன்றாகும். இது தயிரைக் கொண்டு செய்யப்படும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு வகையான ஜூஸ் எனலாம். அதிலும் இந்த லஸ்ஸியில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டும் லஸ்ஸி செய்யலாம். அதன் செய்முறையைக் கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து, செய்து குடித்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
தயிர் - 2 கப்
நறுக்கிய மாம்பழம் - 2 கப்
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பிஸ்தா - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தயிர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு 1 நிமிடம் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் பிஸ்தா தூவி பரிமாறினால், சுவையான மாம்பழ லஸ்ஸி ரெடி!!!