கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன! ஏன் தொியுமா????

மணக்கால் அய்யம்பேட்டை | 11:01 AM | Best Blogger Tips

 No photo description available.

 

மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்?
 
இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. 
 
ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள்.
 
 ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.
 
 
மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்துவிடுகிறது. 
 
மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.
 
 
இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.
 
 
எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். 
 
இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.
மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். 
 
அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!
 

 

நரசிம்மரை கட்டிவைத்த வேடனின் கதை தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:37 AM | Best Blogger Tips

 No photo description available.

 

ஆதிசங்கரரின் சீடர்களில் முக்கியமானவர் பத்மபாதர். இவர் கங்கை ஆற்றின் ஒரு கரையில் நின்று கொண்டிருந்தபோது மறுகரையில் இருந்த ஆதிசங்கரர், உடனடியாக வரும்படி அழைத்தார். எதைப் பற்றியும் யோசிக்காமல் கரைபுரண்டு ஓடும் கங்கை நீரில் இறங்கி நடக்கத் துவங்கிவிட்டார் பத்மபாதர். பிறகுதான் இது அவருக்கே தெரிந்தது. அதுவும் தாமரை மலர்கள் மீது கால் வைத்து நடந்து வந்தது. குருவின் மீது இவர் கொண்ட பக்தியைப் பார்த்து மகிழ்ந்த கங்கை தாயே தாமரை மலர்களை நீட்டி அவரைத் தாங்கி பிடித்துள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு பத்மபாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

ஆதிசங்கரரின் சீடரான பத்மபாதர் நரசிம்ம சுவாமியின் தீவிர பக்தர். அவருக்கு நரசிம்மரை நேரில் காண வேண்டும் என வெகு நாட்களாக ஆசை. இந்த ஆசை சில நாட்களில் வைராக்கியமாக மாறியது. இதனால் நரசிம்மரை நோக்கி கடும் தவம் புரிவதற்காக காட்டிற்குச் சென்றார். அடர்ந்த காட்டில் வெகு நாட்களாக கண்களை மூடி நரசிம்மரை காணவேண்டி தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேடன் ஒருவன், “யாரு சாமி நீ? பல நாட்களாக நான் உன்னை இங்கு பார்க்கிறேன். எதற்காக இங்கு வந்து கண்ணை மூடி உட்கார்ந்து இருக்கிறாய்” எனக் கேட்டான்.
 
அவனுக்கு பதில் அளித்த பத்மபாதர், “நான் நரசிம்மரை காண்பதற்காக தவம் செய்கிறேன். என்னைத் தொந்தரவு செய்யாதே” என கூறினார். “நரசிம்மமா? அப்படின்னா என்ன சாமி?” என அறியாமையுடன் கேட்டான் வேடன்.
 
“நரசிம்மம் என்றால் மனிதன் பாதி, மிருகம் பாதி. அதைப்பற்றி சொன்னால் உனக்கு புரியாது” என்று சொல்லிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் பத்மபாதர். ஆனால் வேடனோ, “நீ சொல்வது போன்ற ஒரு மிருகத்தை இதுவரை நான் இந்தக் காட்டில் பார்த்தது கிடையாது. உன்னைப் பார்த்தால் எனக்கு பாவமாக உள்ளது. உனக்காக இன்று பொழுது சாய்வதற்குள் அந்த மிருகம் எங்கிருந்தாலும் பிடித்துக் கட்டி இழுத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, காட்டிற்குள் சென்றான் வேடன். 
 
மான், முயல் என எத்தனையோ கண்ணில் பட்டும் அவற்றைப் பொருட்படுத்தாமல் நரசிம்மரின் மீதே அவனது சிந்தனை இருந்தது.
பசி, தாகம் அத்தனையும் மறந்து காடு முழுவதும் தேடினான். கிடைக்கவில்லை. அந்தி சாயும் நேரம் ஆனது. ‘தான் கொடுத்த வாக்குப்படி நரசிம்மத்தை கண்டுபிடிக்க முடியவில்லை’ என மனம் வருந்திய வேடன், ‘இனியும் தான் உயிர் வாழ்வதில் அர்த்தம் கிடையாது’ என நினைத்தான். கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் வாழ்வதை விட சாவது மேல் என் நினைத்த வேடன் ஒரு பெரிய பாறையின் மீது ஏறி உயிரை விட தயாரானான். அவனது அர்ப்பணிப்பைக் கண்டு உருகிப்போன ஸ்ரீமன் நாராயணன் நரசிம்மமாக வேடனுக்குக் காட்சி கொடுத்தார்.
 
தான் நாள் முழுவதும் தேடி அலைந்த நரசிம்மம் தன் முன் தோன்றியதைக் கண்டு உற்சாகமடைந்த வேடன், “மாட்டிக்கிட்டாயா? உன்னை விடுவேனா பார்” என்று சொல்லி செடி, கொடிகளை வைத்து நரசிம்மரைக் கட்டி பத்மபாதர் முன்பு அழைத்து வந்தான். பெரிய பெரிய வேதாந்திகளுக்கும் ரிஷிகளுக்கும் கட்டுப்படாத அந்த பரம்பொருள் ஒரு வேடனின் அன்பிற்கு கட்டுப்பட்டு நின்றார்.
 
“இதோ நீ கேட்ட நரசிம்மம்” எனக் காட்டினான். பத்மபாதர் கண்களுக்கு நரசிம்மம் தெரியவில்லை. அந்தரத்தில் நின்ற செடி, கொடிகள் மட்டுமே சுற்றிக்கொண்டு நிற்பது தெரிந்தது. இதனால் கோபம் அடைந்த பத்மபாதர், “பைத்தியமே, அந்த நரசிம்மர் என்னுடைய அரிய தவத்திற்கு வர மறுக்கிறார். உன்னிடமா சிக்குவார். வெறும் செடி, கொடிகளைக் காட்டி நரசிம்மம் என்கிறாயே” என ஏளனமாக சிரித்தார். ஆனால், தான் கட்டிக் கொண்டுவந்திருப்பது நரசிம்மம் என வேடன் பலமுறை சொல்லியும் பத்மபாதர் கண்ணுக்குத் தெரியவில்லை. அப்போது ஒரு அசரீரி கேட்டது.
 
“பத்மபாதா, வேடன் என்னை அடைந்தே தீர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தேடி அலைந்தான். என்னைக் காணாததால் உயிரை விடுவதற்கும் தயாரானான். ஆனால், நீயோ அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்று சந்தேகத்துடன் தவம் செய்தாய். உன்னிடம் ஆணவமும் உள்ளது. அப்படி இருக்கும்போது உனது கண்ணிற்கு நான் எப்படி தெரிவேன்?” என கூறி மறைந்து விட்டார் நரசிம்மர்.
 
ஒரு வேடனின் பக்திக்குக் கட்டுப்பட்ட நரசிம்மர், தனக்கு காட்சி அளிக்காமல் போனதற்கும், வேடனை போல் தனக்கு உறுதியான நம்பிக்கை இல்லாமல் போனதற்கும் வெட்கி தலை குனிந்தார் பத்மபாதர். அதோடு, வேடனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு, நம்பிக்கையும் முழு அர்ப்பணிப்புமே உண்மையான பக்தி என்பதை புரிந்து கொண்டார்.
 May be an image of 1 person, smiling and the Charminar