மனமென்னும் மாமருந்து

மணக்கால் அய்யம்பேட்டை | 10:47 AM | Best Blogger Tips

 மனமென்னும் மாமருந்து: மனதின் மூலமாக உடல் நலத்தை மீட்டெடுக்கும் வழி (உடல்  நலம் Book 4) (Tamil Edition) eBook : அ.உமர் பாரூக், அக்கு ஹீலர்: Amazon.in:  Books

 

மனமென்னும் மாமருந்து (மனதின் மூலமாக உடல் நலத்தை மீட்டெடுக்கும் வழி)

 

06. தும்மலும் இருமலும் நோய்கள் அல்ல!

உடல் தனக்குத்தானே தேவையான அனைத்தையும் உருவாக்கிக் கொள்கிறது என்பதையும், தனக்கு நேரும் தொந்தரவுகளில் இருந்து தானே குணப்படுத்திக் கொள்கிறது என்பதையும் சில உதாரணங்கள் மூலம் பார்த்தோம்.

 

உடல் தன்னைக் காத்துக் கொள்வதற்கான அமைப்பைக் கொண்டுள்ளது. உயிரின் இயல்பான ஓட்டத்தில் தனக்கான சக்தியைப் பெறுகிற உடல் எல்லாவிதமான பாதிப்புகளில் இருந்தும் தன்னை சமநிலைப் படுத்திக் கொள்கிறது.

 

உடல் தன்னைத்தானே தன் எதிர்ப்பு சக்தியால் எப்படிச் சரி செய்து கொள்கிறது? என்பதை இன்னும் சில உதாரணங்கள் மூலம் பார்க்கலாம்.

 

தூசி நம் கண்களில் பட்டு விடுகிறது. இப்போது நம் உடல் என்ன செய்கிறது? தூசியை எதிர்த்து வெளியேற்ற உடனடியாக கண்களில் கண்ணீரைச் சுரக்கிறது. இந்தக் கண்ணீர் சுரப்பு எதற்காக என்று நமக்குப் புரியும். கண்களை தூசி என்னும் கழிவுப்பொருளில் இருந்து பாதுகாக்க கண்ணீர் வருகிறது. இதே போன்று நம்மால் பார்க்க முடியாத கழிவுப்பொருட்கள் கண்களில் ஊடுருவும் போதும் கண்ணீர் வரும்.

 

ஒரு நாள் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. தூக்கத்தால் கிடைக்க வேண்டிய குளிர்ச்சி கண்களுக்குக் கிடைக்காததால் வெப்பமடைகின்றன. இப்போது கண்களின் வெப்பம் என்பதும் கழிவு தானே? இதை வெளியேற்ற கண்கள் என்ன செய்கின்றன? இப்போதும் கண்ணீர் மூலமாக வெளியேற்றும். முன்பு தூசி கண்ணில் பட்டபோது நமக்குப் புரிந்தது... கண்ணீர் எதற்கு வருகிறது என்பது. ஆனால் இப்போது காரணமே இல்லாமல் கண்ணீர் வருவதாக நாம் நினைக்கிறோம். நம்முடைய வசதிக்காக கண்களை எப்படியெல்லாம் தொந்தரவு செய்கிறோம் என்பதை மறந்து விட்டு, அதைச் சரிசெய்வதற்காக கண்ணீர் வருவதை மிகப்பெரிய தொந்தரவாக நினைக்கிறோம்.

 

கண்களின் அணுக்கள், நரம்புகள் ஆகியவற்றைச் சரிசெய்வதற்காக கண்கள் வெப்பமடைவதும், எரிச்சல் ஏற்படுவதும், சிவந்து விடுவதும், கண்ணீர் வருவதும், அரிப்பு ஏற்படுவதுமான தொந்தரவுகள் நம் எதிர்ப்பு சக்தியால் தோற்றுவிக்கப்படுகின்றன. அனைத்துமே நம் கண்களை குணப்படுத்தவும், பாதுகாக்கவும் தான். இயற்கையாக நாம் உடலிற்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிட்டு, உடல் நமக்குச் செய்யும் கடமைகளையும் தடுக்க முயல்கிறோம்.

 

அதே போல எரிச்சல் என்பதைப் பார்க்கலாம். ஒருவருக்கு தலைவலி ஏற்படுகிறது. அவர் தலைவலியைப் போக்குவதற்காக ஒரு தைலத்தைத் தடவுகிறார். வலி இருந்த பகுதியில் இப்போது எரிச்சல் ஏற்படுகிறது. எரிச்சலைக் கண்டு பயந்து மருத்துவரிடம் போகிறோமா? அப்படிப் போவதில்லை. ஏனென்றால் வலியைப் போக்குவதற்காக எரிச்சலை நாம் தான் ஏற்படுத்தினோம். இப்போது எரிச்சல் என்றால் என்ன? வலி இருக்கும் இடத்தில் நாம் ஏற்படுத்திய செயற்கையான எரிச்சல் வலியைப் போக்குகிறது. அதே நபருக்கு திடீரென்று நெற்றியில் எரிச்சல் ஏற்படுகிறது. தலைவலி இல்லாத நிலையில் இயற்கையாக எரிச்சல் ஏற்படுகிறது. இப்போது அவர் என்ன செய்வார்? எரிச்சலுக்காக மருத்துவரிடம் போவார். எரிச்சல் என்பது வலியைப் போக்குவதற்காக உடலில் ஏற்படும் மாற்றம். அப்படியானால் இப்போது ஏற்பட்டிருக்கும் எரிச்சல் நமக்குத் தெரியாத, நம்மால் உணர முடியாத வலியை நீக்குவதற்காக வந்திருக்கலாம் அல்லவா? ஆனால் நாம் அப்படிப் புரிந்துகொள்வதில்லை. இதை ஒரு புதிய தொந்தரவாகப் பார்க்கிறோம்.

 

முன்பு நாம் பார்த்த தூசி இப்போது மூக்கிற்குள் போகிறது. இப்போது உடலின் எதிர்ப்பு சக்தி என்ன செய்யும்? மூக்கிற்குள் அந்நியப்பொருட்கள் நுழைவதைத் தடுக்க இயற்கையாகவே ரோமங்கள் காணப்படுகின்றன. அதைத் தாண்டி தூசி நுழையும் போதுதான் எதிர்ப்பு சக்தியின் வேலை தேவையாக இருக்கிறது. இப்போது தும்மலை ஏற்படுத்துகிறது உடல். இந்தத் தும்மல் நல்லதா? கெட்டதா? சந்தேகமேயில்லாமல் நல்லதுதான். அவ்வாறு தும்மல் வரவில்லை என்றால் தூசி போன்ற உடலிற்கு ஒவ்வாத கழிவுப்பொருட்கள் மூக்கின் வழியாக உள்ளே போக வாய்ப்பு ஏற்படும்.

 

நமக்கு ஏற்படும் தும்மலின் வேகம் எவ்வளவு தெரியுமா? நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள் 180 கி.மீ வேகம் முதல் 220 கி.மீ வரை இருக்குமாம். சாதாரணமாக யோசித்துப் பாருங்கள். ஒரு வாகனத்தை இந்த வேகத்தில் ஓட்டவேண்டுமென்றால் (புல்லட் ரயிலைத் தவிர வேறு எதுவும் இந்த வேகத்தில் ஓடாது) எவ்வளவு எரிபொருள் தேவைப்படும்? அதே போலத்தான் நம் உடலிற்கு ஒரு தும்மலை ஏற்படுத்த எவ்வளவு சக்தி தேவைப்படும்? அவ்வளவு சக்தியை வீணாக ஒரு தும்மலிற்காக உடல் செலவளிக்கிறது என்றால் அது எவ்வளவு முக்கியமான வேலையாக இருக்கும்? நாம் சாதாரண தும்மல் தானே என்று நினைக்கிறோம். அந்நியப் பொருளை உடலிற்குள் ஊடுருவ விடாமல் தடுக்கும் மிக முக்கியமான வேலைகளில் ஒன்று தும்மல். தூசி மட்டுமல்லாமல் நம் கண்களுக்குப் புலனாகாத கழிவுப்பொருட்களும் மூக்கின் வழியாக உள்ளே செல்ல வாய்ப்புண்டு. அப்போதெல்லாம் நம் எதிர்ப்பு சக்தி தும்மல் மூலமாக அதைத்தடுக்கும். காரணமில்லாமல் தும்மல் வருகிறதே என்று நாம் சலித்துக் கொள்வோம். தும்மலை நிறுத்த மருத்துவரிடம் போவோம். ஆனால் உடல் எந்த ஒரு வேலையையும் காரணமின்றிச் செய்வதில்லை.

 

எல்லா தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி, மருந்து மாத்திரைகளின் உதவியோடு தூசி மூக்கிற்குள் நுழைகிறது. மூக்கின் உட்பகுதியில் இருக்கும்மியூகஸ் மெம்பரேன்எனப்படும் சைனஸ்ஈரமான சவ்வு இப்படி நுழையும் கழிவுப்பொருட்களை ஈர்த்து தன்னிடம் ஒட்ட வைத்துக் கொள்கிறது. இப்படி ஒவ்வொரு முறையும் மூக்கின் உள்ளே நுழையும் கழிவுப் பொருட்களை சைனஸ் சவ்வு தன்னிடம் வைத்துக் கொள்கிறது. நம்முடைய எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமாக இருக்கும் சூழலில், உள்ளே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கழிவுகளை தும்மல் மூலம் வெளியேற்றத் துவங்குகிறது. இப்போது ஏற்படும் தும்மல் என்பது உள்ளேயிருக்கும் கழிவுகளை வெளியே தூக்கி எறிவதற்காக ஏற்படுவது. இதை அனுமதிப்பது நல்லதா? அல்லது வெளியேற்றப்படுகிற கழிவுகளை உடலுக்குள்ளேயே பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லதா? தும்மல் தொடர்ந்து ஏற்படுகிற போது நாம் பயந்துபோய் அதை நிறுத்த ஏற்பாடு செய்கிறோம். ஆனால் உடலின் எதிர்ப்பு சக்தியால் நடத்தப்படுகிற முக்கியமான வேலை என்பதை நாம் மறந்து விடுகிறோம். தும்மல் என்பது வெளியே இருந்து மூக்கிற்குள் நுழைய முயலும் கழிவுப் பொருட்களை எதிர்க்கவும், உள்ளே தேங்கிய கழிவுகளை வெளியேற்றவு உடலால் நடத்தப்படுகிற எதிர்ப்பு இயக்கம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம் உதவியோடு ரோமங்களைக் கடந்து, சைனசைக் கடந்து மூக்கின் உள்ளே நுழையும் தூசி நேரடியாக நுரையீரலுக்குச் செல்கிறது. நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்... உடலின் வெள்ளை அணுக்கள் சீழாக மாறுகின்றன என்று. சீழ் என்பதும் சளி என்பதும் அடிப்படையில் ஒரே தன்மையுடைய பொருட்கள்தான். நுரையீரலுக்குள் நுழைந்த அந்நியப்பொருளான தூசியை எதிர்ப்பு சக்தி சளியைச் சுரந்து தடுக்கிறது. சளியால் சூழப்பட்ட தூசி குறிப்பிட்ட இடத்திலேயே அடைத்து வைக்கப்படுகிறது. இங்கு சளி எதற்காகச் சுரந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உடலின் உள்ளே நுழையும் கழுவிப்பொருட்களை சூழ்ந்து, அடைத்து வைப்பதற்காக சளி சுரக்கிறது. இவ்வாறு உருவான சளி நுரையீரலில் தங்குகிறது. இந்தச் சளியை, அதிலுள்ள கழிவுப்பொருளோடு நுரையீரலை விட்டு வெளியேற்ற முயல்கிறது உடல். இப்போதுதான் எதிர்ப்பு சக்தியால் இருமல் தோற்றுவிக்கப்படுகிறது. இருமல் மூலம் நுரையீரலில் இருக்கும் சளி வெளியேற்றப்படுகிறது.

இருமல் ஏன் ஏற்பட்டது? நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றுவதற்காக. அப்படியானால் இருமல் எப்போது நிற்கும்? சளி வெளியேற்றப்பட்ட பிறகு. சளி முழுமையாக வெளியேறும் வரை இருமல் இருக்கத்தான் செய்யும். எத்தனை நாளில் சளி வெளியேறும் என்பது உள்ளே எவ்வளவு சளி இருக்கிறது என்பதைப் பொறுத்து மாறுபடும்.

 மனம் என்னும் மாமருந்து – மல்லிகை மகள்

நம் எதிர்ப்பு சக்தி வேறென்ன வேலைகளைச் செய்கிறது? நாம் உண்ணும் உணவுப் பொருள் மோசமானதாக இருக்கும் போதோ அல்லது, அதனை செரிக்க முடியாத உடல்நிலை இருக்கும் போதோ நமக்கு குமட்டல் ஏற்படுகிறது. குமட்டல் என்பது நம் செரிமான மண்டலம் இந்த உணவைச் செரிக்க தயாராக இல்லை என்பதை நமக்கு விளக்குகிறது. இந்த எச்சரிக்கையை மீறி நாம் சாப்பிடும் போது வாந்தி வருகிறது. செரிக்க முடியாத உணவுகளை வெளியேற்றுவதற்காக உடல் வாந்தியை ஏற்படுத்துகிறது. குமட்டல் ஏற்படும் போதே நாம் உணவை தவிர்த்திருந்தால் வாந்தி வந்திருக்காது. அதே போல, நாம் சாப்பிட்ட பிறகு உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் உணவை செரிக்க முடியாத நிலை ஏற்படுகிற போதும் வாந்தி மூலம் உணவு வெளியேற்றப்படுகிறது. ஆக, வாந்தி, குமட்டல் என்பதும் எதிர்ப்பு சக்தியின் வேலைகள் தான். இதையும் மீறி செயற்கையான முறையில் வலுக்கட்டாயமாக நாம் சாப்பிடுவோமானால் என்ன நடக்கும்?

 

இரைப்பை வரை உள்ள கழிவுகளை வாந்தியாகவும், இரைப்பைக்குக் கீழேயுள்ள கழிவுகளை பேதியாகவும் நம் உடல் வெளியேற்றும்.

 

பேதியில் வெளியேற்றப்படும் பொருள் உணவுப்பொருளா? கழிவுப்பொருளா? உடல் வெளியேற்றும் ஒவ்வொரு பொருளும் கழிவுப் பொருள்தான். இப்படி பேதியில் வெளியேற்றப் படவேண்டிய கழிவுகள் உடலிலேயே, நம் குடலிலேயே தங்குமானால் என்ன ஆகும்? சில நேரங்களில் கழிவுகள் மோசமானதாக இருக்கும்போது பேதி நம் தோலில் பட்ட இடத்திலெல்லாம் புண்கள் வருவதுண்டு. கவனித்திருக்கிறீர்களா? இவ்வளவு மோசமான ரசாயனத் தன்மை கொண்ட கழிவுகளை உடல் வெளியேற்றுவது நல்லதா? கெட்டதா? உடலில் ஏற்படும் ஒவ்வொரு நல்ல விளைவையும் நாம் உடலுக்கு எதிரானதாகவே புரிந்து கொள்கிறோம். இப்படி ஏற்படும் பேதியும் எதிர்ப்பு சக்தியின் நடவடிக்கைதான்.

 

நாம் இது வரை பார்த்த தொந்தரவுகளை நோய் என்று புரிந்து கொண்டோமானால் அதற்கு மருத்துவரைத் தேடி ஓடுவோம். மாறாக அது நோய் அல்ல... உடலின் எதிர்ப்பு சக்தியின் நடவடிக்கைதான் என்று புரியும் போதுஉடலின் குணமாக்கும் ஆற்றல் புரியும்.

 

இதைப் புரிந்த நம் முன்னோர்கள் தங்கள் வாழ்வில் இயற்கையோடு இணைந்து நோய்களில் இருந்து விடுதலை அடைந்தார்கள். உடலில் ஏற்படும் தொந்தரவுகளைக் கண்டு அவர்கள் பயப்படவில்லை. உடலின் இயல்பில் அதுவும் ஒரு பகுதி என்று புரிந்து கொண்டார்கள். அந்தப் புரிதல் மனச் சமநிலையைப் பாதிக்கவில்லை. உடலின் இயல்பையும் பாதிக்கவில்லை.

 

மனம் பற்றிப் பேசும் போதுஉடல் குறித்து ஏன் அறிந்து கொளள வேண்டும்? ஏனென்றால் மனமும், உடலும் இயல்பில் சமநிலையிலேயே இருக்கின்றன. மனச்சமநிலை கெடும்போது உடற்சமநிலை கெடுகிறது. தொந்தரவுகள் உருவாகின்றன. அதே போல, உடற் சமநிலை கெடும்போது மனச்சமநிலையும் கெடுகிறது.

 

உடலைப் பற்றிய அச்சத்தை நாம் கைவிட்டு விட்டால் மனச் சமநிலை கெடுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

 

வாருங்கள்... மனம் குறித்த அடுத்த விஷயத்திற்குச் செல்லலாம்.

 

தொடரும்...

 

நன்றி - உமர் பாருக் மற்றும் மல்லிகை மகள் மாத இதழ்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மனமென்னும் மாமருந்து