தூரத்தில் தலையில் சுமையுடன் நடந்து வந்து கொண்டிருந்தவரை கடகடவென புகைப்படம் எடுத்துவிட்டு அவரது அருகாமை வருகைக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்
வியர்த்து விறுவிறுப்பாய் அருகாமையில் வந்து சேர்ந்தவரிடம்
என்னக்கா வேல முடிஞ்சுருச்சா? வீட்டுக்கா என்றதும்
ஆமா ராஜா, வீட்டுக்குதா, காலையில போன இப்போதான் வர, மலாட்ட கொல்லி, எல்லாத்தையும் அறுத்துட்டு இப்போதான் வர,
இருட்டிருச்சு, போயிட்டு இதுகப்பறம் வேற சமைக்கணும், என்று சுறுசுறுப்பாய் முடித்தார்
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே உழைத்து கலைப்புடன் இருப்பவரிடம் எடுத்த புகைப்படத்தை காட்டினால் மகிழ்ச்சி அடைவாரா அல்லது எரிச்சல் அடைவாரா என்ற சந்தேகம் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது
சரி கிராமங்களில் நாம் வாங்காத திட்டா என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு
அக்கா உங்கள ஃபோட்டோ எடுத்திருக்க பாக்குறீங்களா என்றதும்
என்னையா எப்போ ராஜா எடுத்த ஆச்சரியத்துடனும் வெட்கத்துடனும் சிரித்தபடியே கேட்டார்
இங்க பாருக்கா, நீங்க எட்டருந்து வரும் போதே எடுத்துட்டக்கா என்று திரையை அவரது முகத்திற்கு பக்கம் திருப்பியதும் முகம் முழுக்க சிரிப்பு
அவரது சிரிப்பிற்க்கு பக்கவாத்தியமாக மேலே வானில் பச்சைக்கிளிகள் நான்கு கீ கீ கீ என்று கத்தியபடி கூட்டை நோக்கி வேக வேகமாக சென்றுகொண்டிருந்தன
எப்போ ராஜா எடுத்த? அழகா இருக்கு தங்கம், பராவால எனக்கே தெரியாம எடுத்திருக்க, சரி இது எடுத்து என்ன பண்ணுவ என்று வழக்கம் போல எல்லா கிராமவாசிகள் கேட்கும் அதே கேள்வியை கேட்டார்
நா ஃபோட்டோகிராபர் கா, எனக்கு கிராமங்கள், பறவைகள், விவசாயிகள், கிராமத்து தனித்துவமான மனிதர்கள் இவங்களை எல்லா ஃபோட்டோ எடுக்குறது ரொம்ப பிடிக்கும்,
எடுக்குற ஃபோட்டோவ என்னோட ஞாபகார்த்தமாகவும் எல்லாரும் ரசிக்கும்படியாகவும் ஃபேஸ் புக்ல போடுவேன் கா என்றதும்
ஃபேஸ் புக்ல போடுவியா? அப்போ உலகம் முழுக்க போவேனா நானு என்று பெருமிதத்துடன் சிரித்தவரிடம்
ஆமாக்கா நம்ம தமிழ் மக்கள் உலகம் முழுக்க எங்கெங்கெல்லாம் இருக்காங்களோ அங்கலா போவீங்ககக்கா, அப்பறம் உங்க ஃபோட்டோவ நா ஃபேஸ் புக்ல போட்டுக்கவா, உங்களுக்கு எதும் ஆட்சேபன இல்லையே கா என்றதும்
இதுல என்ன ராஜா ஆட்சேபனை, நானும் ஃபோன் வெச்சிருக்க, அதுல பொம்பளைங்க எவ்ளோ அரையும் குறையுமா ரீல்ஸ் கீல்ஸ்ணு வந்து கேவலமா ஆடுறாங்கண்ணு நானும் பாத்துட்டுதான் இருக்க,
ஆனா அந்த கேவலமான ஜென்மங்கள சொல்லி தப்பில்ல அதுங்களுக்கு லைக் போடுறாணுங்களே கேடுகெட்டவனுங்க அவனுங்களா தான் செருப்பால அடிக்கணும், அவனுங்க லைக் போடுறதுனால தான்
அவளுங்க அடுத்த வீடியோ போடுறாளுங்க மானங்கெட்டவளுங்க, பாக்கும் போது வயிறு எறியும், சரி அதவிடு
எனக்கென்ன, அக்கா போய் காட்டுல உழைச்சிட்டு வரேன்,
இந்த ஃபோட்டோ போட்டா எனக்கு தான கௌரவம், இருபது ரூபாவா இருந்தாலும் உழைச்சு சாப்பிடணும், நா உழைச்சிட்டு வர ஃபோட்டோ தான போட போற, அது எனக்கு தான் பெருமை, நீ போடு தங்கம் என்று சிரித்தபடியும் சிலாய்த்தபடியும் முடித்தார்
அவர் தான் ஒரு உழவச்சி என்ற பெருமையும், கௌரவமும் அவரது ஒவ்வொரு பேச்சை முடிக்கும் போதும் ஆங்காங்கே மிளிர்ந்தது
அக்கா நீங்க வேற தலையில வெயிட்ட வெச்சிட்டு நின்னுட்டு இருக்கீங்க, கஷ்ட்டமா இருக்கு நீங்க கிளம்புங்க, வீட்டு ஃபோன் இல்ல உங்க ஃபோன்லயிருந்து ஃபேஸ் புக்ல நா சொல்ற பக்கத்தை பாருங்க, அதுல நீங்க வருவீங்க பாருங்க என்றதும்
எது இது வெயிட்டா?
இது மாதிரி புல்லு கட்ட நாலு மடங்கு வெச்சிட்டு ஏழு கிலோமீட்டர் நடப்பேன் அக்கா, இது சும்மா பஞ்சு மெத்தை கண்ணு, சரி உன்னோட நம்பர எழுதி கொடு, தம்பிய உன்கிட்ட பேச சொல்றேன், ஃபோட்டோ போடும் போது தம்பிக்கு வாட்ஸ்அப் பண்ணு என்றார்
என்னக்கா ரீல்ஸ் என்ற வாட்ஸ்அப் என்ற பெரிய ஆளுதான் போலக்கா நீ என்றதும்
முகம் முழுக்க சிரிப்புடன் என்ன பன்றது தங்கம், இப்போ உலகம் முழுக்க எல்லார் கையிலும் வந்துருச்சு இதுல கிராமத்துகாரங்க மட்டும் என்ன விதிவிலக்கா, ஃபோன் வந்ததுலயிருந்து படிக்காதவங்க கூட எல்லாத்தையும் கையிலே தெரிஞ்சிக்குறாங்க
கண்ணு, இனி எந்த அரசியல்வாதியும் எந்த பேக் காரணும் கிராமத்து காரங்கள ஏமாத்துறது கஷ்டம், கெட்டதும் இருக்கு நல்லதும் இருக்கு நல்லத தெரிஞ்சிக்க வேண்டியதுதான் என்று முடிப்பதற்குள் சட்டென்று சுதாரித்தவர்
அச்சச்சோ தங்கம் பேசினதுல நேரம் போனதே தெரியல, அங்க பாரு தெரு லைட்டே போட்டுட்டாங்க,
நா கிளம்புற, நீ பத்திரமா போயிட்டு வா, இப்படியே போனா மெயின் ரோட்டுல டீ கடை இருக்கும், அங்க டீ வாங்கி குடிச்சிட்டு போ, அக்கா ஃபேஸ் புக்ல கண்டிப்பா பாக்குற, நீ தைரியமா போடு, என்று எனக்கு அவசர அவசரமாக அனுமதியும் விடையும் அங்கிருந்து கொடுத்துவிட்டு கடகடவென்று நடந்து சென்று சாலையின் இடது பக்கம் வளைந்து எனது கண்களிருந்து முழுவதுமாய் மறைந்தார்
வானில் நட்சத்திரங்கள் வேக வேகமாய் இரவு பணிக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருந்தன
அவரிடம் இன்னும் அதிக நேரம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் தோன்றியது, காரணம் அவரது உடல் மொழி மற்றும் பேச்சு முழுக்க தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் மேலோங்கி காணப்பட்டது
எப்போதும் இது போன்ற நேர்மறை சிந்தனை உடையவர்களிடம் நேரம் செலவிடும் போது நமது நன்நேரமும், ஆயுளும் மேலோங்கும்
அதில் எல்லாம் தகுதியுடைய ஒரு சிறப்பான மனிதரை இன்று சந்திக்க கடவுளாய் பூஜிக்கப்படும் புகைப்பட கலை நேரம் உருவாக்கி தந்தது என்று உதட்டோர சிரிப்புடன் தனியாய் அங்கே நின்றுக் கொண்டிருக்கும் போது
அருகிலிருந்த புதர்களில் இரவை வரவேற்கும் மகிழ்ச்சியில் சுவற்று கோழிகள் அனைத்தும் ஒருமித்தமாய் சப்தம் எழுப்ப தொடங்கியது
சுற்றி காணும் போது இருள் அப்பாதைக்கு தாழிட்டிருந்தது, எகிறி உதைத்து ஒளிர்ந்த வாகன தலையொளி அப்பாதையின் தாழை திறந்தது
இருளை பிளந்து சீறிட்டு பறந்த இருசக்கர வாகனம் நகரின் பிரதான சாலையை பிடிக்க
இடப்பக்கம் கூரக்கடை டீ கடை ஒன்று செய்தித்தாள்களால் இரண்டு வாடிக்கையாளர்களை தக்கவைத்தபடி ஆர்பாட்டமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது.