இந்து வழிபாட்டில் அரிய, பயனுள்ள சில முக்கியமான தகவல்களை இன்றைய பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிவனுக்கு எதிரே அனுமன் :
பொதுவாக சிவபெருமான் சன்னிதிக்கு எதிரில் நந்திதேவர் இருப்பதே வழக்கம். அதேபோல் பெருமாள் ஆலயங்களில் தான் பெருமாளுக்கு எதிரில் அனுமன் வீற்றிருப்பார். ஆனால் ஆந்திர மாநிலம் ராமகிரியில் உள்ள காலபைரவர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு எதிராக அனுமன் நின்ற கோலத்தில் வணங்கியபடி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இது எங்கும் இல்லாத அபூர்வ காட்சியாக கருதப்படுகிறது.
கோழி வடிவில் சிவன் :
ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே உள்ளது பிடாபுரம் என்ற தலம். இங்கு குக்குடேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவனின் திருநாமம் ‘குக்குடேஸ்வரர்’. குக்குடம் என்றால் கோழி என்று பொருள்படும். இத்தலத்தில் உள்ள சிவலிங்கம், கோழி வடிவில் இரண்டு இறக்கைகளுடன் காட்சி அளிப்பதால், இந்த இறைவனுக்கு இந்த திருநாமம் வந்ததாக கூறப்படுகிறது.
கிளி வடிவில் வேதங்கள் :
திருச்செந்தூரில் பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்டநாகங்கள், அஷ்ட யானைகள், மேதாமலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு தேவங்களும் கிளிகள் வடிவில் இருக்கின்றன. வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார்.
திருஷ்டிப்பொட்டு :
சென்னை அருகே உள்ள திருவிடந்தையில் வீற்றிருக்கும் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று காணப் படுகிறது. இந்தப் பொட்டு இயற்கையாகவே அமைந்தது என்றும், இந்தப் பொட்டையும், தாயாரின் திருமுகத்தின் காணப்படும் திருஷ்டிப் பொட்டையும் தரிசிப்பவர்களுக்கு, ‘திருஷ்டி தோஷம்’ நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
லிங்க வடிவில் சனீஸ்வரன் :
திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக சனீஸ்வர பகவானின் சிறப்புமிக்கத் தலங்களில் ஒன்றாக குச்சானூர் விளங்குகிறது. இங்குள்ள சனீஸ்வரர், சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் கருமை மற்றும் கருநீல நிறங்களில் உள்ள வஸ்திரங்களை தானமாக வழங்குவது சிறப்பான ஒன்றாகும். மேலும் எள் சாதம், கருப்பு திராட்சை, பீட்ரூட் அல்வா போன்ற கருப்பு நிற உணவுகளையும் அன்னதானமாக வழங்குதல், சனி தோஷத்தை விலக்கும் என்கிறார்கள்.
குந்தியின் பாவம் போக்கிய நீராடல் :
பாண்டவர்களின் தாயாராகிய குந்திதேவி, திருமணத்திற்கு முன்பு முனிவர் ஒருவரிடம் இருந்து பெற்ற அரிய வரங்களை விளையாட்டுத்தனமாக பிரயோகித்துப் பார்த்தாள். இதனால் கன்னியாக இருக்கும்போதே, சூரியன் மூலம் கர்ணனைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தையை யாரும் பார்க்கும் முன்பாக, ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விட்டாள். அந்தப் பாவம் அவளை உறுத்திக் கொண்டே இருந்தது.
ஒரு நாள் ஒரு முனிவரைச் சந்தித்த குந்தி, கர்ணனை ஆற்றில்விட்ட பாவம் நீங்க வழி கேட்டாள். அதற்கு அந்த முனிவர் ‘மாசி மகம் அன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும்’ என்றார். ‘ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும்?’ என்று பரிதவித்துப் போன குந்தி, இறைவனை நினைத்து வேண்டினாள்.
அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘திருநல்லூர் திருக்கோவில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களை வர வழைக்கிறேன். அதில் மாசி மகம் அன்று நீராடி உன்னுடைய பாவங்களைப் போக்கிக்கொள்’ என்றது. குந்தியும் அப்படியே செய்து, தன்னுடைய பாவங்களை விலக்கிக் கொண்டாள். அவள் நீராடிய தீர்த்தம் ‘சப்த சாகர தீர்த்தம்’. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ள திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில்தான் இந்த தீர்த்தம் உள்ளது.
பஞ்சகுரோசத் தலங்கள் :
காவிரி நதியானது, தலைக்காவிரி, அகன்ற காவிரி, பஞ்சநதம், கும்பகோணம், மத்தியார்ச்சுனம், மயிலாடுதுறை, காவிரிப்பூம்பட்டினம் என 7 கட்டங்களாக பாய்ந்து பெருகுகிறது. இவற்றில் நடுநாயகமாக இருப்பது கும்பகோணம். ஒரு முறை பிரளய காலத்தில் உலக உயிர்களை மீண்டும் படைப்பதற்காக அமிர்த கலசத்தை, பிரம்மதேவர் நீரில் மிதக்க விட்டார். இந்த கும்பத்தை வேடனாக வந்த சிவபெருமான் குறிவைத்து அம்பு எய்தார். குடம் உடைந்து அதில் இருந்த அமிர்தம் ஐந்து இடங்களில் சிதறியது. வடமேற்கே சுவாமிமலை, தென்மேற்கே தாராசுரம், தென்கிழக்கே திருநாகேஸ்வரம், கிழக்கே திருவிடைமருதூர், வடகிழக்கே கருப்பூர் ஆகியவை அந்த இடங்கள். இவை பஞ்சகுரோசத் தலங்கள் எனப்படுகின்றன. ‘குரோசம்' என்றால் ‘கூப்பிடு தூரம்' என்று பொருள். அருகருகே உள்ள தலங்கள் என்பதால் இந்தப் பெயர்.
எமபயம் நீங்கும் கோவில் :
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியம், காசிக்கு நிகரான தலமாக போற்றப்படுகிறது. திருமால், தன்னிடம் கோபித்துக் கொண்டு பூலோகம் வந்த லட்சுமியை மீண்டும் அடைந்த தலம் இது. காசியில் ஓடும் கங்கை, தன்னிடம் சேரும் பிறர் செய்த பாவங்களை அகற்றுவதற்காக, இந்த வாஞ்சிநாதரை தான் வழிபட்டது. எமதர்மனை இறைவன் இத்தலத்தில்தான் தன்னுடைய வாகனமாக ஆக்கிக்கொண்டார். இதனால் இத்தல இவைனை வழிபடுபவர்களுக்கு எமபயம் நீங்கும். இங்கு எமதர்மனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. எமனுக்கு சிவன் காட்சி தரும் விழா மாசி மகத்தன்று நடைபெறும். அன்று எம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடந்தேறும்.
துலாபாரம் தந்த தீட்சிதர் :
கும்பகோணத்தில் உள்ள மகா மகம் குளத்தின் கரையில் 16 படித்துறைகள் இருக்கின்றன. இந்த 16 படித்துறைகளிலுமே சிவபெருமானுக்கு சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கோவிந்த தீட்சிதர் என்பவர் கட்டியிருக்கிறார். இவர் நாயக்க மன்னர்களின் அவையில் இருந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் ஒரு முறை, மகாமக நாளின் போது, குளத்தின் வடமேற்கு மூலையில் தன்னுடைய எடைக்கு எடை தங்கத்தை கும்பேஸ்வரருக்கு கொடுத்ததாக தல புராணம் தெரிவிக்கிறது.
நன்றி இணையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
மு.கிருஷ்ண மோகன் 8526223399 ..... 9843096462 ...
மு.கிருஷ்ண மோகன் 8526223399 ..... 9843096462 ...