நம் எண்ணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:04 PM | Best Blogger Tips
நம் எண்ணங்கள் க்கான பட முடிவு
இன்றைக்கு பல குடும்பங்களிலும் குழந்தைகளோடு பேசி மகிழ்வதற்கு பெற்றோர்களுக்கு நேரமில்லை. வேலைப் பளுவும் தொலைக்காட்சியும் நமது பொன்னான நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. பொருளாதார விஷயங்களினால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை; ஒரே படுக்கையில் தம்பதியினர் படுத்தாலும் அவர்களது மனமோ கன்னியாகுமரிக்கும் காஷ்மீருக்குமான தூரம் அளவுக்கு இடைவெளி கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய குடும்பங்களின் சராசரி காட்சி!.
நம் எண்ணங்கள் க்கான பட முடிவு
சில நேரங்களில் பொருளாதாரத்தை மட்டுமே இலக்காக வைத்து செயல்படுகிற இந்த இயந்திரமய வாழ்க்கையின் வெறுமை நம்மை உறுத்தக்கூடும். என்ன வாழ்க்கை இது என்ற எண்ணங்கள் அடிக்கடி தோன்றி மறைந்தாலும் அது இனம் புரியாத வெறுமையாகவே இருக்கிறதே தவிர அதற்கு மாற்றுவழி என்ன என்று நாம் ஆராய்வதில்லைஒருகாலத்தில் நாங்கள் எல்லாம் எங்கள் குடும்பத்தோடு எப்படி மகிழ்ச்சியாக இருந்தோம் தெரியுமா?, உன்னை என்று கட்டிக்கொண்டேனோ அன்றோடு என் மகிழ்ச்சியே தொலைந்துவிட்டதுஎன்பதாக கணவனும், மனைவியும் மாறி மாறி திட்டிக்கொள்வதுதான் நடக்கிறது. தொலைந்துபோனதாக இவர்களால் குறிப்பிடப்படும் அந்த மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் மறுபடியும் கொண்டு வர முடியாதா என்ன? நிச்சயம் முடியும். அதற்கு மாற்றப்பட வேண்டியது கணவனோ, மனைவியோ அல்ல நம் எண்ணங்கள்!.
சமீபத்தில் சென்னையின் புகழ்பெற்ற டாக்டர் தம்பதியரில் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. யோசித்து பார்த்தால் இன்று பெரும்பான்மையான மக்களால் மிகவும் விரும்பக்கூடியதாக இருக்கிற பொருளாதாரம் அந்த தம்பதியினரிடம் இருக்கத்தான் செய்தது. தொழில்ரீதியாகவும் உயர்அந்தஸ்தில் இருந்த போதும் அவர்களில் ஒருவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? அதற்கான காரணத்தை தற்கொலை செய்துகொண்ட அந்த பெண் மருத்துவரே எழுதி வைத்திருக்கிறார். சதா சர்வநேரமும் வேலை, தொழில் என்று இருக்கும் தன் கணவர் தனக்குரிய நேரத்தை அழிக்காததால், ஆதரவற்ற மனோநிலைக்கு சென்று தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தேவைக்கு அதிகமான பொருளாதார செல்வங்கள் அவர்களிடம் இருந்தும் அதுமட்டும்தான் வாழ்க்கை என்ற தவறான எண்ணத்தால் உறவுகளுக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை ஒதுக்காமல் போனதால் வந்த விளைவு இது.
இந்த இடத்தில் உறவுக்கான, அதன் பின்னால் மறைந்திருக்கிற ஆதரவு, அன்பு, அரவணைப்பு, உதவிக்கான தேடல் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை கவனித்து பாருங்கள். அது இல்லாமல் போகும்போது எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது இல்லையா!.
உறவுதான் நம் வாழ்க்கையை உயிர்ப்புள்ளதாக ஆக்குகிறது. மனைவி காத்திருக்கிறாள் மாலையில் உலா போக, கணவன் வரவில்லை கண்ணீர் தான் வரவானது என்ற கவிதை இந்த உறவின் உணர்வுப்பூர்வமான வலிமையை எடுத்துக்காட்டுகிறது. ஒருவர் பொறை இருவர் நட்பு என்கிற வள்ளுவரின் கோட்பாடு நட்புறவின் நுட்பத்தை மிக தெளிவாக படம் பிடிக்கிறது. உண்மையில் நமது மனித குல மேன்மையில் எல்லா மிருகங்களை விட நாம் உயர்ந்து நிற்பதன் இரகசியம் நட்புறவு என்பதில் சந்தேகமில்லை.

 *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
Thanks பெ.சுகுமார்*