கடவுள் நம்பிக்கையோ......

மணக்கால் அய்யம்பேட்டை | 1:00 PM | Best Blogger Tips

 அந்தப் பெண்ணின்

ஐந்து பவுன் தாலிச் சங்கிலி

அப்படியா கடலுக்குள் விழ வேண்டும் ?

திருச்செந்தூர் கடற்கரையில் ஒரு ஓரமாக நின்று கடலில் குளித்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண். ஏதோ ஒரு நொடியில் அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கத் தாலி, எப்படியோ அவரையும் அறியாமல் கழுத்திலிருந்து நழுவி கடலுக்குள் விழுந்து விட்டது.

"ஓ..." என்று கத்தினார் அந்தப் பெண். என்ன செய்வதென்று தெரியாமல் பதறித் துடித்தார் அருகில் நின்றிருந்த கணவர்.


ஒரு வாரத்துக்கு முன் நடந்த சம்பவம் இது.

திண்டுக்கல்லில் இருந்து அவர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார்கள்.

தாலியை பறிகொடுத்த அந்த பெண்ணின் பெயர் அங்கயற்கண்ணி. அவரது கணவர் மதுசூதனன்.

கோவிலுக்கு போவதற்கு முன்பு கடலில் நீராடி விட்டு போகலாமே என்று நினைத்துத்தான் இருவரும் கடலுக்குள் இறங்கினார்கள்.

ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.

இவர்கள் எழுப்பிய கூக்குரலை கேட்டு அருகில் நின்ற அனைவரும் ஓடி வந்தனர். "என்னம்மா ஆச்சு..?"

"5 பவுன் தாலி... கடலுக்குள் விழுந்துடுச்சுங்க..!"

மூச்சிரைக்க அந்தப் பெண் சொல்ல, அடுத்த நொடியே அந்த பதட்டமும் பரபரப்பும் அங்கே நின்றிருந்த அத்தனை பேரையும் தொற்றிக் கொண்டது.

அந்தப் பெண்ணின் ஐந்து பவுன் சங்கிலியை தேடும் முயற்சியில் அனைவருமே தீவிரமாக ஈடுபட்டார்கள்.

ஊஹூம்...

நேரம் ஆக ஆக கரையில் தேடிக் கொண்டிருந்தவர்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. கடல் அலைகளின் சீற்றம் கூடிக்கொண்டே போனது.

அவ்வளவுதான். இனி அந்த தாலிச் சங்கிலி கிடைக்க வாய்ப்பில்லை என்று சொன்னதும் அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

அருகில் நின்ற கணவனும் கூட கண் கலங்கினார்.

இருவரும் கலங்கியபடி புலம்பினார்கள்.

"ஏற்கனவே குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள். அதற்காகத்தான் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தோம். வந்த இடத்தில் இப்படி ஒரு பிரச்சனை..."

மதுசூதனன் தன்னுடைய கண்களை துடைத்தபடி தன் மனைவியை பார்த்து சொன்னார்.

"எங்கே போனாலும் நம்முடைய விதி நம்மை விடுவதில்லை.

சரி வா, நாம் ஊருக்கு புறப்படலாம்."

அங்கயற்கண்ணி இன்னும் அதிகமாக அழுதபடி,

"மாட்டேன். என்னுடைய தாலி கிடைக்கும்வரை யார் என்ன சொன்னாலும் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்."

அந்தப் பெண்ணின் மன உறுதியைக் கண்டு அங்கே நின்றிருந்தவர்கள்

ஆச்சரியப்பட்டு போனார்கள்.

அந்த நகை கடலுக்குள் விழுந்து பல மணி நேரம் ஆகிவிட்டது.

அந்த தாலியை எந்த அலை

எங்கே கொண்டு போனதோ...

யாருக்குத் தெரியும் ?

ஒரு வேளை கடற்கரையில் நின்றிருந்த அந்தக் கூட்டத்தில் யாரோ ஒருவரின் கையில் அந்த சங்கிலி கிடைத்திருந்தாலும் கூட அவர் திரும்ப கொண்டு வந்து கொடுக்கவா போகிறார் ?

வாய்ப்பே இல்லை.

இது அங்கே நின்றிருந்த அனைவருக்கும் புரிந்தது, அந்தப் பெண் அங்கயற்கண்ணியை தவிர.

முழு நம்பிக்கையோடு சொன்னார் அங்கயற்கண்ணி. "கிடைக்கும். நிச்சயமாக கிடைக்கும். எப்படியாவது எனக்கு என் தாலி கிடைக்கும்."

இந்த நேரத்தில் மதுசூதனனுக்கு தற்செயலாக ஒரு ஃபோன் கால். திண்டுக்கல்லில் இருந்து நண்பர் ஒருவர் அழைத்தார்.

மிக மிக முக்கியமான பிரமுகர் அவர்.

அவரிடம் மதுசூதனன்,

தான் திருச்செந்தூர் வந்திருப்பதாகவும் இங்கே தனக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையையும் எடுத்துச் சொன்னார்.

விஷயத்தை முழுவதும் கேட்ட நண்பர்,

"ஒன்று செய்யுங்கள் மதுசூதனன். நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்யுங்கள். தேவைப்பட்டால் என்னுடைய பெயரையும் சொல்லுங்கள்."

அடுத்த நிமிடமே காவல்நிலையம் போனார் மதுசூதனன். விஷயத்தைக் கேள்விப்பட்ட போலீசார் கடற்கரைக்கு விரைந்து வந்தார்கள்.

உடனடியாக கடலில் சிப்பி சேகரிக்கும் தொழிலைச் செய்யும் ஆட்களை வரவழைத்தார்கள்.

சுமார் 50 பேர் முழுமூச்சாக கடலில் இறங்கி தேட ஆரம்பித்தார்கள்.

அந்தப் பெண் அங்கயற்கண்ணி கடற்கரையோரமாக நின்று கைகளைக் குவித்து கண்ணீர் வடித்தபடி முருகனுக்கு எத்தனை பெயர்கள் உண்டோ, அத்தனையையும் சொல்லி மனமுருக வேண்டிக் கொண்டு இருந்தார்.

"கார்த்திகேயா...

சரவணா..

வேல் முருகா...

கந்தா...

கதிர்வேலா..."

இடைவிடாமல் முருகனின் பெயர்களை உச்சரித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் குரலை மிஞ்சும் விதமாக உரத்த குரலில் கத்தினார் ஒருவர்.

"கிடைச்சிடுச்சு... நகை கிடைச்சிடுச்சு..!"

எல்லோர் கண்களும் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பின.

கையில் அந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, கடலில் இருந்து கரையை நோக்கி ஓடி வந்தார் ஒருவர்.

பளிச்சென அவரின் கையில் மின்னியது அந்தப் பெண்ணின் தாலி.

பேச முடியாமல் அந்தப் பெண்ணின் குரல் உடைந்து போனது. "நன்றி நன்றி நன்றி" என்று திரும்பத் திரும்பச் சொல்லி கண்ணீர் வடித்து கொண்டிருந்தார்.

காவல்துறையினர் கூட அந்த மனிதருக்கு நன்றி சொன்னார்கள்.

ஒரு போலீஸ்காரர் அவரிடம் கேட்டார். "வெரிகுட், எப்படியோ ஒருவழியாக அந்தப் பெண்ணின் நகையை தேடிக் கண்டுபிடித்து எடுத்து கொடுத்துட்டீங்க...

ஆமா...உங்கள் பெயர் என்ன ?"

நனைந்திருந்த ஈர தலையை துவட்டி கொண்டே அந்த மனிதர் அமைதியாகச் சொன்னார்.

"சரவணன்..!"

நகையை பறிகொடுத்த அங்கயற்கண்ணியின் கைகளில் அந்த ஐந்து பவுன் தாலி செயின் ஒப்படைக்கப்பட்டது.

அந்த கூட்டத்தின் முன்னிலையிலேயே அங்கயற்கண்ணியின் கழுத்தில் அந்த தாலியை கட்டினார் கணவர் மதுசூதனன்.

கோவிலுக்கு உள்ளே சென்று திருச்செந்தூர் முருகனுக்கு ஒரு பவுன் தங்கச்சங்கிலியை காணிக்கையாக செலுத்தினார்கள் அந்த குடும்பத்தினர்.

புன்னகை பூத்த முகத்துடன் அந்தப் பெண் எல்லோருக்கும் நன்றி சொன்னார். எல்லோருமே புன்னகைத்தார்கள்.

திருச்செந்தூர் முருகன் கூட புன்னகை பூத்தபடி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு தெரியும்.

கடவுள் நம்பிக்கையோ தன்னம்பிக்கையோ,

முழுமையான நம்பிக்கை

வாழ்வில் எப்போதும் வெற்றியையே தரும்.நன்றி John Durai Asir Chelliah

 


தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை...!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:46 AM | Best Blogger Tips

 
தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை...!!!

 

தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...

 


ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...

 

ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்...

 

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்...

 

மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்...

 

அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...

 

அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது...

 இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...

 

இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!

 

ஆம் அன்பான பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...

 

எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!

 

அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்.
நன்றி இணையம்

ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:32 AM | Best Blogger Tips

 

இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...

 

(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அனுபவ அறிவுரை)

 

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.....

 

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.

     அதையும் பெரிது பண்ணாதே......

 

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.....

 

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

         ஒவ்வொரு மனிதனும்

         தனித்தனி ஜென்மங்கள்.

         தனித்தனி பிறவிகள்

         தனித்தனி ஆன்மாக்கள்.....

 


அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.....

 

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது......

 

இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.....

 

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்....

 


அது,

உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்,

நண்பர்களாக இருந்தாலும்,

கணவன், மனைவியாக இருந்தாலும்,

பெற்ற குழந்தைகளாக இருந்தாலும்,

பேரன் பேத்திகளாக இருந்தாலும்,

எந்த உறவுகளாக இருந்தாலும்,

                       அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.......

 


எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?

 

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.....

 

அவர்களுக்கு அனுபவம் தான் குரு.....

 


அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு........

 


செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும்,

        தான் யார்? தன் குணம் என்ன?

என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்....

 

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது.....

 

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.......

 


நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும், உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்....

 

இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.....

 

உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்....

 

நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

 

மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.....

 

உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும்.

 

"அழுது சுமப்பதை காட்டிலும், ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்."

 


தைரியமும் தன்னம்பிக்கையும் தான்


ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்....

 

இப்பதிவை பத்திரப்படுத்தி, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பொறுமையாக மீண்டும் மீண்டும் படிக்கவும்...

      ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்...

 
நன்றி இணையம்

ஆன்லைன் சூதால்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:24 AM | Best Blogger Tips

 

ஆன்லைன் சூதால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது. பார்க்ளேஸ் வங்கியில் வேலை. ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம். அத்தனை அழகான இரண்டு பிள்ளைகள் என வரம் வாங்கி வாழ்ந்திருந்த வாழ்வை, ஆன்லைன் ரம்மி ஒரு நொடியில் முடித்து வைத்த கொடூரத்தால் மனம் பற்றி எரிகிறது. மற்ற மரணங்கள் போல இதிலும் சூது விளையாட்டாய்த்தான் ஆரம்பித்திருக்கிறது. பாதியில் விட முடியாமல் நண்பர்களிடத்தில் கடன் பெற்றும் விளையாடியிருக்கிறார். ஒரு கோடிக்கு மேல் இழந்து பரிதவிக்க அப்போது தான் இது மனைவிக்கு தெரிய வந்திருக்கிறது. பிரச்சினை வெடிக்க, கோபத்தில் மொத்த குடும்பத்தையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம். அதன் RNG (Random Number Generator )அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டது. நியாயமாக இதன் வேலை ரேண்டமாக எண்களை உருவாக்கி அனுப்புவதுதான் என்றாலும், நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள், பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் வைத்து நீங்கள் அடிமையாகி விட்டீர்களா, இல்லையா என்பதையும் RNG கண்டுகொள்ளும். அடிமை என்று தெரிந்தால் அதன் அரக்க முகம் வெளிவரும். மிகமிகக் கடினமாகத்தான் கார்டுகளை (எண்களை) வழங்கும். மூன்று அல்லது நான்கு தோல்விகளுக்கு இடையே ஒரு சொற்ப வெற்றியைக் கொடுக்கும். காரணம், இது நியாயமாகத்தான் செயல்படுகிறது, என்னுடைய கெட்ட நேரம் என்று உங்களை நம்ப வைக்கும் உத்தி தான் இது. ஆனால் உண்மையில் நீங்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் வருவீர்கள் என்பதை அது நன்கு அறியும். ஒருவேளை நீங்கள் அன்இன்ஸ்டால் செய்து தப்பித்தாலும், சரியாக மூன்று நாள் கழித்து, போனஸ் பணத்தை க்ரெடிட் செய்திருக்கிறேன் வா என வலை விரிக்கும். ஆகவே அல்காரிதத்தை வென்று பணக்காரனாவது என்பதற்கு வாய்ப்பே இல்லை.

இதிலிருந்து மீள வேண்டும் என நினைப்பவர்களுக்கு, முறையான மனசிகிச்சை இன்றி இந்த மயக்கத்திலிருந்து தப்புவது கடினம். மனதின் ஓரத்தில் இதன் மீதான ஆசை இருந்து கொண்டே இருக்கும். மனைவியுடன் விஷயத்தை சொல்லிவிட்டு ஸ்மார்ட்போனை தூக்கி கடாசி விடுங்கள். நல்ல மனநல மருத்துவரிடம் பேசுங்கள். அதெல்லாம் தேவையில்ல ! நான் சும்மா டைம் பாஸுக்கு என்று இன்னும் மழுப்பினீர்கள் என்றால் கமெண்டில் கொடுத்திருக்கும் இன்ஸ்டாகிராம் இணைப்பை சொடுக்கி மூன்று நாட்கள் முன்பு வரை அவர்கள் வாழ்ந்திருந்த ஆதுரமான வாழ்வை பார்த்து விடுங்கள். எத்தனை நேசம், அன்பு, மகிழ்ச்சி. அதில் ஏதாவது ஒன்றிலாவது இன்னும் இரண்டு நாட்களில் ஆன்லைன் ரம்மி எங்களை அடித்துக் கொல்லப் போகிறது என்பதைக் கணிக்க முடிகிறதா ! இல்லையல்லவா ! சூதை விளையாட்டாய் விளையாடுவோர் அனைவருக்கும் இது பொருந்திப் போகும்.

தமிழக அரசு ஆன்லைன் சூது எனும் அரக்கனை தடை செய்தது. நீதிமன்றம் தடையை நீக்கி மீண்டும் உயிர் தந்தது. இதற்கு முன்பான மரணங்களுக்கு விளையாட்டுப் போதை காரணமாக இருக்கலாம். ஆனால் தடை செய்ததை மீண்டும் உயிர்ப்பித்த பின் நிகழ்ந்துள்ள இக்கொடூரத்திற்கு அல்காரிதமோ, ஆன்லைன் சூது மட்டுமோ காரணமல்ல !


 நன்றி இணையம்