பிரதோஷ ஸ்தோத்ரம் & அஷ்டகம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:54 PM | Best Blogger Tips


பிரதோஷ ஸ்தோத்ரம் & அஷ்டகம்
 
ஆதியும் அந்தமும் இல்லாத பெரும் பரம்பொருளாய் விளங்குபவர் சிவபெருமான். இவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. சிவ வழிபாட்டினைத் தான் சைவம் என்று போற்றுகின்றோம்.
உலகத்தின் மிகப் பழமையான வழிபாடும் சிவ வழிபாடுதான். பண்டைய கால நாகரீகமாக விளங்கிய ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ காலகட்டங்களில் சிவ வழிபாடு நடந்திருப்பது அகழ்வாராய்ச்சிகளில் மூலம் அறியமுடிகின்றது.
வேதங்கள் போற்றும் வேதநாயகனாக விளங்குபவர் சிவன். சுப மங்கலத்தை அருளுபவர்.
பரம்பொருளாகிய பரமேஸ்வரரின் மூச்சுக்காற்றிலிருந்தும், உடுக்கை ஒலியிலிருந்தும் சப்தங்கள் தோன்றி, வேத மந்திரங்களாகச் சிதறியிருந்ததை வியாச பகவான் ஒருங்கிணைத்து சதுர் (4) வேதங்களாகத் தொகுத்தார் (ருக், யஜுர், சாமம் & அதர்வணம்).
சிவபெருமானுக்கு பிறப்பில்லாத காரணத்தினால், சிற்ப சாஸ்திரங்களின்படி, சிவபெருமான் அம்சமுள்ள எந்தவொரு வடிவத்திற்கும் (நடராஜர், ஸோமாஸ்கந்தர்) கொப்பூழ் எனும் தொப்புள் அமைப்பதில்லை.
சிவன் எங்கும் நிறைந்திருப்பவர். திசைகள் அனைத்திலும் விளங்கும் திகம்பரர். ஸர்வ லோகங்களிலும் திகழும் சதாசிவர்.
மஹாவிஷ்ணு உலக மக்களைக் காக்க வேண்டி எடுப்பது அவதாரம். இந்த அவதாரத்தில் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. (பகவான் கிருஷ்ணர் ஒரு வேடுவனின் அம்பினால் இறந்தார்).
சிவபெருமான் பக்தர்களைக் காக்க எடுப்பது அவஸரம். தக்க சமயம் வரும்போது தோன்றி, ரட்சித்துவிட்டு, மறைந்துவிடுதல்.
வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் வழங்குவதில் வல்லமை மிக்கவர் சிவபெருமான்.
சிவ வழிபாட்டில் பல்வேறு முறைகள் காணப்படுகின்றன. (காஷ்மீர சைவம், காபாலிக சைவம், சிவாகமம், சைவ சித்தாந்தம்)
சைவ வழிபாட்டு முறைகளில் மிகவும் பிரபலமாகவும், பலனளிக்கக் கூடியதாகவும், பக்தர்களின் வழிபாட்டில் மிக எளிமையாக விளங்குவதும் அமைவது பிரதோஷம்.
ஒரு மாதத்தில் இருமுறை வருவது பிரதோஷ பூஜை. ஒன்று வளர்பிறை திரயோதசி (அமாவாசையிலிருந்து 13ம் நாள்) மற்றொன்று தேய்பிறை திரயோதசி (பெளர்ணமியிலிருந்து 13ம் நாள்) தினம்.
ஒரு சமயம் வீதஹவ்யர் எனும் சிவபக்தர், சித்ரவதி எனும் தமது பத்தினியுடன், தமக்கு சிவாம்சமாக விளங்கக் கூடிய வகையில் மகவு வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, வேறு எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல், சிறு சிறு கற்களையே உணவாக உண்டு கடும் தவம் செய்தார்.
கற்களை மட்டுமே உண்டதனால் அவர் சிலாதர் எனப் போற்றப்பட்டார். சிலாதர் பூஜை செய்த திருத்தலம், வட நாட்டுப் பாடல் பெற்றத் தலமாக விளங்குவதும், பன்னிரு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றும் ஆகிய ஸ்ரீ சைலம் எனும் திருத்தலம். (இதுவே நந்தி தேவர் பிறந்த தலமும் ஆகும். நந்தி தேவர் தவம் செய்த தலம் நந்தியால்)
கற்களை மட்டுமே உண்டு தவமியற்றிய சிலாதருக்கு மனமிரங்கிய சிவன், அவர் முன் தோன்றி, தனது அம்சமாக ஒரு குழந்தை உனக்குக் கிடைப்பான் என திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.
சிலாதர் யாகம் செய்வதற்காக, நிலத்தை உழுத போது, மாணிக்க வைடூர்யங்கள் இழைத்த ஒரு பொற்பெட்டியில் ஒரு குழந்தை கிடைக்க, அக்குழந்தைக்கு வீரகன் எனப் பெயரிட்டு, பெருமகிழ்வுடன், கல்வி கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தார்.
சில ஆண்டுகள் கழித்து, மித்ரன், வருணன் எனும் இரு தேவர்களும் வீதஹவ்யர் எனும் சிலாதர் முனிவரை பார்க்க வந்து, வீரகனுக்கு ஆயுள் சில காலம் தான் என்று கூறினர். இதைக் கேட்ட வீதஹவ்யர் மனமொடிந்து போக, வீரகன் தனது தந்தையைப் பார்த்து, நான் சிவபெருமான நோக்கி தவமிருந்து வரம் பெற்று வருகின்றேன் என கிளம்பினார்.
வீரகன், ஏழு கோடி முறை ஸ்ரீ ருத்ரம் மந்திரத்தை நாத்தழும்பேற ஜபிக்க, சிவபெருமான் வீரகனின் பக்திக்கு மனமிரங்கி, தனது கணங்களுக்கெல்லாம் தலைமை தாங்க, நந்தி எனப் பெயரிட்டு, தனக்கு வாகனமாகவும் ஏற்று, சாகாவரமும், என்றும் தன்னுடன் இருக்கவும், தனது வாயில் காப்பாளனாகவும் ஏற்று அருளினார்.
நந்தியையே தனது பிரதம சீடராக ஏற்று கலைகள் அனைத்தையும் கற்றுணர்த்தினார்.
(நந்தி = தலைமை. ஐந்து கரத்தனை ஆனை.... நந்தி மகன் தனை - என்று திருமூலர் விநாயகரைக் குறிப்பிடும்போது - நந்தி மகன் - என்பது, உலகமனைத்திற்கும் தலைமை தாங்கும் சிவபெருமானையே நந்தி எனக் குறிப்பிட்டு - அவர்தம் மகன் விநாயகர் என்கிறார்.)
சிவனிடமே பாடங்கள் கற்றமையால் சைலாதி எனப் புகழப்படும் நந்தி தேவர் ஞான ஆச்சார்யராக விளங்குபவர். விஷ்ணுவுக்கு சிவஞானம் பெற வழிகாட்டியவர். சிவ வழிபாட்டில் மிக முக்கியத்துவம் பெறுபவர். இன்றைக்கு இருக்கும் தருமபுரம், திருவாவடுதுறை போன்ற ஆதீனங்களுக்கு தலைமை குருவாக விளங்குபவர் நந்தி தேவர்தான்.
ஒரு சமயம், சாகாவரத்திற்கான அமிர்தம் பெறவேண்டி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை, மேரு என்னும் மலையையே மத்தாகக் கொண்டு, வாசுகி எனும் பாம்பை கயிறாகக் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒரு புறமும் கடைய, வேகமும் அழுத்தமும் தாங்காத வாசுகி எனும் பாம்பு தனது விஷத்தன்மை கொண்ட பெருமூச்சினை விட, பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது.
அது, அகிலம் அனைத்தையும் அழிக்கவல்லதாக அச்சுறுத்தலாக இருந்தது. இதைக் கண்ட தேவர்கள் தலைதெறிக்க ஓட, எங்கெல்லாம் அவர்கள் செல்கின்றார்களோ அங்கெல்லாம் ஆலகால விஷமும் துரத்தியது.
இறுதியில், தேவர்கள் ஸர்வலோக வியாபியான சிவபெருமான் உறையும் கைலாயம் சென்றனர். சிவனை தரிசிக்க வேண்டி கைலாயத்தின் இடப்புறம் வழியாக சென்றால், வலப்புறமாக விஷம் வந்து வாட்டியது. வலப்புறம் வழியாக சென்றால் இடப்புறமாக வந்து இடைமறித்தது.. (ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் - இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. கீழே விபரம் உள்ளது.)
கைலாய நாதனை தேவர்கள் சரணடைய, சிவன் காட்சி தந்து அஞ்சேல் என்று அருளி, தனது மெய்க்காப்பாளனாகிய நந்தியை அழைத்து, அந்த விஷத்தை எடுத்து வரச் சொல்ல, அதன்படியே நந்தி எடுத்து வர, அந்த ஆலகால விஷத்தை, தனது வாயிலிட்டு விழுங்கும் போது, அந்த ஆலகால விஷத்தினால், தனது கணவருக்கு எந்த விதத்திலும் தீங்கு நேரக்கூடாது என்றெண்ணிய பார்வதி தேவி, அந்த விஷம் சிவனின் தொண்டைப் பகுதிக்கு வரும்போது, சிவனின் கண்டமாகிய கழுத்தைப் பிடிக்க, செம்பொன்னார் மேனியனாக விளங்கும் சிவனின் தொண்டையில் விஷம் கருநிறமாகத் தங்கியது.
அகிலம் ஆலகால விஷத்திலிருந்து தப்பியது. தேவர்கள் பயம் நீங்கினர். சிவபெருமானை நீலகண்டன் என போற்றினர்.
மறுபடியும் பாற்கடல் கடைய, அமிர்தம், லக்ஷ்மி தேவி, காமதேனு, உச்சைஸ்ரவம் எனும் குதிரை முதலான தோன்ற அனைவரும் மகிழ்வுற்றனர்.
(இந்தப் புராணத்திற்குள் அற்புதமான அறிவியல் தத்துவம் பொதிந்திருக்கின்றது. அதை விளக்க தனியொரு கட்டுரை எழுத வேண்டியிருக்கும். பிரபஞ்சம் தோன்றிய விதத்தை அறிவியல் விளக்கும் அம்சம் இந்தப் புராணத்தில் அடங்கியுள்ளது)
அச்சமயம், நந்தி தேவர் நாம் எடுத்து வந்த விஷம் அவ்வளவு வீரியம் வாய்ந்ததா என்று எண்ணி, உலகம் உய்ய ஒரு காரியத்தை, நான் செய்தேனே என்று செருக்குற்றார்.
அப்பொழுதுதான், அந்த விஷத்தின் வீரியம் நந்தி தேவரை வீழ்த்தியது.
மயக்கமுற்ற நந்தி தேவருக்கு, அகிலம் அனனத்திற்கும் படியளக்கும் அன்னபூரணியாக விளங்கும் பார்வதி தேவி, அரிசியும், வெல்லமும் கலந்த கலவையை நந்திக்கு மருந்தாகக் கொடுக்க, நந்தியின் தலைக்கு விஷத்தின் வீரியம் வராமலிருக்க சிவபெருமான் தனது பாதத்தை, நந்தியின் தலையில் இருத்தி, தாண்டத்தை நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நிகழ்த்த பிரதோஷ தாண்டவம் நிகழ்ந்தேறியது.
மயக்கமும் விஷமும் நீங்கிய நந்தி, தனது செருக்கு நீங்கி, சிவபெருமானை வணங்கி வழிபட்டார்.
விண்ணோர்கள் அனனவரும் அந்த அற்புதத் தாண்டவத்தைக் கண்டு களித்தனர்.
பாற்கடல் கடையத் தொடங்கியது தசமி தினம் என்றும், ஏகாதசி தினம் முழுவதும் உறக்கமின்றி கடைந்தது என்றும், திரயோதசி தினத்தின், மாலை வேளையில் (4.30 pm - 6.00 pm) தான் நந்தியின் சிரசில் நடனமாடியதாகவும் சிவபுராணங்கள் பகர்கின்றன. இந்த நேரத்தை ரஜனி முக காலம் என்று போற்றுவார்கள்.
திரயோதசி திதியின் மாலை வேளையைத் தான் பிரதோஷ வேளையாகக் வழிபட்டு மகிழ்கின்றோம்.
அரிசி வெல்லக் கலவை ஒரு அற்புதமான மருந்து. வெல்லத்தில் இருக்கும் க்ளுக்கோஸும் (glucose), அரிசியில் உள்ள அமைலோஸ் (amylase) எனும் ஸ்டார்ச் வகையைச் சேர்ந்த உப்பும் சேர்வது - உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்க வல்லது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு முதலுதவியாக ஜீனியும், உப்பும் கலந்த தண்ணீரைக் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
அது போல, மாட்டிற்கு ஏதேனும் நோய் தாக்கியதாகத் தெரியவந்தால், முதலில் அரிசியும் வெல்லமும் கலந்த கலவையை உணவாகக் கொடுப்பார்கள்.
பிரதோஷ வேளையில் படைக்கப்படும் காப்பரிசி எனும் பிரஸாதம் - அரிசி மற்றும் வெல்லத்தினால் செய்யப்படுவது. அந்த பிரஸாதத்தை உட்கொண்டால், அது நம் உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கவல்லது.
சூரியன் அஸ்தமித்து, சந்திரன் உதிக்கும் நேரமாக அந்தி மாலை நேரம் விஷத்தன்மை கொண்டது என்றும், அவ்வேளையில் தீபம் ஏற்றி, வழிபாடுகள் செய்ய, புனிதமான நேரம் என்றும் சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.
சாயங்கால வேளையில் சாப்பாடு கூடாது என்று பெரியோர்கள் கூறுவது இதன் அடிப்படையில் தான்.
மாலை வேளையில் தான், கர்வம் கொண்ட ஹிரண்யனை நரசிம்மர் வதம் செய்தார்.
பிரதோஷ வேளையில் சிவபெருமானை வணங்கினால் தலைக்கனம், கர்வம் போன்றவை நீங்கும் என்றும், ஆணவம், கண்மம், மாயை எனும் மும்மலங்களும் நீங்கி, சிவயோகம் கிடைக்கும் என்றும் சிவபுராணங்கள் வலியுறுத்துகின்றன.
நந்தி தேவருக்கு ஏற்பட்ட தலைக்கனத்தை (கர்வம்-செருக்கு) நீக்க அவரின் தலைமேல் தாண்டவமாடினார் சிவபெருமான்.

யமுனை நதியின் தலைவன் என கர்வம் கொண்ட காளிங்கன் எனும் நாகத்தின் தலை மீது தாண்டவமாடி தண்டித்தார் கிருஷ்ணன்.
நல்ல பக்தியும், நன்னெறியும், நல்லெண்ணமும், நன்னடத்தையும் கொண்டிருந்தால் மட்டுமே இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் என்பதற்கு உதாரண புராணங்களாக மேற்கண்டவை விளங்குகின்றன.



ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் :
தேவர்கள் ஆலகால விஷத்திற்கு அஞ்சி, கைலாய மலையை இங்கும் அங்கும் ஓடி, இறைவனைச் சரணடைந்து நற்கதியைப் பெற்ற வழிமுறைதான் - ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் என்று கூறப்படுகின்றது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் - ஸோம ஸூக்த பிரதக்ஷிண முறையைக் காட்டுகின்றது.
நிலையாக இருக்கும் சிவனை, நாம் வழிபடும் வலம் வரும் முறை, செயல் சக்தியாகச் செய்யும் போது, சக்தி தேவிக்குரிய திரிசூல வடிவம் வருவதைக் காணலாம். சிவனையும், சக்தியையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைக்கக் கூடிய அற்புதமான வழிபாட்டு முறை ஸோம ஸூக்த பிரதக்ஷிணம்.
பிரதோஷ வேளையில் ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் அளவற்ற பலனைத் தரும். ஸத்புத்ர சந்தானம் எனும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளமாகும்.
ஸோமஸூக்த பிரதக்ஷிணம் என்பதை மிக எளிய வகையில் செய்ய ஒரு உபாயம் உண்டு.
கோ
கோ
மேற்கண்ட குறியீடுகளை ஞாபகம் கொண்டு எளிதில் வலம் வரலாம்.
ந - நந்தி
ச - சண்டிகேஸ்வரர்
கோ - கோமுகி எனும் ஆலயக் கருவறையிலிருந்து அபிஷேகத்
தீர்த்தம் விழும் இடம்.

பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :
1. செல்வங்கள் பெருகும்.
2. கடன் தொல்லைகள் நீங்கும்,
3. நோய்கள் அகலும்
4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.
5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.
6. வேண்டிய வரம் கிட்டும்.
7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.
8. நீடித்த ஆயுள் கிட்டும்.
9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் மாலை 4.30 - 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும்,
ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம் எனவும்,
சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது சனி மஹா பிரதோஷம் எனவும்,
திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது ஸோம பிரதோஷம் எனவும் போற்றப்பட்டு, சிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படும்.

நந்தியம்பெருமானுக்கேயுரிய சில சிறப்பு தலங்கள் :
நந்தி கொம்பு ஒடிந்த ஸ்தலம் - திருவெண்பாக்கம்
ஈசனோடு நந்தி இணைந்த உருவ ஸ்தலம் - திருக்கூடலையாத்தூர், பவானி
நந்தி விலகிய ஸ்தலம் - திருப்புங்கூர், பட்டீஸ்வரம், திருப்பூவனம், திருப்பூந்துருத்தி
நந்தி நின்ற ஸ்தலம் - திருமால்பேரு
நந்தி திருமண ஸ்தலம் - திருமழபாடி
நந்தி பிரதோஷ ஸ்தலம் - திருஅரிசிலி
நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல், திரும்பியவாறு கோபுரம் நோக்கிய ஸ்தலம் - திருவோத்தூர், திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.
பிரதோஷ காலத்தில், பூஜைகள் நடைபெறும் சமயத்தில், பன்னிரு திருமுறைகளில் உள்ள, அமிர்தம் கடைதல் தொடர்பான, பதிகங்களை படித்தலும் கேட்டலும் பற்பல பலன்களை வாரி வழங்கக்கூடியது. குறிப்பாக, சிவபுராணத்தினை (நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க ..) வாசிப்பதும், கேட்பதும் நற்பலன்களை அளிக்கக் கூடியது.
பிரதோஷ காலத்தில் பாராயணம் செய்ய பிரதோஷ ஸ்தோத்திரம் மற்றும் பிரதோஷ அஷ்டகம் எனும் மிக அரிய - மிகப் பழமையான நூலாகிய ஸ்காந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட - சிறப்பு வாய்ந்த இரு ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கீழ்க்கண்ட ஸ்லோகங்கள், பிரதோஷ காலத்தில் படிக்க அல்லது கேட்கப்பெறுவது, மேலே கூறியுள்ள அனைத்து பலன்களையும் வாரி வழங்க வல்லது.
பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வணங்கி நலங்களை நாளும் பெறுவோம் !
******
ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம்
ஸ்ரீ கணேசாய நம:
ஜய தேவ ஜகன்னாத ஜய சங்கர சாச்வத |
ஜய ஸர்வ ஸுராத்யக்ஷ ஜய ஸர்வ ஸுரார்ச்சித ||
ஜய ஸர்வ குணாதீத ஜய ஸர்வ வரப்ரத |
ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராக்ய ||
ஜய விச்வ ஏக வந்த்யேச ஜய நாகேந்த்ர பூஷண |
ஜய கெளரிபதே சம்போ ஜய சந்த்ர அர்த்த சேகர ||
ஜய கோட்யர்க ஸங்காச ஜய ஆனந்த குணாச்ரய |
ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்சன ||
ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்தி பஞ்சன |
ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகர உத்தாரண ப்ரபோ ||
ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்தஸ்ய ஸ்வித்யத: |
ஸர்வ பாப க்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேஸ்வர ||
மஹா தாரித்ர்யமக்நஸ்ய மஹாபாப ஹதஸ்ய ச |
மஹா சோக நிவிஷ்டஸ்ய மஹா ரோகாதுரஸ்ய ச ||
ருணபாரபரிதஸ்ய தஹ்ய மாநஸ்ய கர்மபி : |
க்ரஹை: ப்ரபீஜமாநஸ்ய ப்ரஸீத மம சங்கர ||
தரித்ர: ப்ரார்த்தயேத்தவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் |
அர்த்தாடோ வாத ராஜா வா ப்ரார்த்தயேத்தேவம் ஈச்வரம் ||
தீர்க்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர் பலோன்னதி : |
மமாஸ்து நித்யம் ஆனந்த: ப்ரஸாதாத்தவ சங்கரம் ||
சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜாபத : |
துர்பிக்ஷமரி ஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே ||
ஸர்வ ஸஸ்ய ஸம்ருத்திஸ்ச பூயாத்ஸுகமயா திச: |
ஏவம் ஆராதயேத்தவம் பூஜாந்தே கிரிஜாபதிம் ||
ப்ராஹ்மணான் போஜயேத் பஸ்சாத் தக்ஷிணாபிஸ்ச பூஜயேத் |
ஸர்வ பாப க்ஷயகரி ஸர்வ ரோக நிவாரணி ||
சிவபூஜா மயாக்யாதா ஸர்வாபீஷ்ட பலப்ரதா ||
********************************************
ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்ர அஷ்டகம்
ஸ்ரீ கணேசாய நம: |
ஸத்யம் ப்3ரவீமி பரலோக ஹிதம் ப்3ரவீமி
ஸாரம் ப்3ரவீம் உபநிஷத் த்4ருத3யம் ப்ரவீமி |
ஸம்ஸார முல்ப3ணம ஸாரமவாப்1ய ஜந்தோ:
ஸாரோSயம் ஈச்வர பதாம் ப்ருஹஸ்ய ஸேவா || 1 ||
யே நார்ச்சயந்தி கிரீசம் ஸமயே ப்ரதோஷே
யே நார்ச்சிதம் சிவமபி1 ப்ரணமந்தி சா1ன்யே |
ஏதத்கதா2ம் ச்ருதிபுடைர்ந பிப3ந்தி மூடா4ஸ்தே1
ஜன்மஜன்மஸ¤ ப4வந்தி நரா தரித்ரா : || 2 ||
யே வை ப்ரதோஷ ஸமயே பரமேஸ்வரஸ்ய
கர்விந்த்ய நந்ய மனஸோSங்கி4ரி ஸரோஜ பூஜாம் |
நித்யம் ப்ரவிருத்த4 தனதான்ய கலத்ரபுத்ர ஸெளபாக்ய
ஸம்பத3தி4 காஸ்த இஹைவ லோகே || 3 ||
கைலாஸசைல புவனே த்ரி ஜகஜ்ஜனித்ரிம் கௌரீம்
நிவேச்ய கனகா சிதரத்ன பீடே |
ந்ருத்யம் விதா4துமபி4 வாஞ்ச2தி சூலபாணௌ
தேவா: ப்ரதோஷ ஸமயே நு பஜந்தி ஸர்வே || 4 ||
வாக்3தேவீ த்4ருத வல்லகீ சதமகோ2 வேணும் த3த4த் பத்மஜ
ஸ்தாலோன்னித்3 கரோ ரமா ப4கவதீ கேய ப்ரயோகாந்விதா |
விஷ்ணு: ஸாந்த்ர ம்ருத3ங்க வாத3நபடுர்தே3வா: ஸமந்தாத்ஸ்தி2தா :
ஸேவந்தே தமநு ப்ரதோஷ ஸமயே தேவம் ம்ருடா3நிபதிம் || 5 ||
கந்தர்வ யக்ஷ பதகோரக ஸித்த3 ஸாத்4ய வித்யாதரா ரவராப்ஸரஸாம் க3ணாஞ்ச |
யேsன்யே த்ரிலோக நிலயா ஸஹபூ4தவர்கா: ப்ராப்தே பரதோஷ ஸமயே ஹரபார்ச்வ ஸம்ஸ்தா2 : || 6 ||
அத: ப்ரதோஷே சிவ ஏக ஏவ பூஜ்யோsத2 நான்யே ஹரி பத்மஜாத்தா4: |
தஸ்மிந் மஹேசே விதி4நேஜ்யமாநே ஸர்வே பரஸீதந்தி ஸ¤ராதி4நாதா2: || 7 ||
ஏஷ தே தநய: பூர்வஜன்மநி ப்ராஹ்மணோத்தம: |
ப்ரதி க்ரஹைர்வயோ நிந்யே ந தாநாத்தை: ஸ¤கர்மபி : || 8 ||
அதோ தாரித்3ரய மாபந்ந: புத்ரஸ்தே த்3விஜபா4மிநி |
தத்தோஷ பரிஹாரார்த்தம் சரணாம் யாது சங்கரம் ||
|| இதி ஸ்ரீ ஸ்காந்தோக்தம் ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம் ஸம்பூர்ணம் ||

Thanks to 
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

மஹா சங்கடஹர சதுர்த்தி

மணக்கால் அய்யம்பேட்டை | 4:51 PM | Best Blogger Tips


அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.
யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.
வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.
ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக மிக முக்கியமானது.

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு :
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.
சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.
சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகின்றது.
மற்றுமொரு புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் வானில் நிலவைப் பார்த்ததால், ஒரு பெரும் அபவாதம் கிடைக்கப் பெற்றார். சியமந்தக மணி எனும் கல்லினால் பெரும் கெட்டபெயர் ஏற்பட்டது. (சத்ராஜித், சூரியன், பாமா, பிரசேனன், ஜாம்பவான், ஜாம்பவதி, அக்ரூரர் என்பவர்களால் - சம்பவங்கள் நிறைந்த பெரும் கதை - ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:- சியமந்தக உபாக்யானம்) சியமந்தக மணியைப் பற்றி மேலும் விபரம் அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
வளர்பிறை சதுர்த்தி தினத்தில் சந்திரனைப் பார்த்ததால், கெட்ட பெயர் ஏற்பட்டு, அதை நீக்க வேண்டி, ஸ்ரீ விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தி தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், பூஜையைச் செய்தார். விநாயகர் அவருடைய அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்து, கெட்ட பெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியமானதாகின்றது.
ஸ்ரீ விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.
ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய தனிப்பட்ட மந்திரங்களும் முறைகளும் உண்டு.
சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் தரிசிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.
சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம்.
சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். விநாயகரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு அங்காரகச் சதுர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.
சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களும் (கலௌ சண்ட விநாயக: - புராண வாக்கியம்) நீங்குகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.
சங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் உண்டு.
விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மஹா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.
வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும்.
சங்கட ஹர சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கப் பெறும் பலன்கள் :
கோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின் அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.
செவ்வாய் பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும்.
சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.
நெய்வேலி, ஸத்சங்கம் - மணித்வீபம் வளாகத்தில், ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
நெய்வேலி நகரத்தின் பழமையான கோயில்களில் ஒன்று ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம். காஞ்சி மஹா பெரியவரின் அருட்கரங்களில் தவழ்ந்தது இந்த விநாயகர் விக்ரஹம். அவர் கூறிய ஆலோசனைகளின் படியே ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஸ்தாபிதம் செய்யப்பட்டார்.
பெயருக்கு ஏற்றார் போல, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக விளங்குபவர் வரசித்தி சக்தி விநாயகர்.
வேண்டும் வரங்களை உடனடியாக சித்திக்க (கிடைக்க) வழிகோலுபவர். அருட்சக்தி நிறைந்தவர்.
ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகருக்கு ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியிலும் மிக விசேஷமான வழிபாடுகள் நடைபெறும்.
சங்கடஹர சதுர்த்தியின் மாலை நேரத்தில், விநாயகருக்கு ஸகல திரவிய அபிஷேகங்கள் வேதகோஷங்களோடு செய்யப்படும்.
பலன்களை வெகு விரைவில் அருளும் "ஸ்ரீ விநாயகர் திரிசதி (300 நாமாவளிகள்) கொண்டு அர்ச்சனை செய்யப்படும். பிறகு மஹா தீபாராதனை நடைபெறும்.
எதிர்வரும் 05.08.2012 - ஞாயிறு - மாலை 06.30 மணி முதல் வேதகோஷங்களோடு மஹா ஸகல திரவிய அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெற இருக்கின்றது.
கஷ்டங்களை நீக்கும் கணநாயகாஷ்டகம் :
'முதாகராத்த மோதகம்' எனத் தொடங்கும் கணேச பஞ்சரத்னம் (5 பாடல்கள்) போல, கணநாயக அஷ்டகம் (எட்டு பாடல்கள்) சிறப்பு வாய்ந்த ஒன்று. விநாயகரை வழிபடும்போது இந்த கணநாயகாஷ்டகத்தைச் சொல்வது அனைத்து பாபங்களையும் அழித்து, நற்கதி அடைய வழிசெய்யும்.
ஸ்ரீ கணநாயகாஷ்டகம்
ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் I
லம்போதரம் விசா'லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் I
பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் I
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் I
சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
கஜவக்த்ரம் ஸுரச்'ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் I
பாசா'ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே I
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா I
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம் I
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர: I
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி II

விநாயகரைப் பணிவோம் ! வினைகள் நீங்கப் பெறுவோம் !!

Thanks to

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்

ருத்ராக்ஷ மகிமை

மணக்கால் அய்யம்பேட்டை | 4:47 PM | Best Blogger Tips



ருத்ராக்ஷ மகிமை
சிவபெருமானை அரும்பெரும் தெய்வமாக வழிபடும் வகை சைவம் என்றழைக்கப்படும். சைவ வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் என்று போற்றப்படுவார்கள்.
சைவர்களின் இன்றியமையாத மூன்று கடமைகளாக சைவ புராணங்கள் கூறுபவை :
1. எப்பொழுதும் சிவ நாமத்தினையும், பஞ்சாக்ஷரத்தையும் ஜபித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.
2. சிவன் தன் மேனியின் மீது பூசிக்கொண்டிருக்கும் விபூதியை சைவர்கள் எப்பொழுதும் தரித்திருக்க வேண்டும்.
3. சிவாம்சமாக உள்ள ருத்ராக்ஷம் அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
இதில், ருத்ராக்ஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் சிறப்புகளைக் காண்போம்.
ருத்ராக்ஷம் :
ருத்ராக்ஷம் பற்றி புராணங்கள் பல்வேறு தகவல்களைத் தருகின்றன.
சிவபெருமான், தேவர்களை வருத்திக்கொண்டிருந்த மூன்று அசுரர்களை அழிக்க வேண்டி, திரிபுர ஸம்ஹாரம் செய்த போது, சிவனின் (ருத்ரன்) கண்(அக்ஷம்)களிலிருந்து புறப்பட்ட நீர்த்திவலைகள் பூமியில் விழ அதிலிருந்து ருத்ராக்ஷம் தோன்றியது எனவும்,
ஒரு சமயம், உலகம் உய்ய பல்லாயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்ய, தவம் முடிந்து கண் விழித்த சமயம், கண்களிலிருந்து தோன்றிய நீரிலிருந்து தோன்றியது ருத்ராக்ஷம் எனவும்,
நெற்றிக்கண்ணின் மணியிலிருந்து சிவபெருமானால் தனது அம்சமாக தோற்றுவிக்கப்பட்டது ருத்ராக்ஷம் எனவும் சைவ புராணங்கள் பகர்கின்றன.
ஆயினும், தத்வார்த்த ஆன்மீகர்கள், ருத்ராக்ஷம் என்பது சிவபெருமானின் கண்ணையொத்த சிறப்பு வாய்ந்தது எனவும், மேலும் சிறப்பாக, சிவபெருமானுக்கு (ருத்ரன்) உரிய மந்திரத்தை (அக்ஷம்) ஜபிக்க சிறந்தவொரு சாதனமாக கருதுகின்றார்கள். (எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - ஔவையார் வாக்கு - சிவ பஞ்சாக்ஷரம் எனும் ஐந்து எழுத்து மந்திரத்தை, எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, ஜபிக்க, கண் போன்ற ருத்ராக்ஷமே உகந்தது.
எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு - திருவள்ளுவர்)
வடமொழியின் ஆரம்ப எழுத்து 'அ'. கடைசி எழுத்து 'க்ஷ'. இந்த 'அ'கார 'க்ஷ'கார எழுத்துக்களினுள்தான், வேத மந்திரங்களும், அனைத்து மந்திரங்களுக்கான எழுத்துக்களும் அடங்குகின்றன.
அதிலும், சிவபெருமானுக்கே உகந்த பஞ்சாக்ஷரம் வேத மந்திரங்களுக்கு நடுவாகவும், உயர்வானதாகவும் அமைந்துள்ளது.
இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தை, ருத்ராக்ஷம் என்பதைக் கொண்டு ஜபிக்கும்போது, சிவஸாரூபம், சிவஸாயுஜ்யம், சிவலோகம் எனும் முப்பெரும் பதவிகளையும், இம்மையில் (இந்த ஜன்மத்தில்) மென்மேலும் வளங்களையும், செல்வங்களையும், மறுமையில் (மரணத்திற்குப் பின்) முக்தியையும் தரவல்லது என்பது ஆன்மீக ஆன்றோர்களின் மேலான கருத்து.
மந்திர சித்தி பெற்றவர்கள், சித்தர்கள் போன்றவர்கள் தமது கண்களினாலேயே விஷத்தை முறிக்க விஷமுறிவு செய்வது போலவும்,
மீன் தனது முட்டைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே பொறிக்கச் செய்து மீன் உருவம் கிடைக்கச் செய்வது போலவும்,
ருத்ராக்ஷம் அணிந்தவர்க்கு, சிவபெருமான் தனது அக்ஷத்தினாலேயே (கண்களாலேயே) தீட்சை அளித்து, ஆன்மாக்களுக்கு முக்தி அளிப்பார் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

தற்போது நமக்குக் கிடைக்கும் ருத்ராக்ஷம், சிவனார் உறையும் இமயமலையைச் சார்ந்த பனிபடர்ந்த இடங்களில் விளையக்கூடிய ருத்ராக்ஷ மரங்களில் (Botanical Name : Elacocarpus Ganitrus Roxb) இருந்து கிடைக்கக் கூடியவை. கண்ணில் உள்ள மணியைப் போன்ற (pupil) சிறு உருண்டை வடிவத்திலும், நடுவில் இயற்கையாகவே துளையும் கொண்டதாக அமையும்.
ருத்ராக்ஷத்தின் தன்மைகளையும், அதன் சிறப்பம்சங்களையும் ஸூதஸம்ஹிதை உள்ளிட்ட பழைய புராணங்கள் தெரிவிக்கின்றன.
ருத்ராக்ஷம் சிகப்பு (காவி), வெள்ளை, கரிய நிறங்களில் கிடைக்கின்றன.
ருத்ராக்ஷத்தின் அளவு சிறிது சிறிதாக அதன் சிறப்பம்சம் பெரிதானதாகக் கருதப்படும். மிகச் சிறிய ருத்ராக்ஷம் அளப்பரிய பலன் தரக்கூடியதாகும்.
ருத்ராக்ஷத்தின் மேல் கோடுகளும், நடுவில் இயற்கையாகவே துளையும் இருக்கும்.
அந்தக் கோடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் தெய்வாம்சம் சிறப்புறக் கூறப்படுகின்றது.
ஒரு முகம் அதாவது ஒரே கோடுள்ள ருத்ராக்ஷம் - சிவாம்சம்,
இரு முகம் - சக்தி அம்சம்
மூன்று முகம் - பிரம்ம, விஷ்ணு, சிவ - திரிமூர்த்தி அம்சம்
நான்கு முகம் - பிரம்ம அம்சம்
ஐந்து முகம் - சதாசிவ அம்சம் (ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாதம்)
ஆறுமுகம் - முருக அம்சம்
ஏழுமுகம் - ஸப்தமாதர்கள் அம்சம்
எட்டு முகம் - அஷ்ட வித்யேஸ்வரர்கள் அம்சம் (அனந்தர் - சிகண்டி)
ஒன்பது முகம் - நவதீர்த்தங்கள் (கங்கை-காவேரி, சோணநதி, துங்கபத்ரா) அம்சம்
பத்து முகம் - அஷ்ட திக் பாலர்கள் + ஆகாய, பாதாள திசைகள் அம்சம்
பதினோரு முகம் - ஏகாதச ருத்திர அம்சம்
பன்னிரு முகம் - விஷ்ணு மூர்த்தி அம்சம்
பதின்மூன்று முகம் - சத ருத்திரர்கள் அம்சம்
பதினான்கு முகம் - அசுவினி தேவர்கள் மற்றும் அஷ்ட வசுக்கள் அம்சம்
பதினைந்து முகம் - சந்திர அம்சம்
பதினாறு முகம் - முப்பத்து முக்கோடி தேவர்கள் அம்சம்
(உருத்திர கணிகையர் புராணம், 1907ம் வருட இலங்கை வெளியீடு)

இது தவிர, ஜாபால உபநிஷதம் ருத்ராக்ஷ அம்சத்தையும், அவற்றை அணிவதால் ஏற்படும் பலன்களையும் போற்றுகின்றது. (புருஷார்த்த ப்ரபோதம், 1911ம் வருட வெளியீடு)
ஒரு முகம் - பரமசிவ அம்சம் - பிரம்மஹத்தியை நீக்கும். (ஏக வக்த்ரம் சிவஸ்ஸாக்ஷாத் ப்ரஹ்மஹத்யாம் வ்யபோஹதி)
இரு முகம் - ஸ்ரீகண்ட பரமசிவம் - உயிரினங்களுக்கு செய்யும் பாபத்தினை நீக்கும் (கோவதநாச்யத்துவம்)
மூன்று முகம் - அக்னி - பெண்களால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் (ஸ்த்ரீஹத்யாந்தஹதிக்ஷணாது).
நான்கு முகம் - பிரம்மா - சக மனிதர்களால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் (நரஹத்யாம் வ்யபோஹதி)
ஐந்து முகம் - காலாக்னி ருத்திரர் - உணவுகளால் ஏற்படும் நோய்களை நீக்கும்
ஆறு முகம் - சுப்ரமணியர் - குரு துரோக பாவம் நீக்கும்
ஏழு முகம் - ஆதிசேஷன் - தானங்கள் வாங்கியதால் ஏற்படும் தோஷங்களை நீக்கும்
எட்டு முகம் - விநாயகர் - திருடு சம்பந்தமான தோஷங்களை நீக்கும்
ஒன்பது முகம் - பைரவர் - பில்லி, சூனியங்கள் நீங்கும்
பத்து முகம் - விஷ்ணு - நவக்ரஹ தோஷங்கள் நீங்கும்
பதினோரு முகம் - ஏகாதச ருத்திரர் - அசுவமேத யாகம் செய்த பலன்
பன்னிரு முகம் - துவாதச ஆதித்தர் - மேலான கல்வி கிடைக்கும்
பதின்மூன்று முகம் - சுப்ரமண்யர் - ஸகல கார்ய ஸித்தி
பதினான்கு முகம் - சிவசக்தி - தெய்வங்களின் அருள் எளிதில் கிட்ட அருளும்.
இது தவிர பல்வேறு புராணங்கள் ருத்ராக்ஷ முகங்களைப் பற்றியும், பலன்களைப் பற்றியும் பகர்கின்றன.
பொதுவாக, ஐந்து மற்றும் ஆறு கோடுகள் கொண்ட ருத்ராக்ஷங்களே அதிக புழக்கத்தில் உள்ளன.
ருத்ராக்ஷ கோடுகள் எத்தனையானாலும், அதை அணிவதும், அதற்குரிய புனிதத்தைக் காப்பதும் பற்பல பலன்களை வாரி வழங்கக்கூடியது.

ஒரு முக ருத்ராக்ஷம் மிகவும் போற்றப்படுகின்றது.
எளிதில் கிடைக்காது.

ஆயிரம் சாதாரண ருத்ராக்ஷங்களைக் குவித்து, அதனுள் ஏக முக ருத்ராக்ஷத்தை வைத்தால், அது தானாகவே மேலே ஏறிவரும் என்பது,
ஆயிரம் ருத்ராக்ஷத்தினைக் காட்டிலும், ஒரு முக ருத்ராக்ஷம் மிகவும் மேலானது என்பதைக் குறிப்பதற்காக மட்டுமே தான்.


இரண்டு ருத்ராக்ஷங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தது போல் சில ருத்ராக்ஷங்கள் கிடைப்பது உண்டு. அது கெளரிசங்கரம் என்று அழைக்கப்படும். சிவாலய பூஜை செய்பவர்களும், சிவ பூஜையை நித்தமும் செய்பவர்களும் - சிவசக்தி அம்சம் கொண்ட கெளரிசங்கரத்தை நிச்சயம் அணிய வேண்டும் என்று சிவபுராணங்கள் அறுதியிடுகின்றன.
ஆறுமுகம் கொண்ட ருத்திராக்ஷத்தை உடலின் வலது புறத்திலும், ஒன்பது முகம் கொண்ட ருத்திராக்ஷத்தை உடலின் இடது புறத்திலும், பதினோரு முகம் கொண்ட ருத்ராக்ஷத்தை தலையிலும், பன்னிரு முக மணி காதுகளிலும், எந்த முக மணியாகினும் கண்டம் எனும் கழுத்தில் அணிவது சிறந்த பலனைத் தரக்கூடியது.
மரங்களிலிருந்து கிடைத்த ருத்ராக்ஷத்தைக் காம்பை எடுத்து விட்டு, முதலில் சுத்த தண்ணீரில் ஒரு நாள் முழுக்க ஊற வைத்து,
பின் மறு நாள் முழுக்க காராம்பசுவின் பாலில் ஊறவைத்து,
பிறகு சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்து, (சிலர் எழுமிச்சம் பழச் சாறு கொண்டு சுத்தம் செய்வது உண்டு),
பிறகு விபூதியில் ஒரு நாள் முழுவதும் போட்டு வைத்து,
அடுத்த நாள் ஏதேனும் ஒரு சிவாலயத்தில் கொண்டு சென்று, தெய்வத்தின் பாதங்களில் சார்த்தி எடுத்து, குருவின் கரங்களால் (அல்லது பெரியோர்களின் கரங்களால்) அணிந்து கொள்ளவேண்டும்.
புண்ய நதிகளில் நீராடும் போதும், தானங்கள் கொடுக்கும்போதும், சிவமந்திரங்களை ஜபிக்கும் போதும், ஹோம பூஜைகளின் போதும், தெய்வங்களை ஆராதனை செய்யும்போதும் மிக நிச்சயமாக ருத்ராக்ஷம் அணிந்துகொள்ள வேண்டும் என ஜாபால உபநிஷத் உரைப்பதாக புருஷார்த்த ப்ரபோதம் கூறுகின்றது (ஸ்நானே தான ஜபே ஹோமே வைச்வதேவே ஸுரார்ச்சநே).
ஒரே ஒரு ருத்ராக்ஷம் மட்டும் கழுத்தில் அணிந்துகொண்டால், அதை எக்காலத்திலும் கழட்ட வேண்டிய அவசியம் இல்லை.
ஒன்றுக்கு மேற்பட்ட ருத்ராக்ஷங்களை மாலையாகக் கோர்த்து அணிந்து கொண்டால், அதன் புனிதம் காக்க வேண்டி, தெய்வ பூஜை சார்ந்த நேரங்களில் மட்டும் அணிந்து கொள்ள வேண்டும்.
108 எண்ணிக்கையிலான ருத்ராக்ஷ மாலை அணிவதே உத்தமம். 52 அல்லது 27 எண்ணிக்கையிலான ருத்ராக்ஷ மாலையும் அணியலாம்.
ருத்ராக்ஷ மாலை கொண்டு, காலை வேளையில் முகத்திற்கு சமமாகவும், மதிய நேரத்தில் இதயத்திற்கு சமமாகவும், மாலை வேளையில் வயிற்றுக்கு சமமாகவும் கொண்டு ஜபிக்க வேண்டும்.
ருத்ராக்ஷ மாலையை பெருவிரல் அல்லது கட்டைவிரலால் நகர்த்தி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்.
ஆட்காட்டி விரலால் ஜபம் செய்தால் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.
நடுவிரல் கொண்டு ஜபம் செய்வது செல்வங்களை சேர்க்கும்.
மோதிர விரல் கொண்டு ஜபம் செய்யின் நல் ஆரோக்கியத் தரும்.
சுண்டு விரல் கொண்டு ஜபம் செய்வது தெய்வ அருளை விரைவில் வழங்கும்.

பெண்கள் ருத்ராக்ஷம் அணிவது பற்றி பல கருத்துக்கள் உள்ளன.
ருத்ராக்ஷம் புருஷ அம்சம் கொண்டது எனவும் அதனை ஆண்கள் மட்டுமே அணிய வேண்டும் என்றும்,
சிவாம்சமாக உள்ளது ருத்ராக்ஷம் - அதனை சிவ சிந்தனை உள்ள யாவரும் அணியத் தகுந்தது என்றும்,
சிவ தீட்சை பெற்ற பெண்கள் அணியலாம் என்றும்,
வயதில் மூத்த பெண்கள் மட்டும் அணியலாம் என்றும்,
விதவைகளும் ருத்ராக்ஷம் அணியலாம் என்றும் பல கருத்துக்கள் உள்ளன.
நேரடியாக சாஸ்திரங்களோ அல்லது ஆகமங்களோ பெண்கள் ருத்ராக்ஷத்தை அணிவதைப் பற்றி சொல்வதாக அறியமுடியவில்லை.
தேவி அல்லது சக்திக்குரிய புராணங்களில், அம்பிகையானவள் ருத்ராக்ஷ மாலை அணிந்து கொண்டிருப்பதாக, குறிப்பிடப்படுகின்றது.
ஜாபல உபநிஷதம் - பொதுவாக ருத்ராக்ஷ தாரண விதி என அதனை அணிந்து கொள்ளும் நியமங்களைக் கூறுகின்றது.
ஆகவே, சிவ சிந்தனை உள்ள யாவருமே அணியத் தகுந்தது என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதன் புனிதம் காக்கப்பட பல்வேறு விதிகளை சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.
சிவாலயங்கள் சிலவற்றில் ருத்ராக்ஷங்களைக் கொண்டு, சிவலிங்கத்தின் மேல் ருத்ராக்ஷ பந்தல் அமைக்கின்றார்கள். இது மிகவும் விசேஷமானது என்றும், விரைவில் பலன் தரக்கூடியது என்றும் ஆன்மீகர்கள் கூறுவார்கள்.
ருத்ராக்ஷம் - மருத்துவ குணம் வாய்ந்தது. மஞ்சள் கிழங்கு - மங்கலமானதும், அதே போல் கிருமி நாசினியாகவும் பயன்படுகின்றதோ அது போல, ருத்ராக்ஷம் சிவாம்சம் கொண்டதாகவும், ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களை நீக்கக் கூடியது எனவும் நம்பப்படுகின்றது.
ஆக மொத்தத்தில் ருத்ராக்ஷம் - சிவ அம்சம் கொண்டது. மிகப் புனிதம் வாய்ந்தது. சிவ நாம ஜபம் செய்ய மிக மிக உகந்தது.
ருத்ராக்ஷம் அணிவோம் ! சிவ பலனை அடைவோம் !!

Thanks to 
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

நமசிவாய வாழ்க !

மணக்கால் அய்யம்பேட்டை | 4:44 PM | Best Blogger Tips

நமசிவாய வாழ்க !

அண்டமெங்கும் நிறைந்திருக்கும் அருட்பெரும் சக்தியாக விளங்கும் சிவபெருமானை வழிபடும் வகை சைவம் ஆகும். அங்கிங்கெணாதபடி வியாபித்திருக்கும் சைவப்பெரும் பரம்பொருளை வழிபடுபவர்கள் சைவர்கள் என்று போற்றப்படுவார்கள்.
சைவர்களின் முக்கியமான கடமைகள் என சிவபுராணங்கள் கூறுபவை - விபூதி எனும் திருநீற்றினை நெற்றியில் எப்பொழுதும் தரித்திருப்பது.
ருத்ர அம்சமாக விளங்கும் ருத்ராக்ஷத்தை அணிந்திருப்பது.
பஞ்சாக்ஷரம் என்று போற்றப்படும் நமசிவாய எனும் மந்திரத்தை முப்பொழுதும் சொல்லிக்கொண்டிருப்பது.
(ருத்ராக்ஷம், விபூதி பற்றி முந்தைய பதிவுகளில் கண்டிருந்தோம்.

ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் பொருளாம் ஈசனிடமிருந்து உலகங்கள் தோன்றின. உயிர்கள் தோன்றின. ஆகையால் அவருக்கு பசுபதி என பெயர். உலகத்திலிருக்கும் அனைத்திற்கும் ஆதாரம் பரமேசனே என்பது தான் பசுபதியின் அர்த்தம்.
பஞ்சபூதங்களையும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) தோற்றுவித்தவர் பரமானந்த நடனம் செய்யும் பரம்பொருள்.
நடராஜ மூர்த்தியின் டமருகம் எனும் உடுக்கையிலிருந்து ஒலி தோன்றியதாகவும், அதிலிருந்து எழுத்துக்களும், மொழிகளும் தோன்றியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. (மாகேச்வர சூத்ரம்)
வேதங்களும், உபநிடதங்களும், புராணங்களும் தெய்வங்களால் அருளப்பட்டவை. தெய்வ அருள் பெற்ற அடியார்கள், தெய்வங்களைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர்.
வேதங்கள் - மகேஸ்வரனின் மூச்சுக் காற்றிலிருந்து ரிஷிகளால் உணரப்பட்ட மந்திரங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. வேதங்களே இந்து மதத்திற்கு ஆணிவேர்.
மனப்பூர்வமாக சொல்லப்படும் மந்திரங்களுக்கு தெய்வங்கள் கட்டுப்படுவார்கள் என்பது வேத வாக்கு.
தெய்வங்களுக்குரிய மந்திரங்களை மனமாரச் சொன்னால், தெய்வங்கள் மனமிரங்கி, நம் மனம் குளிர அருள்வார்கள்.
தெய்வ அருள் எளிதில் கிட்ட, அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை, மனதால் தியானிப்பது அல்லது சொல்வது - வழிவகுக்கும்.
தெய்வங்களைப் போற்றும் வேத மந்திரங்களை பிழையில்லாமல் சொல்ல மிகுந்த பயிற்சி வேண்டும்.
ஸ்லோகங்கள் அல்லது தெய்வத் திருப்பதிகங்களை படிப்பதற்கும் அல்லது மனனமாகச் சொல்வதற்கும் பயிற்சிகள் அவசியம்.
கஷ்டங்களை நீக்க வல்ல மந்திரங்களை, எளிதில் சொல்வதற்கு ரிஷிகள் போன்றோர்கள், எளிய மக்களும் மிக இலகுவாகச் சொல்ல ஏதுவாக மூல மந்திரங்கள் எனும் எளிய மந்திரங்களை வகுத்துள்ளனர்.
இந்த மந்திரங்கள் சொல்வதற்கு எளிதாகவும், ஆனால் மிக மிக வீரியம் நிறைந்தவையாகவும் அமைந்திருக்கும்.
இவை மிக எளிமையான வழிமுறைகள் கொண்டது. எப்பொழுதும் சொல்ல முடிவது.
உடல் வலிமை பெற, உணவு உரம் போல அமைந்து, உடற்பயிற்சி செய்வது அவசியமானது. அது போல், மனம் திறன் பெற, மந்திரம் உரமாகி, மனப்பயிற்சி செய்வது இன்றியமையாதது.
இந்த மூல மந்திரங்கள், தெய்வங்களைப் போற்றும் பெரும் மந்திரத் தொகுப்பில் உள்ள சாராம்சங்களைச் சாறு பிழித்து எடுத்திருப்பதாக அமைந்திருக்கும். ஒரு பழத்தை முழுமையாகச் சாப்பிடுவதை விட அதன் சாற்றினை அருந்துவது எளிதானதல்லவா?
மூல மந்திரம் என்பது, தெய்வத்தினைப் போற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்களின் ஆரம்ப எழுத்துக்களை மட்டுமே, அதாவது அதன் மூல எழுத்துக்களை மட்டுமே கொண்டு சுருங்கச் சொல்வதாக இருக்கும். சுருக்கமும், விளக்கமும் தகுந்த குரு வாயிலாகவே கற்க வேண்டியிருக்கும்.
பல்வேறு தெய்வங்களுக்கு, பலவிதமான மூல மந்திரங்கள் உண்டு.
அவற்றில் மேலானதாகக் கருதப்படுவது, சிவபெருமானைப் போற்றக்கூடிய பஞ்சாக்கரம் அல்லது திருவைந்தெழுத்து எனப்படும் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மூலமந்திரம்.
இந்த ஐந்தெழுத்து மந்திரம் (நமசிவாய) சிவபெருமானே நமக்குச் சொல்லித் தருவதாக எடுத்துக்கொண்டு, எவர் வேண்டுமானாலும் எப்பொழுதும் சொல்லக் கூடியது.
உரு ஏறத் திரு ஏறும் என்பார்கள். மூல மந்திரங்களை எவ்வளவுக்கு எவ்வளவு ஜபிக்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு தெய்வத் திருவருள் கிடைக்கும்.
மற்ற மூலமந்திரங்களில் - எழுத்துக்கள் அதிகமிருக்கும். (முருகனைப் போற்றும் சடாக்ஷரம் - ஆறெழுத்து - சரவணபவ, மஹா விஷ்ணுவைப் போற்றும் அஷ்டாக்ஷரம் - எட்டெழுத்து - ஓம் நமோ நாராயணாய, அம்பிகையைப் போற்றும் சோடசாக்ஷரம் - 16 எழுத்து). மிகக் குறைந்த எழுத்துக்கள் - ஐந்தே எழுத்துக்களைக் கொண்ட - பஞ்சாக்ஷரம் - எளிதில் உருவேற்ற அதாவது ஜபிக்க ஏற்றது. மிக விரைவில் அதிக எண்ணிக்கையிலான ஜபங்கள் செய்ய இயலுவதால், இறையருள் மிக எளிதில் கிடைக்கும்.
வேதங்கள் நான்கு ; அவை ருக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம்.
இதில் இரண்டாவதாக அமைந்திருக்கும் யஜுர் வேதம், தெய்வங்களைப் போற்றி வழிபாடு செய்யக்கூடிய யாகங்களையும், பூஜைகளையும் - பெரும்பான்மையாகக் கூறுகின்றது.
யஜுர் வேத மந்திரங்களின் மையமாக அமைந்திருப்பது, சிவபெருமானைப் போற்றக் கூடிய ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரத் தொகுப்பு. யஜுர் வேத மையமான ஸ்ரீ ருத்ரத்திற்கும் நடுவாக அமைந்திருப்பது "நமசிவாய" எனும் ஐந்தெழுத்து மந்திரம். ('நம: சிவாய'ச சிவதராயச)
யஜுர் வேதத்திலுள்ள எழுத்துக்களையெல்லாம் ஒவ்வொரு எழுத்தாகக் கொண்டு, மாலை போன்று தொடுத்து, இறைவனுக்கு அர்ப்பணிப்பது போல் அமைத்தால், மாலையின் நடுநாயகமாக, நமசிவாய அமையும். (சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு, நமசிவய எனும் எழுத்துக்கள் பதித்த ரத்தினங்களால் ஆன பதக்கம் சாற்றப்பட்டிருப்பது - அவர் வேத நாயகன் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.)
ஆகையினால், சிவப்பரம்பொருளை தொழுதிடும் அடியவர்கள் எக்கணமும் 'நமசிவாய' மந்திரத்தைச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும் என சிவபுராணங்கள் வலியுறுத்துகின்றன.
நமசிவாய - என்று சொல்லும்போது, வேத முழுமையும் சொல்லிய பலன் கிட்டும்.
நாம் வேண்டும் விருப்பங்களை மிக விரைவில் கிடைக்க வழிசெய்யும். மனம் நிரம்பிய மணவாழ்வு பெறச்செய்யும். அனைத்து செல்வங்களையும் தரும். (சிவம் என்றால் மங்கலம் என்றே அர்த்தம்)
நமசிவாய எனும் ஐந்தெழுத்து மூல மந்திரத்தின் சிறப்பினை பல்வேறு புராணங்களும், அடியார்களின் வாழ்க்கை வரலாறுகளும் எடுத்து இயம்புகின்றன.
சிதம்பரம் மற்றும் பஞ்சாக்ஷரம் சம்பந்தமான - மிக முக்கியமான ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு காண்போம்.
இந்து மதத்தின் புகழ், வேத காலம் முதற்கொண்டு புகழ்பெற்று விளங்கியிருக்கின்றது.
ஆயினும், இடைப்பட்ட சில காலத்தில், மன்னராட்சி முறையால், அவர்கள் கொண்ட மதத்தை மக்களைப் பின்பற்ற உத்தரவிடுவதாலும், வேற்றுமத தலையீடு இருந்ததாலும், இந்து மதத்தின் புகழ் சரியத் தொடங்கியது.
புகழின் சரிவை, இறையருளால், அந்தந்த காலத்தில், மஹான்கள் பிறந்து, இந்து சமயத்திற்குப் பெரிதும் ஏற்றத்தைப் பெறத் தொண்டு ஆற்றியுள்ளார்கள்.
தமிழத்தில், இடைக்காலத்தில் சமணமும், பெளத்தமும் ஆதிக்கம் பெற்றிருந்த சமயத்தில், தமிழர்களும் பிறமத மோகத்தில் மூழ்கியிருந்தார்கள்.
இதனைப் பொடிப்பொடியாக்க, தெய்வாம்சம் பொருந்திய அடியார்கள் தோன்றி, வேற்றுமதத்தில் மூழ்கியிருந்த மக்களின் உறக்கத்தைத் தட்டியெழுப்பினார்கள்.
தமிழும், சைவமும், பக்தியும் தழைக்க அயராது பாடுபட்டார்கள். பக்தியை மிக எளிமையாக்கினார்கள். உதாரணமாக, சாதாரண மக்களும் எளிய முறையில் இறைவனை வழிபட வழிவகை செய்தார்கள். நமசிவாய எனும் எளிய மந்திரத்தை மக்களின் மனதில் ஆழ ஊன்றுவித்தார்கள். ஒரு பெரும் ஆன்மீகப் புரட்சியையே தோற்றுவித்தார்கள். அக்காலத்தில் அவர்கள் ஊன்றிய ஆன்மீக விதை இன்று மிகப்பெரும் ஆலமரமாக விரவியிருக்கின்றது.
அந்த அடியார்கள் சென்று பாடிய சிவத்தலங்கள் - பாடல் பெற்ற சிவத்தலங்கள் என்று போற்றப்பட்டு - சிவபக்தர்களால் பெரும் போற்றுதலுக்கு உள்ளாகியிருக்கின்றது.
மேற்சொன்ன அடியார்களில் மிக முக்கியமானவர்கள் நால்வர் பெருமக்கள் என்று போற்றப்படும், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் ஆகியோர்.
இந்த நால்வரில் காலத்தால் முந்தையவர் மாணிக்கவாசகர்.
அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் என தமிழ் மூவராகத்தான் அனேக காலம் கொண்டாடப்பட்டு வந்தனர். ஆயினும், காலத்தால் பிற்பாடுதான் நால்வராகச் சேர்க்கப்பட்டவர் மாணிக்கவாசகர்.
மதுரையில் அரசாண்டு கொண்டிருந்த பாண்டிய மன்னனிடம், மந்திரியாகப் பணியாற்றியவர் திருவாதவூரர். அரசாங்கத்தைப் பலப்படுத்த, குதிரைகள் வாங்க அரசனால் பணிக்கப்பட்டு, குதிரைகள் வாங்க வந்த வழியில், திருப்பெருந்துறை எனுமிடத்தில், குருந்த மரத்தடியின் கீழ் வீற்றிருந்த சிவபெருமானின் திருவடி ஒளியைக்கண்டு பணிந்து, அவரையே ஞான ஆசானாகக் கொண்டு, மனம் மாறி தாம் ஒரு அமைச்சர் என்பதை மறந்து, குதிரை வாங்க அரசன் கொடுத்த பணத்தையெல்லாம் கொண்டு, கோயில் கட்ட, இதை அறிந்து கோபம் கொண்ட அரசன், தூதனை அனுப்பி விபரம் கேட்க, குதிரைகள் வாங்காத அமைச்சரைத் அரசன் தண்டிக்க, தனது அடியவன் பெறும் கஷ்டங்களைப் பொறுக்காத சிவபெருமான், ஒரு திருவிளையாடலை நடத்தத் திட்டமிட்டு, நரிகளையெல்லாம் குதிரைகளாக்கி, திருவாதவூரர் அனுப்பியவன் என்று கூறி, குதிரைகளை அரசனிடம் சேர்ப்பிக்க, அன்றிரவே குதிரைகள் எல்லாம் நரிகளாக மாறி கூவி குதிரை லாயத்திலிருந்து தப்பித்து ஓட, இதை அறிந்த மன்னன் மறுபடியும் திருவாதவூரரை திரும்பத் தண்டிக்க, இம்முறை மதுரை வழிபாயும் வைகை நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய, இதனை சரிசெய்ய ஆற்றங்கரை ஓரத்திலிருக்கும் அனைவருக்கும் முறைவைத்து, ஆற்று உடைப்பை அடைக்கச் செய்ய உத்தரவிட, அதில் ஒரு முறை கொண்ட பிட்டு எனும் உணவை விற்கும், சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்ட வந்தி எனும் வயோதிகப் பெண்மணி மட்டும் அடைக்காமல் இருக்க, சிவபெருமான் ஒரு வேலையாளாய் வந்தியிடம் வந்து, தான் உடைப்பை சரிசெய்வேன் என்று கூறி அதற்குக் கூலியாக பிட்டு மட்டும் வாங்குவேன் என்று கூறி, பிட்டை மட்டும் அவ்வப்பொது உண்டு, உடைப்பை சரிசெய்யாமல் திருவிளையாடல் புரிய, மன்னவன் ஒரு இடத்தில் மட்டும் உடைப்பு அடையாமல் இருக்கக் கண்டு, கோபம் கொண்டு, அவ்விடத்திற்கு வந்து, வேலையாளாக இருந்த சிவபெருமான் மீது பிரம்பால் அடிக்க, அந்த அடி அண்டமெங்கும் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மீதும், அரசன் மீதும் விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற மன்னவன் திகைக்க, ஒரு கூடை மண்ணை எடுத்து உடைப்பில் போட்டு வைகையை அந்த ஏவலாள் சரிசெய்து, மறைந்தனர். மேலும் சிவபெருமான் அசரீரியாக, தனது அன்பைப்பெற்ற திருவாதவூரர் பெற்ற துன்பத்திற்காக தான் ஒரு திருவிளையாடல் புரிந்தேன் என்று கூற, மன்னன் மகிழ்ந்து திருவாதவூரரைப் பணிய, அவர் மந்திரிப்பதவி ஏற்க மறுத்து, சிவத்தொண்டே என் வாழ்நாள் தொண்டு என மன்னனிடம் கூற, அவர் விருப்பப்படியே, திருவாதவூரர் சிவத்தொண்டு புரிய உரிய உதவிகள் செய்தனன்.
இவர் பல தலங்கள் வழியே சிதம்பரம் வந்தடைந்தார்.
இவர் பாடிய பாடல்களின் வார்த்தைகள் எல்லாம் மாணிக்கம் போன்று இருந்தமையால், இறைவனே இவருக்கு 'மாணிக்கவாசகர்' என்று பெயரிட்டார்.
இவரின் பாடல்கள் - திருவாசகம் ஆகும். பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. சிவானந்த ரசமாகிய திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பார்கள். அந்தளவுக்கு தெய்வத்தமிழால், இறைவனைப்பாடி, கேட்பவர் அனைவரும் உருகும்படி பாடல்கள் அமைந்திருக்கும்.
தனது உயிர்மூச்சாக நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தைக்கொண்டவர் மாணிக்கவாசகர். ஆகையினால் தான், 'நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க' என்று தொடங்கும் சிவபுராணம் எனும் பாடலைப் பாடியவர்.
தன்னை அடியார்க்கும் அடியாராகவும், மிக மிக எளிமையானவராகவும் தனது பாடல்கள் மூலம் அறிவித்தவர்.
இவர் ஒரு சமயம், சிதம்பரத்தில் தங்கியிருந்து, நடராஜப் பெருமான் மீது ஆரா அன்பு கொண்டு, சிவத்தொண்டு ஆற்றிவந்தார்.
அச்சமயம், சிவனடியார் ஒருவர் ஈழம் எனும் இலங்கை சென்று, எப்பொழுதும் பொன்னம்பலம், சிற்றம்பலம் என்று கூறிவந்தார்.
அதுசமயம், இலங்கையில் புத்தமதம் ஓங்கியிருந்தது. அரசவை வீரர்கள், அடியாரின் பிறமதச் சொல்கேட்டு, கோபம் கொண்டு, அரசன் முன் நிறுத்தினர்.
அரசன், அடியார் கூறிய வார்த்தைகள் கேட்டு, இதன் பொருள் என்னவென வினவ, சிதம்பரத்தின் சிறப்பையும், சைவத்தின் மேன்மையையும், நடராஜரின் புகழையும், பெருமை பொங்க பதில் கூற, தன் மதத்தின் மீது மதம் கொண்டிருந்த அரசன், சிதம்பரத்தில் தன் மதத்தை வேரூன்றச் செய்வேன் என்று சபதமிட்டு, தன் பரிவாரங்களுடனும், தனது மத துறவிகளுடனும் சிதம்பரம் வந்தான்.
சிதம்பரத்தில் தனது மத துறவிகளுடன் வந்து, எவர் மதம் உயர்ந்தது என்பதைப் பற்றி வாதம் செய்ய அழைப்பு விடுத்தான்.
புத்த மதத் துறவிகளுடன் வாதம் புரிய தகுந்த நபர் மாணிக்கவாசகர் தான் என்று அனைவரும் உணர்ந்து புத்தர்களுடன் வாதம் புரிய அவரை, ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு, மாணிக்கவாசகரின் அருட்தோற்றப் பொலிவினைக் கண்ட புத்த துறவிகள், மன்னன் இவரைப் பார்த்துவிட்டால், மனம் மாறிவிடுவானோ என்றஞ்சி, ஒரு திரையமைத்துக் கொண்டு, மன்னவன் மாணிக்கவாசகரைப் பார்க்காவண்ணம், திரையின் ஒரு பக்கம் மாணிக்கவாசகரையும், மறு பக்கம் தாங்களும் நின்று கொண்டனர்.
புத்த மதத் துறவிகள் சிவனை நிந்தித்து வார்த்தைகளை வீச, அதைக் கேட்கப் பொறாத மாணிக்க வாசகர், தில்லையம்பலக் கூத்தனை மனதார நினைந்து, புத்தமதத் துறவிகளின் சொல் திறத்தை நீக்க, வாகீஸ்வரியாக விளங்கும் சரஸ்வதியை வேண்டிக்கொண்டு, துறவிகள் அனைவரையும் அக்கணமே ஊமையாக்கினார்.
திடுக்கிட்ட மன்னவனும், துறவிகளும் செய்வதறியாது திகைத்தனர்.
ஆயினும், மன்னவன் மாணிக்கவாசகர் மீது மதிப்பு கொண்டு, அவரை நோக்கி, 'வாக்குத் திறமையுள்ள எனது மத துறவிகளை ஊமையாக்கினீர்கள்.
எனக்கு ஒரு மகள் உண்டு. அவள் பிறவியிலேயே ஊமை. அவளையும் இங்கு அழைத்து வந்திருக்கின்றேன். அவளைப் பேச வைத்தால், நானும், எனது மதத் துறவிகளும் சைவ சமயம் சேருகின்றோம்' என்று கூறினான்.
மாணிக்கவாசகர் நட்டமாடும் நம்பிரானின் மேனியில் அமைந்திருக்கும், ஐந்தெழுத்து மந்திரத்தை, மனம் முழுக்க நிரப்பிக்கொண்டு, மன்னவனின் மகளுக்கு, ஐந்தெழுத்து மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் கற்றுக்கொடுத்தார்.
முதலில் 'ந' எனும் எழுத்தை மட்டும் சொல்லச் சொல்லிப் பழக்கப்படுத்தினார். அதை இளவரசி சொன்ன பிறகு, 'ம' என்கிற எழுத்தை மட்டும் பழக்கப்படுத்தி, தொடர்ந்து சி, வ, ய எனும் எழுத்துக்களைச் சொல்லக் கற்றுக்கொடுத்தார். இந்த ஐந்து எழுத்துக்களும் நன்கு சொல்ல பழகிய இளவரசியை, 'நமசிவய' என்று சொல்லுமாறு பணிக்க, அவளும் 'நமசிவாய' என்று சொல்லி முடித்ததும், இறையருளாலும், திருமந்திரமாகிய திருவைந்தெழுத்தை, பக்தியுடன் கூறியதாலும் - வாக்கு வன்மை பெற்று - பேசும் திறனைப் பெற்றாள்.
புத்த மதத் துறவிகள், சைவத்தை நிந்தித்து முன்னர் கேட்ட கேள்விகளுக்கான, தமது பதிலாக மாணிக்கவாசகர் - முன்னர் ஊமையாக இருந்தவளும், தற்போது தெய்வத் திருவருளால் பேசும் திறன் பெற்ற இளவரசியைக் கொண்டே - பதிலிறுத்தார். அது 'திருச்சாழல்' எனப்படும் அருமையான திருப்பதிகம் ஆகும்.
இதைக் கண்ட மன்னவன், மனம் மகிழ்ந்து, திரை விலக்கி, மாணிக்கவாசகரைப் பணிந்து, தானும், தன் மதத்தைச் சார்ந்த துறவிகள் அனைவரோடும் சைவ சமயம் சேர்ந்தான்.
மாணிக்கவாசகர், மறுபடி இறைவனை நினைந்து, துறவிகள் அனைவருக்கும் வாக்கு வன்மை கொடுத்தார்.
(சிதம்பரத்தில், மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல நடராஜ மூர்த்தியே - ஓர் அந்தணர் வேடம் கொண்டு - கைப்பட எழுதிய, திருவாசக ஓலைச் சுவடிகள், இன்றும் பாண்டிச்சேரி, அம்பலத்தாடி மடத்தில், திருமூலிகைக் காப்பிடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது.)
திருவாசகத்தின் பெருமையை ஆன்றோர்கள் அருமையாகக் கூறுவார்கள்.
இறைவன் இறைவனுக்குக் கூறியது ஓம் எனும் பிரணவம் (முருகப்பெருமான் பரமசிவனுக்குக் கூறியது)
இறைவன் மனிதனுக்குக் கூறியது பகவத் கீதை (ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறியது)
மனிதன் மனிதனுக்குக் கூறியது திருக்குறள் (திருவள்ளுவர் - மக்களுக்கு நல்வாழ்வு பெற நல்வழி காட்டியது)
மனிதன் இறைவனுக்குக் கூறியது திருவாசகம் (மாணிக்கவாசகர் - ஆடல்வல்லப் பெருமானாகிய தில்லையம்பலவாணருக்கு கூறி எழுதச் சொன்னது)
நடராஜருடன் இரண்டறக் கலந்த மாணிக்கவாசகரைப் போற்றும் வண்ணம், சிதம்பரத்தின் மஹோத்ஸவமாகிய மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் பத்து தினங்களிலும், மாலை வேளையில், நடராஜப் பெருமானுக்கு நேரெதிரே மாணிக்கவாசகரை நிறுத்தி, பக்தன் பதிகம் என்ற பெயரில், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பதிகங்களைப் பாடி 21 தீபாராதனைகள் காட்டப்பெறுவது கண்களைப் பனித்து, நெஞ்சத்தை நெகிழவைக்கும் நிகழ்ச்சி.
சிதம்பரத்தின் பொன்னம்பலத்தில், 21600 தங்க ஓடுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இது நாம் ஒரு நாளில் நாம் உள்ளிழுத்து விடும் மூச்சுக்காற்றின் சராசரி எண்ணிக்கை. அந்தத் 21600 தங்க ஓடுகளிலும் நமசிவாய எனும் ஐந்தெழுத்துப் பொறிக்கப்பட்டிருக்கின்றது.
சைவத்தின் உயிர்மூச்சாகிய நமசிவாய எனும் பஞ்சாக்ஷரத்தை மனமார சொல்லிக்கொண்டு, நடராஜ மூர்த்தியை தரிசித்தால், கல்வியில் சிறப்பும், நாவன்மையும், வழக்குகளில் வெற்றியும், கலைகளில் புகழும் அடையமுடியும்.
கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே என்று உரைத்த அப்பர் சுவாமிகளுக்கும், ஐந்தெழுத்துக்கும் உள்ள தொடர்பையும்,
நமசிவாயத் திருப்பதிகம் பற்றியும்,
நாயன்மார்களில் ஐந்தெழுத்தை மட்டுமே ஓதி முக்தி பெற்றவரையும்,
திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறியுள்ள வாசியோகம் மற்றும் பஞ்சாக்கரத்தைப் பற்றியும்,
சிறப்பு வாய்ந்த பஞ்சாக்ஷர யந்திரம் பற்றியும்,
ஸூக்ஷ்ம பஞ்சாக்ஷரம் பற்றியும்,
விபரமாகப் பிறிதொரு சமயம் காண்போம்.

நல்லன யாவையும் நல்கும் நமசிவாய என்று நாளும் கூறி நற்கதி பெறுவோம் !

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com
- Mobile : 94434 79572
- Pl. Visit to : www.facebook.com/deekshidhar