மர்மம் விலகாத இந்திய கோவில்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:10 PM | Best Blogger Tips

 

இந்தியாவில் உள்ள கோவில்களில், 5 கோவில்கள் இன்னும் மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளது. இன்றுவரை அந்த மர்மங்களுக்கு விடை கிடைக்கவில்லை. தஞ்சை பெரிய கோவில், பெங்களூரு காடு மல்லேஸ்வரர் கோவில், கேரளா பத்மநாத சுவாமி கோவில், குஜராத் ஸ்ரீ ஸ்தம்பேஸ்வரர் கோவில் மற்றும் ஆந்திராவில் உள்ள லேபாக்ஷி கோவில். இந்த கோவிலின் மர்மங்கள் இன்று வரை புதிராகவே இருந்து வருகிறது.

இந்தியா ஒரு ஆன்மீக நாடு என்பது மத நம்பிக்கை உள்ள அனைவருக்கும் தெரியும். இந்து மதத்தை பரப்புவதற்காக எத்தனையோ மகான்களும் ஆன்மிக பெரியோர்களும் இந்த பூமியில் அவதரித்துள்ளனர். அதே போல் அன்றைய காலத்தில், காலத்தால் அழியாத எத்தனையோ ஆலயங்களையும் கட்டி எழுப்பி இந்து மதத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அந்த காலத்தில் கட்டப்பட்ட மிக பிரமாண்டமான கோவில்களைப் போல் இன்றைய காலத்தில் கட்ட முடியாமல் போனது ஆச்சரியமாகவே உள்ளது. காரணம், எந்தவிதமான தொழில்நுட்பமும் இல்லாத 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலங்களில் எப்படி இந்த மாதிரியான அதிசயிக்கத்தக்க வகையில் மிகப் பிரமாண்ட கோவில்களை கட்டி எழுப்பியுள்ளனர் என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களுக்கே சவாலாக உள்ளது என்று சொல்லலாம்.இந்தியாவின் பிரம்மாண்டம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எத்தனையோ வெளிநாட்டு மன்னர்களும் கொள்ளையர்களும், இந்தியர்களைப் பற்றியும், இங்குள்ள கோவில்களைப் பற்றியும் செவிவழிச் செய்தியாக கேள்விப்பட்டு, இந்தியாவின் மீது தொடர்ந்து படையெடுத்து வந்து இங்கிருந்த கோவில்களை பார்த்து ஆச்சரியப்பட்டு, கோவில்களில் இருந்த செல்வங்களை கொள்ளையடித்ததோடு, கோவில்களையும் இடித்து தரைமட்டமாக்கி துவம்சம் செய்து விட்டு சென்றதுண்டு.

கொள்ளை போன கோவில் சொத்து

அதிலும் குறிப்பாக முகமது கஜினி, தொடர்ந்து 18 முறை இந்தியாவின் மீது படையெடுத்து வந்து இங்கிருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்து சென்றான். 18ஆவது முறையாக இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது, அவன் குறிவைத்தது ஒரே ஒரு கோவிலைத் தான். அதுதான் குஜராத்தின் புகழ்பெற்ற சோமநாதர் கோவிலைத் தான்.

சோமநாதர் கோவில்

சோமநாதர் கோவிலைப் பற்றிய ஆச்சரியங்கள் உலகம் முழுவதும் தெரிந்திருந்தது. அதன் காரணமாகவே 17ஆவது முறை கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது அவன் குறிவைத்தது புகழ்பெற்ற சோமநாதர் ஆலயத்தை தான். அது ஏன் அந்த கோவிலின் மீது குறிவைத்தான் என்பது தானே உங்கள் கேள்வி.

அதிசயமான கோவில்கள்

அன்றைய காலத்தில் இந்தியாவில் இருந்த கோவில்களில் மிகவும் பணக்கார கோவில் அது தான். ஒரே வரியில் சொல்வதென்றால், அவன் சோமநாதர் கோவிலில் இருந்து கொள்ளையடித்த தங்கத்தின் எடை மட்டும் 6 டன்னுக்கும் அதிகம். அதோடு, அந்த கோவிலில் இருந்த செல்வ வளத்தை தாண்டி இரண்டு ஆச்சரிய அதிசயங்கள் இருந்தன.

புரியாத புதிர்

சோமநாதர் கோவில் கடற்கரையை ஒட்டிய கோவில் என்பதால், தினசரி காலையும் மாலையும் ஒரு பெரிய கடல் அலை ஒன்று எழும்பி சோமநாதர் கோவில் படிக்கட்டுகளை முத்தமிட்டு திரும்பும் என்பது தான். இன்றைய கட்டடக்கலை வல்லுநர்களுக்கு இது புரியாத புதிர் தான். மற்றொரு ஆச்சரியம் அந்த கோவிலில் கருவறை லிங்கம் தான். மற்ற கோவில்களில் இல்லாத அதிசயம் சோமநாதர் கோவில் லிங்கத்திற்கு இருந்தது. அந்த கோவில் கருவறை லிங்கம் மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் தரையில் அமைந்திருக்கவில்லை.

மர்மம் நிறைந்த கோவில்கள்

அதற்கு மாறாக எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த கஜினி முகமது ஆச்சரியப்பட்டான் அதனால் தான் அதை உடனே இடிக்கமுற்பட்டான்

என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சோமநாதர் கோவிலைப் போலவே இந்தியாவில் எத்தனையோ கோவில்களில் மர்மங்கள் நிறைந்துள்ளன. அவற்றுக்கு இன்று வரையிலும் அறிவியல் ரீதியாக பதில் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதில் ஐந்து கோவில்கள் மர்மங்களும் அதிசயங்களும் நிறைந்ததாகவே இருக்கின்றன.

தஞ்சை பெரிய கோவில்

இதில் முதலாவதாக வருவது, தஞ்சை பெரிய கோவில். இது 1007ஆம் ஆண்டுகளில் ராஜ ராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. இந்திய கட்டடக்கலைக்க பெயர் பெற்ற கோவில் என்பதோடு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் அனைத்துமே சுத்தமான கிரானைட் கற்களாகும். கோவில் விமானமும் 80 டன் எடையுள்ள ஒரே கிரானைட் கல்லால் ஆனது.

விலகாத மர்மம்

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த கோவிலைச் சுற்றிலும் கிட்டத்தட்ட 60 கி.மீக்கு எந்த மலையோ அல்லது குன்றுகளோ கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி முழுக்க பெரிய பெரிய கிரானைட் கற்களைக் கொண்டு இந்த கோவில் கட்டப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் மண்டை காய்கிறார்கள். இன்று வரையிலும் அதற்கான மர்மம் விலகவில்லை.

குஜராத் கடல் கோவில்

அடுத்ததாக வருவது குஜராத் மாநிலத்தில் பரூச் மாவட்டத்தில் கவி-கம்போய் என்ற சிற்றூரில் அரபிக்கடலில் கட்டப்பட்ட ஸ்ரீ ஸ்தம்பேஸ்வரர் கோவில். இதற்கு தினமும் மறையும் கோவில் என்றும் பெயருண்டு. இப்படி ஒரு கோவில் இருப்பதே 150 ஆண்டுகளுக்கு முன்புதான் வெளியுலகிற்கு தெரிய வந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பு கடல் உள்வோங்கும்போது தான் இக்கோவில் இருப்பது தெரியவந்தது. இந்தக் கோவிலின் அதிசயம் என்னவென்றால், காலை வேளைகளில் முழுமையாக காட்சியளிக்கும். பின்பு மாலை முதல் இரவு வரையிலும் கடல் அலைகளால் கோவில் முழுவதுமாக மூழ்கடிக்கப்படும். அந்த அளவுக்கு கணகச்சிதமாக இந்த கோவிலை கட்டி முடித்துள்ளனர். இதை கட்டியது யார், எந்த ஆண்டு என்பது இன்று வரையிலும் மர்மமாகவே உள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்

அடுத்ததாக நாம் காணவிருப்பது, கேரளா மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோவில். இந்த கோவிலைப் பற்றிய மர்மமும் இன்று வரை தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 6 ரகசிய நிலவறைகள் திறந்து பார்க்கப்பட்டன. திறந்து பார்த்த உடனேயே அனைவரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றுவிட்டனர். அந்த அறைகளில் இருந்தவை அனைத்துமே தங்க வைர, வைடூரிய ஆபரணங்கள் தான். அவற்றின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் ஆகும். திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது என்று சொல்லலாம். கடைசியாக உள்ள 7ஆவது அறை மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை.

பொக்கிஷ குவியல்

அந்த அறை முழுவதும் கடினமான எக்கு இரும்பால் செய்யப்பட்டுள்ளது. அந்த கதவில் என்ன தான் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தாலும் கூட சிறு துளையைக் கூட காண முடியவில்லை. இந்த நிலவறையில் உள்ள சொத்துக்கள், இது வரை கண்டெடுக்கப்பட்ட சொத்து மதிப்பை காட்டிலும் 4 மடங்கு இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அதோடு இந்த அறையின் கதவை ரகசிய மந்திரத்தால் மட்டுமே திறக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் மற்றொரு தரப்பினரோ, இந்த அறையில் தான் உலகம் அழியும் நாள் பற்றிய ரகசிய குறிப்பு உள்ளது என்றும் நம்புகின்றனர். இதனாலேயே இந்த கோவிலைப் பற்றிய மர்மம் இன்றும் தொடர்கிறது.

ஆந்திரா லேபாஷி கோவில்

மற்றொரு அதிசயமான கோவில், ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ளது லேபாக்ஷி கோவில். சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திரர் ஆகிய மூவருக்கும் ஒரே கோவிலாக அமைந்துள்ளது. இந்த கோவில் சிற்பக்கலைக்கு புகழ் பெற்ற கோவிலாகும். இந்த கோவிலின் அமைக்கப்பட்டுள்ள 70 தூண்களில் ஒரு தூண் மட்டும் தரையை தொடாமல் அந்தரத்தில் தொங்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மர்மமும் விழகாமலேயே இருந்து வருகிறது.

காடு மல்லேஸ்வரா கோவில்

கடைசியாக நாம் காண்பது, கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் வடமேற்கு பகுதியில் அமைந்ததுள்ள காடு மல்லேஸ்வரர் கோவில். இந்த கோவில் இருப்பதே 1997ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோவில் இருந்த நிலத்திற்கு அருகில் கட்டுமானத்திற்கு குழி தோண்டும்போது தான் கண்டுபிடிக்கப்பட்டது. முழுவதுமாக தோண்டிய போது தான், பெரிய அளவிலான கோபுரத்தோடு, குளத்துடன் கூடிய கோவில் இருப்பது தெரிய வந்தது.

சிவனுக்கு நந்தி அபிஷேகம்

இந்த கோவிலில் நந்தியானது வழக்கமாக இருப்பதைப் போல் இல்லாமல், சிவலிங்கத்திற்கு முன்புறம் இல்லாமல், லிங்கத்திற்கு முன்புறம் சற்று மேற்புறத்தில் அமைந்துள்ளது. அதோடு, நந்தியின் வாயிலிருந்து எப்போதும் நீர் விழுந்து கொண்டிருக்கிறது. அந்த நீரானது நேராக சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் அமைந்துள்ளது. இந்த அதிசய காட்சியை பார்க்கவே தினந்தோறும் பக்தர்கள் படையெடுக்கின்றனர். லிங்கத்தின் மீது விழும் நீர் நேராக குளத்தில் சென்று கலக்கிறது. ஆனால் நந்தியின் வாயிலிருந்து விழும் நீர் எங்கிருந்து வருகிறது என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.

By C Jeyalakshmi