🌹 வரலட்சுமி விரத பூஜை முறை...!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:12 PM | Best Blogger Tips

May be an image of templeNo photo description available.


செல்வம் செழித்தோங்கவும், மாங்கல்ய பலம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்....
 
ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். ஆனால் இந்த வருடம் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை (16.08.2024) இவ்விரதம் அனைத்து வயது பெண்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது...
 
வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்....
பூஜைக்கு வேண்டிய பொருட்கள் :
 
மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சைப்பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்துவிளக்கு, நோன்பு கயிறு, நகை மற்றும் பணம் வைத்தும் வழிபடலாம்....
 
பூஜை செய்யும் முறை :
 
ஒரு தாம்பூலத்தில் அரிசியை பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்திற்காக வைக்கலாம்....
 
அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியே நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டிற்குள் வருமாறு அழைக்க வேண்டும்....
 
மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் (தெய்வத்தை மனதில் எண்ணுதல்) செய்ய வேண்டும்...
 
மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டாள். 
 
அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அப்போது மங்களகரமான மந்திரங்களை சொல்லவும். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களையும் பாடலாம்....
 
இதையடுத்து நோன்புக்கயிற்றை கும்பத்தில் சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி சொல்லவும். மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நீங்கள் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீங்கள் தர வேண்டும் என்று மனம் உருகி வணங்க வேண்டும்....
 
பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்....
 
நிவேதனம் :
 
பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன் மற்றும் கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்....
 
பலன்கள் :
 
வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், செல்வ வளம் உண்டாகும், மங்கள வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்....