தயவு செய்து திருவண்ணாமலை மட்டும் போயிடாதீங்க..
அதுவும் அங்கு அண்ணாமலையாக காட்சி தருகிற அண்ணாமலையார் மட்டும் ஓர பார்வையில் கூட பார்த்து விடாதீங்க..
மீறி அண்ணாமலையே பாத்துட்டீங்க நீங்க அவ்ளோதான்...
அட என்னம்மா நான் இரும்பு மாதிரி அந்த அண்ணாமலையார் பார்த்தா என்ன பண்ணிடுவாரு.. அட போங்க நம்ம இரும்பு தான் ஆனா அவரு காந்தம் ஆச்சே நம்மை இழுத்து விடுவார்..
ஒருமுறை அண்ணாமலையாக வீற்றிருக்கக் கூடிய எம்பெருமானின் அழகில் விழுந்து விட்டால் எழுந்திருக்க முடியாது.. அடிக்கடி அழைத்து விடுவார்..
எல்லாம் என்னால தான் ஆகுதுன்னு சொல்லிட்டு திரியுற நம்ம எல்லாம் அண்ணாமலையார் செயல்னு சொல்ல வைத்து விடுவார்..
கடற்கரை பூங்கா திரையரங்கம் இவற்றில் தான் இன்பம் உள்ளது என்று நினைத்திருந்த நம்மை அங்கெல்லாம் செல்ல வைக்காமல் உண்மையான இன்பம் திருவண்ணாமலை தான் உள்ளது என்று அடிக்கடி வரவழைத்து அவன் அழகை காட்டி நம்மை மயக்கிக் கொண்டே இருப்பார்..
மது மாது சூது இது போன்ற போதைகள் தரும் இன்பத்தை விட இவன் தரும் இன்பம் எதிலும் கிடைக்காது என்று தோன்ற வைத்து விடுவார்..
பக்கத்தில் இருக்கும் கடைக்கு கூட வாகனத்தில் செல்லும் நம்மை 14 கிலோ மீட்டர் தூரம் தன்னை சுத்தி வர வைத்து, அதுவும் நடைபயணமாக சுத்தி வர வைத்து சுத்தலில் விட்டு விடுவார்..
எதற்கெடுத்தாலும் வேகம், எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் நம்மை எப்படி அமைதியாக அழகாக மலையாக அமர்ந்து பல செயற்கரிய செயல்களை செய்த வண்ணம் உள்ளாரோ அதுபோல நம்மையும் அமைதியாகி விடுவார்..
கோபம் என்பது எங்கு போனது என்று தெரியாமல் மாற்றி விடுவார்..
அண்ணா என்றால் நெருப்பு என்று அர்த்தம் சும்மாவே நமக்கு தீயில் இருந்து வரும் வெப்பத்தின் தாக்கம் தாங்க இயலாது..
ஆனால் இந்த நெருப்பு மலையான அண்ணாமலை உண்மையில் மிகக் குளிர்ந்த மலை இதன் தாக்கம் நம்மை இழுத்து ஆட்கொண்டு இன்ப சூழலில் நிலை நிறுத்த செய்யும்..
நினைத்தாலே முக்தி தரக்கூடிய அண்ணாமலையார் அல்லவா..
நித்தமும் அவன் நினைப்பு வர செய்து விடுவார்..
அது என்ன மாயமோ தெரியல அவருக்கு உங்களை பாக்கணும்னு தோணுச்சுனாலும் சரி உங்களுக்கு அவரை பார்க்கணும்னு தோணுச்சுனாலும் சரி வர வைத்து குழப்பத்தை தீர்த்து இன்பத்தை அல்லி அல்லி கை நிறைய மனம் நிறைய கொடுத்து அனுப்புவார்..
முக்கியமான ஒரு விஷயத்தை விட்டுட்டேன் அண்ணாமலையார தரிசிக்க செல்லும் பொழுது இது வேணும் அது வேணும்னு ஒரு லிஸ்டோட போவோம் ஆனா அதெல்லாம் அவரை பார்த்த உடனே மறந்துடும்.. இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கலாமா அவர் அழகை பார்த்துக்கிட்டே இருக்கலாமா என்று தான் தோணும்.. list lost ஆகி அவர் அழகில் திளைத்து நின்று கொண்டிருப்போம்..
பித்து பிடிக்க வைத்துவிடுவார்..
அவரைப் பற்றி சொல்ல இந்த ஒரு பதிவு பத்தாது..
இதெல்லாம் எப்படி உனக்கு தெரியுதுன்னு கேட்கலாம்..
எல்லாம் அனுபவம் தான்..
சரி சரி உங்களுக்கு அண்ணாமலையார் அனுபவம் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் பார்ப்போம்..
அண்ணாமலையும் எம் அண்ணா போற்றி