அகம், புறம் என்பதெல்லாம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:17 | Best Blogger Tips

 May be an image of elephant

 

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்

தேடுகின்ற பாவிகாள் தெரிந்ததொன்றை ஓர்கிலீர்

காடுநாடு வீடுவிண் கலந்துநின்ற கள்வனை

நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.

 

உள்ளே இருக்கும் ஈசனை உணராமல் வெளியே தேடுவது என்ன ? சிவ வாக்கியம் ஒவ்வொன்றும் ஜீவ வாக்கியம். எல்லோரும் பிறக்கும் போதே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. வளர வளர ஒவ்வொன்றாகத் தெரிந்து கொண்டு மேலும் மேலும் முன்னேறிப் போய்க் கொண்டே இருக்கிறோம். ஆனால் ஆன்மிக விஷயத்தில் முதற்படியான சரியையைத் தாண்டுவதே இல்லை

 

 பாரெல்லாம் பரவி நிற்கும் நாதனை உணர்ந்து அவன் நம்முள்ளும் இருக்கிறான் என்பதையும் உணர்ந்து உள்முகமாக மனதை செலுத்தி அவனை நாடுவதில்லை. புறக் கருவிகளான புலன் மயக்கத்தில் கிடந்து வீணே வாழ்வைக் கடந்து போகிறோம். சித்தர்கள் அனைவருமே இது குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.

 

பரவலாக ஒரு கருத்தை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதாவது சிதம்பரத்தை தரிசித்தாலும், திருவாரூரில் பிறந்தாலும், காசியில் மரித்தாலும், அருணையை நினைத்தாலுமே முக்தி என்பார்கள். அண்ணாமலையைச் சுற்றி மூன்று யோஜனை தூரம் வசிப்பவர்கள் முக்தர் ஆவர் என்று அருணாசல மகாத்மியம் கூறுகிறது. ஆனால் அது மறை பொருளாகச் சொல்லப்பட்ட வாசகங்கள் என்பது கூர்ந்து நோக்கும் போது புரியும். சிதம்பரம் என்பது சிதாகாசமாகும். சிதாகாசத்தை தரிசித்தால் முக்தி அதாவது அதனை உணர்ந்தால் முக்தி என்பதுவே

 

 கமலாலயம் என்று வழங்கப்படும் திருவாரூர் இதயத்தைக் குறிப்பது. மெய்யுணர்வது இதயத்தில் பிறப்பதையும் அதை உணர்வதையும் குறிப்பதாகும். காசி என்பது அகண்ட பிரகாசத்தைக் குறிப்பது. அவ்வருளொளியில் அகந்தை நசிக்கப் பெறுதலே காசியில் சாதல் என்பதாகும். அருணாசலம் என்பது அகண்ட சச்சிதானந்த ஸ்வரூபமே. அதனை பிறவிச் சுழலில் எப்படியோ மறந்து விட்டோம். நம்முள் நமதியல்பாகவே என்றும் திகழ்கிற அதை மீண்டும் நினைவு கூர்வதே அருணாசல ஸ்மரணையாகும். இவ்வாறு சிதம்பரம், திருவாரூர், காசி, திரு அண்ணாமலை என்கிற நான்கு சிவஸ்தலங்களை முன்னிட்டு கூறிய தரிசித்தல், பிறத்தல், இறத்தல், நினைவு கூர்தல் என்கிற இவை அனைத்தும் நம் பிண்டத்துள்ளே நடைபெற வேண்டியவைகளே. இதைக் குறிக்கவே அவைகளைக் குறிக்கும் ஆலயங்கள் புறத்தே அமைக்கப் பெற்றன.

 

அப்படியானால் உள்ளும் புறமும் இருப்பது ஒன்று என்கிற போது புறத்தே வழிபடுவதால் என்ன குறைந்து விடும் என்றால். நான் இருக்கிறேன் என்று விளங்குவது எதுவோ அதுவே இறைசக்தி. உள்முகமாக நோக்குங்கால் அது ஸ்ய ஸவரூபமாகவே விளங்கும். ஆனால் புறத்தே என்கிற போது அது நான், இது நான் என்கிற உபாதிகளுடன் சம்மந்தப்படுவதால் உபத்திரவம் உண்டாகிறது. ஆனால், ஒருவன் புறத்தே காணும் விஷயங்களைக் கண்டு தெளிந்து, எல்லாம் இறை ஸவரூபமே என்பதை உணர்ந்து தெளிந்து, தானும் இறை ஸ்வரூபமே என்பதையும் உணர்ந்து உள்முகமாக புத்தியை செலுத்தி சித்தி எனும் பாதையில் செல்லும் போதுதான் முக்தி எனும் சொர்க்க வாசல் திறக்கும். போர் வீரனாகத் தன்னை ஆக்கிக் கொள்ள ஒருவன் மேற்கொள்ளும் பயிற்சிகளை ஒத்ததே புறமுக வாழ்வு. யோகம் போர்க்களமாக இருக்கிறது. சாதகன் தன் வீரத்தை அங்கே செயல்படுத்துகிறான். யோகம் என்றால் இணைப்பது என்பது பொதுவான கருத்து. ஆனால் கீதை யோகத்தைச் சமத்துவம் என்று கூறுகின்றது. அது அகம், புறம் என்பதெல்லாம், எல்லாம் கடந்த நிலைக்கு போகும் உபாயங்களே என்கிறது. யாவும் சமம் என்கிற நிலை உருவாகி விட்டால் இயல்பாகவே இணைப்பு நிகழ்ந்து விடும்

 



- அன்புடன் இராம் மனோகர்.