உழைத்து உழைத்து வாழ்வை வீணடித்துச் சாகாதீர்கள். உங்களது மறுபக்கத்தை அல்லது பாதி வாழ்க்கையைத் தனிப்பட்ட இன்பத்துக்காகவும் சாகசத்திற்காகவும் பயன்படுத்துங்கள். ஒன்றை அடைவதற்காக முட்டி மோதுவது மட்டும் வாழ்க்கையல்ல, அதனை இயன்றவரை முழுவீச்சில் அனுபவிப்பதே மிகவும் முக்கியமானது.
வாழ்க்கை உங்களை அனுமதிக்கும்போதே எல்லா இன்பங்களையும் துய்த்துவிடுங்கள்.
கூண்டிலிருந்து வெளியேறுங்கள், நண்பர்களுடன் கூத்தாடுங்கள், மலையேறுங்கள், சிகரங்களை அடையுங்கள், ஆறுகளுடன் கலந்திருங்கள், நெஞ்சின் ஆழம்வரை இனிமையான காற்றை உள்ளிழுத்து அந்தச் சுகந்தத்தில் மனம் நிறையுங்கள், சில நேரங்களில் எதையும் பொருட்படுத்தாமல் சும்மா இருங்கள், விலை மதிப்பற்ற நிச்சலனத்தை உற்றறிந்து தியானம் செய்யுங்கள், மர்மமானதும் வசீகரமானதுமான பிரபஞ்சத்தை நிபந்தனையற்று நேசியுங்கள்.

எப்போதும் உங்களது அந்தரங்க மகிழ்ச்சியை எதற்காகவும் இழக்காதீர்கள்.

அறிவைப் புதுப்பித்துக்கொண்டே இருங்கள். உடலைத் தவறாமல் பேணுங்கள். என்னால் உங்களுக்கு ஒரு வாக்குறுதியை அளிக்க முடியும். இதையெல்லாம் செய்தால் உங்களது எதிரிகளை வென்றவர் ஆவீர்கள்.