சுவாமி
விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத்
தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண
பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள்
இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும்
மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல
சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச்
சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
இளமைப்பருவம்
=============
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும்
புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு
வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும்
திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே
தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக்
கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு
கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே
மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை
படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல
கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின்
வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக
தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும்,
அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால்
இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.
ஆன்மீகத்தில் ஆர்வமும் எழுச்சியும்
===========================
கருவிலேயே திருவுறுதல் என்பார்களே அந்த மாதிரி ஆன்மீக உணர்வு
நரேந்திரருடைய இரத்தத்திலேயே கலந்திருந்தது போலும். நினைத்த நேரத்தில்
மனத்தை ஒருமுகப்படத்தும் பேராற்றல் இளமையிலேயே அவரிடம் அமைந்திருந்தது.
எவ்வளவு திரளான கூட்டமாக இருந்தாலும் திடீரென அவர் தன்னை மறந்த லயம்
தன்னில் ஆழ்ந்து விடுவார். பெயர் சொல்லி அழைத்தாலும் அவர் செவியில்
விழுவதில்லை. அவரைப் பிடித்து உலுக்கினால்கூட அசைவற்று அமர்ந்திருப்பார்.
தியானம் செய்வது அவருடைய உணர்வோடு ஒட்டிய ஒன்றாக இருந்தது. யார் உந்துதலும்
இல்லாமல் அதிகாலையிலேயே விழித்தேழந்து நீராடி, உதயசூரியனை நோக்கி அமர்ந்து
தியானம் செய்யத் தொடங்கிவிடுவார். சில சமயம் தியானம் மணிக்கணக்கில கூட
நீடிப்பதுண்டு.
முதலில் இது ஒரு குழந்தை விளையாட்டு என எண்ணிய
பெற்றோர் நரேந்திரன் நினைத்த நேரமெல்லாம் தியானத்தில் அமர்ந்துவிடுவது
கண்டு குழப்பமும், திகைப்பும் அடைந்தனர். நாளடைவில் நிலைமை சரியாகி விடும்
என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.
வீட்டிற்கு அருகாமையில்
பழங்காலக் கோயில் ஒன்று இருந்தது. கவனிப்பின்றி கிடந்த அந்த கோயில்
சிறுவர்கள் விளையாடும் இடமாக ஆகியிருந்தது. நரேந்திரரும் அவரது நண்பர்களும்
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அங்கே சென்று விளையாடுவது வழக்கம்.
சிறுவர் நரேந்திரர் ஒரு நாள் விளையாடும் நோக்கத்தில் கோயில் பக்கம்
வந்தார். நண்பர்கள் கூட்டம் இன்னும் வந்த சேரவில்லை. நரேந்திரர்
கோயிலுக்குள் நுழைந்து கதவை மூடித் தாளிட்டுக் கொண்டார்.
சிறிது
நேரத்திற்குப் பிறகு நண்பர்கள் கூட்டம் வந்து சேர்ந்தது. நண்பர்கள்
நரேந்திரரைத் தேடினர். அவரைக் காண முடியவில்லை. நரேந்திரரின் வீட்டுக்குச்
சென்று பெற்றோரிடம் விசாரித்தனர். நரேந்திரர் நண்பர்களுடன் விளையாடிக்
கொண்டிருப்பார் என்று எண்ணியிருந்த பெற்றோர் நண்பர்களே வந்து மகனை
விசாரித்தது கவலையை அளித்தது. நண்பர்களுடன் சேர்ந்து நரேந்திரரைக்
தேடினார்கள். நரேந்திரர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிறுவர்களில் ஒருவன் ஒடிவந்து கோயிலின் கதவு உட்புறம்
தாளிடப்பட்டிருக்கும் செய்தியைச் சொன்னான். எல்லோரும் கோயிலை
முற்றுகையிட்டுக் கதவைத் தட்டினர் கதவு திறக்கப்படவில்லை.
கோயிலுக்குள்ளிருந்து பதிலும் கிடைக்கவில்லை.
கோயிலின் கதவை
உடைத்து எல்லோரும் உள்ளே சென்றனர். அங்கே நரேந்திரர் ஆழ்ந்த தியானத்தில்
மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்தார். தியானத்தைக் கலைத்து அவரை
எழுப்புவதற்கு பெரும்பாடு படவேண்டியிருந்தது.
இனம்புரியாத
பரவசநிலைக்கு நரேந்திரர் அடிக்கடி ஆளாகிவிடுவது வழக்கமாக இருந்தது. இத்தகைய
தெய்வீக பரவச நிலைக்கு உள்ளாவதை பல தடவை அவரே உணர்ந்திருந்தார்.
கடவுளுடன் பேசுவது முடியுமா ?
========================
ஓரு நாள் மின்னல் வெட்டியது போல அவன் மனத்தில் திடீரென ஐய வினாவென்று
எழுந்தது. சூறாவளி போல சுழன்றடித்தது. கடவுள் இருக்கிறார் என்பது
உணமையானால் கடவுளைச் சந்தித்து உரையாடியவர்கள் யாராவது இருக்கிறார்களா ?
கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பது உண்மையானால் கடவுளை நேரடியாகத்
தரிசனம் செய்த மகான்கள் யாராவது இருக்கிறார்களா ? அவருடன் நேருக்கு நேர்
உரையாடியவர் உண்டா ? அல்லது கடவுளைச் சந்தித்து உரையாடவது சாத்தியமாகக்
கூடியதா ?
இந்த வினாக்களுக்கு விடை காண சுவாமி விவேகானந்தர்
அக்காலத்தில் வாழ்ந்த மகான்கள், மகரிஷிகள் போன்று மக்களின் மத்திலே பெரும்
செல்வாக்குடன் திகழ்ந்த ஆன்மீகப் பெரியோர் அணுகித் தமது சிந்தைக்குள்
குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த ஐய வினாக்களை அவர்களிடம் எழுப்பி
ஐயந்தீர்க்குமாறு கேட்டுக் கொண்டார், ஆனால் விவேகானந்தரின் ஐய வினாவுக்கு
யாராலும் விடையளிக்க முடியவில்லை..
அந்தச் சமயத்தில் பகவான்
இராமகிருஷ்ணரின் ஆன்மீகச் கருத்துக்களும், சாதனைகளும் வங்காள மெங்கும்
பரவிக்கொண்டிருந்தன. திரளான மக்கள் அவருடைய தரிசனத்துக்காக அன்றாடம் சென்று
வந்தனர்.
பகவான் இராமகிருஷ்ணரைச் சந்தித்தால் தமது ஐயத்திற்கு
ஒரு வேளை விடை கிடைக்கக் கூடும் என்று நரேந்திரருக்குத் தோன்றியது. பகவான்
இராமகிருஷ்ணருடன் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரு வாய்ப்பு நரேந்திரருக்கு வலிய
வந்து அமைந்தது.
சுரேந்திர நாத மித்ரா என்ற ஒரு பக்தரின்
இல்லத்தில் ஆன்மீக விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில்
பகவான் இராமகிருஷ்ணர் பங்கு ஆற்றுகிறார் என்பது சிறப்பான அம்சமாக இருந்தது.
விழாவில் கலந்து கொள்ள வருமாறு நரேந்திரருக்கும் அழைப்பு வந்திருந்தது.
நரேந்திரர் இனிமையாகப் பாடக் கூடியவர். அதிலும் ஆன்மீகம் தொடர்புடைய
பாடல்களை அற்புதமாகப் பாடுவார். அதனால் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக
இறைவணக்கம் பாடும் பொறுப்பு நரேந்திரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மெய்யுருக இறைவணக்கப் பாடல்களை இனிமையாக பாடிய நரேந்திரரை பகவான்
இராமகிருஷ்ணர் கூர்ந்து கவனித்தார். அவர் பாடி முடித்ததும் ஸ்ரீ
இராமகிருஷ்ணர் நரேந்திரரைத் தம்மருகே அழைத்து அமரச் செய்து அவருடைய
விழிகளைக் கூர்ந்து நோக்கினார். அவருடைய சிரசை வருடிக் கொடுத்தவாறு,
குழந்தாய் நீ இறைவனுக்கு மிகவும் அருகாமையிலிருக்கிறாய் ஒரு தடவை
தட்சிணேசுவரம் வந்து செல்லேன் என அன்பழைப்பு விடுத்தார்.
நரேந்திரர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக 1881-ஆம் ஆண்டு நவம்பர்
மாதத்தில் அது நிகழந்தது. சுரேந்திரநாத மித்ரா, நரேந்திரரை தம்முடன்
அழைத்துக் கொண்டு தட்சிணேசுவரம் சென்றிருந்தார். பகவான் இராமகிருஷ்ணர்
தரையில் ஒரு பாயில் அமர்ந்து கண்களை மூடியவாறு ஏதோ சிந்தனையில்
ஆழ்ந்திருந்தார்.
சுரேந்திரநாத மித்ரா, நரேந்திரரை ஸ்ரீஇராமகிருஷ்ணரின் முன்னிலையில் விட்டு விட்டு ஏதோ வேலையாக வெளியே சென்றுவிட்டார்.
கண்விழித்துப் பார்த்த ஸ்ரீ இராமகிருஷ்ணர் வியப்பு தோன்ற பார்த்தார்.
தம்மருகே அமருமாறு கண்ஜாடையால் பணித்தார். நரேந்திரர் அமர்ந்ததும் மெல்லிய
குரலில் ஏதாவது பாடு என்றார். நரேந்திரர் சில பக்திப் பாடல்களைப் பாடினார்.
அவர் பாடுவதை மெய்மறந்து கண்களை மூடியவாறு ரசித்துக் கொண்டிருந்த
பரமஹம்சர் திடீரென எழுந்து, என் பின்னால் வா என்று கூறிவட்டு நடந்தார்
பரமஹம்சர். வராந்தாவில் உள்ள ஒர் அறைக்குள் பரமஹம்சர் பிரேவசித்தார்.
நரேந்திரர் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றார்.
பகவான் இராமகிருஷ்ணர் அறைக்கதவை மூடிக் தாளிட்டார்.
அறைக்குள் என்ன நடந்தது ?
நரேந்திரர் கூறுவதை அவருடைய வாய்மொழியாகவே கேட்போமா.....!
குருதேவர் என் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்து வந்தார். பிறகு கதவை
மூடிவிட்டார். அவர் எனக்கு ஏதோ உபதேசம் செய்யப் போகிறார் என்று நினைத்தேன்.
ஆனால் சொன்னதும், செய்ததும் கற்பனைக்கு எட்டாதது. நான் சற்றும்
எதிர்பாரவகையில் அவர் என் கைகளை பிடித்துக் கொண்டு அளவற்ற மகிழ்ச்சியால்
ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் அளவற்ற பரிவுடன் முன்பே என்னை நன்றாக
அறிந்தவர் போல பேசினார். இவ்வளவு காலம் கழித்து வந்திருக்கிறாயே, இது
நியாயமா ? நான் உனக்காக் காத்திருக்கிறேன் என்பதை ஒரு முறையாவது நினைத்துப்
பார்த்தாயா ? உலக ஆசை பிடித்த மக்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு என்
காதுகள் எரிந்து போய்விட்டன. என் மனத்தில் பொங்கும் உள்ளுணர்வுகளை புரிந்து
கொள்ளக் கூடிய ஒருவரிடம் சொல்ல நான் எவ்வளவு துடித்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படியே தேம்பித் தேம்பி அழுதபடி அவர் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த
நிமிடம் இரண்டு கைகளையும் கூப்பி தெய்வத்தை வணங்குவது போல வணங்கியபடி
என்னைப் பாரத்து, பிரபோ, நாராயணனின் அவதாரமாகிய நர முனிவரே தாங்கள் என்பதை
நான் அறிவேன். மனித குலத்தின் துயர் நீக்கவே இப்பொழுது அவதாரமெடுத்து
உள்ளீர் என்பதையும் நான் அறிவேன் என்றார்.
அவருடைய
பேச்சுக்களையும், நடத்தையையும் கண்டு ஆச்சரியம் அடைந்த நான் அவரைப்
பைத்தியம் என்று தான் எண்ணினேன். அப்படியில்லாவிடில் விசுவநாத தத்தரின்
மகனாகிய என்னைப் பார்த்து இப்படியெல்லாம் பேசுவாரா என்றும் எண்ணினேன்.
இருப்பினும் நான் பேசாமல் மௌனமாக இருந்தேன். அந்த அதிசயமான பைத்தியக்கார
மனிதர் விருப்பம் போல பேசிக் கொண்டேயிருந்தார். அடுத்த நிமிடம் என்னை
காத்திருக்க சொல்லிவிட்டு வேறு அறைக்குள் நுழைந்தார். அங்கிருந்து
வெண்ணெய், கற்கண்டு, இனிப்பு முதலியன கொண்டு வந்த தன் கையால் என் வாயில்
ஊட்டத் தொடங்கினார். பிறகு என் கைகளை பிடித்துக் கொண்டு, கூடிய விரைவில் நீ
மட்டும் தனியாக என்னிடம் வருவதாக சத்தியம் செய் என்று கூறினார். அவருடைய
உண்மை வேண்டுகோளை மறுக்க முடியாமல் சரி வருகிறேன் என்று கூறினேன். பின்பு
இருவரும் அறைக்கு திரும்பினோம். நான் அவரை விட்டுச் சற்று விலகி என்
நண்பர்களுடன் அமர்ந்து கொண்டேன்.
அவர் மற்றவர்களிடம் பேசும்
பேச்சையும், நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கலானேன். பைத்தியத்தின் சிறிய
சாயல் கூட அவரிடம் தென்படவில்லை. அவருடைய ஆன்மீக பேச்சிலிருந்தும் ஆனந்தப்
பரவச நிலையிலிருந்தும் அவர் உண்மையான துறவி என்பதையும், இறைவனுக்காக உலக
இன்பங்கள் அனைத்தையும் துறந்தவர் என்பதையும் அவருடைய பேச்சுக்கும்,
நடத்தைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதையும் புரிந்து கொண்டான். கடவுளைக்
காண முடியும், கடவுளுடன் பேசவும் முடியும் நான் உன்னைப் பார்த்து உன்னோடு
பேசுவது போல அவரைப் பார்க்கவும், அவரோடு பேசவும் முடியும், ஆனால் யார்
கடவுளைப் பாரக்கவும், பேசவும் விரும்பிகிறார்கள் ? மனிதர்கள் தங்கள் மனைவி
அல்லது குழந்தைகள் இறந்து விட்டால் குடம் குடமாகக் கண்ணீர் விட்டு
அழுகிறார்கள். பணத்திற்காகவும், மனைவி, மக்களுக்காகவும் அழுது
புலம்புகின்றனர். ஆனால் யாராவது இறையனுபூதி பெற முடியவில்லையே என்று
கண்ணீர் சிந்துகிறார்களா ? ஒருவன் இறைவனைக் காண வேண்டும் என்று உண்மையாக
ஏங்கி இறைவனை அழைத்தால் அவர் தன்னை அவருக்குக் காட்டிக் கொள்கிறார் என ஸ்ரீ
இராமகிருஷ்ணர் கூறினார்.
அவருடைய இந்தப் பேச்சுகளை கேட்டதும்
என்னால் அவரை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அது சாதாரணமான சமயச்
சொற்பொழிவாளரின் கற்பனையாகவோ அன்றிக் கவிதையாகவோ அல்லது சொல் அலங்காரமாகவோ
இருக்கவில்லை. அவருடைய சொற்கள் அவருடைய ஆழத்தில் இருந்து பாய்ந்து வந்தன.
இறைவனை அடைவதற்காக அனைத்தையும் துறந்து இறைவனை முழு மனத்துடன் அழைத்தால்
அந்த இறையனுபவம் அவருக்குக் கிடைத்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
அவருடைய இந்தப் பேச்சுடன் என்னிடம் சிறது நேரத்துக்கு முன் நடந்து கொண்ட
நடத்தையை இணைத்துப் பார்க்கும் பொழுது அபக் ரோம்பி போன்ற ஆங்கில
தத்துவவாதிகள் கூறியுள்ள ஒன்றையே நினைத்துக் கொண்டிருக்கம் பித்தர்களின்
ஞாபகந்தான் வந்தது. ஸ்ரீ இராமகிருஷ்ணர் இவ்வகையைச் சார்ந்தவர் என்ற திடமான
முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுக்கு நான் வந்தாலும் அவருடைய அதிசயிக்கத்
தக்க துறவு மனப்பான்மையை என்னால் மறக்க முடியவில்லை, அவர் பைத்தியமாக
இருக்கலாம். ஆனால் அபூர்வமானவர்களே அவரைப் போல இறைவனுக்காக உலகத்தை துறக்க
முடியும், அவர் பைத்தியந்தான். ஆனால் எவ்வளவு தூய்மை வாய்ந்தவர்
எப்படிப்பட்ட துறவு. அதற்காக மட்டுமே மனித சமுதாயம் முழுவதும் அவரை
மதித்துப் போற்றி வணங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் இவ்வாறு
நினைத்துக் கொண்டே அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி அவரிடம் விடை
பெற்றுக் கொண்டு கல்கத்தா திரும்பினேன்.
துறவியான பெருந்தகை
==================
நரேந்திரர் அது நாள் வரை பகவான் இராமகிருஷ்ணரின் சீடர் என்ற
அளவுக்குத்தான் தம்மைத் தயார் செய்து வைத்திருந்தார். இராமகிருஷ்ணரை
முழுமையாக அவர் ஏற்றுக் கொண்டிருந்தாரா என்பது கூட ஐயப்பாடே.
இராமகிருஷ்ணரின் சில நோக்கங்களில் நரேந்திரருக்கு பிடிப்பு ஏற்படவில்லை.
பகவான் இராமகிருஷ்ணர் தமது வழிபாட்டு முறைகளில் விக்கிரக ஆராதனைக்கும்
இடமளித்திருந்தார். விக்கிரகங்களைக் கடவுள் என நம்ப நரேந்திரரின்
பகுத்தறிவு மனப்பான்மை இடந்தரவில்லை. விக்கிரகங்கள் எல்லாம் கடவுள்களே
என்பது இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்தும் அல்ல. இறைவனைப் பற்றிய எண்ணத்தை
ஒருமுகப்படுத்துவதற்கான ஒரு சாதனமாகவே விக்கிரகம் திகழ்கிறது என்று
பரமஹம்சர் கூறவதை நரேந்திரரால் சற்றும் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. கடவுளை
யாரும் கண்டுணராதபோது - கடவுளின் தோற்றம் எப்படியிருக்கும் என்று தெரியாத
நிலையில் ஏதோ ஒரு உருவத்தை கட்டிக் காண்பித்து, இதைக் கடவுளாக நினைத்து
வழிபடு என்று எதற்காக் கூறவேண்டும் என்பது நரேந்திரரின் வாதம்.
வெகு விரைவிலேயே புரட்சிகரமான மனமாற்றம் பெற்று பகவான் இராமகிருஷ்ணரின்
எண்ணங்களோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை நரேந்திரருக்கு
ஏற்பட்டது.
நரேந்திரரின் வாழக்கையில் 1884-ஆம் ஆண்டில் பலவிதமான
சோதனைகள் ஏற்பட்டன. அவருடைய தந்தையார் விசுவநாத தத்தர் திடீரென
மரணமடைந்தார். அப்போது தான் நரேந்திரர் பி.ஏ.தேர்வு எழுதியிருந்தார்.
விசுவநாத தத்தர் நன்றாகச் சம்பாதித்தார். ஆனால் அவருக்கே உரித்தான கருணை
உள்ளம் - தாராள மனப்பான்மை காரணமாக ஏழை எளிய மக்களுக்கு பணத்தை வாரி
வழங்கினார். அதனால் அவர் மறைவெய்திய போது பொருளாதரார நிலையில் குடும்பம்
மிகத் தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டது. கடன் சுமை அதிகமாக இருந்தது.
வீட்டுக்குத் தலைமகனான நரேந்திரருக்கு தாங்க இயலாத குடும்பச் சுமையைத்
தாங்கியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
குடும்பத்தில்
சம்பாதிக்கும் நிலையில் இருந்தவர் அவர் ஒருவர் மட்டுமே. ஐந்து அல்லது ஆறு
பேர் அடங்கிய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலை தேடி அலைந்தார். ஆனால்
வேலை கிடைப்பதாக இல்லை.
நரேந்திரரின் குடும்பம் வளமாக இருந்த
காலத்தில் அவருடன் கூட்டுறவு வைத்திருந்த நண்பர்கள் பலர் ஒதுங்கி
சென்றுவிட்டனர். குடும்பத்தில் ஏற்பட்ட துயரநிகழச்சிகள் காரணமாக மனங்
குழம்பிக் கிடந்த நரேந்திரர் குருதேவரைச் சந்திப்பதையே தவிர்த்திருந்தார்.
ஸ்ரீ இராமகிருஷ்ணரைத் தரிசிக்க செல்லும் சிலர் நரேந்திரர் தொடர்பான
செய்திகளை மிகைப்படுத்தி குருதேவரிடம் கூறினார். அந்த வதந்திகளுக்கு
குருதேவர் எந்த முக்கியத்துவமும் தரவில்லை.
நரேந்திரன்
எப்படிப்பட்டவன் என்று எனக்குத் தெரியும். அவன் சேற்றில் இறங்கமாட்டன்.
சூழ்நிலை காரணமாக சேறு அவன் மீது தெறித்திருந்தால் அது அவன் குற்றமாக
இருக்காது. அந்தக் குறையை எளிதாகக் கழுவித் துடைத்தெறிந்துவிட முடியும்
என்று பதிலளித்து புகார் கூறுவோர் வாயை அடைத்து விடுவார்.
நரேந்திரர் உலகப்பற்றை அறுத்துவிட்டு துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுவது என்ற தீர்மானத்துக்கு வந்தார்.
குருதேவரைச் சந்தித்து தம்முடைய துறவு நோக்கத்தைச் சொன்னபோது குருதேவர் கொஞ்சங்கூட ஆச்சரியப்பட்டதாகத் தெரியவில்லை.
அம்பிகையின் பணியை நிறைவேற்றுவதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்திருக்கிறாய்
என்பதைத் தெரிந்து கொள் உன்னால் சாமானியர்களைப் போல லௌகீக வாழ்க்கை வாழ
முடியாது என்று குருதேவர் நரேந்திரின் கைகளை அன்போடு பற்றியவாறு சொன்னார்
பிறகு நான் சொல்வதை மனத்தில் வைத்துக் கொள் நான் உயிருடன் இருக்கம் வரை உன்
குடும்பத்துடனேயே இரு என்றார்.
நரேந்திரரின் குடும்பப்
பிச்சினையில் தொடர்ந்து சிக்கல் நிடித்துக் கொண்டோயிருந்தது. நிரந்தரமான
வருமானத்துக்கு எந்த வழி வகைகளும் ஏற்படவில்லை. குடும்பக் கஷ்டத்தைச்
சமாளிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதும் குருதேவரின் உதவியை நாடுவது என்று
தீர்மானித்தார்.
கஷ்டங்கள் அகலவேண்டும் என்று தம்மை நாடி
வருபவர்களுக்காக குருதேவர் தாம் வழிபடும் தெய்வம்மான அகிலாண்டநாயகியான
காளிமாதவிடம் பிரார்த்தனை செய்வது வழக்கம். குருதேவரின் பிரார்த்தனைக்குச்
செவிசாய்த்து அகிலாண்டேஸ்வரி அருள்புரிந்து மக்களின் குறைகளை களைவதாகவும்
மக்களிடம் ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதை நரேந்திரர் அறிவார். தமது கஷ்டங்கள்
தீர தமக்காக அகிலாண்ட நாயகியிடம் பிரார்த்தனை செய்யுமாறு நரேந்திரர்
குருதேவரை வேண்டினார்.
அவருடைய கோரிக்கையை குருதேவர் ஏற்றுக்கொள்ள
மறுத்துவிட்டார். சாமானியா மக்களுக்காக அகிலாண்டநாயகியிடம் நான்
பிரார்த்தனை செய்து தேவியின் அருளைப் பெற்றுத் தருவது வேறு விஷயம் நீ தெய்வ
அருளைப் பெற்ற ஒரு துறவி நீ நேரடியாக அகிலாண்டநாயகியிடம் பிரார்த்தனை
செய்தால் தான் தேவியின் அருள் தடையின்றி உனக்கு கிடைக்கும் என்று குருதேவர்
ஒதுங்கி கொண்டார்.
வழக்கமான வைராக்கியம் நரேந்திரரின் மனதைக் குழப்பியது விக்கிர ஆராதனை செய்தாக வேண்டிய கட்டாயநிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
நரேந்திரரின் தயக்கத்துக்கான காரணம் குருதேவருக்கு தெளிவாகவே விளங்கியது
சற்று கண்டிபான குரலில் அவர் நரேந்திரரை நோக்கி இன்று செவ்வாய்கிழமை
அன்னைக்கு விருப்பமான நாள் இன்று இரவு காளி மாதாவின் கோயிலுக்குச் சென்று
அன்னையின் முன் வீழ்ந்து பணிந்து உனக்கு விருப்பமானவற்றைக் கேள் நீ
கேட்கும் வரத்தை அவள் நிச்சயம் தருவாள் என்னுடைய அன்பு தாய் பிரம்ம சக்தி
மேருணர்வே வடிவெடுத்தவள். அவளால் முடியாத காரியம் ஒன்று உண்டா ? என்று
கூறினார்.
இரவு ஒன்பது மணிக்கு குருதேவரின் கட்டளையைத் தட்டமுடியாமல் காளிகோயிலை நோக்கி நடந்தார் மனம் தடுமாறியது கால்கள் தயக்கம் காட்டின.
இனி நரேந்திரர் கூறுவதைக் காது கொடுத்து கேட்போமா .. .. ..
கோயிலுக்குள் நுழைந்தேன் அங்கே அன்னை காளி உண்மையின் சின்னமாக அழகும்,
அன்பும் வற்றாது பெருக்கெடுத்தோடும் தெய்வீகத்துடன் இருப்பதைக் கண்டேன்
பொங்கிப் பாய்ந்த பக்தியில் சிக்கி பேரானந்தத்தை அனுபவித்தேன் அன்னையின்
திருவடிவில் மறுபடியும் மறுபடியும் வணங்கி அவளிடம் தாயே எனக்கு விவேகத்தைக்
கொடு, ஞானத்தையும், வைராக்கியத்தையும் கொடு, உன்னை எப்பொழுதும் இடைவிடாது
பார்த்துக் கொண்டே இருக்கும் வரத்தைக் கொடு என்று பிரார்த்தனை செய்தேன்.
விவரிக்க இயலாத அமைதி என் மனத்தில் நிலைத்தது .. .. ..
என்
நோக்கத்துக்காக காளி தேவியைப் பிரார்த்தனை செய்ய நரேந்திர் சென்றாரோ, அதை
அடியோடு மறந்துவிட்டார், தமது சொந்தக் கஷ்டங்கள் அகன்று வாழ்வில் சுபிட்சம்
நிலவ வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்யவில்லை.
திரும்பி வந்த நரேந்திரரை நோக்கிக் குருதேவர், உன் கஷ்டங்கள் நீங்க தேவியிடம் வரம் கேட்டாயா ? என வினவினார்.
நரேந்திரர் நடந்ததைச் சொன்னார்.
மறுபடியும் காளிமாதவைச் சந்தித்து, உன் சொந்த கஷ்டங்களும், நஷ்டங்களும்
அகல வேண்டும் எனப் பிரார்த்தனை செய் எனக் கூறி குருதேவர் மீண்டும் காளி
கோயிலுக்கே அனுப்பினார். நரேந்திரரோ இந்தத் தடவையும் தன் உலகாயத வாழ்க்கை
வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாமலே திரும்பிவிட்டார்.
மூன்றாவது முறையும் குருதேவர் நரேந்திரரை காளி கோயிலுக்கு அனுப்பினார்.
பழைய கதைதான்.
நரேந்திரர் உலகில் சுகபோக வாழ்கையில் ஆழ்ந்து வீண்
காலம் கழிப்பதற்காகப் பிறக்கவில்லை என்ற உண்மையை அவர் மனத்தில் படிய
வைப்பதுதான் குருதேவரின் நோக்கம். குருதேவர் வெற்றி பெற்று விட்டார்.
நரேந்திரர் விவேகானந்தர் ஆனார்
=========================
1889-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் நாள் இராமகிருஷ்ணர் மண்ணுலகை நீத்து அமரத்துவம் எய்தினார்.
குருதேவர் மறைவுக்குப் பிறகு அவரைச் சூழ்ந்திருந்த சீடர்களில் பெரும்
பகுதியினர் சிதறிச் சென்றுவிட்டனர். குருதேவரின் புனித அஸ்தியை வைத்து
வழிபாடு நடத்த ஒரு ஆலயம் போன்ற அமைப்பினை உருவாக்க நரேந்திரர்
விரும்பினார். இதற்கென கங்கை நதிக்கரையில் ஒரு சிறிய இடத்தை வாங்கவும்
திட்டமிட்டார். ஆனால் அவருடைய முயற்சிகளுக்குத் துணை நிற்க சீடர்களைத் தேட
வேண்டியிருந்தது. நரேந்திரர் பெரிதும் ஏமாற்ற அடைந்தார். தற்காலிகமாக
தம்முடைய முயற்சியை நிறுத்திவிட்டு பகவான் குருதேவரின் ஆன்மீகச் சிந்தனைகளை
உலகமெல்லாம் பரவச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் மேலை நாடுகளுக்குப்
பயணமானார்.
தம்முடைய அந்த இலட்சிய நோக்கத்தில் வெற்றி கொடி
நாட்டிவிட்டுத் திரும்பிய நரேந்திரர் குருநாதருக்காக ஒரு வழிபாட்டுத் தலம்
அமைக்கும் முயற்சியினைத் தொடங்கினார்.
பாரா நகரில் இருந்த ஒரு
பாழடைந்த வீடு அவரின் முயற்சியின் தொடக்க இடமாக அமைந்தது. குருநாதரின்
சீடர்களில் பழைய ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருந்த சில இளைஞர்களைத் தேடிப்
பிடித்து ஒன்று சேர்த்தார்.
அப்போது நரேந்திரர் மேற்கொண்ட அந்த
முயற்சியின் தொடக்கந்தான் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாக பாரதத்திலும் உலக
நாடுகளிலும் செழித்துப் பரவியிருக்கும் ஸ்ரீ இராமகிருஷ்ண மடமாகும்.
பகவான் இராமகிருஷ்ணர் தமது வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தம்மைப்
பின்பற்றிய சீடர்களுக்கு காவி உடைகளை வழங்கி துறவிகளுக்கான தீட்சையை
அளித்திருந்தார். நரேந்திரர் தம்மைப் பின்பற்றிய சீடர்களுக்கு
சாஸ்த்திரப்படி விரஜா ஹோமம் புரிந்து முறைப்படி சந்நியாச தீட்சை பெறச்
செய்து துறவு வாழ்க்கையில் புதிய தகுதியை அளித்தார்.
நரேந்திரர்
முழுமையான சந்தியாச வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு தமக்கு பெற்றோர் வைத்த
பெயரைக் களைந்துவிட்டு சந்நியாச தர்மப்படி ஒரு பெயரைச் சூட்டிக் கொள்ள
வேண்டியது அவசியம் என உணர்ந்தார்.
நரேந்திரர் விவிதி சானந்தரஞ்
என்ற பெயரை ஏற்றுக் கொள்வது என்று முதலில் எண்ணினார். தம்மை எந்த வகையிலும்
வெளிக் காண்பித்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் தம்மைப் பல்வேற
பெயர்களால் அழைத்துக் கொண்டார். எனினும் அமெரிக்காவுக்குப் புறப்படுவது
என்று தீர்மானித்த பிறகு விவேகானந்தர் என்ற பெயரைத் தமக்காக நிரந்தரமாகச்
சூட்டிக் கொண்டார்.
அமெரிக்க நாட்டில் ஆன்மீக முழக்கம்
==============================
============
அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் சர்வ சமய மகா சபையொன்று நடக்க இருக்கும்
செய்தி சுவாமி விவேகானந்தரின் செவிக்கு எட்டியது. சர்வ சமய மகா சபையில்
எப்படியாவது பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அமெரிக்கா
செல்வதற்கு தேவையான பண உதவி அவருக்கு எளிதாகக் கிட்டவில்லை. உதவி
செய்வதற்காக முன்வந்த சிலரும் பின்வாங்கி விட்டனர்.
சுவாமி
விவேகானந்தர் எதோ சிந்தனையுடன் பாரத நாட்டின் புனித தலங்களில் ஒன்றான
இராமேசுவரத்துக்குச் சென்றார். அங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்ற
சுவாமி விவேகானந்தர் அங்கே கடல் நடுவே இருந்த ஒர் பாறையின் மீது அமர்ந்து
மூன்று நாட்கள் தியானம் செய்தார்.
கன்னியாகுமரிலிருந்து சென்னை
சென்ற சுவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பற்றுடைய அன்பர்கள் பெருவாரியாகத்
திரண்டு அன்புடன் வரவேற்று உபசரித்தனர். அமெரிக்காவுக்குச் செல்ல பணம்
திரட்டி அளித்தனர்.
இலங்கை, சீனா, ஜப்பான் வழியாகப் பயணம் செய்து
1893-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30-ஆம் தேதி அமெரிக்காவை அடைந்தபோது அங்கே பல
கடுமையான சோதனைகளுக்கு அவர் இலக்காக நேர்ந்தது. அங்கே சர்வ சமய மகா சபை
நடக்கும் காலத்தை மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போட்டு விட்டார்கள். மகா
சபையில் கலந்து கொள்வதற்கு ஏதாவதொரு ஆன்மீக சங்கம் பரிந்துரை செய்ய
வேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஏறத்தாழ மூன்று மாத காலம்
அமெரிக்காவில் தங்குவதற்கான பொருளாதார வசதி சுவாமியிடம் இல்லை. தவிர அவரை
மகாசபைக்கு பரிந்துரை செய்ய யாரை அணுக முடியும் ?
சோதனைகளையெல்லாம் கடந்து இறைவன் அருளால் விவேகானந்தர் சர்வ சமய மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அனுமதியைப் பெற்றார்.
சர்வ சமய மகாசபை என்று கூறப்பட்டாலும் அது கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்கத்துடனேயே இயங்கியதை விவேகாந்தர் புரிந்துக் கொண்டார்.
மகாசபைக் கூட்டம் தொடங்கப் பெற்றது. மகா சபையில் உரையாற்றியவர்களில்
பெரும்பாலோர் உலகத்திலேயே தலைசிறந்த மதம் கிறிஸ்தவ மதந்தான் என்றும் மற்ற
உலக மதங்கள் அத்தனையுமே போலிகள் என்பது போன்றும் பேசினார்கள்.
பேச வாய்ப்பளிக்கப்பட்டபோது சுவாமி விவேகானந்தர் சிங்கம் போலக் கம்பீரமாக எழுந்தார்.
மேலை நாடுகளில் எந்த சபையில் உரையாற்றுவதாக இருந்தாலும்
சீமான்களே-சீமாட்டிகளே (லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்) என சொல்லித்துத்தான்
பேச்சைத் துவக்குவது வழக்கம்.
ஆனால் சுவாமி விவேகானந்தர் தமது குரலை உயர்த்திக் கம்பீரமாக அமெரிக்க சகோதரிகளே சகோதர்களே .. .. .. எனத் தமது பேச்சைத் துவக்கினார்.
சபையிலே குழுமியிருந்த ஆறாயிரம் அமெரிக்க மக்கள் தங்களைச் சகோதரிகளாக,
சகோதர்களாக சகோதர பாசத்துடன் சுவாமிகள், விளிப்பது அவர்களின் உணர்வுகளைத்
தொட்டு அசைத்தது. அவர்கள் நீண்ட நேரம் கரவொலி எழுப்பித் தங்கள்
மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
==============================
===============
உலகத்திலேயே மிகவும் தொன்மை வாய்ந்த சந்தியாசிகளின் சார்பில் உங்களுக்கு
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொன்மை வாய்ந்த மதத்தின் சார்பில் நன்றி
கூறுகிறேன். இவ்வாறு அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சுவாமி
விவேகானந்தர் தமது பேச்சைத் தொடர்ந்து அனைத்தையும் உள்ளடக்கிய பரந்து
விரிந்த இந்து தர்மத்தைப் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, சமீப காலத்தில் அறிந்து கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள்
அனைத்தும் வேதாந்த தத்துவத்தின் எதிரொலி போன்று தோன்றுகிறது. இவ்வளவு
உயர்ந்த வேதாந்த தத்துவம் முதல் மிகவும் கீழ்நிலையில் உள்ள பலதரப்பட்ட
புராணங்களை உடைய உருவ வழிபாடு வரை, பௌத்தர்களின் உலகாயதக் கொள்கைகளுக்கும்
இந்து சமயத்தில் இடமுண்டு .. .. ..
சுவாமி விவேகானந்தர் இந்து
மதத்தில் போதிந்திருக்கும் கருத்துக்கள் இன்றைய விஞ்ஞான யுகத்துக்கும்
எவ்வாறு பொருந்தும் என்பதைக் தர்க்க ரீதியாக விளக்கினார். இந்து தர்மம்
இந்திய எல்லைகளைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கமே வழி காண்பிக்கும் வல்லமை
கொண்டது என்பதை உணர்த்தினார்.
அமெரிக்காவில் தமது பணிகளை
முடித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் பல மேலை நாடுகளின் அழைப்பை ஏற்று
அங்கெல்லாம் சென்று சொற்பொழிவாற்றி உலகப் புகழை அள்ளியவாறு 1897-ஆம் ஆண்டு
ஜனவரி 26-ஆம் நாள் தாயகத்தின் மண்ணை வந்து மிதித்தார். இங்கே நாம்
பெருமைப்படக் கூடியது என்னவென்றால் அவர் தமது பயணத்தை முடித்துக் கொண்டு
திரும்பி வந்து சேர்ந்த இடம் நமது தமிழகந்தான்.
பாம்பனிலிருந்து
இராமேசுவரம், இராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, கும்பகோணம், திருச்சி,
சென்னை நகர் வந்தடையும் வரை மக்களின் வரவேற்பினை ஏற்றுச்
சொற்பொழிவுகளாற்றினார்.
சென்னை நகரத்தில் தான் சுவாமிஜிக்கு
நண்பர்களும், பக்தர்களும் அதிகம். இங்கே சுவாமிஜிக்கு அளிக்கப்பட்ட
வரவேற்பில் இதுவரை சென்னை நகரம் கண்டிராத அளவுக்கு மக்கள் கூட்டம்
திரண்டது.
இதற்கு மேல் சுவாமி விவேகானந்திரின் வாழ்க்கையைப் பற்றி
நாம் தனியாகத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ? சுவாமிஜி தேசத்தோடு
ஒன்றிப் போய்விட்டார். மக்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்துவிட்டார். அவர்
அமரத்துவம் அடையும் வரை ஆன்மீக ரீதியாக, சமுதாய நோக்குடன் மனித நேயம் தவழ,
தேசபக்தி மிளிர சுவாமிஜி ஆற்றிய தொண்டுதானே அவருடைய வாழ்க்கை வரலாறு.
தூய்மையான கொழுந்து விட்டு எரிகின்ற தேசப் பற்றும், பாரத மக்களிடம்
அன்பும், சுவாமிஜியின் சேவையின் முக்கிய அம்சமாக இருந்தன. மதங்கள் பெயரால்
மோதல்கள், ஜாதிப் பிரிவினைகள், சமூகப் பிரிவனைகள் போன்றவை நிறைந்த பாரத
தேசத்தில் ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழந்தவர் சுவாமி மிரட்டிச் சமுதாய
வாழ்க்கையைச் சீரழிக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எளிதாகத் தீர்வு காண
அவர் நமக்கென விட்டுச் சென்றிருக்கும் அறிவுரைகளும், போதனைகளும் மட்டுமே
உதவி செய்ய முடியும்.
Via FB வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை