கருப்பு விளக்கு
~
எங்கள் பூட்டன் பாட்டன்களின் சரித்திரம்
புராதன அழுக்கைக் கொண்டது
சிமினி விளக்கை ஏற்றியும்
லாந்தரைக் கொளுத்தியும் அகலாதது
அவர்களைச் சூழ்ந்த இருள்
புழுதியும் சேறும்தான்
அவர்களுடைய பகல்
அத்தைகளைக் கட்டிக்கொடுக்க
வாங்கிய ஆயிரம் ரூபாய்க்கு
அவர்களது இடக்கை பெருவிரல்
மாயவ படையாட்சியிடம்
வண்டிப்பசை பூசியது
தெருவுக்கு வந்த வெளிச்சத்திலும்
அவர்கள் கண்கள் மூடியேக் கிடந்து
செவிவழியாய்க் கேட்ட
பழம் பாடல்களை
அவர்கள் முணுமுணுத்துக்
கொண்டிருந்தார்கள்
ஊர் போய்ச் சேர பேருந்தின்
வண்ணங்களை ஒடுக்குகளை
அடையாளம் கண்டவர்கள்
பாட்டிகள் அத்தைகளின் கதையோ
இன்னும் மோசம்
விறகுப் புகையில் இருமி
பிள்ளைப் பேற்றில்
செத்துப் போனார்கள்
குக்கிராமங்களில்
விலங்குகளைப்போல் வாழ்ந்த இவர்களைச் சிந்தித்தான்
ஒரு தலைவன்
அவனும் படிக்காதவன்
ஏழை பாழைகளின்..
பஞ்சைப் பராரிகளின்..
ஏக்கங்களை..
பெருமூச்சை..
கண்ணீரை..
குருதியைப்
படித்த மா மேதை
மண்சுவர் கொண்டு
கூரை வேய்ந்து
ஒரு கோவில் செய்தான்
அதில் ஒரு தண்டவாளத்
துண்டை மாட்டினான்
வயிற்றுத் தீயை
இரண்டு உருண்டை
சோற்றுப் பருக்கைகளால்
அணைத்து வைத்தான்
ஒவ்வொரு குடிசையிலும்
ஔவைப் பாட்டி
வலதுகாலெடுத்து வைத்தாள்
வள்ளுவர் வந்தார்
கம்பர் வந்தார்
ஷேக்ஸ்பியர் வந்தார்
அல்ஜிப்ரா வந்தது
நியூட்டன் வந்தார்
குடிசையிலிருந்து
அப்பா ஆசிரியராய்
வெளிவந்தார்
ரலே சைக்கிளில் போகும்
மகனைப் பார்த்து
கண்ணீர் துடைத்தார்
என் தாத்தா
துணி உலர்த்தும் கொடிகளில்
சில வெள்ளைச் சட்டைகள்
தொங்க ஆரம்பித்தன
அக்காக்களுக்கு
டீச்சர் ட்ரைனிங் கனவு
மருமகள்களுக்கு
மருத்துவக் கனவு
இப்போது தாத்தாக்களை
நினைவு கொள்ள
ஒரு புகைப்படம்கூட இல்லை
அப்பா அப்படியில்லை
அவர் கட்டிய ஓட்டு வீட்டின்
வாசல் முகப்பில்
கம்பீரம் மின்ன நாற்காலியில்
அமர்ந்திருக்கிறார்
புகைப்படமாக
எங்களை தெய்வங்கள்கூட
சற்று தூரத்தில்
இடுப்பில் துண்டைக் கட்டி
நிற்க வைத்தது
எம் கருப்புத் தலைவனோ
எங்களுக்கு பாதுகாப்பான
கூரையைத் தந்தான்
ஆண்களோடு பெண்கள்
சமமாக அமர
நாற்காலி தந்தான்
சாதியைக் காட்டி
பிடுங்கிக் கொண்ட
பாடப் புத்தகங்களை
அவனே மீட்டுக் கொடுத்தான்
வேறெப்படி சொல்லமுடியும்
பெருந்தலைவனே..
கருப்பாயிருந்தாலும்
நீ விளக்கு
நீ வெளிச்சம்