திருச்சிற்றம்பலம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:58 PM | Best Blogger Tips

அதிபத்த நாயனார் - பரதவர் - ஆவணி ஆயில்யம்
அதிபத்தர் இளமை முதற்கொண்டே சிவபக்தி உடையவராக விளங்கினார். நாகையில் ஆலயம் கொண்டு விளங்கும் பெருமானிடம் அளவற்ற அன்பு கொண்டு நாளும் பல நல்லறங்கள் புரிந்தார்.
தனக்கு விதிக்கப்பட்ட வாழ்கையினின்று வழுவாது நேர்மையுடன் தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்தார். பல மீனவக் குடும்பங்களுக்குத் தலைவராக விளங்கினார் அதிபத்தர். வலை வீசிப் பிடித்த மீன்களைக் குவித்து அவற்றைத் தரம் பிரித்து நாடி வருவோர்க்கு நியாயமாக விற்பனை செய்து, நேரிய வழியில் பொருளீட்டி பெருஞ்செல்வத்தினை உடையவராய் அது கொண்டு தன்னைச் சார்ந்தவர் பலரையும் ஆதரித்து அதனால் உயர்ந்தவராய் விளங்கினார். நாளும் தன் கூட்டத்தினருடன் கடலோடி வலை வீசி மீன் பிடிக்குங்கால் வலையினில் அகப்படும் முதல் மீனை சிவார்ப்பணம் என்று கடலிலேயே விட்டு விடுவது அவரது பழக்கமாக இருந்தது. அது சாதாரண மீனாக இருந்தாலும் சரி.. உயர்தர மீனாக இருந்தாலும் சரி!..
மீன்பாடு அதிகமானாலும் குறைந்தாலும் தனது பழக்கத்தில் வழுவாதவராக விளங்கினார் அதிபத்தர். இளமையிலிருந்து இவரைப் பற்றி அறிந்திருந்த உற்றாரும் மற்றோரும் இவரது பக்தியைக் கண்டு வியந்து நம் குலத்தில் இப்படியோர் மகன் பிறக்க நாம் என்ன தவம் செய்தோமோ!.. என்று மகிழ்ந்திருந்தனர். ஒருகட்டத்தில் இவரது பக்தியை சோதிக்க முனைந்தது எல்லாம்வல்ல சிவம். அதன் விளைவு கடலில் மீன்பாடு குறைந்தது. விரிந்து பரந்து விளங்கிய கடலில் நீரோட்டம் உணர்ந்து ஆங்காங்கே சென்று வலைகளை வீசினாலும் ஒற்றை மீன் மட்டுமே கிடைத்தது.
அச்சமயத்தில் அந்த மீனையும் சிவார்ப்பணம் என்று கடலில் விட்டு விட்டு வெறும் கையோடு கரைக்குத் திரும்பும்படி ஆயிற்று. வளங்கொழித்து விளங்கிய மீனவர் குடும்பங்கள் வறுமையில் வாடின. அதிபத்தர் தனது பக்தியை சற்றும் விட்டுக் கொடுக்காதவராகி தனது கைப் பொருளைக் கொண்டு தன்னைச் சார்ந்திருந்த மக்களை வாழவைத்தார். இதை அறிந்த ஏனைய குப்பத்தினர் ஏளனஞ்செய்து நகைத்து மகிழ்ந்தனர்.
மனந்தளராத அதிபத்தர் வழக்கம் போல கடலுக்குச் சென்று வலை வீசினார். அன்று வழக்கத்துக்கு மாறாக தங்க மீன் ஒன்று வலையில் சிக்கியது. பசும் பொன்னாலும் ஒளி மிக்க மணிகளாலும் ஆனதோ இது!.. என காண்பவர் திகைக்கும் வண்ணமாக இருந்தது அந்த மீன். பல நாள் பஞ்சத்தில் தவித்திருந்த மீனவர்கள் இன்றுடன் நம் கவலைகள் எல்லாம் தீர்ந்தன!.. என ஆனந்தம் கொண்டனர். ஆனால் இந்த மீனுக்கு ஈடாக இவ்வுலகில் யாதொன்றும் இல்லை!.. என அந்தப் பொன் மீனைக் கையிலேந்தி மகிழ்ந்தார் அதிபத்தர் .
இப்பொன்மீன் எம்மை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்க!.. என்று அதனை கடலில் விடுதற்கு முனைந்தார். உடனிருந்த மீனவர்கள், வறுமையால் தளர்ந்திருக்கும் வேளையில் இதனைக் கடலில் விட வேண்டாம்!.. எனக் கூறித் தடுத்தனர். ஆனால் சிவம் எனும் செம்மையில் ஒன்றியிருந்த அதிபத்தர் சிவார்ப்பணம் என்று சொல்லி, அந்தத் தங்க மீனைக் கடலில் விட்டு விட்டார்.
அந்த வேளையில் அவரது பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அம்பிகையுடன் விடை வாகனத்தில் திருக்காட்சி நல்கி முக்தி அளித்தார். செயற்கரிய செய்வார் பெரியர் எனும் வேத வாக்கின் படி - பின்னாளில் அதிபத்தரைப் போற்றி வணங்கினார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.நாமும் கைகூப்பி வணங்கிட நாயன்மார்களுள் ஒருவராக இடம் பெற்றார் அதிபத்தர்.
அதிபத்தர் குருபூஜை விழா - ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரம்

 Via thanks to  ஆதியோகி