இந்துதர்மத்தைப் பற்றிய பல தவறான தகவல்களில் ஒன்றுதான் இந்த 33 கோடி தெய்வங்கள். இது ‘கோடி’ எனும் சொல்லுக்கு பிரம்மாண்டம் என மற்றொரு பொருள் இருப்பதை மறந்ததால் ஏற்பட்ட குழப்பமாகும்.
வேதங்களில் 33 தெய்வங்களைப் பற்றி குறிக்கப்படுகின்றது. இந்துதர்மத்தில் குறிக்கப்படும் 33 பெருந்தெய்வங்களைப் பற்றி “த்ரயஸ்த்ரிம்ஸ தேவ” என்று பௌத்த மத சாஸ்திரங்களான திவ்யவதனம் மற்றும் சுவர்ணபிரபஸ சூத்திரமும் கூட குறிக்கின்றன.
’கோடி’ என்றால் மிகச்சிறந்த, ஒப்புயர்வற்ற, நேர்த்திவாய்ந்த எனப் பல அர்த்தங்கள் உள்ளன. இதேபோல் தான், 725ஆம் ஆண்டு மஹாவைரோசன சூத்திரம் எனப்படும் பௌத்த மதம் சூத்திரத்தை சீன மொழியில் மொழிப்பெயர்க்கும் போது சப்தகோடி புத்தர்கள் என்பதை ‘7 கோடி புத்தர்கள்’ என்று மொழிப்பெயர்த்து விட்டனர். உண்மையில், சப்த கோடி புத்தர்கள் என்பது 7 தலைச்சிறந்த புத்தர்களைக் குறிக்கும். பின்னர், திபெத்திய பௌத்தர்கள் ‘கோடி’ எனும் சொல்லுக்கு வகை எனும் பொருள் கொண்டு, 7 வகையான புத்தர்கள் என்று மொழிப்பெயர்த்தனர்.
பிரகதாரண்யக உபநிடதத்தில் (சுக்ல யஜுர்வேதம்), 3ஆம் அத்தியாயத்தில் 33 பெருந்தெய்வங்களை யாரென்று விவரமாகக் குறிக்கப்படுகின்றது. 33 பெருந்தெய்வங்கள் – 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 2 அஸ்வின்கள். ஆகவே, 33 கோடி (330 மில்லியன்) தெய்வங்கள் என்பது தவறு. 33 பெருந்தெய்வங்கள் என்பதே சரியாகும்.
* 8 வசுக்கள் – பிரித்திவீ (பூமி), அக்கினி, ஆபம் (நீர்), வாயு, அந்தரிக்ஷம் (அண்டவெளி), சூரியன், சந்திரன், ஆகாயம். இந்த அஷ்டவசுக்களுக்கும் அதிபதியானவர் விஷ்ணு.
* 11 ருத்திரர்கள் – ஆனந்தம், விஞ்ஞானம், மனம், பிராணம், வாக்கு (இவை ஐந்தும் கருத்துப் பொருட்கள், இறையம்சம்) மேலும், சிவனின் 5 முகங்களான/பெயர்களான ஈசானம், அகோரம், த்தபுருஷம், வாமதேவம், சத்யோஜதம் ஆகியவை. மற்றொன்று, ஆத்மன். இவை பதினொன்றும் ருத்திரர்கள், அனைத்திற்கும் மூலமானவர் சிவன்
* 12 ஆதித்யர்கள் – மித்ரன், அர்யமன், பகன், வருணன், தக்ஷன், அம்ஷன், துவாஸ்த்ரன், பூஷன், விவஸ்வத், சாவித்ரன், சக்ரன், மற்றும் இவையனைத்திற்கும் மூலதானவர் விஷ்ணு. இந்த பன்னிரண்டும் விஷ்ணுவின் அம்சங்கள்
* 2 அஸ்வின்கள் – இந்திரன், பிரஜாபதி