குஜராத்தில் தடையில்லா மின்சாரம் கிடைப்பது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:38 PM | Best Blogger Tips





இதோ இந்த படத்தை காணுங்கள், இந்தியாவில் எந்த முதல்வருக்காவது இந்த எண்ணம் தோன்றியதா...?? , ஏன் உலகு எங்கும் இது வரை யாரும் சிந்திக்காத ஒரு நல்ல திட்டம் இந்த நர்மதா கால்வாய் மீது சூரிய மின் உற்பத்தி செய்யும் தகடுகளை பதித்துள்ளது, இதன் மூலம் இரு பலன்கள் - ஒன்று சூரிய கதிர் மூலம் நீராவியாகி விரயமாகும் ஏராளமான நீர் தடுக்கப்பட்டுள்ளது, அடுத்தது சோலார் தகடுகளை கழுவும் நீர் அப்படியே கால்வாயில் விழுவதால் அந்த நீரும் விரயம் ஆவதில்லை...


மின்சாரத் தட்டுப்பாடு வீட்டின் வளர்ச்சியையும் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. சாதாரணக் குடிமக்களுக்கு தெரிந்த இந்த விஷயம், ஏன் நம் ஆட்சியாளர்களுக்குப் புரியவில்லை? இதற்கு முதற்காரணம் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் உள்ள பெரிய இடைவெளி. மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளும் திறமை இல்லாதவர்கள் ஆட்சியாளர்கள் ஆனது மற்றொரு காரணம். 
குஜராத்தில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. அதுவும் மும்முனை மின் இணைப்பு. 2011-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் மொத்தம் 18,066 கிராமங்கள் உள்ளன. இதில் 18,031 கிராமங்களுக்கு 2006-ம் ஆண்டே மின்சாரம் போய்ச் சேர்ந்துவிட்டது. அதோடு, அவற்றைச் சார்ந்த சுமார் 9,700 குக்கிராமங்களும் மின்சார ஒளியைப் பெற்றுவிட்டன. மீதமுள்ள 35 கிராமங்களுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அந்த மாநிலத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தபின், மீதம் இருக்கும் உபரி மின்சாரத்தை 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு வழங்கிவருகிறார்கள். நமது வீட்டுக்கு வரும் மின்சாரம்கூட ஒரு வேளை குஜராத்திலிருந்து வந்ததாக இருக்கலாம். 

ஜோதிகிராம் யோஜனா:-

குஜராத்திலும் மின்தடை இருந்தது. கிடைத்த மின்சாரமும் தரமற்றதாகவும் குறைந்த மின்னழுத்தம் உடையதாகவும் இருந்தது. இதனால் 2003-ம் ஆண்டு ஜோதிகிராம் யோஜனா என்ற புதிய திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கினார். இந்தத் திட்டத்தின் நோக்கம், அனைவருக்கும் தடையற்ற, தரமான மின்சாரம் வழங்குவதே’.

ஜோதிகிராம் யோஜனா திட்டத்தின்மூலம் குஜராத்தில் உள்ள 18,065 கிராமங்களுக்கு 24 மணிநேர மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1,290 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. விவாசயத்துக்கு மின்சாரம் வழங்குவதிலும் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக பிரத்தியேக மின் இணைப்புகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காகப் பிரத்யேக மின் இணைப்பு வலை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்காக 2,559 மின்மாற்றிகள் (டிரான்ஸ்ஃபார்மர்கள்) நிறுவப்பட்டன. மற்ற உபயோகங்களுக்கு (வீடுகள், தொழிற்சாலைகள்) தனி இணைப்பு ஒன்று அமைக்கப்பட்டது. ஓர் இணைப்பில் தடங்கல் ஏற்பட்டால், மற்ற இணைப்பு மூலம் நிலைமையைச் சமாளிக்க முடியும். இதற்காக 76,518 கிலோமீட்டர் தூரத்துக்குப் புதிய மின்கம்பிகள் போடப்பட்டன.வெறும் 30 மாதங்களில் திட்டமிடப்பட்டுச் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது இந்தத் திட்டம். 

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி ஏற்றபோது, 2000-01-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, குஜராத் மின்சார வாரியம் 2,542 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியது. ஆனால், 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி அன்று குஜராத் மாநில மின்சார வாரியம், 200 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது என்ற செய்தி வெளியானது.

மின்சாரத் திருட்டு:-

நரேந்திர மோடி முதல்வராகப் பதவி ஏற்றபோது, மற்ற மாநிலங்களைப் போலவே குஜராத்திலும் மின்சாரத் திருட்டு, மின் கட்டண பாக்கி போன்றவை நடைமுறையில் இருந்தன. ஏதோ சாமானியர்கள் மட்டும்தான் இப்படிச் செய்துவந்தார்கள் என்று எண்ணிவிடாதீர்கள். பெரிய தொழிற்சாலைகளும் அரசியல் பெரும் புள்ளிகளும் இத்தகைய வேலைகளைச் சர்வசாதாரணமாகச் செய்துவந்தனர். மின்சார வாரியத்தின் நஷ்டத்துக்கு இதுதான் முதல் காரணம் என்பதை மோடி அரசு உணர்ந்தது.

எனவே முதலில் களைஎடுக்கும் வேலையை மோடி தொடங்கினார். மின்சாரத் திருட்டைத் தடுக்கத் தனியாகக் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. கண்காணிக்க ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான திருட்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மின் திருடர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டதோடு, மின்சாரக் கட்டணம் வட்டியும் முதலுமாக வசூலிக்கப்பட்டது.

2003-
ம் ஆண்டு மின்சாரத் துறையை முதல்வர் நரேந்திர மோடி தன்வசம் வைத்துக்கொண்டார். மிகப்பெரிய சீர்திருத்தத்தை மேற்கொள்ளப் புறப்படும்போது, கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்கவேண்டி வரும் என்பதற்காகவும் மின்சாரத் துறைக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை உணர்த்தவும் முதல்வரே இத்துறையைத் தன் வசம் வைத்துக்கொண்டார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக மின்சாரத் துறை முழுவதையும் கணினிமயமாக்கினார் நரேந்திர மோடி. மாநிலத்தில் உள்ள அனைத்து மின்சார அலுவலகங்களும் அவற்றின் கிளை அமைப்புகளும் இணையம் வழியாக இணைக்கப்பட்டன. இதனால் உண்மையான தகவல்கள் எந்த நேரத்திலும் எளிதாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது.

ஆற்றல் காப்பாளர்கள்:-

மாநிலம் முழுதும் உள்ள பள்ளிக்கூடங்களில் ஆற்றல் காப்பாளர்கள் குழுஅமைக்கப்பட்டது. இன்று, பள்ளி மாணவர்கள் தங்கள் வீடு, அக்கம்பக்கத்தினர் வீடுகள், கிராமம், தங்கள் பள்ளி ஆகிய இடங்களில் ஆற்றல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, ஆற்றல் தணிக்கை செய்கின்றனர். எத்தகைய சூழ்நிலை அந்த வீட்டில் இருக்கிறது, அவர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் முறை எப்படி உள்ளது, எப்படிப்பட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர் போன்றவற்றை அவர்கள் அப்போது கண்டறிந்து, யோசனைகள் சொல்கின்றனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் மூலம் ஆற்றல் சார்ந்த விழிப்புணர்வு ஊட்டப்படுகிறது.

இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தில் சுமார் 1,800 பள்ளிகளை சார்ந்த சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 2008-09-ம் ஆண்டுக் கணக்குப்படி சுமார் 9,000 வீடுகளில் ஆற்றல் தணிக்கை நடைபெற்றுள்ளது.

மின் உற்பத்தி:-

மின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம், நீர் மின் உற்பத்தி, நிலக்கரியிலிருந்து அனல் மின்சக்தி, எரிவாயுவிலிருந்து மின்சாரம், கடல் அலையிலிருந்து மின்சாரம் என்று எங்கெல்லாம் மின்சார உற்பத்தி செய்ய முடியுமோ அங்கெல்லாம் கவனம் செலுத்தப்பட்டது.

2006-
ம் ஆண்டுக் கணக்குப்படி, குஜராத்தில் 132 கிராமங்கள் முழுதும் சூரிய சக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. மின் கம்பிகள் செல்லமுடியாத மலைக் கிராமங்களில் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களிலும் தனியார் கட்டடங்களிலும் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதை அங்கு பார்க்க முடிகிறது.

கட்டாந்தரை கட்ச் பாலைவனத்தையும் குஜராத்தின் நீண்ட கடற்கரையையும்கூடப் பணம் விளையும் பூமி ஆக்கிவிட்டார் மோடி என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வறண்ட பாலைவனமாக இருந்தாலும் காற்றுக்குப் பஞ்சம் இருக்காது. இயற்கையின் இந்த அற்புதக்  கொடையை ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று எண்ணியதன் விளைவுதான் காற்றாலை மின் உற்பத்தி. குஜராத்தில் 2006-ம் ஆண்டில் 338 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகளிலிருந்து கிடைத்தது. அதுவே, 2011-ம் ஆண்டு 2,175 மெகாவாட் மின்சாரமாக அதிகரித்தது. இது சுமார் 545 சதவீத வளர்ச்சி.

இலவச மின்சாரம் இல்லை:-

குஜராத் மின்துறை முதன்மைச் செயலராக இருக்கும் டி.ஜெகதீச பாண்டியன், குஜராத்தில் விவசாயிகளுக்கு ஏன் இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை என்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ‘இலவசமாக மின்சாரத்தை வழங்கும்போது, ஒரு மணி நேரம் ஓடவேண்டிய ஒரு மின்சார மோட்டாரை ஒரு விவசாயி இரண்டு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ இயக்குவார். காரணம் மின்சாரம் இலவசம்தானே, தண்ணீர் தாராளமாக வரட்டுமே என்று. இதன்மூலம் மின்சாரம் வீணாவது ஒரு புறம் என்றால் மறுபுறம் நிலத்தடி நீரும் வீணாகி, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடும்என்றார்.

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறவேண்டும் என்றால் மாத கணக்கில் நடையாக நடக்க வேண்டியுள்ளது. அதுவும் சில இடங்களில் அலுவலர்களை, அதிகாரிகளை 'கவனிக்க' வேண்டும். அப்போதுதான் காரியம்நடக்கும். ஆனால் குஜராத்தில் அப்படியல்ல. இன்று விண்ணப்பித்தால், நாளையே மின் இணைப்பு கிடைத்துவிடும். 

2012
ஜூலை 30-ம் தேதி முதல் இரண்டு நாட்கள் தலைநகர் தில்லி உள்பட 19 மாநிலங்கள் இருளில் மூழ்கின. 60 கோடி மக்கள் அல்லல்பட்டனர். உலகமே சிரித்தது. இந்தியா எங்கே 'சூப்பர் பவர்' ஆகப்போகிறது என்று ஏளனம் செய்தது. ஆனால் குஜராத் மட்டும் எந்தவிதத் தடையும் இன்றி மின்னொளியில் மிதந்தது.

Via  Tamil Arasan

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:25 PM | Best Blogger Tips
Photo: அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு;  Arulmigu Katpagavinayagar Temple, Pillaiyarpatti, Sivagangai District, Tamil NaduPhoto: அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு;  Arulmigu Katpagavinayagar Temple, Pillaiyarpatti, Sivagangai District, Tamil Nadu
Photo: அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு;  Arulmigu Katpagavinayagar Temple, Pillaiyarpatti, Sivagangai District, Tamil Nadu
Photo: அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு;  Arulmigu Katpagavinayagar Temple, Pillaiyarpatti, Sivagangai District, Tamil Nadu
 
இத்திருக்கோயில், தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியிலிருந்து 12 வது கிலோமீட்டர் தொலைவில் திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடியை அடுத்து அமைந்திருக்கிறது. திருப்பத்தூரிலிருந்து ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது.

குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில். பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான். எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. கல்வெட்டுக்கள் மூலம் இத் தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.


இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. கோயிலையும் சுற்றியுள்ள வயல்வெளிகளையும் நகரத்தார்கள் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர்.


கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சமாக இத் தலத்தில் அமர்ந்திருப்பவர் கற்பக விநாயகர். இத்தலத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை மக்கள் கற்பக விநாயகர் என்றே அழைக்கின்றனர். ஆனால், அவருக்கு தேசி விநாயகர் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க விநாயகர், அழகுள்ள விநாயகர் என்று பொருள். தேசிகன் என்ற சொல் வணிகர்களைக் குறிப்பிடும் சொல். வணிகர் குலம் தழைக்க அருள் புரியும் விநாயகர், கற்பக விநாயகர். "கற்பக விநாயகர்" திரு உருவம் காலத்தால் பழைமை வாய்ந்த வடிவமாகும். வலது கையில் ஒரு சின்ன லிங்கமும் இடது கரத்தைத் தனது தொந்தியைச் சுற்றியுள்ள வயிற்றுக் கச்சையின் மீது வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். தும்பிக்கை வலமாக சுழித்துக் கொண்டிருக்கும். வலம்புரியாக வளைந்த தும்பிக்கையும் தந்தங்களின் அமைப்பும் அழகாக அமைந்திருக்கிறது. மார்பில் முப்புரி நூல் இல்லாமல், வயிற்றை முப்பட்டையாலான உதரபந்தம் அலங்கரிக்க தலையில் மகுடம் சூடி வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் இடமே பிள்ளையார்பட்டி.


விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொன்று விடுகிறார். இந்த பழி விலக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார் விநாயகப் பெருமான்.சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து பூஜித்தற்கான ஐதீகத்தைக் கொண்டது இக்கோயில்.புதிய கணக்கு தொடங்கல், வியாபாரம் ஆரம்பித்தல் போன்ற காரியங்களுக்கு இத்திருக்கோயில் மிக சிறப்பு வாய்ந்தது.

கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. குடைவரைக் கோயிலை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களின் திருப்பணி. கற்றளியை அமைத்த பெருமை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பெரும்பணி. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இக் குடைவரைக் கோயில். அமைப்பிலும் அழகிலும் தனித்தன்மையுடன் அமைந்திருக்கிறது. மற்ற குடைவரைக் கோயில்களிலிருந்து மாறுபட்ட வடிவமுடையது. பெரும்பாலும் முகப்புத் தூண்களும் அரைத் தூண்களும் இல்லாத குடைவரைக் கோயில்கள் அமைந்ததில்லை, இது ஒன்றைத் தவிர.


விநாயகர் சந்நிதிக்கு எதிர்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாகச் சென்று வழிபாடு முடித்து கிழக்கு ராஜ கோபுர வாயில் வழியாக வெளியே வரவேண்டும். இதுவே மரபாகக் கொண்டுள்ளனர். வடக்கு கோபுர வாயிலின் வழியாக நுழைந்ததும் இரண்டு பக்கங்களிலும் அழகான மண்டபங்களைக் கொண்டுள்ளது. உள்ளே குடைவரைக் கோயிலைக் குடைந்து அமைக்கப்பட்ட ஆறு அடி உயர கற்பக விநாயகர் அர்த்தச் சித்திரமாகக் காட்சி தருகிறார். அவருக்கு எதிர்புறமாக கொடிமரமும் பலி பீடமும் பெரிய மூஞ்சூறின் உருவமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.


இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. கற்றளி எனப்படும் இந்த மருதீசர் சந்நிதி நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் திருப்பணியால் சிறப்பிக்கப்பட்டது. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.


மருதீசர் கோயிலை வலம் வருவதற்காக எழுப்பப்பட்டுள்ள திருச்சுற்றுப் பாதை நல்ல நீள, அகலத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது. திருச்சுற்று மாளிகையின் தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களையும், மாளிகைப்பத்தியில் இருக்கும் பரிவார தெய்வங்களையும் நேரில்தான் பார்க்க வேண்டும். அவ்வளவு அற்புதமாக அமைக்கப்பட்டிருப்பதைச் சொல்வதற்குத்தான் வார்த்தைகளே இல்லை. மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. நகரத்தாரின் முதல் திருப்பணியின்போது இச்சந்நிதி அமைக்கப்படு அம்மன் பிரதிட்சை செய்யப்பட்டுள்ளது. காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி.



வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.


கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. ராஜகோபுரத்தைவிட காலத்தால் பழைமை வாய்ந்தது இக்கோபுரம்.


விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப்ப்ரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது.

பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்பது நாள்கள் முன்பாக காப்புக் கட்டி, கொடியேற்றம் செய்து திருவிழா தொடங்குகிறது. இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும்.
 

கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு

மணக்கால் அய்யம்பேட்டை | 1:16 PM | Best Blogger Tips

சில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா? கால் களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு முழுதீர்வு உண்டு.

நாம் சில நேரம் ஆன்மீக பிரசங்களுக்கோ, விழாக்களின் நடக்கும் சொற்பொழிவுகளுக்கோ சென்று தரையில் அமர்ந்திருப்போம். கூட்டம் நிறைய இருக்கும். மேடைப் பேச்சாளரின் திறமையான பேச்சுத் திறமையினால் நெருக்கமாக நீண்ட நேரம் அமர்ந்திருப்போம். கால்களின் மூட்டுகளில் வலி அதிக மாக இருக்கும். கால்களை சற்று நீட்டி உட்கார்ந்தால் சௌகரியமாக இருக்கும் என்று நினைப்போம். கால்களை நீட்டவும் இடம் இருக்காது. காலை மாற்றி வைத்துக் கொள்ள கூட இட வசதி இருக்காது. எழுந்து வரவும் மனமும் இருக்காது அப்பொழுது கால்களில் ஏற்படும் மூட்டுவலி உடனடியாக நீக்குவதற்கு ஒரு வழி உள்ளது. அதைச் செய்தால் கால் மூட்டுகளில் ஏற்படும் வலி உடனே நீங்கிவிடும்.

கால்களை நீண்ட நேரம் மடக்கி அமர்ந் திருப்பதால், அந்த இடத்திலுள்ள நரம்புகள் மடங்குவதால் இரத்தம் ஓடுவதில் தேக்கம் ஏற்பட்டு, ரத்தம் ஓடுவதில் தடை ஏற்படுத்துகிறது. உடலில் எந்த இடத்தில் தடை ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் வலி உண்டாகின்றது. வலி ஏற்படுவதின் முக்கிய காரணமே இரத்த ஒட்ட தடைதான்.

நமது இருதயம் சுருங்கி, விரிந்து இரத்தத்தை நரம்புகளில் செலுத்துகிறது. அப்பொழுது ஒரு துடிப்பு ஏற்படுத்துகிறது. அந்த துடிப்பின் மூலமே ரத்தத்தை நரம்பு களில் செலுத்த முடிகிறது. அந்த துடிப்பே இருதய துடிப்பு எனப்படுகிறது. இந்த துடிப்பை ஸ்டதஸ்கோப் என்ற கருவியின் மூலம் மருத்துவர்கள் அறிகிறார்கள். இதன் மூலம் மனிதனின் இரத்த ஓட்டத்தின் வலிமையையும், உடல் நலத்தையும் அறிய முடிகிறது. உடல் நலம் பாதிக்கும் பொழுது, இந்த துடிப்பும் மாறுபடு கின்றது. இரத்தம் உடலின் பல பாகங்களுக்கு முறையாகச் செல்வதற்கு பல்வேறு இடங்களில் நரம்புகளில் துடிப்பு ஏற்படுத்தி செலுத்தப்படுகிறது. அந்த துடிப்பை உடம்பில் பல இடங்களில் அறிய முடிகிறது. அவை மார்பு, கைகள், உச்சி, புருவம், கண்டம், நாசி, காது, உந்தி, காமியம், குதிகால் சந்து முதலியன ஆகும்.

மனித உடலில் எழுபத்தியிரண்டாயிரம் நாடி நரம்புகள் இருப்பதாக சித்த வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன. அத்தனை நரம்புகளிலும் இரத்தம் தொடர்ந்து செல்ல, துடித்து தள்ளப்படுகிறது. அந்த துடிப்புகள் வெளியில் தெரிவதில்லை. இரத்தம் நரம்புகளில் தொடர்ந்து முறையாக செல்ல நம் உடலில் மின்சார ஒட்டம் ஏற்பட இரத்தத்தில் உள்ள இரும்பு தாதுக்களும் செம்பு தாதுக்களும், உடலில் ஆகாரம் ஜீரணம் ஆக உருவாகும் அமிலங்களும் கலந்து மின்சார அதிர்வுகள் உருவாகின்றன. அந்த அதிர்வுகள் தான் மின்னோட்டமாக மாறி, இரத்த ஓட்டம் முறையாக செல்ல காரணமாகிறது.

சில நபர்களுக்கு உடலில் நாடித்துடிப்பு குறைபாடு ஏற்படுகிறது. இந்த நாடித் துடிப்பு குறைபாடுகளால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நாடித் துடிப்பு குறைபாடு மின்னோட்ட குறைவினால் உண்டாகின்றன. இந்த குறைபாடு நீங்க உலோக சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் ஊட்டச்சத்து உணவுகள் உண்டு வந்தால், உடலில் உருவாகும் ஜீரண அமிலங்களும் இணைந்து, மின்னூட்டம் ஏற்பட்டு நாடித் துடிப்பு குறைபாடு நீங்கி, ஆரோக்கியம் அடைய முடியும்.

உடலில் மின்னூட்டம் இரண்டு மண்டலங்களாக இயங்குகிறது. உடலின் வலது பக்கம் ஒரு மண்டலமாகவும், இடது பக்கம் ஒரு மண்டலமாகவும் இயங்குகிறது. வலது பக்க மண்டலம், வலது கை, கால் விரல்களின் நுனிப்பகுதியிலிருந்து, தலைபகுதி வரை மின்னோட்டம் நடைபெறுகிறது.

இப்பொழுது நீண்டநேரம் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது உண்டாகும் வலியை நீக்கும் முறையைப் பார்ப்போம். ஒவ்வொரு காலிலிருக்கும் ஐந்து விரல்களிலிருந்தும் தனி வழியாக மின்னூட்டம் தலைப்பகுதி வரை செல்லு கிறது. கால்களை மடக்கி உட்கார்ந்திருப்பதால், அந்த பகுதியில் நரம்புகள் மடங்கி, ரத்த ஓட்டத்தில் தேக்கம் ஏற்பட்டு மெதுவாக சென்று வலி ஏற்படுகிறது. அந்த இரத்த ஓட்டம் தடைபடாமல் விரைவாக செல்வதற் காக நம் கால்களில் மின்னூட்டத்தை விரைவு படுத்த மின்தூண்டுதல் ஏற்படுத்தலாம். கால் களில் உள்ள கட்டை விரல்களிலிருந்து, ஒவ்வொரு விரலாக, இடது கை கட்டை விரலினாலும், சுட்டு விரலினாலும் , இடது கால் கட்டை விரலின் நகத்தின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் பிடித்து வலது புறமாகவும், இடது புறமாகவும் உருட்டினால் விரலின் நுனியில் மின் தூண்டல் ஏற்பட்டு தலைபகுதி வரை மின்னோட்டம் ஏற்படுகிறது. இந்த மின்தூண்டுதலால் தடைபட்ட இரத்த ஓட்டம் தடையை தாண்டி செல்ல ஆரம்பிக்கிறது. இரத்த ஓட்டம் நடைபெறுவதால் வலி குறைகிறது. இப்பொழுது காலில் உள்ள ஒவ்வொரு விரலையும், இடதுபுறம், வலபுறம் என மாற்றி நாற்பது தடவை உருட்டவும் விரல்களில் தொடர்ந்து மின்ஒட்டத் தூண்டுதல் ஏற்படுவதால், தொடர்ந்து இரத்த ஓட்டம் ஏற்பட்டு தடை விலகி வலியும் நீங்கு கிறது. இதே மாதிரி வலது கால் விரல்களையும். கைவிரல்களில் எல்லா விரல் களையும், கைவிரல்களில் எல்லா விரல் களையும் உருட்டவும். உங்களுக்கு எந்த கால் விரல்களை, எந்த கைவிரல்களினால் உருட்ட முடியுமோ அப்படி செய்து கொள்ளலாம்.

கூட்டத்தில் தரையில் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது, மற்றவர்களுக்கு தெரியாமல் கூட, இடது கால் விரல்களை வலது கை விரல்களினாலும், வலது கால் விரல்களை, இடது கை விரல்களினாலும் உருட்டி விடலாம். விரல்களை உருட்டி சில நிமிடங்களில் வலி மறைந்துவிடும். கால்களில் வலி வரும்பொழுது செய்துதான் பாருங்களேன்.

சிலபேருக்கு கைகளில் வலி, உளைச்சல், கை மூட்டுகளில் வலி, தோள்பட்டையில் வலி, மற்றும் சில பெண்களுக்கு கைகளை தூக்கி தலைவாரி பின்னல் போடமுடியாது. ஜாக்கெட் அணிந்து கொள்ள கையை தூக்க முடியாது. முதலிய தொந்திரவுகளுக்கு கை விரல்களை, அடுத்த கைவிரல்களினால் ஒவ்வொரு விரலையும் நாற்பது தடவை வலது இடதாக உருட்டி விடுவீர்களானால் வலி குறைந்துவிடும், தினமும் காலையும், மாலையும் விரல்களை உருட்டி பயிற்சி செய் வீர்களானால் முற்றிலும் வலி போய்விடும்.

எளிய இந்த பயிற்சியினால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. மருந்து மாத்திரை இல்லை. பணம் செலவில்லை. சிறிது நேர பயிற்சிதான் சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும். இதனால் வலி போய்விடுமா என்று எண்ண வேண்டாம்? செய்துதான் பாருங்களேன் அகல் விளக்கு பிரகாசமாக எரிய தூண்டிவிடுவதுபோல, உங்கள் உடலில் உருவாகும் மின்னூட்டத்தை தூண்டிவிட்டு, ரத்த ஒட்டத்தை முறைபடுத்தி ஆரோக்கியம் அடையுங்கள்.

தினமும் அதிகாலை படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து, இந்த நாள் இனிய நாளாக தொடங்கட்டும் என்ற உணர்வுடன் கால் விரல்களையும், கை விரல்களையும், நாற்பது தடவை உருட்டுங்கள், பிறகு உங்களுக்கான வேலைகளை தொடங்குங்கள். உற்சாகம் பிறக்கட்டும் உடல் வலிகள் நீங்கட்டும் வாழ்நாள் முழுவதும் வசந்தமாக மலரட்டும்! இனிமேல் எல்லா நாட்களும் இனிய நாட்களே.

 

(நன்றி : மாற்று மருத்துவம்)
 

 Via -நலம், நலம் அறிய ஆவல்.