பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:25 PM | Best Blogger Tips
Photo: அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு;  Arulmigu Katpagavinayagar Temple, Pillaiyarpatti, Sivagangai District, Tamil NaduPhoto: அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு;  Arulmigu Katpagavinayagar Temple, Pillaiyarpatti, Sivagangai District, Tamil Nadu
Photo: அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு;  Arulmigu Katpagavinayagar Temple, Pillaiyarpatti, Sivagangai District, Tamil Nadu
Photo: அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு;  Arulmigu Katpagavinayagar Temple, Pillaiyarpatti, Sivagangai District, Tamil Nadu
 
இத்திருக்கோயில், தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியிலிருந்து 12 வது கிலோமீட்டர் தொலைவில் திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடியை அடுத்து அமைந்திருக்கிறது. திருப்பத்தூரிலிருந்து ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது.

குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில். பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான். எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. கல்வெட்டுக்கள் மூலம் இத் தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.


இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. கோயிலையும் சுற்றியுள்ள வயல்வெளிகளையும் நகரத்தார்கள் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர்.


கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சமாக இத் தலத்தில் அமர்ந்திருப்பவர் கற்பக விநாயகர். இத்தலத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை மக்கள் கற்பக விநாயகர் என்றே அழைக்கின்றனர். ஆனால், அவருக்கு தேசி விநாயகர் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க விநாயகர், அழகுள்ள விநாயகர் என்று பொருள். தேசிகன் என்ற சொல் வணிகர்களைக் குறிப்பிடும் சொல். வணிகர் குலம் தழைக்க அருள் புரியும் விநாயகர், கற்பக விநாயகர். "கற்பக விநாயகர்" திரு உருவம் காலத்தால் பழைமை வாய்ந்த வடிவமாகும். வலது கையில் ஒரு சின்ன லிங்கமும் இடது கரத்தைத் தனது தொந்தியைச் சுற்றியுள்ள வயிற்றுக் கச்சையின் மீது வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். தும்பிக்கை வலமாக சுழித்துக் கொண்டிருக்கும். வலம்புரியாக வளைந்த தும்பிக்கையும் தந்தங்களின் அமைப்பும் அழகாக அமைந்திருக்கிறது. மார்பில் முப்புரி நூல் இல்லாமல், வயிற்றை முப்பட்டையாலான உதரபந்தம் அலங்கரிக்க தலையில் மகுடம் சூடி வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் இடமே பிள்ளையார்பட்டி.


விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொன்று விடுகிறார். இந்த பழி விலக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார் விநாயகப் பெருமான்.சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து பூஜித்தற்கான ஐதீகத்தைக் கொண்டது இக்கோயில்.புதிய கணக்கு தொடங்கல், வியாபாரம் ஆரம்பித்தல் போன்ற காரியங்களுக்கு இத்திருக்கோயில் மிக சிறப்பு வாய்ந்தது.

கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. குடைவரைக் கோயிலை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களின் திருப்பணி. கற்றளியை அமைத்த பெருமை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பெரும்பணி. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இக் குடைவரைக் கோயில். அமைப்பிலும் அழகிலும் தனித்தன்மையுடன் அமைந்திருக்கிறது. மற்ற குடைவரைக் கோயில்களிலிருந்து மாறுபட்ட வடிவமுடையது. பெரும்பாலும் முகப்புத் தூண்களும் அரைத் தூண்களும் இல்லாத குடைவரைக் கோயில்கள் அமைந்ததில்லை, இது ஒன்றைத் தவிர.


விநாயகர் சந்நிதிக்கு எதிர்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாகச் சென்று வழிபாடு முடித்து கிழக்கு ராஜ கோபுர வாயில் வழியாக வெளியே வரவேண்டும். இதுவே மரபாகக் கொண்டுள்ளனர். வடக்கு கோபுர வாயிலின் வழியாக நுழைந்ததும் இரண்டு பக்கங்களிலும் அழகான மண்டபங்களைக் கொண்டுள்ளது. உள்ளே குடைவரைக் கோயிலைக் குடைந்து அமைக்கப்பட்ட ஆறு அடி உயர கற்பக விநாயகர் அர்த்தச் சித்திரமாகக் காட்சி தருகிறார். அவருக்கு எதிர்புறமாக கொடிமரமும் பலி பீடமும் பெரிய மூஞ்சூறின் உருவமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.


இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. கற்றளி எனப்படும் இந்த மருதீசர் சந்நிதி நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் திருப்பணியால் சிறப்பிக்கப்பட்டது. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.


மருதீசர் கோயிலை வலம் வருவதற்காக எழுப்பப்பட்டுள்ள திருச்சுற்றுப் பாதை நல்ல நீள, அகலத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது. திருச்சுற்று மாளிகையின் தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களையும், மாளிகைப்பத்தியில் இருக்கும் பரிவார தெய்வங்களையும் நேரில்தான் பார்க்க வேண்டும். அவ்வளவு அற்புதமாக அமைக்கப்பட்டிருப்பதைச் சொல்வதற்குத்தான் வார்த்தைகளே இல்லை. மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. நகரத்தாரின் முதல் திருப்பணியின்போது இச்சந்நிதி அமைக்கப்படு அம்மன் பிரதிட்சை செய்யப்பட்டுள்ளது. காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி.



வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.


கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. ராஜகோபுரத்தைவிட காலத்தால் பழைமை வாய்ந்தது இக்கோபுரம்.


விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப்ப்ரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது.

பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்பது நாள்கள் முன்பாக காப்புக் கட்டி, கொடியேற்றம் செய்து திருவிழா தொடங்குகிறது. இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும்.