டிரஸ்ட் தொடங்குவது எப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:32 PM | Best Blogger Tips

புதிதாக ஓர் அறக்கட்டளையைத் (Trust) தொடங்குவதற்கு வேண்டிய அடிப்படையான விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அறக்கட்டளையைத் தொடங்குவது எப்படி? அதற்கு எங்கு பதிவுசெய்ய வேண்டும்? ஓர் அறக்கட்டளையில் எத்தனை அறங்காவலர்கள் இருக்கலாம்? யார் வேண்டுமானாலும் அறக்கட்டளை தொடங்கலாமா?


இவரது கேள்விக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பாலசுப்ரமணியன் விளக்கம் அளிக்கிறார். ’’டிரஸ்ட் என்பதற்கு பொறுப்பணம்என்பதுதான் சட்டரீதியாக சரியான சொல். தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே அறக்கட்டளை என்று பெயர். ஆனால் தற்போது டிரஸ்ட் என்பது அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு வகையான டிரஸ்ட்டுகள் உள்ளன. ஒன்று தனியார் டிரஸ்ட் மற்றொன்று பொது டிரஸ்ட். டிரஸ்ட் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் ஆகியோர் அனுபவிக்கும் வகையில் ஓர் ஆவணம் அல்லது ஒர் உயில் மூலம் டிரஸ்ட் அமைக்கலாம். அதற்கு தனியார் டிரஸ்ட் என்று பெயர். தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட குடும்பங்களின் வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக இத்தகைய தனியார் டிரஸ்ட்டுகள் ஏற்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் அல்லது பொதுமக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயனடையும் வகையில் ஏற்படுத்தப்படுவது பொது டிரஸ்ட். உதாரணமாக கோயில், மசூதி, தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கான சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு பொது டிரஸ்ட்கள் ஏற்படுத்தப்படுகின்றன. சட்டப்படியான நோக்கங்களுக்காக மட்டுமே டிரஸ்ட்டை உருவாக்க முடியும். டிரஸ்ட்டின் நோக்கமானது சட்டவிரோதமாகவோ மோசடியானதாகவே இருக்கக்கூடாது.

பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானதாகவும், நெறியற்றதாகவும்கூட இருக்கக்கூடாது. ஒரு டிரஸ்ட் அமைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் அவசியம். அதிகபட்சமாக எத்தனை பேர் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்கலாம். ஆனாலும் கூட இரண்டு பேருக்கு மேல் தேவையான எண்ணிக்கையில் மட்டுமே உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது எதார்த்தம். எந்தவொரு டிரஸ்ட்டாக இருந்தாலும் அதில் நிர்வாக அறங்காவலர் (Managing Trustee) ஒருவர் இருக்க வேண்டும். பொருளாளர் ஒருவர் இருப்பார். மற்ற உறுப்பினர்கள் டிரஸ்ட்டிகளாக இருப்பார்கள். டிரஸ்ட் உருவாக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். டிரஸ்ட்டினுடைய நோக்கம், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்,சொத்து மதிப்பு,சொத்து குறித்த விளக்கம் மற்றும் பிரிவுகள், உரிமைகள், கடமைகள், விதிமுறைகள் போன்ற விவரங்களை ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஆவணத்தில் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட வேண்டும். பொறுப்பாளர்கள் அனைவரும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்ட பிறகு அதற்கு ஒரு பெயரிட்டு பதிவாளர் அலுவலகத்தில் (Registrar office) பதிவு செய்ய வேண்டும். டிரஸ்ட் செயல்படும் அலவலகம் அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குட்பட்ட பதிவாளர் அலவலகத்தில் டிரஸ்ட்டை பதிவு செய்யலாம். அதற்கான பதிவுக்கட்டணம் 400 ரூபாய்.


எஸ்.பாலசுப்ரமணியன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்


தொடர்பு எண் : +91 99528 71112
மின்னஞ்சல் முகவரி : balawassociates@yahoo.com