தேகத்தை பளபளப்பாக்க...சீரகம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:08 PM | Best Blogger Tips


தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் "சீரகம்", வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில் நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டைக்காலத்திலிருந்தே இந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பன்மொழிப் பெயர்கள்: சீரகத்திற்கு ஆங்கிலத்தில் "குமின்" (Cumin) என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, கார்மீரியில் ஜையுர் என்று பெயர்.

பெயர் வந்த விதம்: நமது உடம்பின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவகை சீர்கேடுகளைச் சரிசெய்யும் குணம்கொண்ட வாசனைப் பொருள் என்பதால், இதற்கு தமிழில் "சீரகம்" என்று தாவர இயல் நிபுணர்கள் பெயர் வைத்தார்கள். சீரூஅகம்-சீரகம். அகத்தைச் சீர் செய்யும் ஓர் ஒப்பற்ற இயற்கை மருந்து சீரகம்.

சத்துப் பொருட்கள்: நூறு கிராம் சீரகத்தில் அடங்கி உள்ள சத்துப் பொருட்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. புரதம் 17.7 கிராம், கொழுப்பு 23.4 கிராம், பொட்டாசியம் 2.1 கிராம், சுண்ணாம்புச் சத்து 0.9 கிராம், பாஸ்பரஸ் 0.5 கிராம், சோடியம் 0.2 கிராம், இரும்புச்சத்து 48.1 மில்லி கிராம், தயாமின் 0.8 மில்லிகிராம், ரைபோஃபிளேவின் 0.4 மில்லிகிராம், நியாசின் 2.5 மில்லிகிராம், அஸ்கார்பிக் அமிலம் 17.2 மில்லிகிராம், வைட்டமின் ஏ 175 ஐ.யு.

பொதுப் பயன்கள்: சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் உபப்பொருளாக பங்கு வகிக்கிறது. சூப் வகைகள், சாஸ் வகைகள், ஊறுகாய் வகைகள் தயாரிக்க இதுவும் இடம் பெறுகிறது. மிட்டாய், கோக், ரொட்டி வகைகள் செய்வதற்கும் பயன்படுகிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. பித்தத்தை மொத்தமாகப் போக்கும். பசியைத் தூண்டும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும் எளியமருந்து. வயிற்றுப் பொருமல், உடல் அசதி போக்கும். நரம்புகளை வலுப்படுத்தும்.

மருத்துவப் பயன்கள்: சீரகக்குடிநீர்: தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக்கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையதும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம்(Cumin), இஞ்சி(Ginger), சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு(Dry Ginger) , சீரகம், மிளகு(Pepper), திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

கிருமிகளை அழிக்கும் பலா!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:06 PM | Best Blogger Tips



முக்கனிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பலாப்பழம், தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பழமாகவும், பல வகைப் பண்டங்களாகவும் செய்து பயன்-படுத்தப்-பட்டு வருகிறது. பல வழிகளில் மருத்துவக் குணங்களும் இப்பழத்திற்கு உண்டு. குற்றாலக் குறவஞ்சி மற்றும் தமிழ் இலக்கியங்களிலும் பலா பற்றிய குறிப்புகள் ஏராளம் உள்ளன.

தாயகம்: பலாவின் தாயகம் இந்தியா ஆகும். இலங்கை, இந்தியா, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பரப்பளவில் பலா பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம், பீகார், மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில் பயிராகிறது.

பலாவின் தாவரவியல் பெயர்: "ஆர்ட் டோ கார்பஸ்ஹைட்டிரோஃபில்லஸ்" (Artocarpus heterophyllus). அர்ட்டிக்-கேசிய தாவர குடும்பத்தைச் சார்ந்தது.

தமிழில் வேறு பெயர்கள்: பலாவிற்கு தமிழில், ஏகாரவல்லி, சக்கை, பலவு, பலாசம், வருக்கை, பனசம் முதலிய வேறு பெயர்களும் உள்ளன.

பல்மொழிப் பெயர்கள்: ஆங்கிலத்தில் "ஜாக் ஃபுரூட்" (Jack fruit) என்று பெயர். இந்தியில் பனஸ், மலையாளத்தில் சக்கே, தெலுங்கில் பனஸபண்டு, கன்னடத்தில் பேரளே, குஜராத்தியில் பனஸி, காஷ்மீரியில் பனஸ்சு என்று பெயர்.

சத்துப் பொருட்கள்: நாம் சாப்பிடும் நூறு கிராம் பலாச்சுளையில் உள்ள சத்துப் பொருட்களின் அளவு கீழ்கண்டவாறு உள்ளன. புரதம் 2.1 கிராம், கொழுப்பு 0.2 கிராம், மாவுப்பொருள் 19.8 கிராம், நார்ப்பொருள் 1.4 கிராம், சுண்ணாம்பு சத்து 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 41 மில்லிகிராம், இரும்புச் சத்து 0.7 மில்லிகிராம், தயாமின் 0.04 மி.கிராம், ரைபோஃபிளோவின் 0.15 மி.கிராம், நியாசின் 0.4 மி.கிராம் வைட்டமின் "சி" 7.1மி. கிராம், மெக்னீசியம் 27 மில்லிகிராம், பொட்டாசியம் 19.1 மில்லிகிராம், சோடியம் 41.0 மில்லிகிராம், தாமிரம் 0.23 மில்லிகிராம், குளோரின் 9.1 மில்லிகிராம், கந்தகம் 69.2 மில்லிகிராம், கரோட்டின் 306 மைக்ரோகிராம். இத்தனை சத்துப் பொருட்கள் உள்ள பலாச்சுளையை, "சத்துப்பேழை" என்று சிறப்பாகச் சொல்லலாம்.

எப்படிச் சாப்பிடலாம்: கொட்டையை நீக்கிவிட்டு, பலாச்சுளைகளை அப்படியே சுவைத்துச் சாப்பிடலாம். பலாக்கூழ், பலாப்பழ கீர், பலாப்பழ ஜாம், பலாப்பழ ஜெல்லி முதலியன செய்தும் சாப்பிடலாம். பலாப்பழத்தை பயன்படுத்தி பலவகை இனிப்புப் பண்டங்கள் தயார் செய்து உண்ணலாம்.

முக்கிய குறிப்பு: பலாப் பழச்சுளையை அப்படியே தின்னும்போது, முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியதைத் தெரிந்து கொள்வோம். பலாப் பழத்திலுள்ள சில கேடு பயக்கும் தன்மையை நீக்கி, பழத்தின் முழு சத்துப் பொருட்களும் கிடைக்க, பலாச்சுளையுடன் சிறிது வெல்லம், கருப்பட்டி, தேன் இவைகளில் ஏதாவது ஒன்றைச் சேர்த்து சாப்பிடுவது மிக நல்லது. இது எளிய வழிமுறைதான்.

மருத்துவப் பயன்கள்:

* பலாப்பழத்தில் வைட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழம் பலாப்பழம்.

* சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு.

* பல் உறுதி பெற, ஈறு கெட்டியாக இருக்க, பலாப்பழம் சீராகச் சாப்பிட வேண்டும்.

* உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில் இருக்கிறது.

* எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என ஜெர்மனி, அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து இதுபற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது.

* பலாப்பழ பானகம் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மையது.

* உடலில் உள்ள தசைகளை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் பலாப்பழத்திற்கு உண்டு.

* தோல் வறட்சி அடையாது பாதுகாக்கும் சத்துப் பொருள் பலாப்பழத்தில் உரிய அளவு இருக்கிறது.

* பலாப்பழ கீர் இரவில் அருந்தினால் நன்கு தூக்கம் வரும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர்க்கு நல்ல எளிய மருந்து.

* பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி, களைப்பு நீங்கி, உற்சாகம் ஏற்படும்.

* பலாப்பழத்துடன் சிறிது கசகசாவை மென்று தின்றால், குடல் அழற்சி நீங்கும்.

* பலாப்பழத்துடன், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் அத்தனையும் வெளியேறி, நலன் பயக்கும்.

எச்சரிக்கை:

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது. வெறும் பலாப்பழத்தை அதிகம் தின்றால் அஜீரணம் ஏற்படும். ஆஸ்துமா நோயை அதிகரிக்கும்.
 
— with Thamarai Manalan.

சிறுநீரகத்தை ஆரோக்கியத்துடன் வைக்கும் உணவுகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:56 PM | Best Blogger Tips




www.thedipaar.com
உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு. எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை. நீரிழிவால் மக்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகின்றனரோ, அவ்வளவு மக்களும் சிறுநீரகப் பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இத்தகைய சிறுநீரக பிரச்சனை வராமல், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், சிறுநீரகப் பிரச்சனை வரும். சிறுநீரகம் சீராக இயக்குவதற்கு, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வது, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். அதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றால், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக இரத்த அழுத்தமும் சிறுநீரகத்தை பாதிக்கும். எனவே அவ்வப்போது இரத்த பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும். ஆய்வு ஒன்றில் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நிறைய உணவுகள் உள்ளன என்றும், அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தை மட்டுமின்றி, உடல் முழுவதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது. சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
பூண்டின் நன்மைகளை சொல்லவே வேண்டாம். இதனை அதிகம் சாப்பிட்டால், இதய நோய் வருவதை தவிர்ப்பதோடு, இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைப்பதோடு, உட்காயங்களையும் குறைத்துவிடும்.
பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லி, ராஸ்பெர்ரி போன்றவை சிறுநீரகத்திற்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியது. இதனை சாப்பிட்டால், சிறுநீரகம் ஆரோக்கியமாக இயங்குவதோடு, குடலியக்கமும் முறையாக நடைபெறும்.
சிறுநீரக நோய் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சிவப்பு குடைமிளகாய் மிகவும் சிறந்த உணவுப் பொருள். இதில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின்களான ஏ, சி மற்றும் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு, எந்த வகையான புற்றுநோயையும் வராமல் தடுக்கும்
முளைக்கட்டிய பச்சைப் பயிர்களை டயட்டில் சேர்ப்பது மிகவும் நல்லது. இந்த முளைக்கட்டிய பயிர்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, சிறுநீரக கற்கள் வராமலும் தடுக்கும்.
முட்டைகோஸ் மிகவும் சிறந்த காய்கறி. இந்த காய்கறி சிறுநீரக இயக்கத்தை சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இத்தகைய காய்கறிகளையும் உணவில் அவ்வப்போது சேர்த்து வர வேண்டும்.
ஆப்பிள் சாப்பிட்டால், இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, இரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகமும் சுத்தமாக இருக்கும். எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவது நல்லது.
அனைவருக்குமே ஆலிவ் ஆயில் பயன்கள் தெரியும். இந்த எண்ணெய் இதயத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. எனவே சமையலில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது நல்லது.

பற்களை பாதுகாப்பது எப்படி? என்பதை பற்றிய தகவல்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:31 PM | Best Blogger Tips



நம் அன்றாட வாழ்வில் பல் துலக்குதல் ஓர் அத்தியாவசியமான அங்கமாகிவிட்ட காலமிது. காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதலே. துலக்கி முடிக்கும் வரை நாம் வாயில் எச்சில் கூட்டி விழுங்கவும் தோன்றாது, துப்பவும் தோன்றாது படும் அவதி ஓர் தனி விதம்.

துலக்கிய பின் தோன்றும் புத்துணர்வும், தூய்மை உணர்வும் ஓர் தனி இன்பமே. எனவே பல் துலக்குதல் காலைக் கடன்களில் ஒன்றாகவேக் கருதப்பட்டு, அனைவராலும் சாதி, மத பேதமின்றி, அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆகையினால் நாம் இந்த நல்ல பழக்கத்தினை சரியாக அறிந்துக் கொண்டு, சரிவர கடைப்பிடித்தலை கடமையாகக் கொள்வது கட்டாயம் தானே.

பல் துலக்குதலின் முக்கியத்துவம்:

முதற் கோணல் முற்றும் கோணல் என்பது பழமொழி. நாம் காலையில் செய்யும் இம் முதல் காரியமே சரியாக அமைந்தால் அன்றைய அனைத்து காரியங்களுமே சரியாக நடக்கக் கூடுமன்றோ... பல் துலக்குதலின் சரியான வழிமுறையினையும், நுட்பத்தினையும் நாம் அறிந்துகொண்டு, நல்ல பலனடைந்து, நம் வழித்தோன்றல்களுக்கும் இந்த நல்ல பழக்கத்தினை படிப்பித்து, பலனடைய வைப்பது நமது கடமை. பல் துலக்குதல் வாயின் சுகாதாரத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், மற்றும் வாய் துர்நாற்றத்தையும் தவிர்க்க வல்லது.

நாம் ஏன் பல் துலக்க வேண்டும்?

பல் துலக்குதல் என்பது நம் வாயிலும் பற்களிலும் உள்ள அழுக்கை நீக்கத்தான். இந்த அழுக்கை ஆங்கிலத்தில் plaque என்றும் tartar என்றும் கூறுவர். இந்த அழுக்கானது, பல் ஈறுகளிலிருந்து நீக்கப்படாத உணவுத் துகளும், கிருமிக் கூட்டங்களும் கலந்த ஓர் கலவையே. பல் துலக்கிய இரண்டு அல்லது மூன்று மணிகளுக்குள்ளே இந்த அழுக்கு (plaque) பல் ஈறுகளில் படியத் துவங்கும். இவைகள் பல்லை மட்டுமல்லாமல் பல் ஈறுகளுக்கும் பாதிப்புகளை அதிகமாக்குவதோடு, பற்களை இழப்பதற்கும் காரணமாகிவிடுகிறது. எனவே பற்களை இருமுறை துலக்குதலும், உணவு உண்டபின் ஒவ்வொரு முறையும் மிக நன்றாக வாய் கொப்பளித்தலும் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும். இதற்குத் தண்­ரையோ, கொப்பளிக்கும் திரவத்தையோ உபயோகிக்கலாம்.

எப்படி சரியாக பல்லைத் துலக்குவது?

பல் துலக்குவதற்கு ஒரே ஒரு சரியான முறைதான் உள்ளது என்ற நிலை இல்லை. அந்நுட்பம் ஒவ்வொருவரின் வாய், தாடையில் பற்கள் அமைந்துள்ள தன்மையினைப் பொருத்து மாறுபடும். பரவலாக, பல் மருத்துவர் பலராலும் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கப்படும் அழுக்கினை (plaque) நீக்கும் வழியினை இங்கு பார்ப்போம்.

பெரியவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறை:

பல் துலக்கியின் (plaque) குச்சுகள் 45 டிகிரி கோணத்தில் ஈறுகளின் மேல் சாய்த்துப் பிடித்து, ஒவ்வொரு முறையும் மூன்று பற்களின் மேல், முன்னும், பின்னும் நகர்த்தி, சிறிது அதிர்வுடன் கூடிய சுழற்றும் முறையிலும் தேய்க்க வேண்டும். இம்முறையை கடைவாய் பற்களில் துவக்கி முன் பற்கள் வரை, மூன்று, மூன்று பற்களாக முன்னேற வேண்டும். மேல் தாடையின் வலது, இடது, உள், வெளிப் பக்கங்களிலும், அதே போல் கீழ் தாடையிலும் வலது, இடது, உள், வெளிப் பக்கங்களிலும் தேய்க்க வேண்டும். இச் சுழற்சியினை சுமார் 15 முதல் 20 முறைகள் ஒவ்வோர் இடத்திலும் மேற்கொள்ள வேண்டும்.

முன் பற்களுக்கு மட்டும் பல் துலக்கியை செங்குத்தாக பிடித்து 45 டிகிரி கோணத்தில் மேலும் கீழும் நகர்த்தி, உள்ளும் வெளியும் தேய்த்து விட வேண்டும். கடைவாய் பற்களின், மெல்லும் மற்றும் கடிக்கும் பகுதிகளில் பல்துலக்கியின் குச்சுகளால் நன்றாக அழுத்திப் பிடித்து முன்னும் பின்னுமாகத் தேய்த்து விட வேண்டும். பற்களைத்தான் செம்மையாகத் தேய்த்து முடித்தாயிற்றே என்று முடித்து விடாமல் மறவாது நமது நாக்கின் புற பகுதிகளில் பல் துலக்கியால் முன்னும் பின்னும் அசைத்து நகர்த்தித் தேய்த்தால், வாய் துர்நாற்றம் வீசக் காரணமான கிருமிகளை அகற்றி விட முடியும்.

சிறியவர்களுக்கான முறை:

சிறார்களை பல் மற்றும் ஈறுகளில் பல் துலக்கியின் குச்சுகளால் வட்ட வடிவில் சுழற்சி முறையில் தேய்க்க அறிவுறுத்த வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, பச்சிளம், பல் முளைக்காத பாலகர்களுக்கும் பக்குவமாக ஈறுகளை விரல்களால் தேய்த்து விடுதல் சாலச் சிறந்த முறை. குழந்தைகளை பாசப் பரிவுடன் ஒரு கையில் ஏந்திக்கொண்டு மறு கையில், ஆள்காட்டி விரலில் ஈரத் துணி சுற்றி ஈறுகளில் இதமாக முழுதாகத் தடவி துடைத்து விட வேண்டும்.

எத்தகைய பல்துலக்கிகளை உபயோகித்தல் நல்லது?

மிருதுவான, கூர்முனை இல்லாத, வட்ட வழுவழுப்பான முனைகள் கொண்ட நைலான் குச்சுகளுடன் கூடிய பல் துலக்கியால் பல் துலக்குவது நல்லது. கூர் முனை குச்சுகளைத் தவிர்க்க வேண்டும். கடினமான மற்றும் விரைப்பான குச்சுகள் கொண்ட பல் துலக்கிகள் பல்லின் எனாமல் மற்றும் ஈறுகளை சேதப்படுத்தி விடக்கூடும். அவைகளைத் தவிர்த்தல் நலமே.

எவ்வித பற்பசைகளை உபயோகிக்கலாம்?

பற்சிதைவைத் தடுக்கும் தன்மை வாய்ந்த புளூரைடு கொண்ட பற்பசைகளை உபயோகித்தல் நல்லது. சிறுவர்களுக்கு ஒரு பட்டாணியின் அளவிலான பற்பசையினை உபயோகித்தலே போதுமானது. ஏனெனில் சில சிறுவர்கள் அதிக பற்பசை வைத்தால் துலக்கும்போது விழுங்கிவிட வாய்ப்புண்டு. இது அவர்களுக்கு உடலில் அதிக அளவிலான புளூரைடு நிறைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும்.

பற்களை எப்படி பாதுகாப்பது?

பற்களை குண்டூசி மற்றும் குச்சிகளை வைத்து குத்தக் கூடாது. அப்படி குத்துவதால் ஈறுகள் பாதிக்கப்படும். புகையிலை, புகை, போதைபாக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிகக் கடினமான பொருட்களை பற்களைக் கொண்டு கடிக்கவோ, உடைக்கவோ கூடாது.

பற்களைப் பாதுகாக்க அதிகளவு ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உணவுகளையும், நார்ச்சத்து நிறைந்த பழங்களையும் சாப்பிட வேண்டும். பல்வலி, பல்கூச்சம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. பல் துலக்கியவுடன் ஆள்காட்டி விரலைக் கொண்டு பல் மற்றும் ஈறுகளை நன்கு தேய்க்க வேண்டும். பல் துலக்கும் பிரஷ்ஷை அடிக்கடி வெந்நீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரில் கழுவுவது நல்லது.

தவறான பல்துலக்கும் நுட்பம் தரும் பாதிப்புகள் என்ன?

உடலிலேயே மிக மிகக் கடினமானது, கெட்டியானது எதுவென்றால் அது பல்லின் வெளிப்புறமுள்ள எனாமல்தான். இது எலும்பை விட உறுதியானது. தவறான, முறையற்ற வகையில் பல் துலக்கும் பழக்கம் இந்த உறுதியான எனாமலையும் பாதித்து, செயலிழக்கச் செய்து, பற்சிதைவை உருவாக்கிவிடக் கூடும். அத்தோடு ஈறுகளை சிதைத்து, இரத்தம் வழியவிட்டு, புண்ணாக்கி பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எப்பொழுதும் பதமாக, மெதுவாக பல் துலக்கிகளை உபயோகிப்பீர். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பல் துலக்கிகளை மாற்றிவிடுவது அவசியம்.


நன்றி - பரமக்குடி சுமதி.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகிஓடும் பி.பி., சுகர்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | Best Blogger Tips


'காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது' என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம்தானே! இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல்பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகுதான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும். உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக் கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம். இதேபோல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்!

ஒன்று நிச்சயம்... இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே!

உலக தமிழ் மக்கள் இயக்கம்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,
விலகிஓடும் பி.பி., சுகர்!

 'காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது' என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம்தானே! இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல்பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

 காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகுதான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும். உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக் கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம். இதேபோல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்!

ஒன்று நிச்சயம்... இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே!

@[210804085646629:274:உலக தமிழ் மக்கள் இயக்கம்]