ஓட்டின் மகிமை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:07 PM | Best Blogger Tips

 


ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.

ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.

பிறகு பிச்சைக்காரனைப் பார்த்துஎவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு

காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..

எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம்.

யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.

அந்த துறவிஅடப்பாவிகளா! மூணு தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து

அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என பரிதாபமாக கேட்க...

துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமிஎன அலறினான்.

துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...

மெள்ள மெள்ள...

மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!

பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.

ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.

பிச்சைக்காரனின் கையில் அந்தத்

தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!

அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.

இன்றைய நாட்டு மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான் தங்களிடமுள்ள விலைமதிப்பற்ற ஓட்டின் மகிமையறியாது பாழ் செய்து தங்க திரு ஓட்டில் பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்.

*ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. அன்றே நம்நாடும் உலகில் உயர்ந்து விளங்கும்.*

  நன்றி இணையம்