*அலெக்சாண்டர் வைத்த சோதனை..!!*

மணக்கால் அய்யம்பேட்டை | 11:54 AM | Best Blogger Tips

 



மாவீரன் அலெக்சாண்டர் உலகம் முழுவதையும் தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த காலம் அது. நிறைய யுத்தங்கள்... நிறைய படையெடுப்புகள்.. நிறைய சவால்கள்..

பாபிலோனியாவில் ஒரு முக்கியமான போரை தலைமை தாங்கி நடத்திச் சென்ற சமயம்.. கிழக்கு பக்கம் இன்னொரு மன்னன் அவரை எதிர்த்து படையெடுத்து வந்தான். ஆனால் அந்த மன்னனின் படைகள் சிறியது. அதனால் அந்த படைகளை எதிர்த்து தானே போகாமல் தன் தளபதிகளில் ஒருவரை அனுப்பி வைக்க எண்ணினார் அலெக்சாண்டர். படைகளை நடத்திச் செல்ல சரியான தளபதி யார் என மிகவும் யோசித்து பார்த்தார். அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவரின் நான்கு தளபதிகளையும் தங்கள் குதிரையுடன் யூப்ரடீஸ் நதிக்கரைக்கு வரவழைத்தார்.

தங்களை அலெக்சாண்டர் வரவழைத்த காரணம் அவர்களுக்குத் தெரியும். அந்த யூப்ரடீஸ் நதிக்கரையில் காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. தளபதிகள் நிற்கும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இடப்பக்கம் ஒரு கொடி உள்ளது. அதேபோல் வலப்பக்கமும் ஒரு கொடி உள்ளது. இரண்டுமே அலெக்சாண்டரின் கொடிதான். இப்போது தளபதிகளிடம், " அதோ அங்கே தெரியும் கொடிதான் உங்கள் இலக்கு. நீங்கள் இடப்பக்கம் செல்ல விரும்பினால் இடப்பக்கம் செல்லலாம். வலப்பக்கம் செல்ல விரும்பினால் வலப்பக்கம் செல்லலாம். ஆனால் இலக்கை அடைய வேண்டும். இதுதான் போட்டி", என்றார். தளபதிகள் யோசித்து பார்த்தார்கள்.

அந்த இடத்தில் காற்று வேகமாக வீசுவதால் இடப்பக்கம் போனால் நேர்க்காற்றில் சீக்கிரம் இலக்கை அடையலாம். வலப்பக்கம் எதிர்க்காற்று.. இலக்கை அடைவது கடினம்.. அலெக்சாண்டர் அருகில் நின்ற அமைச்சருக்கு அங்கே நடப்பது எதுவும் புரியவில்லை. பந்தயக்கொடி அசைக்கப்பட்டவுடன் தளபதிகள் தங்கள் இலக்கை நோக்கி போகிறார்கள். இடப்பக்கம் இரண்டு பேரும், வலப்பக்கம் இரண்டு பேரும் சென்றார்கள். இடப்பக்கம் செல்பவர்கள் வேகமாக இலக்கை அடைந்தனர். வலப்பக்கம் சென்றவர்கள் பாதிதூரம் போகுறதுக்கே கஷ்டபட்டார்கள். ஆனாலும் இலக்கை அடைந்தனர்.

ஆனால் திரும்பி வரும் போது காற்றின் திசைகள் மாறுகிறது அல்லவா.. நேர்க்காற்றில் சென்றவர்கள் எதிர்க்காற்றிலும், எதிர்க்காற்றில் சென்றவர்கள் நேர்க்காற்றிலும் வர வேண்டும். எனவே நால்வரும் ஒரே நேரத்தில் அலெக்சாண்டரிடம் வந்து சேர்ந்தனர். அலெக்சாண்டர் நான்கு தளபதிகளையும் பார்த்தார். பின் இடப்பக்கம் சென்ற இரண்டு தளபதிகளையும் வீட்டிற்கு போக சொன்னார். அவர்களும் யோசித்து கொண்டே சென்றுவிட்டனர். மீதமிருந்த இருவரையும் தனித்தனியாக அழைத்தார்.

மூன்றாவது தளபதியிடம் "நீ ஏன் வலப்பக்கம் சென்றாய்" எனக் கேட்டார். அதற்கு அவன் "நீங்கள் ஒரு மாவீரர். எளிமையான வழியை எப்போதும் விரும்பமாட்டீர்கள். அதனால் சவாலான வழியைத் தேர்வு செய்தேன்" எனக் கூறினான். அதற்கு அலெக்சாண்டர் சிரித்துக் கொண்டே "போரைப் பொறுத்தவரை சுலபம், கஷ்டம்னு எதுவும் கிடையாது. வெற்றி, தோல்விதான் முக்கியம். உன்னை நம்பி படைகளை அனுப்ப முடியாது. நீ போகலாம்" எனக்கூறி அந்த தளபதியை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

நான்காவது தளபதியை வரவழைத்தார். அவனிடம், "நீயாவது காரணத்தோடு எதிர்க்காற்றில் போனாயா.. இல்லை இவர்களைப் போலத்தானா" எனக் கேட்டார். அதற்கு அவன் கூறிய பதில் மிகவும் சுவாரசியமாக இருந்தது.

"மாவீரர் அலெக்சாண்டர் அவர்களே.. நீங்கள் எதற்காக என்னை அழைத்தீர்கள்.. கிழக்கேயிருந்து வர படைகளை எதிர்த்து போர் புரிய ஒரு தளபதி வேண்டும். என் கணிப்புப்படி அந்த போர் அரியானா பக்கத்திலுள்ள பாலைவனத்தில் நடக்கும். பாலைவனத்தில் அதிகமாக காற்று அடிக்கும். அதில் நிலைத்து நின்று சண்டை போடும் திறன் யாருக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவே இந்த போட்டியை நடத்துனீங்கனு நான் யோசித்தேன். நீங்கள் சொன்ன போட்டி விதிமுறைகளை யோசித்தேன். இலக்கை அடைய வேண்டும் என்று கூறினீர்கள். யார் முதலில் அடைகிறார்களோ அவர்தான் வெற்றியாளர் என கூறவில்லை. எனவே நான் நினைத்தது சரியென உறுதிபடுத்தினேன். எப்படி அலெக்சாண்டர் அவர்களே.. எதிர்க்காற்றில் என்னுடைய குதிரை செலுத்தும் திறனை கவனீத்தீர்களா " எனக் கேட்டான்.

அவனை தட்டிக் கொடுத்த அலெக்சாண்டர் அவன் தலைமையில் படைகளை அனுப்பி வைத்தார். போரில் வெற்றியும் அடைந்தார்.

முதலில் பார்த்த இரண்டு தளபதிகள் மாதிரி நம்மில் பலர் எந்த காரியத்தை எதற்காக செய்கிறோம் என்று தெரியாமலேயே நம் உழைப்பை வீணாக்குகிறோம்.

ஒரு சிலர் அந்த மூன்றாவது தளபதி மாதிரி கடின உழைப்புதான் வெற்றி தரும் என நினைத்து, யோசிக்காமல் கடினமாக உழைக்கிறோம். வெற்றி கிடைக்காமல் கவலைப் படுகிறோம்.

வெகு சிலர் தான் நான்காவது தளபதி போல நாம் எதற்காக போராடுகிறோம். களம் எப்படி. எந்த மாதிரி உழைக்க வேண்டும் என்று யோசித்து செயல்படுகிறார்கள். வெற்றியும் அடைகின்றனர்.

இக்கதையைப் படிக்கும் நீங்களும் உங்கள் களத்தை ஆய்வு செய்து அதற்கேற்ப உழையுங்கள்.. வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்.

 

நன்றி இணையம்