7, 8ஆம் நூற்றாண்டுகள் முதற்கொண்டே பழந்தமிழருக்கு மலாயாவுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மலாயாவில் கடாரம் எனும் பெயரில் நிலப்பரப்பை உருவாக்கி ஆட்சி செய்துள்ள வரலாறு உண்டு.
தொடக்க காலத்தில் வணிகத் தொடர்புகளின் பொருட்டுதான் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்(Kedah) பூசாங் நதிக்கரையில் (Sungai Bujang) குடியிருப்புகளை அமைத்தனர். வந்தவர்கள் சைவர்கள் என்பதால் பூசாங்கில் சிவாலயங்களையும் கட்டினர். அவ்வாலயங்களின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன. அவை தமிழன் வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
படத்தில் காணும் ஆலயங்களின் எச்சங்கள் இன்று படிப்படியாக அழிந்துவருகின்றன. இவை முற்றாக அழிவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு முன்பாக இந்திய அல்லது தமிழக அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை இங்கு வருகை மேற்கொண்டு அகழ்வாய்வு செய்தால் பற்பல உண்மைகள் வெளிவரக்கூடும். நமது வரலாற்றுச் சான்றுகளைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்த இயலும்.
இதில் சிக்கல் என்னவென்றால், தமிழக, இந்திய எல்லைக்குள் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை எல்லாம் அழித்தொழிக்கும் நடுவண் அரசையும் அதற்குத் துணைபோகும் தமிழக அரசையும் நம்புவதும் எதிர்பார்ப்பதும் ஏமாற்றத்திலேயே போய் முடியலாம்.
வரலாற்று நூல்கள், கல்வெட்டுகள், புதைபொருள்கள் ஆகியவை தவிர மலாயா நாட்டின் மக்களுடைய மொழியோடும், பண்பாட்டோடும், பழக்க வழக்கத்தோடும் தமிழரின் அடையாளங்கள் இரண்டறக் கலந்துள்ளன.
குறிப்பாக மலாய்மொழியில் தமிழ்ச்சொற்களும் தமிழ் மூலத்தைக் கொண்ட வடமொழிச் சொற்களும் நிறைய கலந்திருக்கின்றன. காட்டாக, அம்மா(Emak), ஐயா(Ayah), நகரம்(Negara), கடை(Kedai), கப்பல்(Kapal), கட்டில்(Katil), பெட்டி(Peti), கெண்டி(Kendi), அரசன்(இராஜா - Raja), மாணிக்கம்(Manikam), ஆகமம்(Agama), பத்தி(பக்தி - Bakti), மந்திரம் (Mantera) இப்படியான பல்லாயிரம் சொற்கள் இருக்கின்றன.
தமிழர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக மலாயா நாட்டு மக்கள் பெற்றுள்ள பயன்கள் பலவுண்டு. உழவு, பயிர்த்தொழில், ஏர் உழுதல், நீர் பாசனம் செய்தல் ஆகிய தொழில்களைக் கற்றுக்கொண்டனர். வணிக முறைகள், நாணயத்தைப் பயன்படுத்துதல், இரும்பு ஆயுதங்கள் செய்தல், பொன், வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு அணிகலன்கள் உருவாக்குதல், மருத்துவம் ஆகிய கலைகளை அறிந்துகொண்டனர். தமிழரைப் போல பருத்தி, பட்டு ஆகிய ஆடைகளை நெசவு செய்து அணிந்தனர். சமையல் செய்வதில் தமிழரைப் போலவே தானிய வகை, மணப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். தமிழ்க் இசை, நடனம், பாவைக்கூத்து போன்ற கலைகளை தங்கள் கலைகளோடு பிணைத்துக்கொண்டனர். வெற்றிலைப் பாக்கு மாற்றி திருமணம் செய்வது போன்ற திருமண சடங்கில் வெற்றிலைப் பாக்கை ஏற்றுக்கொண்டனர். கையில் மருதாணி வைத்து அழகு பார்த்தனர். பள்ளாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை தங்கள் வயப்படுத்திக்கொண்டனர்.
இரண்டாம் கட்டமாக, 1400களில் மலாக்கா எனும் நகரம் மன்னன் பரமேசுவரனால் மலாயாவில் உருவாக்கப்பட்டது. இவருடைய அரச தலைமுறை 110 ஆண்டுகள் மலாக்காவை ஆட்சி செய்தது. தென்கிழக்கு ஆசியாவில் மலாக்கா தலைசிறந்த வணிக நகரமாக இருந்தபோது மீண்டும் வணிக நோக்கத்திற்காகத் தமிழர்கள் மலாயாவுக்கு வந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் உள்நாட்டு பெண்களை மணந்துகொண்டு இங்கேயே தங்கிவிட்டனர்.
இவர்களின் தலைமுறை இன்று தங்களின் மொழி, இன, சமய, பண்பாட்டு அடையாளங்களைத் தொலைத்துவிட்டு இருக்கின்றனர். உள்நாட்டு மலாய் மொழியின பண்பாட்டோடு ஏற்பட்ட கலப்பின் காரணமாக இப்போது புதிய இனம்போல மாறி இருக்கின்றனர். இவர்கள் ‘மலாக்கா செட்டிகள்’ என்று இன்றைய மலேசியாவில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் தமிழர் பரம்பரையில் வந்தவர்களாக இருந்தாலும் மலேசியத் தமிழர்களிடமிருந்து தனித்தே இருக்கின்றனர். தமிழரே அல்லாதவர் போலாகிவிட்டனர்.
வரலாற்றுக் காலத்தைக் கடந்து மலாயாவை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு பெருவாரியான எண்ணிக்கையில் தென்னிந்தியத் தமிழர்கள் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டனர். இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கும், கரும்புக் காடுகளில் பணியாற்றவும், காடுகளை அழித்து நாடாக்கவும் சஞ்சிக்கூலிகளாக வந்த தமிழர்களை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். (சஞ்சி – மலாய்மொழியில் Janji அதாவது ஒப்பந்தம்)
இரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் பட்ட இன்னல்களும் கொடுமைகளும் அவலங்களும் சொற்களால் விவரிக்க முடியாதவை. காடுகளை அழிக்கும் போது கொடிய விலங்குகளால் தக்கப்பட்டு இறந்தவர்கள், இரப்பர் காடுகளில் நஞ்சுயிரிகளால் தாக்கப்பட்டவர்கள், மலேரியா காய்ச்சல், கொடிய நோய்கள், மருத்துவ வசதியின்மை முதலிய காரணங்களால் மரணத்தை தழுவியவர்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் 12 இலக்கம்(இலட்சம்) தமிழர்கள் மலாயாவில் மாண்டுபோயிருக்கின்றனர்.
இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயரைத் தோற்கடித்து மலாயாவை சப்பானியர் கைப்பற்றியபோது தமிழர்கள் பட்ட துன்பங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. சயாம் தொடர்வண்டி திட்டத்திற்கு (சயாம் ரயில்வே) வேலை செய்ய ஆயிரக்கணக்கில் நம்மவர்கள் இரவோடு இரவாகக் கொண்டுசெல்லப் பட்டுள்ளனர். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றுகூட தெரியாமல் தவித்திருந்தனர் நம் மக்கள். இப்படி தண்டவாளம் அமைக்க சென்றவர்கள் கொத்துக் கொத்தாக மடிந்துபோய் கும்பல் கும்பலாகப் புதைக்கபட்டுள்ளனர்.
இத்தனைக்கும் இடையில் மலாயாவையும், 1957க்குப் பிறகு மலேசியாவையும் ஒரு வளமிக்க நாடாக உருவாக்குவதில் தமிழர்களி பங்கு மிகப்பெரியது என்றால் மிகையல்ல. மலேசியா விவசாய நாடாக இருந்த காலத்தில் அதனுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதிணையாக இருந்த இரப்பர், செம்பனை உற்பத்தி, கரும்பு, கொக்கோ முதலான தோட்டத்துறைகளில் இரத்தம் சிந்தி தமிழ் மக்கள் உழைத்தார்கள்.
இன்றைய நிலையில் மலேசியத் தமிழர்கள்(இந்தியர்கள்) பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர். உயரிய கல்விக் கற்றோராக, தொழிலதிபர்களாக, நிபுணர்களாக, செல்வந்தர்களாக, பெரும் கோடிசுவரர்களாக உருவாகி இருக்கின்றனர். ஏழைகளாக இந்த நாட்டில் குடியேறியவர்கள் இன்று வளமான வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்களுக்கு இடையில் இன்னும் நூறாண்டுகளுக்கு முன்பு மலாயா வந்து தோட்டங்களில் வாழ்ந்த அதே இக்கட்டான சூழலில் வாழ்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். பல்வேறு சமுதாயத்தில் சிக்கல்களிலும் சீர்கேடுகளிலும் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர்.
எது எப்படி இருப்பினும் தமிழர்கள் இன்று நாட்டின் குடியுரிமை பெற்ற இனமாக இந்தியர்கள் என்ற முத்திரையோடு வாழ்த்து வருகின்றனர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற உரிமைகளுக்காக இன்றளவும் போராடி போராடி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இருக்கின்ற உலக நடப்பையும் மலேசிய சூழலையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கையில், அடுத்து வருகின்ற ஐம்பது ஆண்டுகளில் மலேசியத் தமிழர்கள் தங்களின் மரபியல் அடையாளங்களான மொழி, இனம், சமயம், கலை, பண்பாடு, இலக்கியம், வரலாறு, வாழ்வியல் ஆகிய அனைத்தையும் படிப்படியாக இழந்துவிட்டு புதிய மலேசிய சமுதாயமாக உருமாறி போகக்கூடிய நிலைமை வந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
காரணம், மேலே சொன்னதுபோல மலாக்காவில் இதே தமிழ் இனம்தான் கண்முன்னாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது வேறொரு தோற்றத்தில்.. வேறொரு அடையாளத்தில்..!
எழுத்தாக்கம்:- சுப.நற்குணன்