விசிஷ்டாத்வைதம்

மணக்கால் அய்யம்பேட்டை | 7:03 PM | Best Blogger Tips

 
விசிஷ்டாத்வைதம் என்பது வேதாந்தத்தை அடிப்படையாக உடைய மதம். வேதம் என்றும் உள்ளது என்று கருதப்படுவதால் இம்மதமும் என்றும் உள்ளது என்றே கருதப்பட வேண்டும். வேத சுருதிகளே அடிப்படை என்பதால் வேதச் சுருதிகளைப் போல ஆரம்பமில்லாதது இம்மதத்தின் கொள்கைகள்.


ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு வேறு என்பதைப்பற்றி ராமாஷஜர் கூறுவதே விசிஷ்டாத்வைதம்.

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகிநஸ்து புவநம்
ஸத்யம் ததீச : ஸ்ரீய :
காந்தோ ப்ரஹ்ம ஸஏவ ஸோகில-த நீ :
பிந்நாஸ்-தத : சேதநா :
ஸத்யா ஸம்ஸ்ருதி-நிக்ருஹ க்ருதா
முக்கிஸ்து பக்த்யாதிநா
தத-ப்ராப்தி : பரமே பதே ததறு
பூத்யாக்யேதி ஸஞ்சக்ஷதே

தமிழின் உதவி

இது உபய வேதாந்தம் எனப்படுகிறது. ஏனெனில், வேத, வேதாந்த வடமொழி நூல்களிலுள்ள செய்திகள் மட்டும் இதற்கு ஆதாரமில்லை. திராவிட வேதமான ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களும் இதற்கு ஆதாரம். ஆக, இரு மூல வேதாந்தங்களை உடையதாகையால் விசிஷ்டாத்வைதம் உபய வேதாந்தம் எனப்படுவதோடு அதைத் தழுவியவர்கள் உபய வேதாந்திகள் எனப்படுவர்.

என்றும் உள்ள மதம்

ஸ்ரீ ராமனுஜர் வந்து ஏதோ ஒரு புதிய மதம் எதையும் தொடங்கிவிடவில்லை. அவருக்கு முன் பிருந்த போதாயனர், வியாசர், பாருசி, குஹதேவ், டங்கர், திரமிடாசார், ஸ்ரீ பாராங்குசர், ஸ்ரீமந் நாத முனிகள், பிரும்ம நந்தி, ஸ்ரீ ஆளவந்தார் முதலிய மகான்களின் கொள்கைகளையே சேகரித்து, ஒவ்வொரு செய்தியிலும் அவர்களது மொழிகளையே மேற்கோள்களாக்கி மதத்தை நிலைநாட்டியுள்ளார். அதற்காக, தம் கொள்கைகளை விளக்கும் முகமாக பகவத்கீதை, பிரும்ம சூத்திரங்களுக்கு விளக்கமும் பொருளும் எழுதினார். அவையிரண்டிலும் உபநிடதக் கருத்துக்கள் வந்துவிடுவதால் தனியாக உபநிடதங்களுக்கு எழுதவில்லை. ஆனால் தம் கருத்துக்களைத் தொகுத்து பெரிய விளக்கவுரை நூல்களில் எழுதியதையே சாறாக எடுத்து தனி தத்துவ நூல்களைத் தமது தரிசனப் பாதுகாவலாக எழுதி வைத்தார். விசிஷ்டாத்வைத தத்துவங்கள் எல்லாம் திருவெட்டெழுத்து மந்திரம், துவயம், சரமச் செய்யுள் ஆகிய மந்திரப் பொருள்களிலேயே புதைந்துள்ளன. பேத சுருதிகளைப் பொருள் கண்டு துவைத மதம் நிலைநாட்டப்பட்டது. அபேத சுருதிகளைப் பொருள் கண்டு அத்வைதம் உண்டானது. கடக சுருதிகளைக் கொண்டு பேத, அபேத சுருதிகளுக்கும் விரோதமின்றிப் பொருள் கண்டு முழு பிரும்ம சூத்திர விளக்கமாக, பரிபூரண வேத சம்மதமாக ஸ்ரீ ராமானுஜர் தமது தரிசனத்தைக் கண்டார்.

அத்வைதமும், விசிஷ்டாத்வைதமும்


தமக்கு முன்பிருந்த ஸ்ரீ சங்கரரின் அத்வைதத்தில் மனம் சமாதானமடையாத அவர், தமக்கு முன் வைணவ ஆச்சார்ய பீடத்தை அலங்கரித்த ஸ்ரீமத் ஆளவந்தாரின் மனக்குறையைப் போக்கும் வண்ணம் விசிஷ்டாத்வைத மதத்தைக் கண்டார். அதற்காகவே பிரஸ்தானத்திரயத்திற்குப் பொருளும் விளக்கமும் செய்து அருளினார். ஸ்ரீ சங்கரர், சொன்னது அத்வைதம். அதாவது இரண்டற்றது என்று பொருள். மாய்ன்ஸம் என்பர். ஸ்ரீ ராமானுஜர் கண்டது விசிஷ்டாத்வைதம். சிறப்பு உள்ள அத்வைதம். குவாலிஃபைடு மாய்ன்ஸம் ஆகும். பிரும்மம் தனியாக உள்ளது என்றார் சங்கராச்சாரியார். பிருக்ருதி ஜீவனுடன் பிரும்மம் சேர்ந்துள்ளது என்று ஒரு சிறப்பை பிரும்மத்திற்குச் சொல்லி விசிஷ்டாத்வைதம் என்றார் உடையவர். ஞானம் மட்டுமே பிரும்மம் என்றார் சங்கரர். ஞானமுள்ள ஒருவனே பிரும்மம் என்றார் உடையவர். உலகம் மாயை இல்லாதது என்றார் சங்கரர். உலகம் உண்மை-மாயை என்பது பிரக்ருதி என்றார் இவர்! ஜீவனே பிரும்மம்; இருப்பது ஒரே பொருள் சைதன்யமே (கான்சியாஸ் நெஸ்) என்றார், சங்கரர்.

ஜீவன்-பிரும்மம்-பிரக்ருதி ஆகிய மூன்று தத்துவங்கள் தனித்தனியாக உள்ளன. அவை மூன்றுமே உண்மை, அழிவற்றவை, பிரும்மத்துடன் மற்ற இரண்டும் தொடர்பு கொண்டு உள்ளன. இத்தொடர்பு ஒன்பது விதங்களாகும். அதாவது சித்-அசித் தை தன்னைச் சேர்ந்த விசிஷ்டமாகக் கொண்ட பிரும்மமே உண்மை என்றார் இராமானுஜர்.

மோட்சம்
ஸ்ரீமந் நாராயணனே அந்தப்படி உள்ள பிரும்மம், பக்தியும், சரணாகதியுமே அவனைச் சேர்ந்து அடைய வழிகள். பௌதிகத்திற்கு அப்பாற்பட்ட வைகுந்தமாகிய அவனுடைய உலகத்தில் என்றென்றும் அவனுக்குக் குற்றேவல்களைக் (கைங்கர்யம்) செய்து கொண்டு அவனை அனுபவித்துக் கொண்டு ஆனந்தமாக இருப்பதுதான் மோட்சம் முக்தி மேலான நிலை ஆகும். இதையே பரம புருஷார்த்தமாக எல்லா சாத்திரங்களும் கூறுகின்றன. ஸாயுஜ்யம் என்றும் சொல்லுவர். அனுபவிப்பவனுடைய (சப்ஜெக்ட்) தன்மை அடைவதே ஸாயுஜயம் எனப்படும். அப்படிப்பட்ட அனுபவிக்கும் தன்மையை அடைகிறவனை ஸயுக் என்கிறார்கள். மோட்சத்தில் பிரும்மத்துடன் முக்தனாகிய ஜீவனும் ஐக்கிய போக ஆனந்தம் அடைவதால் இருவருமே ஒருவரை ஒருவர் அனுபவிக்கும் ஸயுக் ஆகிறார்கள் என்கிறார் சாகடாயனர். அதாவது பால் தயிராகி விடுவது போல ஜீவன் பிரும்மமாகி விடுவதில்லை. நாயகியும் நாயகனும் ஒன்றுபட்டு (ஐக்கியப்பட்டு) ஒருவரை ஒருவர் அனுபவிப்பது போல, தன்னுணர்வோடு பிரும்மானுபவம் கண்டு ஆனந்தத்தில் பிரும்மத்திற்கு சமமாகும் ஸாம்யமே, ஸமானரஸம் இல்லை எனப்படுகிறது. பகவத்கீதையில் கூட ஸ்ரீ கிருஷ்ணர், மம ஸாதர்ம்ய மா கதா ஹ என்றே கூறினார். எனக்கு ஒத்தவர்களாக எனக்கு சமமான நிலையை அடைந்தார்கள் (தர்மத்தை) என்றுதான் பொருள். நானாகி விட்டனர் என்று கூறவில்லை. எனவே ஸாயுஜ்யம் ஆகிய இறுதி நிலைக்கு கடவுளைப் போல அவருடைய ஆனந்தம் ஞானம் முதலியவற்றில் அவருக்கு சமமாகிச் சேர்ந்திருந்தனர் என்றே பொருள்!

மறுக்கப்பட்ட மதங்கள்

இத்தகைய மோட்சம் சிலருக்கு இல்லை. வேத சம்மதமற்ற அவைதீக மதத்தைச் சேர்ந்தவருக்கு இல்லை. உடலைத் தவிர்த்து ஆத்மா வேறு இருக்கிறதை அறியாதவர்களுக்கு மோட்சம் இல்லை. ஞானம் என்பது ஒவ்வொரு க்ஷணமும் மாறக்கூடியதால் க்ஷணிகம் என்றும் பௌத்தருக்கும் முக்தி இல்லை. வைசேஷிகர் நஞ்சு போன்றதே முக்தி என்பதால் அவர்களுக்கும் இல்லை. ஸாங்க்யத்தில் இறைவனை ஒப்புக் கொள்ளாததால் அவர்களுக்கும் இல்லை முக்தி. யோகத்தில் இறைவனை ஒப்புக் கொண்டிருந்தாலும் மோட்சம் பிரக்ருதிக்கா-புருஷனான ஜீவனுக்கா? என்று சொல்ல முடியாததால் இவர்களுக்கும் இல்லை. அதாவது புருஷன்-ப்ரக்ருதி சேருவதால் பந்தம் என்றும், பிரிவதால் மோட்சம் என்றும் கூறுவது யோகம். அதனால் அந்த இருவரில் யாருக்கு விடுதலை எனச் சொல்ல முடிவதில்லை. அத்வைதத்தில் விவகாரத்தில் மட்டும் உண்மையான வேத வாக்கியத்தால் (தத் த்வமஸி) பரமார்த்திக உண்மையான அபேத ஞானம் உண்டாக வழியில்லை. அதனால் அவர்களுக்கும் மோட்சமில்லை என்று நன்கு வாதப் பிரதிவாதங்களால் தர்க்க ரீதியாக விளக்கிய விசிஷ்டாத்வைத தத்துவமே தலை சிறந்த மோட்ச காரணமாகும் எனப்படுகிறது. இவ்வாறு முக்கியமான மதங்கள் இதில் கண்டனம் செய்யப்படுகின்றன.

வழியும் பயனும்

விசிஷ்டாத்வைதி இப்படி மதானுஷ்டானம் புரிய வேண்டும். தினசரிக் கடன்கள், செய்தாக வேண்டும் என்று விதிக்கப்பட்ட கடன்கள் முதலியவற்றை இறைவனின் கட்டளையாக விடாமல் இயற்ற வேண்டும். அப்போது கர்ம பலன்களில் இச்சை வைக்கக் கூடாது. கடமையாற்றுவதே இன்பமாகச் செய்துவர வேண்டும். இவ்வாறு நாட்களைக் கழிக்கையில் இறைவனுக்கு அபச்சாரம் செய்துவிடக் கூடாது. இறைவனுக்கு அபச்சாரமாவது, மேற்படி கடமைகளில் தவறுவது, ஆன்மீக மற்ற அசுரத்தனமான விலக்கப்பட்ட கருமங்களைச் செய்வது, இறைவனுக்குப் பிரியமற்றதும் விரோதமானதும் ஆகும். அவற்றை விலக்காமல் ஈடுபடுவது இறைவனிடம் அபச்சாரப்படுவதாகும். அடுத்து அதேபோல, இறைவனின் அடியாரிடம் அபச்சாரப்படக்கூடாது. இறைவனுக்கு பிரியமானவற்றைச் செய்து கொண்டு வருபவர், அவனது அடியார்களாவர். அவர்களை மதியாததும், துன்புறுத்துவதும், தடை செய்வதும் அபச்சாரமாகும். இப்படி எவரிடமும் அபச்சாரப்படாமல் ஒழுகுபவன் மரண காலத்தில் உடலை விடும்போது, தன் னுடைய இருதயத்திலுள்ள பரமாத்மாவிடம் ஓய்வு கொள்ளுகிறான். அப்போது அந்த ஜீவனின் பாவங்கள் அவனுக்குத் துன்பம் தந்தவருக்கும், புண்ணியங்கள் அவனுக்கு நலம் செய்தவர்களுக்கும் போய் சேர்ந்து விடுகின்றன. பிறகு முக்திக்குப் போகும் வழியான சூட்சும நாடியில் நுழைந்து, இதயத்திலிருந்து தலையிலிருக்கும் பிரம்ம மந்திரம் சென்று உடலை விட்டு வெளியேறுகிறான். அச்சமயம் விஷ்ணுகிங்கரரான அமானவன் அழைத்துச் செல்ல அர்ச்சிராதி வழியில் (ஒளிமிக்க வழியில்) சென்று பௌதீக உலகிற்கும் அப்ராக்ருத வைகுந்த உலகிற்கும் எல்லை நிலமான விரஜா நதியைக் கடந்து சூட்சும உடலை விட்டுவிடுகிறான்.

பஞ்ச பூதங்களில்லாத அப்ராக்ருத உடலைப் பெறுகிறான். அலங்காரங்களுடன் ஞானம் விரிவடைந்து வைகுண்டத்தில் நுழைகிறான். அங்கே நித்ய சூரிகளான பந்தமே அற்றவரும், முக்தியடைந்தவரும் ஆன ஆன்மாக்கள் புதிதாக வந்த முக்த ஜீவனை வரவேற்கின்றனர். அழகிய அலங்கார மணி ஒளிவீசும் ஆயிரக்கால் மண்டபத்தில் சப்ரமஞ்ச கட்டிலில் சேஷ (நாக) ஆசனத்திலிருக்கும் இறைவன் ஸ்ரீமந் நாராயணனை வணங்கி அனுபவித்து எல்லா இடத்திலும், எல்லா நிலையிலும், எல்லாக் காலத்திலும் ஏற்ற கைங்கர்யங்களைச் செய்து வருவதில் ஆனந்தமுடையவனாக, கடவுளைப் போலவே எட்டு குணங்கள், நான்கு புஜங்கள் உடையவனாக, சிருஷ்டி ஸ்திதி, சம்ஹாரம் என்ற முத்தொழிலைத் தவிர மற்றதில் பகவானுடன் ஜீவனம், ஞானம், ஆனந்தம் இவைகளில் ஒன்றாகி சம்சார சுகதுக்க உலகத்திற்குத் திரும்பியே வராமல் இறைவனைத் தவிர வேறானவனாகவே இருந்தபடி என்றும் நிரந்தர ஆனந்தத்தை அனுபவிப்பான். இந்த முக்தி விசிஷ்டாத்வைதிகளுக்கே!

கடவுள் ஒருவரே
இந்தத் தத்துவத்தில் பரமாத்மா, ஸ்ரீமந் நாராயணனே! அவனைத் தவிர ஏகப்பட்ட ஜீவர்கள் உண்டு. பிரக்ருதி தனியே உள்ளது. ஜீவர்கள் ஞானமுள்ள அனுப்பிரமாணம் (அளவு) உள்ளவர்கள். பிரக்ருதி ஜடம், அறிவில்லாதது. ஜீவர்களுக்கு முன்வினைத் தொகுதி என்ற கருமாக்கள் என்று தொடங்கியது என்பது தெரியாமல் அநாதி காலமாகவே உண்டு. இந்த பிரக்ருதியை அசித் என்பர். ஜீவர்கள் சித் எனப்படுவர். பரமாத்மா ஈஸ்வரன்-இறைவன் எனப்படுவார். இந்த வேறு வேறான தத்துவங்கள் மூன்றிற்குள்ளும் விட்டுப்போகாத தொடர்பு உண்டு. ஜீவர்கள் என்ற சித்தும், பிரக்ருதி என்னும் அசித்தும் பரமாத்வான இறைவனுடன் சரீரமாகத் தொடர்பு கொண்டு உள்ளனர். இதனாலேயே சித்தையும், அசித்தையும் விசிஷ்டமாகக் கொண்ட கடவுளே இருக்கிறார் என்பதே விசிஷ்டாத்வைதமாகும். இப்படித் தான் மட்டும் ஒருவராக இருக்கும் பரமாத்மாவிற்குக் கலியாண குணங்கள் (ஆஸ்பீசியஸ் குவாலிட்டிஸ்) உண்டு.

ஒரே தெய்வ வழிபாடு

கற்புள்ள பெண் தன் கணவனைத் தவிர வேறு யாரையும் அன்பாக நினைத்துப் போற்றமாட்டாள் என்பது போல விசிஷ்டாத்வைதிகள் ஸ்ரீமந்நாராயணனைத் தவிர வேறு தேவதைகளைப் போற்றித் துதிக்க மாட்டார்கள். ஒரே மேலான உலக சுகத்திற்கானவற்றையும், முக்தியையும் தானே நேரடியாக அளிக்கவல்ல பரதேவதையான எல்லாவற்றிற்கும் மேம்பட்ட (சுப்ரீம் டைட்டி) தாள பிரும்மமான ஸ்ரீமந்நாராயணனைத் தவிர வேறெந்தத் தெய்வத்தையும் தொழ மாட்டார்கள். பகவத்கீதை 9ஆம் அத்யாயத்தில் 25ம் செய்யுளில் ஸ்ரீகிருஷ்ணரே கூறுகிறார். தேவர்களை வழிபடுபவர் தேவர்களை அடைவர். முன்னோர்களை (நீத்தாரை) வழிபடுபவர் பித்ரு லோகத்தில் அவர்களை அடைகின்றனர். பூதங்களை வழிபடுபவர் அந்தந்த பூதங்களையே அடைவர். அதே யாகம், பூஜை முதலிய முறையிலேயே என்னை (ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை) வழிபடுபவர் மேலான என்னையே அடைகின்றனர் என்பதாகும். மேலும் அதே அத்யாயத்தில் 23, 24ம் செய்யுளில் எல்லாத் தெய்வங்களுக்கும் அந்தர்யாமி (உள்ளுறைபவன்) யாக இருக்கும் நானே அந்தந்த தெய்வங்களைக் குறித்து செய்யும் வழிபாடுகளுக்கும் அவரவர் கோரிய பயனை அளிப்பதும் இதை உணர்ந்து அப்படி வழிபடாததால் அற்ப பலனைத் தவிர என்னையே வழிபடுவதற்கான முக்கிய உயர்ந்த பலனை இழந்து விடுகின்றனர் என்கிறார். மோட்சத்திற்காகவே உண்டாக்கப்பட்ட மதம் ஆதலால் மற்ற பலன்களை வேண்டி விசிஷ்டாத்வைதிகள் குட்டித் தெய்வங்களைத் தொழுவதில்லை. அந்தந்த தேவதைகள் மூலமாகவும் அவரே அந்த பலன்களையும் அளிப்பவராகையால் அவற்றை நேரிடையாக அவரிடமே பெற்றுக் கொள்ளலாமே என்றும் தொழுகிறார்கள். ஒரு மந்திரம், ஒரு குரு, ஒரு தெய்வம் என்று இருப்பவர்களுக்கு மனஒருமை விரைவில் வாய்க்கும். காரிய சித்திப்பதும் எளிது. இதைப் புரிந்து கொள்ளாமல் விசிஷ்டாத்வைதிகளுக்குப் பிற தெய்வங்களைப் பிடிக்காது; சண்டை என நினைக்கலாகாது. மறந்தும் புறந்தொழாள் என்கிற தமிழ்ப் பண்பாடு இது.

பரமாத்மாவின் ஐந்து நிலைகள்

இப்படிப்பட்ட மேலான பரமாத்மா ஐந்து நிலைகளில் இருக்கிறார். இது பஞ்சராத்ர கருத்து. இதுவும் வேதமே. இறைவனை ஐந்து இரவுகளில் தம்மை வழிபடும் வழியையும், தனது நிலைகளையும் ரிஷிகளுக்கு உபதேசித்ததே பஞ்சராத்ரம் ஆகும். இது ஆகமமும் ஆகும். பரமாத்மாவின் ஐந்து நிலைகள் 1. பரம் 2. வியூஹம் 3. விபவம் 4. அந்தர்யாமி 5. அர்ச்சை எனப்படும்.

1. பரம் : அகராக்ருதமான (பௌதீகத்திற்கு அப்பாற்பட்ட) முக்காலமும் ஒரு காலமாக இருக்கும் ஸ்ரீ வகுந்த உலகில் ஸ்ரீமந்நாராயணனின் திருக்கோலம். பூமிதேவி, நீளாதேவி உடன் அழகிய மணி மண்டபத்தில் வீற்றிருப்பது. புனிதமான சங்கு, சக்ர, கதை முதலிய ஆயுதங்களுடனும், விதவிதமாகிய நகை அலங்காரங்களுடனும் இருத்தல், அப்போது ஸ்ரீ கருடர், அநந்தர் (ஆதிசேஷன்) விஸ்வ÷க்ஷனர் போன்ற சம்சாரத்திலேயே சிக்காத நித்யசூரிகள் எனப்படுவோரால் எப்போதும் ஸாமகானங்களால் போற்றப்படும், முக்தி அடைந்து வந்த ஆத்மாக்களால் கைங்கர்யங்களால் அனுபவிக்கப்பட்டும் உள்ள திவ்ய மங்கல வடிவம் சுத்த சத்துவமான ஞான வடிவம். இதையே பரப்பிரும்மம், வாசுதேவர் என்று சொல்வது.

2. வியூஹம் : உலகத்தைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும், தியானிக்கப்படவும் பூஜை செய்யப்படவும் நான்கு வடிவில் இருப்பது. 1) வாசுதேவன், 2) பிரத்யும்நன் 3) அநிருத்தன் 4) சங்கர்ஷணன் ஆகியவை ஆகும். பிரும்மா, விஷ்ணு, மகேஷ்வரன் போல வாசுதேவரே ஸ்ரீமந்நாராயணர் ஆகும். பாஞ்சராத்யதிகரணத்தினால் ஜீவோத்பத்தி செய்தியைத் தவிர ஸ்ரீசங்கராச்சாரியாரும் எதையும் கண்டிக்கவில்லை என்பர்.

3. விபவம் : இது பரமாத்மா எடுத்த அவதார வடிவங்களைக் குறிக்கும். ஆமை வடிவில் கூர்மமாகவும், மீன் வடிவில் மச்சமாகவும், வராகமாகவும், நரசிம்ம வடிவிலும், ராமர் கிருஷ்ணர் என்றும் அந்தந்த உடலிலும், அலங்காரத்திலும் <<உலகில் அவதரிப்பது. இதைப் பற்றிக் கண்ணனே கீதையில் கூறியுள்ளார். தருமத்தைக் காப்பாற்றி, சாதுக்களுக்கு அருளவும், துன்மார்க்கரைத் தண்டிக்கவும் அவதாரங்கள் எடுக்கப்படுகின்றன.

4. அந்தர்யாமி : எல்லா உயிர்களுக்கும் உள்ளே உறைபவராக இருத்தல், அதாவது ஜீவாத்மாவிற்கும் உள்ளே பரமாத்மா உடலுள் உயிர்போல இருத்தல், இதயத்தில் வாழும் வடிவம், ஜீவனின் குற்றங்குறையால் பாதிக்கப்படாதவன்.

5. அர்ச்சாரூபம் : பலப்பல விக்ரஹங்களாக நாம் கோயில்களில் தொழும் உருவங்கள் கல்லில், பொன்னில், செம்பில், ஐம்பொன்னில் என்று கடவுளுக்குச் செய்யப்பட்ட அடையாள மூர்த்தங்களில் இருப்பது. இந்த தத்துவத்தில் தான் கோயிலில் உள்ள வணங்கப்படும் சில வடிவங்களில் முழுமையாக உண்மையான கடவுள் வாசம் செய்கிறார் என்பது பொருந்தும். பரவாசுதேவருக்குச் சமமான கடவுளின் முழுமை குடியிருப்பது அர்ச்சாவதாரத்தில் தான். பக்தர்களுக்கு அருள என்று அவர்களால் அமைக்கப்பெறும் சில மூர்த்தங்களில் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அதே மூர்த்தங்களின் வடிவில், அமைப்பில் பௌதீகத்திற்கு அப்பாற்பட்டதான திருமேனியை மேற்கொண்டு, காலம் இடம் இவற்றை மீறி இருந்தபடி உள்ள நிலை. அர்ச்சகர்களால் குளியல், உணவு, படுக்கை, ஊர்வலம் முதலியவற்றுடன் மக்களிடையே ஊருக்குள் கோவில்களில் வாழ்பவர். பக்தருக்கு விருப்பப்பட்ட பொருளால் வடிவம் பெறுபவர்.

பரமாத்மா

இவ்வாறு எல்லாவற்றுக்கும் இறைவனாய், எல்லாம் உடையவனாய், அனைத்திற்கும் அதிபதியாய் இருக்கிறான். காலத்தினால் கணக்கிட முடியாதவனாக, எப்பொருளாலும் அளக்கப்படாதவனாக, தானே அளவிற்குட்படாதவனாகவும் இறைவன் இருக்கிறான். எல்லாச் செயல்களாலும் அவனே துதிக்கப்படுபவனாகவும் உள்ளான். எல்லாப் பயன்களையும் தருபவனாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் ஆதாரம் அவனே. எல்லாம் செய்விப்பவனும் அவனே. எல்லா ஒலிகளாலும் குறிப்பிடப்படுபவன் எல்லா ஒலிகளுக்கும் பொருளானவன் அவனே. எங்கும் எப்போதும் உள்ள ஞானமுடையவனாக இருப்பவன், நினைத்தவுடனேயே எல்லாம் முடிக்கும் திறமையுடன் உள்ளவன். சித் எனும் ஜீவனையும், அசித் எனும் பிரக்ருதியையும் தனது உடைமையாக வைத்திருப்பவனாக உலகத்திற்குத் தானே காரணமாக இருக்கிறான். உபாதான (பானை உருவாக மண் உதவியாவது போல) காரணமாகவும் இருக்கிறான். படைக்க வேண்டும் என்று நினைப்பதால் நிமித்த (பானை உருவாக குயவனைப் போலவும்) காரணமுமாகிறான். காலம் ஜீவர்களுக்கு எல்லாம் உள்ளுறைபவனாக (அந்தர்யாமி) இருப்பதால் துணையாகியும் காரணமாகிறான். (பானை செய்ய கோல், நீர் முதலியவை துணைப்பொருள் ஆவது போல) இவ்வாறான பரமாத்மா கல்யாண குணங்கள் பல உள்ளவன். எந்நிலையிலும் லக்ஷ்மி பிராட்டியுடன் கூடியுள்ளவன். காரணமே இல்லாத சிறப்புக்களைக் கொண்டவன். இவனையே பரப்பிரும்மம், பரமாத்மா என்றும் கூறுவர். இவ்வாறு பல சிறப்புகளை வேதமும் வேதாந்தமும், சாத்திரங்களும், சான்றோரும் தருவது சாட்சாத் ஸ்ரீமந் நாராயணருக்கே! இவரே படைப்பு, காத்தல், அழித்தலை செய்பவர்.

பிரம்மாண்டத்தைப் படைத்து நான்முகன், தக்ஷப்ரஜாபதி, காலம் இவர்களிலும் உள்ளே அந்தர்யாமியாகிப் பிற படைப்புகளையும் செய்பவர். அவரே விஷ்ணுவாகவும் அவதரித்தும், மனு, லோக பாலகர்கள் ஆகி உலகை அளித்துக் காக்கிறார். மன்னர், தாய், தந்தை, காலம் ஆகியவர்களில் அந்தர்யாமியாக இருந்து உயிர்களை ஆதரிக்கிறார். மன்னன் மக்களைக் காப்பதும், தாய் தனது தாய்மையினால் சுமந்து பெற்று பாலூட்டி குடும்பத்தைப் பேணுவதும் இறைவன் அவளுள் இருந்து அங்ஙனம் இயக்குவதாலேயே! தந்தை தன் கடமையைச் செய்வதும் அதனாலேயே காலம் வளர்க்கிறது. தேய்மானத்தைச் சரிக்கட்டி நோயைப் போக்குகின்றது. பரிமாண வளர்ச்சியைத் தருகின்றது. இதெல்லாம் விஷ்ணு காக்கும் தன் லீலையைச் செய்வதுவே! அதேபோல ருத்ரன் அரனுக்குள்ளேயும் காலத்திலும் புகுந்து அந்தர்யாமியாக இருவரையும் அழிக்க வைக்கிறார். இப்படி அனைத்துத் தொழில்களும் செய்பவர் ஸ்ரீமந் நாராயணரே! அதனால் அவர்தான் அத்வைதம் எனப்படும் தத்வம்.

விசிஷ்டபிரும்மம்


சித்தும், அசித்தும் பிரும்மத்திற்கு விசேஷணங்கள் ஆகும் அதாவது தன்மை குணங்கள் போல! ஒரு பொருளுக்குத் தன்மை என்பது அதாவது கண்ணால் காணமுடியாத குணங்கள் விசேஷணம் சிறப்பு எனப்படலாம். வடிவமுள்ளவையான சித்தும், அசித்தும் அப்படிச் சிறப்புத் தன்மை ஆகிவிட முடியுமா? முடியும். பால் வெள்ளையாக இருக்கும். இந்த வெள்ளை நிறம் அதற்கு தன்மை குணம் ஆகிறது. விட்டுப் பிரிக்க முடியாதது ஒரு பொருளின் தன்மை ஆகிறது! யானை கருப்பாக உள்ளது. கருப்பு வண்ணம் யானையை விட்டுப் பிரியாதது. அதே போல பிரும்மத்தை விட்டு சேதனனான சித்தை, அசேதனமாகிய அசித்தைப் பிரிக்கவே முடியாது. மானசீகமாகத்தான் பிரிக்க முடியும். அதனால் ஒன்றிற்கு விசேஷணமானது திரவியமாகவும் (சப்ஸ்டேனக்) இருக்க முடியும். எனவே சித், அசித், பிரிக்க முடியாத விசேஷணமாக, உள்ள விசிஷ்ட பிரும்மமே உண்மையானது.

சகுண பிரும்மமே!

பிரும்மத்திற்கு உள்ள ஞானம், செல்வம், பலம், ஒளி, கருணை, வீர்யம் முதலிய உயர்ந்த கலியாண குணங்களையும் பிரித்தெடுக்க வழியில்லை. ஆகவே அது சகுணப் பிரும்மமே! ஸ்ரீ சங்கரர் பிரும்மம் நிர்குணம் என்றிருக்கிறார். பல வேதச் சுருதி வரிகள், பிரும்மம் நிர்குணம்-மற்றது என்ற பொருள். கொள்ளும்படி உள்ளன என்கிறார்கள் அத்வைதிகள். ஆனால் அது அப்படி இல்லை. ஸத்யம் ஞானமனந்தம், பிரும்மம் என்கிறது சுருதி. பிரும்மம் ஞான வடிவமானது, ஞானத்தாலே நிரூபிக்கத் தக்கது என்கிற சுருதிகளும் உள்ளன. இதனாலே எல்லாம் பிரும்மம் ஞான மாத்ரமே ஆனது என நிரூபிக்க முடியாது. அறிகிறவனுக்கு அறிவே தன் வடிவம் ஆகும். ஞான வடிவில் உள்ள பிரும்மமே ஞானத்தை உடையதாக உள்ளது என்று சொல்வதே பொருத்தம். சூரியன் ஒளிமயமாக, ஒளி வடிவினனாக உள்ளான். அதே சமயத்தில், ஒளியை உடையவனாக சூரியன் இருக்கிறான். அந்த விதத்தில் பிரும்மம் ஞானமுள்ளதாக இருக்கிற ஒன்று எனலாம். அறிகிறவன் என்று பிரும்மத்தை அதன் அறிகிற தன்மையால் (ஞாத்ருவத்தை) கூறலாம். சுருதிகளும் அப்படியே சொல்கின்றன.

சர்வக்ஞன் என்று எல்லாம் அறிந்தவன் என்ற பொருளிலும், பிரும்மம் சொல்லப்படுகிறது. பிரும்மத்தை அளிக்கிறவன் என்றும், ஆளுகிறவன் என்றும் சுருதி கூறுகின்றது. ஆகவே ஞானத்தை உடைய, அறிவைக் கருவியாகக் கொண்டு அறியும் ஒருவனே பிரும்மம் எனத் தீர்மானிக்கப்படுகிறது. இந்த பிரும்மத்திற்கு ஏகப்பட்ட மேலான விந்தைமிகு சக்திகள் உள்ளன. ரஜோ, தமோ குணங்களற்றது என்றும், முதுமை, மரணம், பாவம், துன்பம், தாகம், பசி, போஹம் போன்ற தீய குணங்கள் இல்லாதது என்றும் குறிப்பிடவே பிரும்மம் நிர்குணம் என்று கூறும் சுருதிகள் உள்ளன. ஸத்ய காமத்வம்-ஸத்ய சங்கல்பம் போன்ற நற்குணங்களை உடையவன் பிரும்மம் என்றும் சுருதி வாக்கியங்கள் சொல்லுகின்றன. அதை வைத்துச் சிந்தித்தால், நிர்குண சுருதிகள் பிரும்மம் குணங்களற்றது என்று சொல்லி கெட்ட குணங்களற்றதே பிரும்மம் என்கின்றது எனப்புரியும். அதே சமயம் சின்ன சின்ன நல்ல குணங்கள் உள்ளன என்று காட்டி மங்களமான குணங்களை உடையதே பிரும்மம் என்று உறுதியாக முழங்குகின்றன என்றும் அறியலாம். ஆகவே சித், அசித்துடன் மங்கலமான கல்யாண குணங்களையும் விசேஷணமாக உடைய ஒரே விசிஷ்ட பிரும்மமே தத்துவம். இதுவே விசிஷ்டாத்வைத வேதாந்த உண்மை! இதுவே, விசிஷ்டாத்வைதப் பொருள்! அசித்! என்ற அசேதனத்தில் பிரக்ருதி, காலம், சுத்த சத்துவம் என்ற மூன்றும் உள்ளன. சித் என்ற சேதனரில் நித்யசூரிகள், முக்தாத்மாக்கள், பந்தாத்மாக்கள் என மூவகையினருள்ளனர்.

ஸ்ரீ பாஷ்யம்

இந்த மூன்று மூன்று வகையினரான அசேதனம், சேதனம் ஆகியவற்றின் தன் வடிவம், இருப்பு, நடவடிக்கை என்ற மூன்று சமாச்சாரங்களையும் உடையவன் பிரும்மம் என்பது பாஷ்யக்காரர் எனப் புகழ்பெற்ற ஸ்ரீ ராமானுஜரின் அருள்வாக்கு. ஸ்ரீ ராமானுஜர் பிரும்ம சூத்திரத்திற்குப் பாஷ்யம் (விளக்கவுரை) இயற்றினார். அதன் சிறப்பை எண்ணி பாஷ்யக்காரர் என்றாலேயே ஸ்ரீ ராமானுஜர் என்ற அர்த்தம் உண்டானது. அவரின் விளக்கவுரைக்கும் ஸ்ரீபாஷ்யம் எனப்பெயரும் புகழும் கிட்டியது. இதில் காலம் என்றுமுள்ளது (எடெர்னல்) என விளக்கப்பட்டுள்ளது. சுத்த சத்துவம் என்பது பௌதிகத்திற்கு அப்பாற்பட்டது. அதுவே பரமபதம்-ஸ்ரீவைகுந்தம் ஆகும். அதாவது அப்ராக்ருத உலகம் எனப்படும். இதையே தமிழில் தெளிவிசும்பு என்பர்.

ஜீவன் : உடல் சித் எனப்படும் ஆத்மாவல்ல. நாத்திகராகிய சாருவாகர்கள் இங்கே மறுக்கப்படுகின்றனர். ஜைனர் கூறுவது போல ஆத்மா ஒரு சரீரத்தின் அளவே உள்ளது இல்லை. அதாவது, யானை உடலில் யானை அளவும் எறும்பின் உடலில் எறும்பின் அளவும் உள்ளதாக ஆத்மா இல்லை. உதாரணமாக எறும்பாக இருந்த ஆன்மா கர்ம பலனால் ஒரு யானையின் உடலெடுத்தால் எறும்பு அளவு போக மீதி யானை உடலில் ஆன்மா இல்லாத இடம் மீறும். யானை அளவுள்ள ஆன்மா கரும பலனால் எறும்பின் உடலில் வரவேண்டி இருந்தால் உள்ளே நுழைய முடியாது. அதனால், உடல் அளவே ஆன்மா என்ற கருத்து முரணானது. பாஸ்கர மதம் கூறுவது போல ஜீவன் பிரும்மத்தின் கண்டம் அல்ல. யாதவப் பிரகாசர் சொல்வது போல ஜீவன் பிரும்மத்தின் அம்சமுமில்லை. ஜீவனே பிரும்மம், மாயையினால் ஜீவனாக மயங்கி எண்ணிக் கொண்டுள்ளான் என்று கூறும் சங்கரரின் அத்வைதப்படியும் ஜீவன் இல்லை. ஜீவன் பிரும்மத்தை விட்டு வேறானவன். ஞானமுள்ளவன். அளவில் அணுவானவன். ஒரு தலைமுடியின் நுனியில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு அளவானவன்.

நித்யோ நித்யானாம் சேதன ஸ்வேதனானாம் ஏகோ பஹுனாம்
என்றும் உள்ள பல ஜீவர்களுக்குள் ஒரு ஜீவன் என்றும்
விஞ்ஞானம் யஞ்ஞம் தனுதே

ஜீவனானவன் வேள்வியைச் செய்கிறான் என்றும் சுருதிகள் கூறுவதால் ஜீவன் ஒன்றல்ல, பலருள்ளனர். அதுவும் அணு அளவானவர் என்றும் ஏற்படும். கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனா, நீ, நான் இவர்கள் எல்லாம் (பீஷ்மர், துரோணர், துரியோதனர்களைக் காட்டி) என்று பன்மையில் பிரித்துப் பேசுவதே ஜீவர் பலர் என்ற கொள்கையை உண்மையாக்கும். உன் அறிவு மயக்கப்படத்தக்கது. என் அறிவு மயக்கமில்லாதது. இவர்களை எல்லாம் நீ விட்டு விட்டாலும் அவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று கண்ணன் கீதையில் கூறுவதையும் கவனிக்க வேண்டும். ஆனாலும் பல இடங்களில் சுருதிகளும் ஜீவர்கள் பன்மையாக இருந்தாலும் ஒருமையிலேயே குறிப்பிடுகின்றன. காரணம் ஜீவன்களுக்கிடையே உள்ள பொது இயற்கை (ஜெனரிக் நேச்சர்) ஒன்றாக இருப்பது தான். ஒரு ஜீவனைப் போலவே இன்னொரு ஜீவனும் ஞானவடிவில் ஒன்றாக இருக்கிறது. ஓர் அரிசியைப் போலவே இன்னொரு அரிசியும் இருப்பதால் இங்கே ஒரு மூட்டை அரிசி உள்ளது என்றே பொதுவாக ஒருமையில் குறிப்பிடுகிறோம். அதே போலவே ஒரு வண்டி நிறைய பல அரிசி மூட்டைகள் வந்திறங்கினாலும், அரிசி வந்துவிட்டது என்று ஒருமையிலேயே சொல்லுகிறோம். காரணம் இரண்டு அல்லது பல அரிசிகளுக்கு இடையில் வேற்றுமை இல்லை. அதனாலேயே அரிசிகள் வந்து விட்டன என்றோ லட்சக்கணக்கான கோடிக்கணக்கான அரிசிகள் மூட்டையில் இருக்கின்றன என்றோ கூறுவதில்லை. அரிசி என்றே ஏகாரத்தில் குறித்துப் பேசுகிறோம். அதே போலவே சுருதிகளும், சில இடங்களில் ஜீவனை ஒருமையில் பேசுகின்றன. எந்த ஒன்றினால் இந்த உலகில் விவகாரம் நடக்கிறதோ, அது அழிவற்றது என்று ஜீவனை ஒருமையில் குறித்து அவற்றின் அழிவற்ற தன்மையைக் கூறுகின்றன.

ஜீவன் அழிவற்றவன். உண்மையாக இருப்பவன். பன்மையிலுள்ளவன். தனித்தனியானவர்கள் என்றெல்லாம் தீர்மானமாகியது. மூவகையினராவர் ஜீவர் என்றும் கண்டோம். ஈரேழு பதினான்கு அண்டங்களுள் அவரவர் கர்ம வினைப்படி நான்முகன் முதல் சிற்றுயிர் செடி கொடி வரையிலான ஜீவர்களாகிய அனைவருமே பக்தர் எனப்படும் பந்தத்திலுள்ளவரே. வேத விதிப்படி விடுதலை அடைந்தவரே முக்தர்கள். என்றென்றும் பந்தப்படாதவர்கள் தாம் நித்யசூரிகள் ஆவர். இறைவனைப் போல ஞானத்தால் பரவி உள்ள இந்த ஜீவன் என்றும் தனக்குள்ள கர்மவினையால் தனது ஞானம் சுருக்கமடைந்த நிலையில் சக்தி குறைந்த பக்தர்கள் ஆகின்றான். கர்ம நீக்கம் உண்டானதும் சுருங்கிய ஞானம் பழையபடி விரிவடைவதால் முக்தனாகிறான். ஞானம் சுருங்காமல் கருமத் தளையில் சிக்காமலேயே இருப்பதால் நித்யர்களாகிய நிலையிலேயே இருக்கிறான்!

அசித் எனும் பிரக்ருதி

ஜடப்பொருள் இது, தன்னை உணரும் ஞானமில்லாததால் ஜடம் எனப்படுகிறது. ஏற்கனவே பார்த்தபடி மூன்றுவிதமாக உள்ளது. முக்குணங்களாக, முக்காலங்களாக ஸத்துவம், மிச்ர ஸத்துவம், தமஸ் என்று மூவிதங்களாக உள்ளது. இது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. ஆனால் அழிவற்றது. உண்மையாக உள்ளது. இறைவனைக் காணவிடாமல் மறைத்து, தன்னை அனுபவிக்கும்படி ஜீவனைத் தூண்டி வருவது. இதன் மறுபெயர் மாயை. ஆனால் பொய் என்று பொருளில்லை. குணமயி மம மாயா துரத்யயா என்று கீதையில் கண்ணன், முக்குணமயமான என்னுடைய மாயை கடத்தற்கரியது என்கிறார். மாயா என்பதற்கு அத்வைதிகள் சொல்லும் பொருள் இல்லை.

மாயா என்றால் கடவுளின் ஆச்சரியமான சக்தி என்றே பொருள். உண்மையான கடவுளின் சக்தி மட்டும் பொய்யாகி (மித்யை) விடுமா? உண்மையான நெருப்பிற்குப் பொய்யான புகை எங்காவது உண்டா? மாயை என்றால் ஒருவிதமான பொருளை இன்னொரு விதமாக மாற்றிவிடும் சக்தி. பால் பாக்டிரியாக்களினால் தயிராவது போல்! இந்திரஜால வித்தை என்பது, ஒருவிதமாக இருக்கும் பொருளை இன்னொரு விதமாகக் காட்டுவது. இங்கு உண்மையில் உள்ள பொருள் மாறிவிடுவது இல்லை! இந்த இரண்டு விதங்களிலும் பிரக்ருதி உலகங்கள் உண்டாகக் கருவியாக இருந்து விசித்திரங்களைச் செய்கிறது. இதனால் இதற்கு மாயை என்று பெயர். பொய் என்பதால் அல்ல இறைவனுக்கு இந்த மாயை அடங்கி அவனால் ஆளப்படும் பொருளாக இருப்பதால் மாயையே சொத்தாக உடையவன் என்ற பொருளில் இறைவன் மாயாவி எனப்படுகிறான். இறைவன் பொய்யானவன் என்பதால் அல்ல. கீதையில் மாயையை என்னுடைய வசப்படுத்திக் கொண்டு உலகில் நான் அவதரிக்கிறேன் என்று 4வது அத்யாய, ஆறாவது செய்யுளில் கண்ணன் கூறுகிறார். கடவுள் உண்மையானவர். மாயைக்கு வசப்படாமல் அதைத் தனக்கு வசப்படுத்திக் கொண்டு அவதரிக்கிறார். எங்கே, எனில் உலகில். அப்போது அந்த அவதாரமும், உலகமும் உண்மையாக, நிகழுவதாக இருப்பதாகத் தானே ஆகும்! பொய்யை வசப்படுத்திக் கொண்டு பொய்யாக, பொய்யில் அவதாரம் செய்தார் என்றால் பொருந்துமா? தேவை என்ன? ஆகவே உலகம் பொய்யில்லை. கடவுளைப் போல இதுவும் உண்மையானதே. அதனாலேயே மக்களைத் திருத்த, காக்க தரும வழியை உபதேசித்து நிலைக்கச் செய்ய உலகில் அவதாரம் செய்ய வேண்டிய தேவை கடவுளுக்கு உள்ளது. அதுவும் இந்த கடவுளின் விந்தை சக்தியான மாயையால் ஜீவனுக்கே பாதிப்பு சொல்லப்பட்டுள்ளது. ஆகவே பஞ்சபூதங்கள், முக்குணங்கள், காலம் ஆகிய பிரக்ருதியான மாயை உள்ள பொருளே:

பிரபஞ்சப் பொருள்கள் எல்லாம் மாறிக்கொண்டே உள்ளன என்பதால் பொய் எனலாகாது. நிரந்தரமற்ற தற்காலிகம் எனலாம். இவ்வாறு மாறி இறுதியில் பஞ்சபூதங்களும் பிரக்ருதியான மூலப்பொருளின் நிலையையே எட்டுகிறது. அது, பிரபஞ்சத்தின் சூட்சும கதி. அது ஒரு போதும் இல்லாமல் மறைந்து, அழிந்து போய் விடுவதில்லை. காலமும் அப்படியே இயங்காமல் ஒரே காலமாக நின்றுவிடுமே தவிர இல்லாமற் போவதில்லை.

விசிஷ்டாத்வைத வாதம்

கயிறு மாத்திரம் தான் உள்ளது. அது பாம்பாகத் தெரிகிறது. இதேபோல பிரும்மம் மட்டுமே இரண்டாவது அற்றதாக உள்ளபோது அது உலகாகத் தோன்றுகிறது என்பது அத்வைத விளக்கம்.

1. அப்படி பாம்பாக கயிறு தோன்றுவது யாருக்கு? பிரும்மத்தைத் தவிர இரண்டாவதாக யாராவது இருந்தால் தானே அது சாத்தியமாகும். அப்படி இரண்டாவதாக இருப்பவன் தான் ஜீவன் என்பது விசிஷ்டாத்வைதக் கொள்கை.

2. பாம்பிடம் உள்ள நஞ்சு பாம்பை விட்டுத் தனியாக இல்லாமலும், அதைப்பாதிக்காமலும் உள்ளது போல மாயை பிரும்மத்துடனேயே அந்த பிரும்மத்தைப் பாதிக்காமல் உள்ளது என்பது அத்வைத விளக்கம். அப்படியானால் மாயை பாதிப்பது யாரை? அது ஜீவனைத் தானே. அவன் பிரும்மத்தை விட்டு வேறொருவனாகத் தானே இருந்தாக வேண்டும். அந்த மாயை பிரும்மத்தையே பாதிக்கிறது எனில் மோட்சம் எவ்வாறு உண்டாக முடியும்? அந்த பிரும்மம் அப்படியே பிராந்தி ஞானத்துடனிருக்க வேண்டியதுதான்! என்பது விசிஷ்ட அத்வைத வாதம். ஆகவே பிரும்மத்தைத் தவிர்த்து ஜீவன் உண்டு.

3. ஆத்மாக்கள் மூன்று வகை என்கிறது வேதம். நித்யசூரி, முக்தர், பக்தர் என்ற ஒரே ஆத்மாவே எங்கும் பரந்ததாக அதைத் தவிர வேறொன்றும், குணம், குறி இல்லாததாகவுமிருப்பதனால் இது எப்படி பொருந்தும்? ஒரு ஓரத்தில் நித்யசூரியாகவும், நடுவில் முக்தராகவும், கடைசியில் பக்தராகவும் ஒரே நேரத்தில் இருக்கமுடியுமா? இது இயலாது. ஆகவே ஆன்மாக்கள் பலருண்டு.

4. பாலைவனத்தில் தோன்றும் கானல் நீர்க் காட்சியில் போல உலகத்தோற்றம் பொய் என்கின்றனர். இது தவறு. அந்த கானல் நீரிலும் நீர் இருப்பது உண்மையே. பிரபஞ்சம் முழுவதும் ஐம்பூதக் கலப்பால் உண்டாகி உள்ளது. எனவே எங்கும் எல்லாம் பூதங்களும் கலந்தே உள்ளன. ஆகவே பாலைவனத்திலும் நீர் உள்ளது அந்த அம்சத்தை மட்டும் தொலைவிலிருந்து நமது கண்கள் பார்த்தறிவதே கானல் நீரின் காட்சி உண்டாதல், அதில் அருகில் சென்றால், அள்ளிக் குடிக்கும்படித் தண்ணீர் இல்லையே தவிர, கண்ணால் காண முடியாவிடினும் நீர் அம்சம் உண்டு. ஆகவே உண்மையே!

5. அதேபோலவே சிப்பியில் வெள்ளி காணலும், சிப்பியிலும், வெள்ளியிலும் கலந்திருக்கும் அம்சப் பொருள்கள் ஒன்றேதான். விகிதாச்சாரமே வேறு. அசப்பிலோ, தொலைவிலிருந்து காணும்போதோ அந்த இரண்டிலுமுள்ள குறிப்பிட்ட ஒரே அம்சமே பார்த்தறிப்படுவதாலேயே சிப்பி வெள்ளியாகக் காணப்படுகிறது. சிறிது அருகில் சென்று கவனித்துப் பார்க்கையில் மற்ற வேறுபாட்டு அம்சங்களும் உணரப்படுவதால் வேறு வேறு பொருள்களாய் தெளியப்படுகிறது. இங்கும் வெள்ளியே காணப்படுதால் காட்சி உண்மையே!

6. இப்படி இரண்டிலும் ஒரே அம்சப் பொருள் உள்ளவற்றில் தான் ஒன்று இன்னொன்றாய்க் காணப்படுகின்றது. கயிறுக்கும், பாம்பிற்கும் ஒற்றுமையாக உள்ள நீண்ட, மெல்லிய, வளைவுகள் என்ற பொதுவான இலட்சணங்களே கயிறைப் பாம்பாகக் கருதச் செய்கின்றன. ஒரு கல்லோ, கட்டிடமோ பாம்பாகத் தெரியாது. மண் ஓடு வெள்ளியாகக் காணப்படாது. ஒன்றை இன்னொன்றாகக் காண்கையிலும் இரண்டிலும் உள்ள அந்த உண்மையான அம்சமே காணப்படுவதால் பிரத்யட்சமான அறிவிலும் பொய் எனப்படும் இல்லாத ஒன்று அறியப்படுவதில்லை. கயிறு, பாம்பு, சிப்பி, வெள்ளி ஆகிய இரண்டிரண்டு ஒரே தன்மையுள்ள பொருள்கள் உண்மையில் இருந்தால் தான் ஒன்றை இன்னொன்றாகக் காணும் அத்யாசமும் உண்டாக முடியும்.

7. சிப்பியில் தோன்றும் வெள்ளி ஒரு வேலைக்கும் உதவுவது இல்லை. பாலைவன கானல் நீரும் அப்படியே. ஆனால் பூமியைத் தோண்டி எடுக்கப்படும் வெள்ளியில் பல பண்டங்கள் செய்யப்பட்டு பல வேலைகளில் புழங்கப்படுகின்றன. எனவே உலகைப் பொய் எனில் பொருந்தாது. ஆறு, குளங்களில் காணப்படும் நீரும் குளிக்க குடிக்கப் பயன்படுகின்றன. ஆதலால் பொய் என்க வழியில்லை.

8. பொய் படைக்கப்பட வேண்டியதில்லை. உலகமோ கடவுளால் படைக்கப்படுவதாக வேதத்தில் கூறப்படுகிறது.

9. கீதை 14-ஆவது அத்யாய 3ஆவது செய்யுளில் பிரபஞ்சத்திற்கு மூல காரணமான என்னுடைய பிரக்ருதியில் ஜீவாத்ம தொகுதியை சேர்ப்பவன் நானே. இதனாலேயே எல்லாப் பூதங்களும் உண்டாகின்றன என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன். ஆகவே, இந்தப் பிரபஞ்சம் பிரம்மத்திடம் உள்ள அறியாமையால் உண்டாகும் ஒரு கற்பனைத் தோற்றம் என்று அத்வைதி கூறுவது பிழையாகும்.

10. அத்வைதத்தில் சொல்வது படி, தங்கம் தான் எல்லா நகைகளாகவுமாகின்றன. மண்தான் சட்டி, மடக்கு, குடங்கள் ஆகின்றன. நூல் தான் துணியாகின்றது. சக்கரை தான் அத்தனை இனிப்புகளுமாகின்றது. ஒரு மூலப்பொருளிலிருந்தே எல்லாம் வந்துள்ளன. இப்படி காற்று, தீ, நீர், நிலம், ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் கலப்பால் அனைத்துப் பொருள்களும் உண்டாகின்றன. அந்த பிரக்ருதி ஐந்து பூதங்களும் காலம், முக்குணங்களாகின்றது. தைத்ரியோபநிஷத்து உலகின் காரணம் எதுவோ அது பிரும்மம் என்று பிருகுவல்லியில் கூறுகிறது. நாராயணோபநிஷத்தி<<லும் இன்னும் சிலவற்றிலும், நாராயணனே உலக காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே ஸ்ரீமந் நாராயணனே பிரும்மம் ஆவார். பெரியதான, (புனித) குணங்கள் இருப்பதால் அது பிரும்மம் எனப்படுகிறது என்கிறது உபநிஷத்து. ஆகவே, அந்த உள்ள ஒரே பொருளான விசிஷ்டபிரும்மமே கலியாண குணங்களுடையது ஆகும். இப்படி, பிரத்யட்ச, அனுமான ஆகம பிரமாணப்படி உண்மை இதுவே ஆகிறது. இதிலிருந்து நிர்குண பிரும்மம் என்று எதுவும் இல்லை என்று தள்ளப்படுகின்றது.

ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் உள்ள அங்க வேறுபாட்டு விசேஷமே (சிறப்பு) பொருளைப் புலன்களால் அறிய வைப்பது. இல்லாவிடில், ஒரு பசுமாட்டிற்குப் பதிலாகப் பன்றியைக் கொண்டு வந்துவிட நேரும். ஆகவே நேரடிப் புலனறிவில் ஸ்ரீசங்கரர் கூறுவது போல, பொருள் பற்றிய தனி ஞானம் மட்டும் உண்டாக வழியே இல்லை. இதை வைத்தே உண்டாகும் அனுமான அறிவிலும் அப்படித்தான். பொருளின் அறிவு மட்டும் தனியாக உண்டாகாது. புகையுடன் நெருப்பைக் காண்கிறோம். வேறெங்காவது புகை மட்டும் கண்டால் நெருப்பு அங்கு இருக்கும் என ஊகித்தறிகிறோம். இது அனுமானித்தல், நெருப்பு என்றால் சூடுள்ள பொருள் என்றே அறிகிறோம். சப்தம் எனும் ப்ரமாணமும் இதுவரை சொன்னதையே நிலை நாட்டுகிறது. பகுதி, விகுதிகளோடு சேர்ந்தே ஒரு சொல் என்பது பகுதியும் விகுதியும் பொருளில் வேறுபடுவன. ஆகவே சொல்லும் விசேஷணமற்ற தனிப்பொருளைச் சொல்லாது. பாடுகிறான் என்ற சொல்லில் பாடுவது ஆணா, பெண்ணா என்ற கேள்வியின் பதிலாக ஆண் என்ற விவரமும், எப்போது? என்ற கேள்விக்கு நிகழ்காலத்தில் இப்போது என்ற விவரமும் கூடவே இருக்கிறது. பாடுதல் என்ற தொழிலைச் செய்வது பொருள் ஒன்று அதை மட்டும் தனியாக உணர்த்துவதில்லை. இவ்வளவு விசேஷணங்கள் ஒரு சொல்லிலேயே உண்டு. பல சொற்களால் ஆனது ஒரு வாக்கியம் பல வாக்கியங்களால் ஆனது சப்த பிரமாணம். அதனால் விசேஷமான ஒரு பொருளையும் அறிவிக்க முடியாது. நான் என்பதன் உரியவன் ஆத்மா. இல்லாவிடில் கர்ம பயன் ஆத்மாவைச் சேர வழியில்லை. இந்த நான் ஐ அடிப்படையாக வைத்தே எல்லா அறிவும் உண்டாகிறது.

விழிப்பில் : நான் ஆணாக இருக்கிறேன் நான் கருப்பு, குண்டு என்பது போன்ற விசேஷம் உள்ளதாகவே அறிவு உண்டாகிறது.


கனவில் : நான் கனவு கண்டேன், சில சமயம் கனவு காணும்போதே நான் கனவு காண்கிறேன் என்ற அறிவு ஏற்படுகிறது. இதுவும் ஸவிசேஷமே! இதுவும் இறைவனால் கர்ம பயன்படி, அருளப்பட்ட சுகதுக்கம் உண்டாகும் வாழ்க்கையே! அத்வைதி சொல்வது போல தானே ஒருவன் உண்டாக்கிக் கொள்வதல்ல (படைத்துக் கொள்வதல்ல) கனவு வாழ்வு. ஏனெனில் தனக்குத் தானே எவரும் கெட்ட, பயங்கர கனவுகளைப் படைத்துக் கொள்ள மாட்டார்.

தூக்கம் : தூங்கும் போது ஒன்றும் தெரியாவிட்டாலும், தூங்கி விழித்ததும் இவ்வளவு நேரம் நான் தூங்கினேன் என்ற அறிவு உண்டாகிறது. அனுபவிக்கப்பட்ட அறிவே இவ்வாறுண்டாகும். அங்கே அனுபவம் என்னும் போதே அனுபவித்தவனும் அனுபவிக்கப்பட்ட விசேஷமான விஷயமமும் உண்டு.

மயக்கம் : நான் மயங்கி இருந்தேன். இதுவரை, நினைவு இன்றி இருந்தேன் என்ற அறிவு உண்டாகிறது. மற்ற பிரக்ஞை நிலையிலிருந்து மூர்ச்சை பிரித்தறியப்படுவதே ஸவிசேஷ அனுபவத்தால் தான். ஒவ்வொரு உணர்வு நிலையிலும் நமக்கு விசேஷண விசிஷ்ட அறிவே உண்டாகிறது. அப்படிப்பட்ட அறிவிற்குப் பாத்திரமான பொருளும் விசேஷண விசிஷ்டமானவையே. அப்படியே இந்தப் பிரபஞ்சத்திற்குக் காரணமான பிரும்மமும் குணமுடையதே. அதாவது, விசேஷண விசிஷ்டமே! பிரும்மத்தின் விசேஷணங்களாக முதலிலேயே பார்க்கப்பட்டவையே சித்தும், அசித்தும். (சோல் அண்டு மேட்டர்). சிதசித்ஐ விசேஷணங்களாகக் கொண்ட விசிஷ்ட பிரும்மமே விசிஷ்டாத்வைத தத்துவம்.

லக்ஷ்மி : இதில் ஸ்ரீ எனப்படும் லக்ஷ்மி ஆகிய பெரிய பிராட்டி பிரும்மத்திற்கு மிகவும் பிரியையான ஜீவாத்மா. நித்யசூரி வகுப்பைச் சேர்ந்தவள். ஸ்ரீமந் நாராயணனின் கைங்கர்ய ஆனந்தம் என்றென்றும் உள்ளவள். இவளில்லாமல் நாராயணன் இல்லை. புருஷாகாரம் உள்ளவள். அதாவது, பிரும்மத்தின் தயை என்னும் தைவீகக் குணமாகவே இருக்கிறாள். ஜீவர்களை-அவர்களின் பாவ கர்மாக்களை மன்னிருக்கும்படி பெருமாளிடம் சிபாரிசு செய்பவள். பிரும்மத்தின் விசேஷணங்கள் உயிருக்கு உடல் போன்றவை. இதுவரை பிரும்மம், சித், அசித் என்று உயிர், இயற்கை, இறைவன் என்ற மூன்று தத்துவங்களைக் கண்டோம். இது விசிஷ்டாத் வைதம் எப்படி ஆகும்? அதாவது, சிறப்புப் பொருந்திய ஒரே தத்துவம் எப்படி ஆகும்? மஹாபாராத ஸஹஸ்ரநாம அத்தியாயத்தில் சரீரமாக மூன்று உலகங்களையும் உடைய விஷ்ணுவை வணங்குகிறேன் என்று வருகிறது. பிருஹதாரண்ய கோபநிஷத்தில் ... யஸ்வ ப்ருதீவி சரீரம், யாருக்கு பூமி சரீரமோ.... என்றும், பஞ்ச பூதங்களையும், சூரியன், சந்திரன், நட்சத்திரம், பிராணன், ஐந்து புலன்கள், மனம் முதலிய ஜடப்பொருள்களையும் பரமாத்மாவிற்கு சரீரம் எனச் சொல்லப்படுகிறது. எவன் ஜீவாத்மாவை உடலாகக் கொண்டு அடக்கி ஆள்கிறானோ என்றும் சொல்கிறதால், சேதன, அசேதனங்களை என்றும் சொல்கிறதால், சேதன, அசேதனங்களைத் தனித்தனியே பிரும்மத்தின் உடலாகச் சொன்னதாகிறது. இதே போல இராமாயணம், விஷ்ணு புராணம் பல உபநிஷத்துக்களிலும், பகவத் கீதையிலும் பரமாத்மாவிற்கு ஜீவனும், பிரக்ருதியும் சரீரங்கள் என்ற கருத்து வெளிப்படையாக வருகிறது.

இதனால் பரமாத்மா சரீரி என்ற கொள்கையும் அவருக்கு சரீரமாக இருப்பவை ஜீவனும், பிரக்ருதியும் என்பதும் விளங்குகின்றது. சரீர இலக்கணம் உடல் என்பது பாம்பு, பறவை, மனிதன், மலை, மரம் என்ற வடிவிலும், இயல்பிலும் வேறு வேறாயிருப்பதால் பொதுவான இலக்கணம் தேவைப்படுகிறது. பஞ்சபிராணன் உள்ளதென்றோ, சுகமனுபவிக்க ஏற்றதென்றோ, கருவியென்றோ, கர்ம பலனனுபவத்திற்கு என்றோ, பஞ்சபூதச் சேர்க்கை என்றே கூற இயலாது. இந்த இலக்கணங்கள் இறைவனுக்கு உடல் என்னும் செய்தியில் பொருந்தாது. தாவர வகையில் பஞ்சபிராணன்கள் இயங்குவதில்லை. இறைவன், முக்தர்களின் இச்சைப்படி தரிசிக்கும் உடல்களிலும், அர்ச்சா மூர்த்திகளுக்கும் இது பொருந்தாது. பரமாத்மாவின் சரீரம் பஞ்சபூதச் சேர்க்கையால் உண்டானதல்ல என்கிறது சுருதி. கடவுள் முதல் பூச்சி, புழுவரை தாவரங்களுட்படப் பொருந்தக்கூடிய இலக்கணம் சரீரம் என்பதற்கு கூறப்பட வேண்டும். எப்போதும் தரிக்கப்பட்டதாகவும், நம்முடைய வேலைகளைச் செய்ய ஏவப்படுகிறதாகவும், தன்னுடைய சாதனைகளுக்குச் சாதாரண கருவியாகவும் உள்ள பொருளாக இருப்பதே சரீரம் ஆகும். இந்த இலக்கணப்படி இறைவன் ஜீவாத்மாக்களையும், பிரக்ருதியையும் எப்போதும் தரித்துக் கொண்டுள்ளான். அவனிட்ட வேலைகளையே ஜீவர்களும், பிரக்ருதியும் உலகில் இயற்றுகின்றனர். அவன் கைக்கருவிகளாகவே ஏவப்படுகின்றனர். அவனுடைய லீலா அதிசயங்களை நிறைவேற்றுவதாகவே எல்லாம் பிரபஞ்சத்திலுள்ளன. ஆகவே ஜடமான, அறிவுள்ள எல்லாப் பொருளும் இறைவனின் உடலே! நினைவு பலத்தால் ஒரு மனித ஜீவன் விழிப்பில் தன் உடலைத் தூக்கி நிறுத்திக் கொண்டுள்ளான். மயக்கம், தூக்கம் ஆகிய நிலைகளில் ஜீவஸ்வரூபத்தாலேயே தரித்துக் கொண்டிருக்கிறான். அதேபோல இறைவன் ஸ்ரீமந் நாராயணன் சங்கல்ப சக்தியால் படைப்பில் எல்லாவற்றையும் தரித்துக் கொண்டுள்ளார். பிரளய காலத்தில் சூட்சும தசையில் தமது சொரூபத்தால் ஜீவர், பிரக்ருதிகளை சூட்சும நிலையில் தரித்தபடி காரண பிரும்மமாக இருக்கிறார். ஆகக்கூடி எப்போதும் அவரால் அவரது சரீரமாக ஜீவர், பிரக்ருதி தரிக்கப்படுகின்றனர்.

படைப்பு : சித்தமான ஜீவனும், அசித்தான பிரக்ருதியும் எப்போதும் விட்டுப் பிரியாமல் பரமாத்மாவுடனிருந்தால் இறைவன் உலகைப் படைத்தார் என்பதன் பொருள் என்ன? இப்படி படைப்பு உண்டாகாத நிலையில் காரண நிலையில் பிரும்மமாக, பெயர் வடிவமற்ற இன்னதென்று புரிந்து கொள்ளும்படி வெளிப்படாத பிரக்ருதியையும், ஞானத்திற்கு விஷயமில்லாமல் ஜடம் போன்று மெழுகில் பொன் துகள் போல பிரும்மத்தில் ஒட்டிக்கிடந்த ஜீவர்களையும் சேர்த்தே, சுருதிகள் அபேதமாகச் சொல்லின. இதுவே காரணபிரும்மன். வெளிப்பட்டபோது படைக்கப்பட்ட உலகமாயிற்று. எப்போதும் அது விசிஷ்டாத்வைதப் பிரும்மம் எனும் ஒரே தத்துவப் பொருளேதான்! இதுவே காரிய பிரும்மன். இவ்வாறு பிரும்மம் என்னும் தத்துவம் ஒன்றே என்றும், அதனுள் உடல், உயிர் வேறுபாடு இருக்கிறது என்றும், ஆனாலும் விடமுடியாத தொடர்பால் அது ஒரே தத்துவம் என்றும் விசிஷ்டாத்வைதப் பொருள் விளக்கப்பட்டது. இது தான் தத்தவமஸியின் பொருள். கெட்ட குணங்கள் பிரும்மத்திலில்லை என்பதால் நிர்குணத்தைச் சொல்லும் சுருதிகளும், தொடர்பைச் சொல்வதால் அபேதச் சுருதிகளும், உள்ளுக்குள் உள்ள வேறுபாட்டைச் சொல்வதால் பேதச் சுருதிகளும், உடல் உயிர் தொடர்பைப் பேசும் கடகச் சுருதிகளாலனைத்தும் விசிஷ்டாத்வைத மதத்திற்கே பொருந்தி இருக்கிறது.

இறைவனுக்கும் ஜீவனுக்கும் உள்ள உறவு

இந்த ஜீவ-பர சம்பந்தம் ஒன்பது விதமாகும்.


1. தந்தையும் மகனான தொடர்பு.
2. காப்பாற்றுகிறவனுக்கும் காக்கப்படுகிறவனுக்கும் இடையே உள்ளது.
3. உடையவனுக்கும் உடைமைக்கும் உள்ள தொடர்பு.
4. கணவன் மனைவிக்குள்ள சம்பந்தம்.
5. அறியத் தகுந்தவனுக்கும் அறிபவனுக்கும் உள்ளது.
6. ஆண்டாள்-அடிமை பாவ தொடர்பு.
7. உடல்-உடலுடையவனின் உறவு. (உயிர் உடல்)
8. ஆதாரம்-அவனைச் சார்ந்திருப்பவனின் உறவு.
9. அனுபவிப்பவனுக்கும் அனுபவிக்கப்படுவோனுக்கும் உள்ள சம்பந்தம் ஆகியவை ஆகும்.

மோட்ச வழி: இதுவரை சொன்ன தொடர்புகளை மறவாதிருத்தல். கர்ம, ஞான யோகங்களைச் செய்து நல்ல பண்பட்ட சமஸ்காரமுடைய மனத்தினனாகி அஷ்டாங்க யோகம் இயம, நியமங்களுடன் செய்ய வேண்டும். வருணாஸ்ரம தர்மங்களை விடாமல் செய்வது அவசியம். பிறகு இடைவிடாமல் பயிற்சி செய்வதால் உண்டாகும் இடைவிடாத எண்ணை ஒழுக்குப் போன்ற ஸ்ரீமந் நாராயணனின் நினைவு தியானமாகக் கிட்டி பக்தியும் அதே ஆகிறது. இந்த பக்தி உபநிஷத்தில் கூறப்படும் முப்பத்திரண்டு வித்தைகளாக உள்ளது. இதில் ந்யாஸ வித்தை தான், சரணாகதி எனப்படுவது. பிரபத்தி என்பர். பிரார்த்தனையோடு சேர்ந்த ஆத்ம சமர்ப்பணமே இது. இதை ஆச்சர்யமுகமாக அறிய வேண்டும். இறை நம்பிக்கையே இதன் முதுகெலும்பு. பக்தி-பிரபத்தியாய் சரீர யாத்திரையின் முடிவில் மோட்சம் இறைவனால் அவனிச்சைப்படி அருளப்படுகிறது இதுவே, ஸ்ரீமந் ராமானுஜாச்சாரியாரின் ஆழ்வார், பூர்வாச்சாரியார்கள், வேத சம்பந்தமான ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை உள்ளீடான விசிஷ்டாத்வைத வைணவ சித்தாந்தச் சுருக்கமாகும்.


நன்றி Hindu Madurai

அகத்தியர் ! பெருமைபடுங்கள் நீங்கள் தமிழன் என்று !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:29 PM | Best Blogger Tips
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி. இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு : தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்கள் மொழியாகவுள்ளது. அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப் பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

நன்றி Aasiriyarpakkam

மகாபாரத போர் தெரியும்!.. அதில் அனைத்து வீரர்களுக்கும் உணவளித்தது தமிழகம் என்பது தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:25 PM | Best Blogger Tips

மகாபாரத போர் தெரியும்!.. அதில் அனைத்து வீரர்களுக்கும் உணவளித்தது தமிழகம் என்பது தெரியுமா? 

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனன் முதலிய நூற்றுவருக்கும் இடையே பெரும்போர் நடந்தபோது இருதரப்புப் படைகளுக்கும் உணவு வழங்கி உதவியவன் சேரமான் உதியஞ் சேரலாதன் என்ற சேரமாமன்னன். அவன் இவ்வாறு உணவு வழங்கியதால், பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்றே சரித்திரத்தில் அவனது திருப்பெயர் விளங்குகிறது. புறநானூறு என்ற சங்ககால நூலின் இரண்டாவது பாடலில் அந்த மாமன்னனைப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடினார்.
பாண்டவ-கவுரவ யுத்தத்தின் போது சேரமாமன்னன் உதியஞ் சேரலாதன் இருபடைகளுக்கும் சோறு வழங்கிய செய்தியை புலவர் வியந்து குறிப்பிடுகிறார். புறநானூற்றுப் புலவர் தெரிவிக்கும் இந்தச் செய்தியை சிலப்பதிகாரம்  உறுதி செய்கிறது. மதுரை மாநகரம் கண்ணகியின் கோபத்தால் அக்கினிக்கு இரையான பிறகும் கண்ணகியின் கோபம் தீரவில்லை. அவள் வருத்தத்துடன் அமர்ந்திருந்தபோது, பாண்டிய மன்னனின் குலதெய்வமான மதுராபதி என்ற குலதெய்வம் கண்ணகியின் பின்பக்கமாக வந்து நின்றது. நீ யார்? என்று கண்ணகி கேட்டாள்.
அவளுக்குத் தன்னைப் பற்றி தெரிவித்த மதுராபதி தெய்வம் மேலும் சில செய்திகளைக் கூறியது. பாண்டியன், கோவலன் இருவரும் தவறு செய்யாதவர்கள். ஆனால், இருவருக்கும் முன் செய்த தீவினையின் விளைவாக ஏற்பட்ட பழி ஒன்று உண்டு என்று மதுராபதி தெய்வம் கூறியது. பிறகு உயர்குடிப் பிறந்த மன்னர்கள் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பதைச் சில உதாரணங்களுடன் அந்த தெய்வம் விவரித்தது. தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு நீதி தவறாத நேர்மையாளன் என்று புகழ்பெற்ற பொற்கைப் பாண்டியன், ஒரு புறாவுக்காக தான் துலாக்கோல் ஏறிய சோழ மன்னன் சிபி, கன்றை இழந்த பசுவுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி நீதி செய்த மற்றொரு சோழமன்னனாகிய மனு, பாரதப்பெரும் போரில் இரு தரப்புப் படைகளுக்கும் சோறு அளித்த சேரமன்னன் உதியஞ் சேரலாதன் என்று ஒரு பட்டியலையே மதுராபதி தெய்வம் எடுத்து உரைக்கின்றது.
சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், கட்டுரைக் காதை பகுதியில் பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை என்ற அடிகளில் சேரமன்னன் சோறு வழங்கிய செய்தி சொல்லப்படுகிறது. இதே செய்தியை, வஞ்சிக்காண்டம், வாழ்த்துக் காதை பகுதியில் இளங்கோ அடிகள் மீண்டும் குறிப்பிடுகிறார். தோழிப் பெண்கள் மன்னர்களைப் போற்றி புகழ்ந்து ஆடுகிறார்கள்; பாடுகிறார்கள். இதிலும் மகாபாரத யுத்தத்தில் இரு தரப்பு படைகளுக்கும் சேரமாமன்னன் பெருஞ்சோறு அளித்த செய்தி பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவின் வடக்கே ஒரு பகுதியில் ஒரு பெரும்போர் நடக்கிறது. அதற்கு தெற்கே தமிழ்நாட்டிலிருந்து சோறு வழங்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி, இந்தியப் பண்பாட்டின் பழமையை மிகச்சரியாக எடுத்துக்காட்டுகிறது.
மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனன் முதலிய நூற்றுவருக்கும் இடையே பெரும்போர் நடந்தபோது இருதரப்புப் படைகளுக்கும் உணவு வழங்கி உதவியவன் சேரமான் உதியஞ் சேரலாதன் என்ற சேரமாமன்னன். அவன் இவ்வாறு உணவு வழங்கியதால், பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்றே சரித்திரத்தில் அவனது திருப்பெயர் விளங்குகிறது. புறநானூறு என்ற சங்ககால நூலின் இரண்டாவது பாடலில் அந்த மாமன்னனைப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடினார்.
பாண்டவ-கவுரவ யுத்தத்தின் போது சேரமாமன்னன் உதியஞ் சேரலாதன் இருபடைகளுக்கும் சோறு வழங்கிய செய்தியை புலவர் வியந்து குறிப்பிடுகிறார். புறநானூற்றுப் புலவர் தெரிவிக்கும் இந்தச் செய்தியை சிலப்பதிகாரம் உறுதி செய்கிறது. மதுரை மாநகரம் கண்ணகியின் கோபத்தால் அக்கினிக்கு இரையான பிறகும் கண்ணகியின் கோபம் தீரவில்லை. அவள் வருத்தத்துடன் அமர்ந்திருந்தபோது, பாண்டிய மன்னனின் குலதெய்வமான மதுராபதி என்ற குலதெய்வம் கண்ணகியின் பின்பக்கமாக வந்து நின்றது. நீ யார்? என்று கண்ணகி கேட்டாள்.
அவளுக்குத் தன்னைப் பற்றி தெரிவித்த மதுராபதி தெய்வம் மேலும் சில செய்திகளைக் கூறியது. பாண்டியன், கோவலன் இருவரும் தவறு செய்யாதவர்கள். ஆனால், இருவருக்கும் முன் செய்த தீவினையின் விளைவாக ஏற்பட்ட பழி ஒன்று உண்டு என்று மதுராபதி தெய்வம் கூறியது. பிறகு உயர்குடிப் பிறந்த மன்னர்கள் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பதைச் சில உதாரணங்களுடன் அந்த தெய்வம் விவரித்தது. தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு நீதி தவறாத நேர்மையாளன் என்று புகழ்பெற்ற பொற்கைப் பாண்டியன், ஒரு புறாவுக்காக தான் துலாக்கோல் ஏறிய சோழ மன்னன் சிபி, கன்றை இழந்த பசுவுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி நீதி செய்த மற்றொரு சோழமன்னனாகிய மனு, பாரதப்பெரும் போரில் இரு தரப்புப் படைகளுக்கும் சோறு அளித்த சேரமன்னன் உதியஞ் சேரலாதன் என்று ஒரு பட்டியலையே மதுராபதி தெய்வம் எடுத்து உரைக்கின்றது.
சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், கட்டுரைக் காதை பகுதியில் பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை என்ற அடிகளில் சேரமன்னன் சோறு வழங்கிய செய்தி சொல்லப்படுகிறது. இதே செய்தியை, வஞ்சிக்காண்டம், வாழ்த்துக் காதை பகுதியில் இளங்கோ அடிகள் மீண்டும் குறிப்பிடுகிறார். தோழிப் பெண்கள் மன்னர்களைப் போற்றி புகழ்ந்து ஆடுகிறார்கள்; பாடுகிறார்கள். இதிலும் மகாபாரத யுத்தத்தில் இரு தரப்பு படைகளுக்கும் சேரமாமன்னன் பெருஞ்சோறு அளித்த செய்தி பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவின் வடக்கே ஒரு பகுதியில் ஒரு பெரும்போர் நடக்கிறது. அதற்கு தெற்கே தமிழ்நாட்டிலிருந்து சோறு வழங்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி, இந்தியப் பண்பாட்டின் பழமையை மிகச்சரியாக எடுத்துக்காட்டுகிறது.
நன்றி தர்மத்தின் பாதையில்