சித்தர் பெருமக்கள் நினைத்த மாத்திரத்தில் விரும்பிய உருவம் எடுத்திடக் கூடியவர்கள் என்பது காலம் காலமாய் இருந்து வரும் ஒரு கருத்தாக்கம். இந்தக் கூற்றினை ஏற்றுக் கொள்ளவோ, மறுக்கவோ நம்மிடம் வலுவான ஆதாரங்கள் இல்லை. அடிப்படையில் சித்தர் பெருமக்கள் தனிமை விரும்பிகளாய் இருந்திருக்கின்றனர். இதனை அவர்களின் பல பாடல்களின் ஊடாக நாம் அறிய முடிகிறது. தங்களின் தேடலுக்கு இடைஞ்சல் வருவதை விரும்பாததன் பொருட்டே அவர்கள் வெகுசன வாழ்விடங்களை விட்டு விலகி காடுகளிலும், மலைகளிலும் தனித்திருந்தனர். தங்களைச் சாராத பிறரின் கவனத்தில் இருந்து விலகி இருப்பதையே விரும்பியிருக்கின்றனர்..
காடுகள், மலைகள் என்று தனித்திருந்தாலும் கூட அந்த இடங்களுக்கே உரித்தான இடையூறுகளும், ஆபத்துக்களும் தவிர்க்க முடியாதது. இவற்றை எதிர் கொள்ளவும் சித்தர் பெருமக்கள் சில உத்திகளை கைக் கொண்டிருந்தனர். காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்திருக்கும் பழங்குடியின மக்கள், வேடர்கள், விலங்குகள், ஊர்வனைகள், பறவைகள் போன்றவைகளினால் தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள இப்போதும் கூட இது மாதிரியான சில உத்திகளைப் பயன் படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
அந்த வகையில் சித்தர் பெருமக்கள் கைக் கொண்ட ஒரு உத்தியினைத்தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
அது என்ன உத்தி?
பிறரின் கவனத்தை கவராமல் இருக்கும் படி தன்னுடைய உருவத்தை மாற்றிக் காட்டுவதுதான் அந்த உத்தி.
அதெப்படி உருவத்தை மாற்றிக் காட்டுவது?
அகத்தியர் தனது “அகத்தியர் 12000” என்ற நூலில் அதனை பின்வருமாறு விளக்குகிறார்.
வந்தவகை சொல்லுமுன்னே அறிந்துகொண்டு
மனமகிழ்ந்து சொல்லுகிறேன் வகையாய்க்கேளு
சொந்தமுடன் சகலசித்துந் தானேதானாய்
துலங்குதற்கு அந்தமடா மந்திரமூலம்
அந்தமுள்ள மூலமடா சிறீங்அம்மென்று
அசைவற்று மவுனமதா யருட்கண்மேவி
பந்தமுடன் கம்பமதாய் நின்றாயானால்
பலனான தவப்பலத்தைப் பகுந்துகேளே.
மனமகிழ்ந்து சொல்லுகிறேன் வகையாய்க்கேளு
சொந்தமுடன் சகலசித்துந் தானேதானாய்
துலங்குதற்கு அந்தமடா மந்திரமூலம்
அந்தமுள்ள மூலமடா சிறீங்அம்மென்று
அசைவற்று மவுனமதா யருட்கண்மேவி
பந்தமுடன் கம்பமதாய் நின்றாயானால்
பலனான தவப்பலத்தைப் பகுந்துகேளே.
கேளப்பா தவபலத்தைச் சொல்லக்கேளு
கிருபையுடன் சிவயோகத் திருக்கும்போது
சூளப்பா மனிதர்கண்டால் மனிதர்போலாம்
சுகமான பெண்கள்கண்டால் பெண்கள்போலாம்
மேலப்பா யோகிகண்டால் யோகிபோலாம்
விசையான மிருகங்கள் கண்டுதானால்
காலப்பா அந்தந்த வகைபோற்தோணும்
கருணையுடன் தவசிருந்த கருத்தைப்பாரே.
கிருபையுடன் சிவயோகத் திருக்கும்போது
சூளப்பா மனிதர்கண்டால் மனிதர்போலாம்
சுகமான பெண்கள்கண்டால் பெண்கள்போலாம்
மேலப்பா யோகிகண்டால் யோகிபோலாம்
விசையான மிருகங்கள் கண்டுதானால்
காலப்பா அந்தந்த வகைபோற்தோணும்
கருணையுடன் தவசிருந்த கருத்தைப்பாரே.
தவம் அல்லது சிவயோகம் செய்யத் துவங்கும் போது, ஒரிடத்தில் அமர்ந்து உடலையும் மனதினையும் தளர்வாக்கி, மனதை ஒரு நிலைப் படுத்தி "சிறீங் அம்" என்று மௌனமாக புருவ மத்தியை நோக்கியபடி நூற்றியெட்டுத் தடவைகள் செபிக்க வேண்டுமாம். இப்படி செய்த பின்னரே தவத்தினையோ அல்லது சிவயோகத்தினையோ ஆரம்பிக்க வேண்டுமாம்.
இப்படி செய்தவர்கள், சாதாரண மனிதர்கள் பார்த்தால் அவர்கள் கண்களுக்கு சாதாரண ஒரு மனிதரைப் போலவும், பெண்கள் யாரேனும் பார்த்தால் அவர்களுக்கு பெண்ணைப் போலவும், யோகிகள் யாரேனும் பார்த்தால் அவர்களுக்கு யோகியைப் போலவும் மிருகங்கள் மற்றும் பறவை பட்சிகள் பார்த்தால் அவற்றிற்கு அவை போலவே தோன்றுவார்களாம். இதனால் எந்தவித புற சஞ்சலங்களும் ஏற்படாமல் தவமிருந்து குறிக்கோளை அடையலாம் என்கிறார்.
ஆச்சர்யமான தகவல்தானே!
ஏட்டளவில் உறைந்து கிடக்கும் எண்ணற்ற தகவல்களில் இதுவும் ஒன்று. ஆர்வமுள்ளவர்கள் அல்லது ஆய்வாளர்கள் இவற்றை எல்லாம் பரீட்சித்து இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து மேம்படுத்திட முயறசிக்கலாமே....
-சித்தர்கள் இராட்சியம்