பிறர் பொருளை விரும்பாதே..!!*

மணக்கால் அய்யம்பேட்டை | 1:34 PM | Best Blogger Tips

 


சன்னாசிக்கிழவன் களைப்போடு வீட்டுக்குள் நுழைந்தான். நடுவீட்டின் உச்சியை அண்ணாந்து பார்த்தான். ஆகாயத்திலிருந்து நிலாவெளிச்சம் பளீரென்று வீட்டுக்குள் அடித்தது. பெருமூச்சு விட்டவாறே தன் முண்டாசை உதறித் தரைமீது போட்டுக் கீழே அமர்ந்தான்.

என்னாப்பா, மோட்டுவளையைப் பாக்குறே? எதாச்சும் பணம் கொட்டுமான்னு பாக்குறியா?”

என்றவாறே அவன் மகன் சின்னச்சாமி உள்ளே நுழைந்தான்.

பணம் கொட்டுதோ இல்லையோ மழை வந்தா தண்ணி கொட்டும்.”

ஆமாம்பா, இந்த மழைக் காலம் வாரதுக்குள்ளே நம்ம வீட்டை இடிச்சுக் கட்டிடணும் அப்பா.”

எனக்கும் ஆசைதான். ஆனா அதுக்கு நீ சொன்ன மாதிரி பணம் கூரையிலேந்து கொட்டினாத்தான் உண்டு.”

ஏம்பா அப்பிடிச் சொல்றே. வீட்டக் கட்டிடணும் அப்படீங்கற எண்ணத்தோட உழைச்சா கட்டாயம் நம்மாலே முடியும் அப்பா.”

இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பச்சையம்மாசரி சரி நேரத்தோட சோறு திங்க வாங்க. கெனா அல்லாம் அப்பால காங்களாம்என்றாள் சலிப்போடு.

தந்தையும் மகனும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றார்கள்.

மறுநாள் பொழுதோடு எழுந்து வேலைக்குச் சென்றான் சன்னாசி. அந்த ஊர் பூங்காவில் பழுது பார்க்கும் வேலையில் அவன் ஒரு தோட்டக்காரனாக வேலை பார்த்து வந்தான். முதல்நாள் விடுமுறை தினமாதலால் நிறைய பேர் பூங்காவுக்கு வந்து சென்றிருந்தனர். பூங்கா முழுவதும் குப்பையும் கூளமுமாக இருந்தது. அதைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தான் சன்னாசி.

செடியைக் கொத்தி சீர் படுத்தும் போது அதனுள்ளே பளபளவென்று தெரியவே என்னவென்று எடுத்துப் பார்த்தான். இரண்டு சவரன் தேறும் ஒரு தங்கச் சங்கிலி. சட்டென அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான். ஏதும் அறியாதவன்போல் வேலையில் ஈடுபட்டான்.

சற்று நேரத்தில் அழுது கொண்டிருக்கும் ஒரு சிறுமியைக் கையைப் பிடித்து இழுத்து வ்ந்தார் அவள் தந்தை. அவளிடம் கடுமையாகக் கேட்டார். “எங்கே விளையாடினே?இங்கேயா, இங்கேயா, சொல்லித்தொலையேன். தேடிப்பார்க்கலாம்.” என்றவர் நான்கு தோட்டக்காரர்களையும் விசாரித்தார்.

யாராவது ஏதேனும் நகை கிடப்பதைப் பார்த்தீர்களா?”

யாரும் பார்க்கவில்லை எனக் கூறிவிட்டனர். சன்னாசிக் கிழவனும் தன் தலையைப் பலமாக இல்லையென்று ஆட்டிவிட்டான். கண்களில் நீர் நிறையஅய்யோ ஆசையாக வாங்கியது போச்சே.

இந்தக் கடனை அடைக்க நான் இன்னும் எத்தனை கஷ்டப் படணுமோ.” என்று புலம்பியவாறே தன் பெண்ணை இழுத்துக் கொண்டு வெளியேறினார் அந்த அப்பாவி அப்பா.

சன்னாசிக்குப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் இதையெல்லாம் பார்த்தால் நாம் கல்லு வீட்டில் உக்கார முடியுமா என்ற எண்ணமும் கூடவே தோன்றியது.

வேகவேகமாக வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று அந்தச் சங்கிலியை பத்திரப் படுத்தி வைத்தான்.

ஒரு வாரத்தில் சன்னாசி நினைத்தவாறே கல்லு வீடு எழும்பத் தொடங்கிற்று. சின்னச்சாமிக்கும் அவன் அம்மாவுக்கும் ஆச்சரியம். என்ன கேட்டும் சன்னாசிஆண்டவன் கொடுத்தாண்டிஎன்று சொல்லி அவள் வாயை அடைத்து வந்தான்.

ஒரு மாதம் ஓடிவிட்டது. வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஈரமான தலையைத் துடைத்தவாறே உள்ளே நுழைந்தான் சின்னச்சாமி.

ஏண்டா தம்பி இம்மா நேரம்? வேலை எதுவும் கெடைக்கலியா?”

அதில்லம்மா, ஒரு பெரியவரு பார்க்குல உக்காந்திருந்தாரு. எழுந்து போகையில பொட்டிய மறந்து வச்சுட்டுப் போயிட்டாரு. அதை எடுத்துக்கினு அவரு வீட்டத் தேடி கொண்டு போய் கொடுத்திட்டு வாரதுக்குஇம்மா நேரமாயிடுச்சம்மா.”

சன்னாசி மெதுவாக, “அது என்னா பொட்டிடா?” என்று கேட்டான்.

அது எனக்குத் தெரியாதுப்பா

பொழைக்கத் தெரியாத புள்ளஎன்றபடியே வெளியே சென்றான் சன்னாசி.

வெளியே லேசாகத் தூறிக்கொண்டிருந்தது திடீரென்று பெரும் மழை பிடித்துக் கொண்டது. நடு இரவில் வெளியே ஒரே கூச்சலாயிருந்தது கேட்டு சன்னாசி சின்னச்சாமி அவன் தாய் பச்சை அனைவரும் கதவைத் திறந்து பார்த்தனர். வெளியே இருந்த குடிசை வீடுகள் எல்லாம் மழையில் அடித்துச் செல்லவே மக்கள் அனைவரும் தங்கள் உடமைகளோடு அருகே இருந்த பள்ளியை நோக்கி ஓடித் தஞ்சம் புகுந்தனர்.

சன்னாசி தான் கல்லு வீட்டில் இருப்பதால் மிகவும் பெருமையோடு மீண்டும் வந்து பாயில் படுத்துக் கொண்டான்.

ஒரு மணி நேரம் போயிருக்கும். திடீரென்று பச்சையம்மாஅய்யோ! எந்திரிங்க வீட்டுக்குள்ளாற தண்ணி வந்திருச்சுஎன்று அலறியவாறே சன்னாசியை உலுக்கி எழுப்பினாள். அதற்குள் வீட்டுக்குள் மளமளவென தண்ணீர் உயரத் தொடங்கவே செய்வதறியாமல் உயிருக்கு அஞ்சி ஊர் மக்கள் அனைவரும் தங்கியிருக்கும் பள்ளிக்கூடத்திலேயே மூவரும் தஞ்சம் புகுந்தனர்.


சிறிய பள்ளிக்கூடம் மக்கள் ஏற்கனவே நிறைந்திருந்ததால் சன்னாசி குடும்பத்திற்கு ஒண்டிக் கொள்ளத்தான் இடமிருந்தது. மீதி இரவை நின்று கொண்டே கழித்தனர் சன்னாசியும் அவன் மகன் மனைவியும்.

மறுநாளும் மழை விடவில்லை. வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது. வாயிலில் வெள்ளமாகத் தண்ணீர் ஓடியது. பலரது வீடுகள் நீரில் மிதந்து செல்வதைக் கண்டும் செய்வதறியாது அனைவரும் புலம்பிக்கொண்டு நின்றிருந்தனர்.

திடீரென்று சன்னாசியும் கதறினான். அவனுடைய கல்லுவீட்டின் கதவு மிதந்து சென்றதை கண்டுதான் அலறினான். யாருக்கு யார் சமாதானம் செய்வது.

அரசு கொடுத்த உணவை உண்டு அன்று பொழுது கடந்தது. மாலை நேரம் சற்றே மழை விட்டதும் அணைத்து ஆண்களும் தங்கள் வீட்டில் உடமைகள் ஏதேனும் மிச்சம் இருக்கிறதா என்று பார்க்க வீட்டுக்குச் சென்றனர். சன்னாசியும் ஓடினான். அந்தோ, பரிதாபம். அங்கே அவன் கட்டியிருந்த வீடு இடிந்து மண்மேடாகக் காட்சியளித்தது.

அப்படியே சரிந்து அமர்ந்தான். அவன் பின்னால் வந்த சின்னச்சாமி அவனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தான்.

அப்போது ஒரு பெரியவர் வண்டிநிறைய துணிமணிகள் போர்வை ஆகியவற்றுடன் உணவுப் பொட்டலங்களும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்து நின்றார். இன்னும் தூறல் நின்றபாடில்லை. இருப்பினும் பள்ளியில் ஒதுங்கியிருந்த மக்கள் அனைவரும் உணவுப் பொட்டலத்துக்காக ஓடி வந்தனர்.

அவர்களை வரிசையில் வரும்படி பணியாளர்கள் கூறிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்தபடியே நின்றிருந்த பெரியவர் தன் முன்னே சின்னச்சாமியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார்.

ஏய் தம்பி, நீதானே அன்னிக்கி என் பொட்டியைக் கொண்டுவந்து கொடுத்தது.” அவரைப் பார்த்து வணக்கம் கூறினான் சின்னச்சாமி.

ஏம்பா, பொட்டியக் குடுத்துட்டு சொல்லாம போயிட்டியே. உன்னை எங்கெல்லாம் தேடினேன்.”

ஏனுங்க ஐயா? என்னை ஏன் தேடினீங்க?”

உன் பேர் என்ன சொன்னே, ஆங் சின்னச்சாமி.எவ்வளவு பெரிய உதவி செஞ்சுட்டு நீ பாட்டுக்குப் போயிட்டியே. உனக்கு ஏதானும் பரிசு குடுக்கணுமே அப்படின்னுதான் தேடினேன்.”

ஐயா, உங்க பொட்டியக் கொண்டாந்து குடுத்ததா பெரிய வேலைன்னு சொல்றீங்க. அது என்ன பெரிய காரியமா?”

ஆமாம் சின்னச்சாமி அம்பது லட்ச ரூபா சொத்து அந்தப் பொட்டில இருந்துது. அதனாலே உனக்கு நான்கடமைப் பட்டிருக்கேன்.”

சின்னச்சாமி திகைத்து நின்றிருந்தான்சின்னச்சாமி, இந்த இருபதாயிரத்தை வாங்கிக் கொள். பாவம், மழையில் வீடிழந்து இருப்பாய். இதை வைத்து கொள். உனக்கு உதவியாக இருக்கும். மழை நின்ற பிறகு என்னை வந்து பார்.” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனார்.

தன் மகனின் கையில் ரூபாய் நோட்டுக்களைப் பார்த்த சன்னாசிக்குப் பேச நா எழவில்லை.

அவன் மனம் தான் செய்த செயலையும் தன் மகன் செய்த செயலையும் எண்ணிப் பார்த்தது. ஒருஏழைத் தந்தை அழ அவரது பொருளைத் தான் எடுத்துக் கொண்டதால்தான் தான் அழ அந்தப் பொருள் தன்னை விட்டுச் சென்று விட்டது. என்ற உண்மையும் ஒரு நல்ல வழியில் வந்த பொருள் நாம் இழந்து விட்டாலும் நம்மை வந்து அடைந்தே தீரும்என்ற அறிவும் அவன் உள்ளத்தைச் சுட்டது. அவன் மனம் திருந்தியது போல் வானம் பளீரென ஒளிவிடத் தொடங்கியது.

வள்ளுவரின் வாக்கு எத்தனை சத்திய வாக்கு!

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.

 

நன்றி இணையம்