புத்தி பலம்…*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:07 | Best Blogger Tips

 


*கதை மாற்றத்தை தரும்*

*வணக்கம் கதை வாசிக்கும் உறவுகளே.*

*புத்தி பலம்…*

ஆத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞர் ஒருவர் இருந்தார். அவர் உடல் வலிமையே இல்லாதவர். ஆனால், பிறரது பலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காரியம் சாதித்து கொள்வதில் அவரை மிஞ்ச யாராலும் முடியாது.

இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் பலசாலி. இருப்பினும் அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள். ஒரு நாள் இளங்கோ தனது மளிகை கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்கு சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி வண்டியில் வைத்து இழுத்து கொண்டிருந்தார்.

வழியில் ஒரு பெரிய மேடு இருந்ததால் அவரால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினார். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவர், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தார்.


அப்பொழுது எதிர் திசையில் இருந்து அவரது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினார். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தார்.

இளங்கோ, அவருடைய நண்பர்கள் அருகில் வந்ததை பார்த்ததும் உங்களுக்கும் எனக்கும் ஒரு கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்! என்றார் இளங்கோ. இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தார்.


அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுக்கமுடியவில்லை.

மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சானிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்து அவர்களால் முடிந்தவரை கயிறை இழுத்தனர். எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தார். வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.

இளங்கோ தான் அவருடைய பலத்தை இழந்து மேலே வருகிறார் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. இந்த நோஞ்சானுக்கு ஏது இவ்வளவு பலம் என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.

கடைசியில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தார் இளங்கோ. அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று. பின்பு இளங்கோ, அவர்களிடம் உங்களிடம் உடல் பலம் மட்டும்தான் உள்ளது. ஆனால் என்னிடம் மூளை பலம் உள்ளது என்று சிரித்தபடி சொல்லி விட்டு சென்றார்.

*நீதி 😘ஒருவருக்கு உடல்பலம் முக்கியம் என்றாலும் மூளை பலம் இருந்தால் எதையும் வெல்ல முடியும்.

நன்றி இணையம்