கண்ணதாசனுடைய தனிச் சிறப்புகளில் ஒன்று மரபான தமிழ் இலக்கியங்களின் சிந்தனைகளை எளிமைப்படுத்தி திரைப்பாடலில் தருவது..
இதன் அடிப்படையை சிலர் புரிந்து கொள்ளவில்லை.திரைப்படம் என்பது பல்வேறு கலைகள் இணைந்த பல கோடி மக்களைச் சென்றடைகிற வெகுஜன வடிவம்..பாரம்பர்யமாக சிலருக்கு மட்டுமே தெரிந்த கலைமரபுகளை எளிமைப்படுத்தி சினிமாவில் பயன்படுத்துவது தவறில்லை..சினிமாவின் தேவையே அதற்காகத்தான்...
மரபுக் கவிதை என்று வைத்துக் கொண்டாலும் கூட தாக்கம் ( impact), தூண்டுதல் ( stimulation) ,ஆதர்ஸனம் ( inspiration) ஆகியவற்றைத் தன் மொழியின் மரபான இலக்கியங்களிலிருந்து பெற்றுக் கொள்ளாமல் அந்தரத்தில் மிதப்பது மாதிரி எதையாவது எழுதுகிறவன் நல்ல படைப்பாளி அல்ல..
கம்பராமாயணத்தில் தாடகையை வென்று ராமன் விஸ்வாமித்ர முனிவரோடு திரும்பி வருகிற போது அவன் கால் பட்டு அகலிகை பெண்ணாகிற தருணத்தில் ,
" இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனியிந்த வுலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர் வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ணலே
உன் கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன் "
' வண்ணம் ' என்கிற ஒரே சொல் விதவிதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்..கண்ணதாசன் இதே உத்தியை திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்..
" பால்வண்ணம் பருவம் கண்டு
வேல்வண்ணம் விழிகள் கண்டு
மான்வண்ணம் நான்கண்டுபாடுகிறேன்
கண்வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண்வண்ணம் நோய்
கொண்டு வாடுகிறேன்"
" யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும் "
" உன்னை நான் பார்த்த போது
மண்ணை நீ பார்க்கிறாயே
மண்ணை நான் பார்த்த போது
என்னை நீ பார்க்கிறாயே "
என்று எளிமைப்படுத்திப் பாடியிருப்பார்..
சில பாடல்களில் அவருடைய வழக்கமான குறும்புகளும் வெளிப்பட்டிருக்கின்றன.
" ஆட்டுவித்தால் ஆரொருவருவர் ஆடாதாரே
ஓட்டுவித்தால் ஆராரொருவரா ஓடாதாரே "
என்பது தேவாரத்தில் வருகிற அப்பர் பாடல் ,
இவர் 'கண்ண 'தாசனல்லவா ? தேவாரப் பாடலின் வரிகளைத் தூக்கிப் போய்,
" ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
கண்ணா
ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே
கண்ணா "
என்று 'வைணவத்திற்கு 'மதம் மாற்றியிருப்பார்..
பெரிய புராணத்தின் 'திருநீலகண்டர் புராணத்தில் ' கணவன் புறமாதரோடு உறவு கொண்டதால் வெகுண்ட நீலகண்டரின் மனைவி ' எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம் ' என்று சிவன் மீது ஆணையிட்டு அவர் தொடக் கூடாதென்று கட்டளையிடுவார் ..இந்தக் கருத்தை கண்ணதாசன் மிக அழகாகத் திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்..சிவாஜியை மனைவி ஜெயலலிதா ' தொடக்கூடாது ' என்று சொல்லி விடுவார்..அப்போது பாடுகிற பாடலில்தான் பெரிய புராணம் இணைந்து கொள்ளும்,
" நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே..
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே.. "
" புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும்சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல் தானது
திருநீலகண்டரின் மனைவி சொன்னது "
என்கிற வரிகள் வருகிற போது புராணம் எட்டிப் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் அதை வேறொரு பரிமாணத்தில்
மாற்றியிருப்பார்..கண்ணதாசனின் குறும்புகள் அத்தோடு நிற்கவில்லை..
" ஆலயம் செய்தோம்
அதில் அனுமதி இல்லை
நீ அந்தக் கூட்டமே
இதில் அதிசயமில்லை "
என்று எழுதியிருப்பார்..இது கதைச் சூழலையும் தாண்டிய நுணுக்கமான
குறும்பு..தீண்டாமைக்குக் காரணமான ஜாதி எது ? படத்தின் நாயகி ஜெயலலிதா யார் ? இந்த இரண்டையும் இணைத்து யோசித்து ' நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை ' என்கிற வரிகளை வாசித்தால் கண்ணதாசனின் நுட்பமான கிண்டல் தெரியும்
'குற்றாலக் குறவஞ்சி' என்று ஒரு இலக்கியம் இருக்கிறது..பொதுவாகக் குறவஞ்சியின் கதைக்கென்று சில விதிகள் உண்டு..உலா வருகிற தலைவனை ஏழு பருவத்து மகளிரும் கண்டு காதல் கொள்வார்கள்..தலைவிக்கும் காதல் வந்து உடல் மெலிவாள்..உடனே குறத்தி வந்து குறி சொல்வாள்..
இதுவரையிலான காட்சி எல்லா அக இலக்கியங்களிலும் வருவதுதான்..குறவஞ்சி அடுத்த கட்டத்துக்கு நகரும்..தலைவி குறத்திக்கு நகைகளைப் பரிசாகத் தருவாள்..
அதைப் போட்டுக் கொண்டு குறத்தி குறவனைப் பார்க்க வருவாள்..புதிய நகைகளோடு குறத்தியைக் கண்டதும் குறவனுக்குச் சந்தேகம் வந்து விடும் ' யார் தந்தார்கள் ?' என்று கோபமாகக் கேட்பான்..அதனால் குறத்தி ஊடி இருவரும் சமாதானமடைவதோடு குறவஞ்சி நிறைவுற்று விடும் ( நகை தந்த தலைவியின் காதலை புலவர்கள் அம்போவென்று இடையிலேயே விட்டு விடுவார்கள் )
இந்தப் பின்னணியை உள்வாங்கி அவர் திரையில் வடித்த பாடல்தான் ' நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் '
அந்தப் பாடலில் காதலியிடம் காதலன் கேட்கக் கூடாத நான்கு கேள்விகளைக் கேட்பான்
" நீ வரும் போது வழி மீது
யாருன்னைக் கண்டார் ?
உன் வளை கொஞ்சும் கை மீது
பரிசென்ன தந்தார் ?
உன் கருங்கூந்தல் அலைபாய
அவரென்ன சொன்னார் ?
உன் வடிவான இதழ் மீது
சுவையென்ன தந்தார் ? "
அவளுடைய பதில் கற்பனாவாதம் நிறைந்தது..ஆனால் காதல் பெருகி வரும் அந்த நேரத்தில் விவாதம் செய்யாமல் முடித்து வைப்பதற்கு இதுவே
பொருத்தமானது..முட்டாள்களிடம் யதார்த்தத்தின் திரை விரித்துக் காட்ட முடியாது..
" பொன் வண்டொன்று மலரென்று
முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே
மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி
மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன்
உன்னிடம் உண்மை கூற "
''அடேய் முட்டாள் ! கூந்தல் கலைந்திருப்பதுதானே உன் சந்தேகம் ? வண்டு விரட்டுச்சு..ஓடி வந்தேன்..அதனால முடி கலைஞ்சிருச்சு போதுமாடா ? ''
அடம் பிடிக்கும் சின்னப் பிள்ளைக்குத் தருகிற ஆரஞ்சு மிட்டாய் இது..
" நீ இல்லாமல் யாரோடு
உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக
தனியாக வந்தேன் "
என்கிற இடத்தில் மிகத்துல்லியமாக தன் மனதையும் , அதிலிருக்கும் மாறாத காதலையும் சொல்லி விடுவாள்..
சந்தேகமே இல்லாமல் கண்ணதாசன் தமிழ் சினிமாவிற்குள் இயங்கிய பெரும் மேதை..
இந்த நாளில் அவர் புகழ் பெருகட்டும்..