சுகி.சிவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுகி.சிவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடவுளின் அருளும்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:19 PM | Best Blogger Tips
Image result for கடவுளின் அருளும்
சுகி.சிவம் எழுதியது ;
பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் பேத்தி. திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது. 
பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது. அண்டாவை முற் றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி..." என்றாள்.
போ... பாட்டி" என மறுத்தாள் பேத்தி. அடியே, அடுக்களையில் இருக்கிற பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைக்கிறது பெரிய வேலையா? போய் அண்டாவைக் கொண்டு வந்து அப்படியே வை..." என உத்தரவிட் டாள் பாட்டி. வெறுப்பாய் ஓடி, பாட்டி சொன்னதைச் செய்துவிட்டுத் திரும்பி னாள் பேத்தி. அரை மணி நேரம் மழை கொட்டியது! இந்நேரம் அண்டா நிரம்பி இருக்கும் என ஆனந்தமடைந்த பாட்டி, திண்ணையை விட்டு முற்றத்துக்கு எழுந்து போனாள். பகீர் என்று ஆனது பாட்டிக்கு.
அண்டாவில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. ‘அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைஎன்று பாட்டி சொன்னதை, வேத வாக்காக எடுத்துக் கொண்டு, கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த அண்டாவை கவிழ்த்த வண்ணமே மழையில் வைத்து விட்டாள் பேத்தி. மழை என்னவோ வஞ்சனை இன்றிதான் பெய்தது. பாத்திரம்தான் கவிழ்ந்து கொண்டு தண்ணீரை ஏற்க மறுத்து விட்டது.
கடவுளின் அருளும் அப்படித்தான்! அது பொதுவாகவே அனைவருக்கும் கொட்டுகிறது. கவிழ்த்து வைத்தவர்களின் மனங்கள் அதில் ஒரு சொட்டுகூட ஏந்துவதில்லை. திறந்த மனத்தோடு, பிரபஞ்சத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டால் பஞ்ச பூதங்களும் நமக்குச் சாதகமானவையே!
வாழ்க வளமுடன்

 நன்றி இணையம்

வெற்றி நிச்சயம் --சுகிசிவம் - பகுதி. 10

மணக்கால் அய்யம்பேட்டை | 11:18 AM | Best Blogger Tips


10. ராம ஜயமா? ராம் டீம் ஜயமா?
இந்தியாவின் "நேஷனல் ஹீரோ' யார் தெரியுமா? ராமன். காரணம், அவரது வீரக் கதை. இந்திய மொழிகள் அத்தனையிலும் அந்தந்த மொழியின் தலைசிறந்த கவிஞர்களால் ராமாயணம் எழுதப்பட்டது. இந்தப் பெருமை ராமருக்கு முன்னும் பின்னும் எவருக்கும் கிடைத்திருக்க முடியாது. அப்படிப்பட்ட "நேஷனல் ஹீரோ' ராமனுடைய படம் மட்டும் தனியாக எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? வெறும் ராமனுக்கு மட்டும் சந்நிதி எந்தக் கோவிலிலாவது பார்த்ததுண்டா? இருக்காது. 
அவரது புகழ் பெற்ற படம் ஸ்ரீராம பட்டாபிஷேகப் படம். குறைந்த பட்சம் சீதை, லட்சுமணன், ஹனுமனோடு சேர்ந்துதான் ராமன் படம் இருக்கும்.
என்ன காரணம்?
எப்போதும் "க்ரூப் ஃபோட்டோ'வில் மட்டுமே ராமன் காட்சி தரும் காரணம் என்ன என்று யோசித்தது உண்டா?
ராமனது வெற்றி ஒரு குழுவினரின் வெற்றி. எந்தச் சீதையை மீட்க ராமன் போராடினாரோ அந்தச் சீதை கற்புடன் காத்திருந்ததால்தான் ராமனது வெற்றிக்கு அர்த்தம் விளைந்தது. ராமன் எங்கே கடல் கடந்து வரப்போகிறார்... நாம் ராவணன் அரண்மனையில் அடைக்கலம் புகுந்தால் என்ன என்று சீதை நினைத்திருந்தால் ராமனது வெற்றி அர்த்தமற்ற அவமானமாகி இருக்கும்.
ராமன் காடு போனதும் மக்கள் மனத்தை மாற்றி ராஜ்ஜியத்தைத் தன்பக்கம் கொண்டுபோக பரதன் நினைத்திருந்தால், ராமன் நாட்டை விட்டுக் கொடுத்த தியாகம் கேலிக்குரியதாகி இருக்கும். பாதுகையுடன் பரதன் காத்திருந்த பண்புதான் ராமனது வெற்றியைக் கவுரவப்படுத்தியது... அர்த்தமுள்ளதாக ஆக்கியது. 
காட்டில் பெண்ணுக்கும், நாட்டில் மண்ணுக்கும் இலக்குவன் ஆசைப்பட்டிருந்தால் ராமஜயம் காமஜயமாகக் களையிழந்து போயிருக்கும். இளைய பெருமாளின் இதயஉறுதியே ராமனது வெற்றியை உண்மையான வெற்றியாக்கியது.
சுயநலமற்ற, எந்த எதிர்பார்ப்புமற்ற தூய தொண்டன் அனுமன் கிடைக்கவில்லையென்றால் ராமன் இத்தனை வெற்றிகளை அடைந்திருக்க முடியுமா? 
தற்கொலை செய்ய இருந்த சீதையைக் காத்தான். பிரம்மாஸ்திரத்தால் சாய்ந்து கிடந்த இளையவனைச் சஞ்சீவி மலையால் எழுப்பினான். ராமன் வரவேண்டிய பதினான்கு வருடம் முடிந்தது என்று நெருப்பில் விழ இருந்த பரதனைத் தடுத்து நெருப்பை அவித்துப் பலரை மரணத்திலிருந்து மீட்டான் அனுமன். சீதை, இலக்குவன், பரதன் இந்த மூவரில் யார் இறந்து போயிருந்தாலும் ஸ்ரீராமன் பட்டாபிஷேகத்தன்று சந்தனத்திற்குப் பதில் சாம்பலை அல்லவா முகத்தில் பூச வேண்டியிருந்திருக்கும். 
எனவே, ஸ்ரீராமஜயம் என்பது ஒரு தனிமனித வெற்றி அன்று. ஒரு குழுவின் வெற்றி. ஒரு கூட்டத்தின் வெற்றி.
குறிப்பறிந்த, கொள்கைப் பிடிப்புடைய ஒரு குழு நிச்சயம் வெற்றி பெற முடியுமா என்கிற "டீம் வொர்க்' பற்றிய இந்தியப் பிரகடனம் ராமஜயம். அதனால்தான் ராமனுக்குத் தனியாகச் சந்நிதி இல்லை. ராமனுக்குத் தனியாகப் படமும் இல்லை. அறமே அவனது ஆத்மா. சீதை, பரதன், இலக்குவன், அனுமன் யாவரும் அவனது அங்க அவயவங்கள். அவர்கள் யாருமே தங்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதே இல்லை. அந்தக் குழு பிரிக்க முடியாதது. 
""
எவ்வளவு பலசாலியும் தனக்கேற்ற குழுவுடன் இணைகிற போதுதான் அதி உயர்வான வெற்றி பெறுகிறான்'' என்கிற அற்புதமான "மெúஸஜ்' ராமபட்டாபிஷேக "க்ரூப் ஃபோட்டோ'வில் எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் பலர் தனித்தனியாகப் பலசாலி... திறமைசாலி... அறிவாளி. ஆனால் குழுவாகப் பணியாற்றத் தகுதி அற்றவர்கள். தன்முனைப்புக் காரணமாக ஒருவரை ஒருவர் வெட்கமில்லாமல் கவிழ்க்கும் இயல்பினர். ஒரு முழுக் குழுவும் வேலைகளைப் பங்குபோட்டால் சுலபமான வெற்றி பெறலாம் என்பதை உணராமல், யார் சிக்கினார்களோ அவர்களை அதிகம் வேலை வாங்கும் நீசத்தனம் நமது நிஜ குணம்.
அகப்பட்ட மருமகளை அதிகம் கசக்கியதால் கூட்டுக்குடும்பங்கள் அழிந்தன. உழைக்கும் தொண்டனை மட்டுமே ஓடஓட விரட்டியதால் கட்சிகள் கலை இழந்தன. களை அடைந்தன.
இந்தியக் கிரிக்கெட் டீமை எடுத்துக் கொள்ளுங்கள். தனித்தனியாக எல்லோரும் நட்சத்திரங்கள்தான். கூட்டமாக ஆடவந்தால் கூட்டு முயற்சி குழம்பிப் போவது ஏன்? 
நான் கேள்விப்பட்ட ஒரு ஜோக். ஒரு டைவர்ஸ் கேஸ்... குழந்தை அப்பாவிடமா... அம்மாவிடமா என்பது பிரச்சினை. ""அப்பாவும் அடிப்பார். அம்மாவும் அடிப்பாள். போகமாட்டேன்'' என்கிறது குழந்தை. ""அடிக்காத ஒருவரிடம் குழந்தையை ஒப்படைப்பது என்றால் இந்தியக் கிரிக்கெட் டீமிடம்தான் ஒப்படைக்க வேண்டும். ஏன் என்றால் அவர்கள்தான் பந்தைக்கூட அடிப்பதில்லை'' என்கிறார் நீதிபதி. இப்போது நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. மகிழ்ச்சி.
கண்டம் விட்டுக் கண்டம் பறக்கும் பறவைகளிடமிருந்து "டீம் ஒர்க்' பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்படிப் பறக்கும் தெரியுமா? முதலில் ஒரு பறவை. அதன் இரண்டு இறக்கைகளையும் ஒட்டி இரண்டு. அவற்றின் இறகுகளை ஒட்டி நான்கு... இப்படி அவை அம்பு மாதிரி அணிவகுக்கும். 
ஏன் முதல் பறவையின் இறக்கைகளைப் பின்பற்றி நிற்கின்றன தெரியுமா? அதன் இறகு அசைப்பில் காற்று விலகுவதைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த பறவை சுலபமாக முன்னேறிவிடலாம்.
ஆனால் அலகாலும் இறகாலும் காற்றைக் கிழிப்பதால் முதல் பறவை மிக விரைவில் சோர்ந்து விடும். ஆனால் கடைசிப் பறவை சுகமாகக் களைப்படையாமல் வரும். மனித இனமாக இருந்தால் முதல் பறவையைச் சாகும்வரை வேலை வாங்குவோம். ஆனால் பறவைகள் பண்பானவை. முதல் பறவை களைத்ததும் பின்னால் கடைசி வரிசைக்கு வந்துவிடும். அடுத்து நிற்கும் பறவை தலைமை ஏற்கும். களைப்பேற்பட்டதும், சுலபமாகப் பறக்கும் கடைசி வரிசைக்கு வந்துவிடும். இப்படி மாறிமாறித் துயரங்களைப் பங்கு வைத்து அந்தக் குழுவே சுலபமாக முன்னேறும்.
குடும்பம், அலுவலகம், பொது இயக்கம் எதுவானாலும் "நானே எல்லாம்' என்று இழுத்துப் போட்டுக் கொண்டு துயரப்படாது கஷ்டங்களைப் பிறருக்கும் புரியவைப்பவர்கள், பிறரையும் பங்கேற்கச் செய்பவர்கள், அவர்கள் பங்களிப்பை மறவாது பாராட்டுபவர்கள் குழுவாக வெற்றி பெறுகிறார்கள். அந்தக் குழுவிற்கு வெற்றி நிச்சயம்


நல்லதை கற்றுக்கொள்! - சு.கி.சிவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:42 PM | Best Blogger Tips
"Home Work கணக்கு போட்டாச்சா?" என்று பாபுவை அதட்டினாள் அக்கா.

"கஷ்டமா இருக்குக்கா. ராமு எப்படியும் கணக்கு போட்டுட்டு வந்துடுவான். கோபுவும், நானும் அவனை பார்த்து காப்பி பண்ணி எழுதிக்குவோம். இதுதான் ஈஸின்னு கோபுவும் சொன்னான்" என அக்காவிடம் விளக்கமாகப் பேசினான் பாபு.

பாபுவை அருகில் அழைத்து "எங்க டீச்சர், ஒரு கதை சொன்னாங்க பாபு. அதை உனக்கு சொல்லட்டுமா?" என்றாள் அக்கா.

"ஹை, கதையா..?! சொல்லு... சொல்லு" என ஆர்வமானான் பாபு.

"காட்டில் மிகவும் சிரமப்பட்டு விறகுகளை வெட்டி ஒருவர் சம்பாதித்து வந்தார். ஒரு நாள் அவர் விறகு வெட்டிக் கொண்டு இருக்கும்போது ஒரு புலி கொழுத்த மான் ஒன்றை வேட்டையாடுவதை பார்த்தார். உடனே பாதுகாப்பாக மரத்தின் மேலே ஏறி உட்கார்ந்துவிட்டார். துரத்தி துரத்தி படாதபாடுபட்டு மானை புலி அடிச்சு... சாப்பிட்டது! ஆனால், அந்த மானை முழுமையாக சாப்பிட முடியாததால், மிச்ச இரையை அப்படியே போட்டுட்டு புலி போயிடுச்சு. பிறகு வயசான கழுதைப்புலி ஒண்ணு அங்கு நொண்டியபடியே வந்தது. அதுக்கு ஒரே சந்தோஷம். "கொழுத்த மான்! கஷ்டமே இல்லாம கடவுளா கொடுத்திருக்காரு. கடவுளுக்கு நன்றி!" என்று சொல்லிட்டு மானை முழுமையாக தின்றுவிட்டு ஏப்பம் விட்டது.

இதை பார்த்த விறகுவெட்டி, "அட உழைக்காத கழுதைப்புலிக்கு கடவுள் எவ்வளவு நல்ல உணவு கொடுத்தாரு. படாதபாடுபட்டு புலிக்கு கிடைச்ச அதே உணவு, உழைக்காமலேயே கழுதைப்புலிக்கு கிடைக்கும் படியா செஞ்ச கடவுளை நாம புடிச்சுக்கணும்னு!" நினைச்சு கோடாரியை தூக்கி வீசியெறிந்தாரு.

'இனிமேல் உழைக்கவே தேவையில்லை. கழுதைப் புலிக்கு உணவு கிடைக்கச் செய்தது போல் நமக்கான உணவையும் கடவுள் கொடுப்பாரு’ அப்படின்னு நினைச்சு மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டு நேராக கோவிலுக்குப் போனார்.

சாமி சாப்பாடு கொடுக்கும்னு இரண்டு நாள் இரவு பகலாக காத்திருந்தாரு. பசி மயக்கம். கண்ணை மூடினாரு. அவரது கனவுல கடவுள் வந்தாரு.

"முட்டாளே, உழைக்காம சாப்பிடணும்ங்கிற தப்பான விஷயத்தை கழுதைப்புலி கிட்டேயிருந்து நீ கற்றுக் கொள்வதற்காகவா உனக்கு அறிவை கொடுத்தேன். உழைச்சுதான் சாப்பிட வேண்டும் என்பதை புலியிடம் இருந்து கற்றுக்கொள்" என்றார்.

கடவுள் சொன்னதைக் கேட்டு புத்தி தெளிந்தவராக மீண்டும் கோடாரியை தூக்கிக் கொண்டு உழைப்பதற்காக காட்டுக்குச் சென்றார் அந்த விறகுவெட்டி!" என்று கதை சொல்லி முடித்தாள் அக்கா.

"பாபு, இந்த கதையில வர்ற மாதிரி காப்பி அடிக்கலாம் என்ற விஷயத்தை கோபுவிடம் இருந்து கத்துக்காதே. கஷ்டப்பட்டு கணக்கு போடணும்ங்கறதை ராமுவிடம் இருந்து கற்றுக்கொள்" என்றாள் அக்கா.








Via  Chutti Vikatan

கற்றது ஒழுகு! - சுகி.சிவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:41 PM | Best Blogger Tips
''தாத்தா, திருக்குறள் மனப்பாடப் பகுதியை ஒப்பிக்கிறேன். சரியா இருக்கான்னு பாருங்க...'' என்று தமிழ் புத்தகத்தை நீட்டினான் பாபு. ''சொல்லு'' என்றவாறே நிமிர்ந்து உட்கார்ந்தார் தாத்தா.

''கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக''

என்று வைகை எக்ஸ்பிரஸ் வேகத்தில் கடகடத்தான் பாபு. ''இந்த குறளுக்கு என்ன அர்த்தம் சொல்லு?'' என்று தாத்தா இடையில் கேள்வி கேட்டதும், ''இது மனப்பாடப் பகுதி, ஒப்பிச்சா போதும்... அர்த்தம் எல்லாம் கேட்க மாட்டாங்க...'' என்று நழுவினான் பாபு.

''பாபு, எதை கற்றாலும் அதன் உண்மையான அர்த்தம் தெரிஞ்சு கத்துக்கணும். அதைவிட முக்கியம், அப்படி கற்ற வழியிலே நடக்கணும். இதுதான் இந்த குறளோட அர்த்தம். இது வெறும் மதிப்பெண்கள் வாங்க மட்டுமல்ல. வாழ்க்கை முழுக்க பயன்படுற திருக்குறள்'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.

''இப்பதான் நான் ஒரு கதை படிச்சேன். ஏசுவின் தொண்டராய் தன்னை அர்ப்பணித்து கொண்டவர் தெய்வீக ஊழியரான புனித பிரான்சிஸ் அசிசி என்ற பாதிரியார். அவர் ஒரு துறவியர் இல்லத்தின் தலைவர். பல துறவிகள் அந்த இல்லத்தில் தங்கி, அவரிடம் பைபிள் கல்வி கற்று தொண்டர்களாக தயாராகினார்கள்.

ஒருநாள் இரவு அந்த இல்லத்தின் வாசலில் வந்த ஓர் ஏழைப் பெண், ''பசிக்கிறது, ஏதாவது பிச்சை தாருங்கள்'' என்று அழுதாள். இரக்கம் மிகுந்த புனித பிரான்சிஸ் அசிசியார் தமது இல்லத்திலிருந்த மற்றொரு துறவியிடம், ''அந்த பெண் பசியாற ஏதாவது கொண்டு வந்து தாருங்கள்'' என்றார்.

உள்ளே போய்விட்டு வெறுங்கையுடன் திரும்பி வந்த துறவி, ''இவள் மிகுந்த பாவம் செய்திருக்க வேண்டும். இரவு உணவு முடிந்துவிட்டது. உள்ளே ஒரு சின்ன ரொட்டித் துண்டு கூட மிச்சம் இல்லை'' என்றார்.

''அப்படியானால் அவளுக்கு வேறு ஏதாவது கொடுத்து அனுப்ப முடியுமா பாருங்கள்'' என்றார் புனித பிரான்சிஸ் அசிசி.

கொஞ்சம் எரிச்சலுடன் ''வேறு எதைக் கொடுப்பது? இது துறவியர் இல்லம். இங்கு வேறு என்ன இருக்கும்? வேண்டுமானால் நீங்கள் எங்களுக்கு பாடம் சொல்லுகிற வேத புத்தகம்தான் இருக்கிறது'' என்றார் அந்த துறவி.

''ஆஹா, நல்ல யோசனை! இவள் அதை விலைக்கு விற்றால் நல்ல பணம் கிடைக்கும். பிற ஊழியர்களிடம் கருணைக்காட்டு என்று ஏசுபிரான் உபதேசித்த புத்தகத்தை தினமும் நாம் வாசித்துவிட்டு இரக்கமான செயல்கள் செய்யாமல் இருப்பதைவிட படித்ததை பின்பற்றும் முகமாக இரக்க செயல்கள் செய்வதே நலம்'' என்று வேத புத்தகத்தை அப்பெண்ணுக்கு கொடுத்துவிட்டார் அவர்.

இந்த காலம் போல புத்தகங்கள் அவ்வளவு விலை மலிவாக கிடைக்காத பழைய காலம் அது. அச்சு இயந்திரங்கள் இல்லாததால் வெகு சிரமப்பட்டு கையாலேயே எழுதப்பட்ட நூல் அது. எனவே அது நல்ல விலைக்கு வாங்கப்படும். ஆனால், அதே போன்று இன்னொன்று கிடைப்பது கடினம். அப்படிப்பட்ட நூலை கற்பதைவிட கற்ற வழியில் நிற்பது முக்கியம் என்ற நோக்கத்தில் புத்தகத்தை கொடுத்தார் புனித பிரான்சிஸ் அசிசி.

''பாபு, இதையே பாரதியார் புதிய ஆத்திச்சூடியில், 'கற்றது ஒழுகு'என்கிறார். புரிஞ்சுதா'' என்றார் தாத்தா.

குறள் மனப்பாடம் செய்ய மட்டுமல்ல... வாழ்க்கையில் பின்பற்றுவதற்கும் தான் என்பது பாபுக்கு புரிந்து விட்டது.


Via  Chutti Vikatan