வெற்றி நிச்சயம் --சுகிசிவம் - பகுதி. 10

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:18 | Best Blogger Tips


10. ராம ஜயமா? ராம் டீம் ஜயமா?
இந்தியாவின் "நேஷனல் ஹீரோ' யார் தெரியுமா? ராமன். காரணம், அவரது வீரக் கதை. இந்திய மொழிகள் அத்தனையிலும் அந்தந்த மொழியின் தலைசிறந்த கவிஞர்களால் ராமாயணம் எழுதப்பட்டது. இந்தப் பெருமை ராமருக்கு முன்னும் பின்னும் எவருக்கும் கிடைத்திருக்க முடியாது. அப்படிப்பட்ட "நேஷனல் ஹீரோ' ராமனுடைய படம் மட்டும் தனியாக எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? வெறும் ராமனுக்கு மட்டும் சந்நிதி எந்தக் கோவிலிலாவது பார்த்ததுண்டா? இருக்காது. 
அவரது புகழ் பெற்ற படம் ஸ்ரீராம பட்டாபிஷேகப் படம். குறைந்த பட்சம் சீதை, லட்சுமணன், ஹனுமனோடு சேர்ந்துதான் ராமன் படம் இருக்கும்.
என்ன காரணம்?
எப்போதும் "க்ரூப் ஃபோட்டோ'வில் மட்டுமே ராமன் காட்சி தரும் காரணம் என்ன என்று யோசித்தது உண்டா?
ராமனது வெற்றி ஒரு குழுவினரின் வெற்றி. எந்தச் சீதையை மீட்க ராமன் போராடினாரோ அந்தச் சீதை கற்புடன் காத்திருந்ததால்தான் ராமனது வெற்றிக்கு அர்த்தம் விளைந்தது. ராமன் எங்கே கடல் கடந்து வரப்போகிறார்... நாம் ராவணன் அரண்மனையில் அடைக்கலம் புகுந்தால் என்ன என்று சீதை நினைத்திருந்தால் ராமனது வெற்றி அர்த்தமற்ற அவமானமாகி இருக்கும்.
ராமன் காடு போனதும் மக்கள் மனத்தை மாற்றி ராஜ்ஜியத்தைத் தன்பக்கம் கொண்டுபோக பரதன் நினைத்திருந்தால், ராமன் நாட்டை விட்டுக் கொடுத்த தியாகம் கேலிக்குரியதாகி இருக்கும். பாதுகையுடன் பரதன் காத்திருந்த பண்புதான் ராமனது வெற்றியைக் கவுரவப்படுத்தியது... அர்த்தமுள்ளதாக ஆக்கியது. 
காட்டில் பெண்ணுக்கும், நாட்டில் மண்ணுக்கும் இலக்குவன் ஆசைப்பட்டிருந்தால் ராமஜயம் காமஜயமாகக் களையிழந்து போயிருக்கும். இளைய பெருமாளின் இதயஉறுதியே ராமனது வெற்றியை உண்மையான வெற்றியாக்கியது.
சுயநலமற்ற, எந்த எதிர்பார்ப்புமற்ற தூய தொண்டன் அனுமன் கிடைக்கவில்லையென்றால் ராமன் இத்தனை வெற்றிகளை அடைந்திருக்க முடியுமா? 
தற்கொலை செய்ய இருந்த சீதையைக் காத்தான். பிரம்மாஸ்திரத்தால் சாய்ந்து கிடந்த இளையவனைச் சஞ்சீவி மலையால் எழுப்பினான். ராமன் வரவேண்டிய பதினான்கு வருடம் முடிந்தது என்று நெருப்பில் விழ இருந்த பரதனைத் தடுத்து நெருப்பை அவித்துப் பலரை மரணத்திலிருந்து மீட்டான் அனுமன். சீதை, இலக்குவன், பரதன் இந்த மூவரில் யார் இறந்து போயிருந்தாலும் ஸ்ரீராமன் பட்டாபிஷேகத்தன்று சந்தனத்திற்குப் பதில் சாம்பலை அல்லவா முகத்தில் பூச வேண்டியிருந்திருக்கும். 
எனவே, ஸ்ரீராமஜயம் என்பது ஒரு தனிமனித வெற்றி அன்று. ஒரு குழுவின் வெற்றி. ஒரு கூட்டத்தின் வெற்றி.
குறிப்பறிந்த, கொள்கைப் பிடிப்புடைய ஒரு குழு நிச்சயம் வெற்றி பெற முடியுமா என்கிற "டீம் வொர்க்' பற்றிய இந்தியப் பிரகடனம் ராமஜயம். அதனால்தான் ராமனுக்குத் தனியாகச் சந்நிதி இல்லை. ராமனுக்குத் தனியாகப் படமும் இல்லை. அறமே அவனது ஆத்மா. சீதை, பரதன், இலக்குவன், அனுமன் யாவரும் அவனது அங்க அவயவங்கள். அவர்கள் யாருமே தங்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதே இல்லை. அந்தக் குழு பிரிக்க முடியாதது. 
""
எவ்வளவு பலசாலியும் தனக்கேற்ற குழுவுடன் இணைகிற போதுதான் அதி உயர்வான வெற்றி பெறுகிறான்'' என்கிற அற்புதமான "மெúஸஜ்' ராமபட்டாபிஷேக "க்ரூப் ஃபோட்டோ'வில் எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் பலர் தனித்தனியாகப் பலசாலி... திறமைசாலி... அறிவாளி. ஆனால் குழுவாகப் பணியாற்றத் தகுதி அற்றவர்கள். தன்முனைப்புக் காரணமாக ஒருவரை ஒருவர் வெட்கமில்லாமல் கவிழ்க்கும் இயல்பினர். ஒரு முழுக் குழுவும் வேலைகளைப் பங்குபோட்டால் சுலபமான வெற்றி பெறலாம் என்பதை உணராமல், யார் சிக்கினார்களோ அவர்களை அதிகம் வேலை வாங்கும் நீசத்தனம் நமது நிஜ குணம்.
அகப்பட்ட மருமகளை அதிகம் கசக்கியதால் கூட்டுக்குடும்பங்கள் அழிந்தன. உழைக்கும் தொண்டனை மட்டுமே ஓடஓட விரட்டியதால் கட்சிகள் கலை இழந்தன. களை அடைந்தன.
இந்தியக் கிரிக்கெட் டீமை எடுத்துக் கொள்ளுங்கள். தனித்தனியாக எல்லோரும் நட்சத்திரங்கள்தான். கூட்டமாக ஆடவந்தால் கூட்டு முயற்சி குழம்பிப் போவது ஏன்? 
நான் கேள்விப்பட்ட ஒரு ஜோக். ஒரு டைவர்ஸ் கேஸ்... குழந்தை அப்பாவிடமா... அம்மாவிடமா என்பது பிரச்சினை. ""அப்பாவும் அடிப்பார். அம்மாவும் அடிப்பாள். போகமாட்டேன்'' என்கிறது குழந்தை. ""அடிக்காத ஒருவரிடம் குழந்தையை ஒப்படைப்பது என்றால் இந்தியக் கிரிக்கெட் டீமிடம்தான் ஒப்படைக்க வேண்டும். ஏன் என்றால் அவர்கள்தான் பந்தைக்கூட அடிப்பதில்லை'' என்கிறார் நீதிபதி. இப்போது நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. மகிழ்ச்சி.
கண்டம் விட்டுக் கண்டம் பறக்கும் பறவைகளிடமிருந்து "டீம் ஒர்க்' பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்படிப் பறக்கும் தெரியுமா? முதலில் ஒரு பறவை. அதன் இரண்டு இறக்கைகளையும் ஒட்டி இரண்டு. அவற்றின் இறகுகளை ஒட்டி நான்கு... இப்படி அவை அம்பு மாதிரி அணிவகுக்கும். 
ஏன் முதல் பறவையின் இறக்கைகளைப் பின்பற்றி நிற்கின்றன தெரியுமா? அதன் இறகு அசைப்பில் காற்று விலகுவதைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த பறவை சுலபமாக முன்னேறிவிடலாம்.
ஆனால் அலகாலும் இறகாலும் காற்றைக் கிழிப்பதால் முதல் பறவை மிக விரைவில் சோர்ந்து விடும். ஆனால் கடைசிப் பறவை சுகமாகக் களைப்படையாமல் வரும். மனித இனமாக இருந்தால் முதல் பறவையைச் சாகும்வரை வேலை வாங்குவோம். ஆனால் பறவைகள் பண்பானவை. முதல் பறவை களைத்ததும் பின்னால் கடைசி வரிசைக்கு வந்துவிடும். அடுத்து நிற்கும் பறவை தலைமை ஏற்கும். களைப்பேற்பட்டதும், சுலபமாகப் பறக்கும் கடைசி வரிசைக்கு வந்துவிடும். இப்படி மாறிமாறித் துயரங்களைப் பங்கு வைத்து அந்தக் குழுவே சுலபமாக முன்னேறும்.
குடும்பம், அலுவலகம், பொது இயக்கம் எதுவானாலும் "நானே எல்லாம்' என்று இழுத்துப் போட்டுக் கொண்டு துயரப்படாது கஷ்டங்களைப் பிறருக்கும் புரியவைப்பவர்கள், பிறரையும் பங்கேற்கச் செய்பவர்கள், அவர்கள் பங்களிப்பை மறவாது பாராட்டுபவர்கள் குழுவாக வெற்றி பெறுகிறார்கள். அந்தக் குழுவிற்கு வெற்றி நிச்சயம்