பொட்டு வைப்பதும் திலகம் இடுவதும் எதற்காக?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:20 AM | Best Blogger Tips

கண்டிப்பாக படியுங்கள் ,பகிருங்கள்
பொட்டு வைப்பதும் திலகம் இடுவதும் எதற்காக?
நம்முடைய பாரம்பரியத்தில் ஆண்கள் திலகமிடுதலும், பெண்கள் பொட்டு வைத்தலும் மரபாகும். பெண்கள் வட்டமாக வைத்தல் பொட்டு என்றும், ஆண்கள் நேர்கோடாக வைத்தல் திலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. பெண்கள் தான் பொட்டு வைக்கவேண்டும்; ஆண்கள் தான் திலகம் வைக்கவேண்டும் என்ற வரையறை கிடையாது. ஆனால், இந்துக்களின் புருவமத்தியில் கண்டிப்பாக திலகம் அல்லது பொட்டு இருக்கும்.
திலகம் அல்லது பொட்டு மூன்றாவது கண்ணை குறிக்கின்றது. மூன்றாவது கண் ஐயம் தெளிந்த தூய அறிவு, பகுத்தறிவு, விவேகம், மதிநலம் மற்றும் தெளிவுபெற்ற நிலையை உணர்த்துகின்றது. இந்த மூன்றாவது கண் அனைவரிடத்தும் அமைந்திருந்தாலும், புலன்களைக் கட்டுப்படுத்தி, மனத்தை அடக்கி, ஆன்மிக பாதையில் பயணித்து இறைவனின் பேரறிவைப் பெற்று ஆத்மஞானம் எய்தியவனுக்கே முழுமையாக திறக்கும்.
ஏழு சக்கரங்களுள் ஒன்றான ஆக்ஞா எனும் சக்கரம் புருவ மத்தியில் தான் அமைந்துள்ளது. இது ஞாபகசக்தி மற்றும் சிந்தனை ஆற்றலின் இருப்பிடமாகும். வழிபாட்டிற்குப் பின் புருவமத்தியில் திலகமிடும் போது, “ஈஸ்வரா, உன்னை என்றும் மறவாத வரம் கொடு. நான் ஆற்றும் ஒவ்வொரு செயலிலும் நான் நன்கு சிந்தித்து செயல்பட துணைபுரிவாயாக. என்னுடைய செயல்கள் அனைத்தும் தருமநெறிகளில் இருந்து நழுவாதபடி அருள்புரிவாயாக.” என்று மனத்தில் நினைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை நாம் இறைவனின் முன்னிலையில் செய்த பிரார்த்தனையை மறந்து போனாலும், நம்முடைய புருவமத்தியில் நிலைக்கொண்டிருக்கும் திலகம் நமக்கு அதனை நினைவுபடுத்தும். தவறான செயல்களிலோ அல்லது எண்ணங்களிலோ நாம் தவறுதலாக ஈடுபட முனைந்தால், நம்மைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிறுத்தும். ஆகவே, புருவமத்தியில் இடும் திலகம் குற்றமானவற்றில் இருந்து நம்மை தற்காக்கும் காப்பு.
நம்முடைய உடல் எப்போதும் சக்தியை வெளிபடுத்திக் கொண்டே இருக்கும் ஒரு சாதனமாகும். இந்த சக்தியை நாம் எங்கு அதிகமாக செயல்படுத்துகிறோம் என்பதே மிகமுக்கியம். ஆதலால் தான், நாம் துக்கப்பட்டாலோ அல்லது எதையாவது எண்ணி வருந்தினாலோ அது நமக்கு தலைவலியைக் கொடுக்கின்றது. எதிர்மறையான எண்ணங்கள் (சக்திகள்) புருவமத்தியில் குவிகையில், அது வெப்பமாகி தலைவலியை உண்டாக்கின்றது. திலகமிட பயன்படும் மஞ்சள், கும்குமம், சந்தனம், நீறு போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இவை எதிர்மறையான சக்திகள் உட்புகாமலும் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியாக்கவும் துணைபுரிகின்றன. இதனால் நெற்றியில் திலகம் இருக்கும்வரை நாம் புத்துணர்ச்சியுடனும் நேர்மறையான எண்ணங்களுடனும் செயல்படலாம்.
மூன்று கோடுகளைக் கொண்டு நெற்றியில் திலகமிடுவர். திருநீற்றுப் பட்டையும், திருநாமம் சாத்தலும் மூன்று கோடுகளை உடையது. மூன்று கோடுகள், (++ம்) ஓம் எனும் பிரணவ மந்திரத்தைக் குறிக்கின்றன. இவை மூன்றுவகையான உணர்வுநிலைகளாக விழிப்பு, கனவு, கனவற்ற உறக்கம் ஆகியவையும் குறிக்கின்றன. முக்குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் மற்றும் ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், கரண சரீரம் எனும் மூன்றுவகை சரீரங்களையும் குறிக்கின்றது.
பாரம்பரிய முறைபடி, மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறங்களிலே திலகங்கள் அமைந்துள்ளன. கும்குமம் சிவப்பு நிறத்தையும், சந்தனம் மஞ்சள் நிறத்தையும், திருநீறு வெள்ளை நிறத்தையும் காட்டும். திருநீற்றின் தத்துவங்களை நிறைய பதிவுகளில் பார்த்தோம். அதேபோல தான் சந்தனமும் நிறைய மருத்துவ குணம் நிறைந்தது. மஞ்சளால் தயாரிக்கப்படும் கும்குமமும் மருத்துவ குணமுடையது. இவை மருத்துவ குணங்கள் மட்டுமல்லாது ஆழமான ஆன்மிக தத்துவங்களையும் கொண்டுள்ளன.
வெள்ளைநிறம் தூய்மை, அமைதி, பொறுமை ஆகியவற்றைக் குறிக்கும். சிவப்புநிறம் பேராற்றல், வலிமை, உறுதி ஆகியவற்றைக் குறிக்கும். மஞ்சள்நிறம் செல்வம், செழுமை, வளமை போன்றவற்றைக் குறிக்கும்.
மேலும், வீரதிலகம் என்பது வெற்றி மற்றும் வீரத்தின் அடையாளமாக ஆண்களும் பெண்களும் அணிவர். இது சிவப்புநிறத்தில் நேர்க்கோடாக அமைந்திருக்கும். போர்களில் வெற்றி வாகை சூடிய வீரர்களுக்கு மக்கள் நெற்றியில் வீர திலகமிட்டு போற்றுவர். திருமணமான பெண்கள் புருவமத்திக்கு மேலே தலை உச்சியில் செந்நிற சிந்தூரம் இடுவர். இதுநான் திருமணமான பெண். நான் உறுதியுடனும் வலிமையுடனும், பேராற்றலோடு என் குடும்பத்தை வழிநடத்துவேன்என்பதைக் குறிக்கும். திருமணமான ஆண்களும் நெற்றியில் செந்நிற திலகமிடுவர். ஆனால், இன்று திருமணத்தின் போது மட்டும் தான் அணிகின்றனர்.
வெளிநாட்டினர் நம்முடைய திலகமிடும் மரபு வெறும் அழகுப்படுத்த மட்டுமல்ல, இது ஆழ்ந்த தத்துவமும் அறிவியலும் அடங்கியது என உணர்ந்து வியக்கின்றனர். நம்முடைய வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் இவர்கள் புருவமத்தியில் திலகமிட்டுக் கொள்வதையும் நாம் காணலாம். ஆனால் நம்மவர்கள் திலகமிடுவதின் அருமை புரியாமல் அதைப் புறக்கணித்து வருகின்றனர். ”சந்தனக்கட்டையை சுமந்திருப்பவனுக்கு அது பாரமாக தான் தெரியுமே தவிர, அதன் உண்மையான மதிப்பு தெரியாதுஎனும் பழமொழிக்கு நம்மவரில் சிலருக்கு நன்றாகப் பொருந்தும்.
தற்போது திலகங்கள்/பொட்டுகள் பல வண்ணங்களில், பல வடிவங்களில், செயற்கையான முறையில், நெகிழியால் செய்யப்பட்டஸ்டிக்கர்களில் அழகுக்காக வைக்கப்படுகின்றன. இவற்றை அணிபவர்கள் வெறும் அழகுக்காக தான் அணிகிறார்கள். தங்களை அழகாக வைத்துக் கொள்ள அவர்கள் விருப்பப்படுவதில் குற்றமில்லை. ஆனால், இதுபோன்ற செயற்கையான திலகங்களும் பொட்டுகளும் வைப்பதால் எந்தவொரு பலனும் இல்லை. உண்மையில் மேற்கூறிய பலன்களை அடைய விரும்புவோர், பாரம்பரிய முறையில் திலகம்/பொட்டு வைத்தலே சாலச் சிறப்பு.
ஹரி ஓம் நமோ நாராயணா

 நன்றி இணையம்