
பொதுவாகவே பத்து ரூபாய்
சாப்பாட்டுக்கடையில் மதியம் உணவு வழங்கும் நேரமான 12 மணியிலிருந்து 1.30 மணி வரை பெரும்பாலும் எந்த மொபைல் அழைப்பையும் ஏற்க மாட்டேன்.
பசியுடன் வருபவர்களை சரியாக கவனித்து
உபசரிக்க முடியாது என்பதால்.. உணவு வழங்கும் நேரத்தில் மொபைலில்
பேசிக்கொண்டிருப்பதை தவிர்த்து விடுவேன்.
உணவு வழங்கி முடித்த பிறகு 1.30 மணிக்கு மேல் தவறவிட்ட அனைத்து அழைப்புகளை
கவனித்து, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி விடுவதை வழக்கமான
வைத்திருக்கிறேன்.
இன்றும் மதியம் சாப்பிட வருபவர்களுக்கு டோக்கன் வழங்கிக்கொண்டிருந்த போது..
சுமார் ஒரு மணியளவில் வந்த ஒரு அழைப்பை கவனித்தேன்.
ஏனோ அந்த அழைப்பை தவிர்க்க வேண்டாம் என்று மனதின் ஓரத்தில் ஒரு மெல்லிய குரல் அசரீரியாக ஒலிக்க..
அந்த அழைப்பை உயிர்ப்பித்து 'வணக்கம்' சொன்னேன்.
எதிர்பக்கம் சில கண நொடிகள் அமைதி காத்தபின் 30 - 32 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பேசினார்.
''சார்..
நான் ராஜேஷ், காளையார்கோவிலிருந்து (பெயர் ஊர் மாற்றப்பட்டுள்ளன) பேசறேன்.
சமீபத்தில் ஒரு மாசமாகவே பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடை ரீல்ஸ் எல்லாம்
பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பார்த்துக்கிட்டிருக்கேன்.
அங்கே
சாப்பிட வர்றவங்களுக்கு நானும் சாப்பாடு கொடுக்கணும்னு ஆசைப்படறேன். நான்
பணம் அனுப்பிச்சா.. நீங்க சாப்பாடு கொடுத்துடுவீங்களா, சார்..?''
என்று தயக்கத்துடன் கேட்க..
''சரிங்க தம்பி.. கொடுத்துடலாம்..''
என்று
(எதிரே வந்து நின்ற மூட்டை தூக்கும் வேலை செய்யும் வயதான பெரியவர் ஒருவர்
அணிந்திருந்த மொத்தமான டிராயர் கிழிந்திருப்பதை கவனித்துக்கொண்டே) நான்
சொன்னதும்..
''எவ்வளவு சார் பணம் அனுப்பணும்..? சொன்னீங்கன்னா இப்போ அனுப்பிடறேன்..!''
என்று தொடர்ந்த தயக்கத்துடன் எதிர்பக்கம் குரல் ஒலித்ததை கவனித்தேன்.
எதிரே
நின்ற பெரியவருக்கு எப்போதும் கைவசம் வைத்திருக்கும் கைலிகளில் ஒன்றை
எடுத்து கொடுத்து, அவரிடம் பிங்க் கலர் டோக்கனை கொடுத்து அவரை சாப்பிட
அனுப்பி விட்டு..
மொபைலில், ''நீங்க எத்தனை பேருக்கு
சாப்பாடு கொடுக்கணும்னு விரும்பறீங்களோ.. அது ஒருத்தராக இருந்தாலும் சரி..
பத்து பேராக இருந்தாலும் சரி.. நூறு பேராக இருந்தாலும் சரி.. அந்தளவுக்கு
பணம் அனுப்பினால் போதும்ங்க தம்பி. நாம சாப்பாடு கொடுத்துடலாம்..!''
என்று சொன்னேன்.
''சரிங்க சார்.. ஐம்பது பேருக்கு சாப்பாடு கொடுக்கறதுக்கு பணம் இப்போ அனுப்பிடறேன் சார்.'
என்று சொன்ன குரலில் இப்போது தயக்கம் போய் தழுதழுப்பு பரவிக்கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டே..
''சரிங்க தம்பி. நீங்க இதே நம்பருக்கு வாட்ஸ் அப் இருக்கு. அதுல உங்க பேரையும் உங்க பேமிலி பேர்களையும் அனுப்பிடுங்க.
நாளைக்கு நாம சாப்பாடு கொடுத்துடலாம்..''
என்றேன்..
அதிகமான சதவீத தழுதழுப்பான குரலில்..
''சார்.. என்னோட வொய்ப் பேரு சங்கரி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
அவங்க பேருல சாப்பாடு கொடுத்துடலாம் சார்..''
என்று சொல்லும்போதே அந்த பக்கம் அந்த ராஜேஷ் உடைந்துக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.
சமையலறையில் இருந்த விஜியை அழைத்து வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்க சைகையால் சொல்லி விட்டு..
கடைக்கு வெளியே வந்து போக்குவரத்து நிறைந்த சாலையை கடந்து எதிரே இருந்த ஹவுசிங் போர்டு கட்டிட நிழலில் போய் நின்று..
''தம்பி.. உங்க ரெண்டு பேர் பேர்லேயும் கொடுத்துடலாமே..?
ஏன் அவங்க பேர்ல மட்டும் கொடுக்க சொல்றீங்க..?''
என்று யோசனையுடன் நான் கேட்டதும்..
கரகரத்த
குரலில் ராஜேஷ், '' சார்.. நான் நல்லா வசதியோடு இருந்தேன். பிஸினஸ்ல
நஷ்டமாகி கோடிக்கணக்கான பணத்தை கோட்டை விட்டுட்டேன் சார். இதனால என்கிட்டே
என் வொய்ப் கோவிச்சுக்கிட்டு போய் மூணு வருஷமாச்சு.. இன்னிக்கு வரைக்கும்
நான் எத்தனையோ தடவை போன் செஞ்சும் எடுக்க மாட்டேங்கறாங்க. மெசேஜ்
அனுப்பிச்சாலும் ரிப்ளை செய்ய மாட்டேங்கறாங்க.. டைவர்ஸுக்கு அப்ளை
பண்ணியிருக்காங்க சார்.
நான் ஒத்துக்காம இருக்கேன்.
ஆனாலும் என்னோட உயிரே அவங்கதான் சார்.
நாளைக்கு அவங்க பிறந்த நாள் சார்..
என்கிட்டே
இப்போ கொஞ்சமாத்தான் பணம் இருக்கு. அதை அனுப்பறேன். அவங்க பேர்ல அங்கே
பசியோட வர்றவங்களுக்கு சாப்பாடு கொடுங்க சார்.. சாப்பிடறவங்களோட வாழ்த்து
அவங்களுக்கு கிடைக்கட்டும் சார்..
அது போதும் எனக்கு..
அவங்கதான் சார் எனக்கு எல்லாமே..''
என்று சொல்லும்போதே முழுமையாக உடைந்து அழ ஆரம்பிக்க..
எனக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சில நொடிகள் அமைதியாக இருந்த நான்..
அலைபேசி அழைப்பை துண்டித்து விட்டு..
மீண்டும் சாலையை கடந்து பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடைக்குள் வந்து..
சாப்பிட வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்க ஆரம்பித்தேன்.
சில நிமிடங்கள் கழித்து,
ராஜேஷ் வாட்ஸ் அப் எண்ணிற்கு
'நாளை உங்க மனைவியின் பெயரில் உணவு வழங்கி விடுவோம்.
இனி உங்கள் வாழ்வில் உங்கள் விருப்பம் போல அனைத்தும் மாறும். அனைத்தும் நிகழும்..
உங்கள் பொருளாதார சூழலும்..உங்கள் மனைவியின் மனமும் மாறலாம்.
இதை நான் ஃபார்மாலிட்டிக்காக சொல்லவில்லை.
பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடையின் அனுபவத்தில் சொல்கிறேன், தம்பி..!''
என்று என் மனதில் அந்த நிமிடம் தோன்றியதை மெசேஜாக அனுப்பி விட்டு..
எதிரே
தட்டுத்தடுமாறி தள்ளாடியவாறு படியேறி வந்து நின்ற (வழக்கமாக கடைக்கு
சாப்பிட வரும் எண்பது வயதிற்கு மேல் இருக்கும்) அந்த நலிந்த தேகம் கொண்ட
பெண்மணியிடம்..
''என்னம்மா சாப்பிட்டீங்களா..? சாப்பிடுறீங்களா..?''
என்று அவருக்கு கொடுக்க பிங்க் கலர் டோக்கனை எடுத்துக்கொண்டிருக்கும்போதே..
அந்த வயதான பெண்மணி என்னருகில் வந்து நடுநடுங்கும் தன்னுடைய கைகளால் என்னுடைய தலையை தடவி கொடுத்து..
''வயிறார சாப்பிட்டுட்டேன் கண்ணு. நீ உன் மனசில நினைச்சது எல்லாம் நிறைவேறி சந்தோசமாக இருப்பே..!''
என்று சொல்ல சொல்ல..
எனக்கு அந்த ராஜேஸும் சங்கரியும் நினைவுக்கு வந்தனர்..!
Copy from FB


