ருத்ராக்ஷ மகிமை
சிவபெருமானை அரும்பெரும் தெய்வமாக வழிபடும் வகை சைவம் என்றழைக்கப்படும். சைவ வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் என்று போற்றப்படுவார்கள்.
சைவர்களின் இன்றியமையாத மூன்று கடமைகளாக சைவ புராணங்கள் கூறுபவை :
1. எப்பொழுதும் சிவ நாமத்தினையும், பஞ்சாக்ஷரத்தையும் ஜபித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.
2. சிவன் தன் மேனியின் மீது பூசிக்கொண்டிருக்கும் விபூதியை சைவர்கள் எப்பொழுதும் தரித்திருக்க வேண்டும்.
3. சிவாம்சமாக உள்ள ருத்ராக்ஷம் அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
இதில், ருத்ராக்ஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் சிறப்புகளைக் காண்போம்.
ருத்ராக்ஷம் :
ருத்ராக்ஷம் பற்றி புராணங்கள் பல்வேறு தகவல்களைத் தருகின்றன.
சிவபெருமான்,
தேவர்களை வருத்திக்கொண்டிருந்த மூன்று அசுரர்களை அழிக்க வேண்டி, திரிபுர
ஸம்ஹாரம் செய்த போது, சிவனின் (ருத்ரன்) கண்(அக்ஷம்)களிலிருந்து புறப்பட்ட
நீர்த்திவலைகள் பூமியில் விழ அதிலிருந்து ருத்ராக்ஷம் தோன்றியது எனவும்,
ஒரு
சமயம், உலகம் உய்ய பல்லாயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்ய, தவம் முடிந்து
கண் விழித்த சமயம், கண்களிலிருந்து தோன்றிய நீரிலிருந்து தோன்றியது
ருத்ராக்ஷம் எனவும்,
நெற்றிக்கண்ணின் மணியிலிருந்து சிவபெருமானால் தனது அம்சமாக தோற்றுவிக்கப்பட்டது ருத்ராக்ஷம் எனவும் சைவ புராணங்கள் பகர்கின்றன.
ஆயினும்,
தத்வார்த்த ஆன்மீகர்கள், ருத்ராக்ஷம் என்பது சிவபெருமானின் கண்ணையொத்த
சிறப்பு வாய்ந்தது எனவும், மேலும் சிறப்பாக, சிவபெருமானுக்கு (ருத்ரன்)
உரிய மந்திரத்தை (அக்ஷம்) ஜபிக்க சிறந்தவொரு சாதனமாக கருதுகின்றார்கள்.
(எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - ஔவையார் வாக்கு - சிவ பஞ்சாக்ஷரம்
எனும் ஐந்து எழுத்து மந்திரத்தை, எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, ஜபிக்க,
கண் போன்ற ருத்ராக்ஷமே உகந்தது.
எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு - திருவள்ளுவர்)
வடமொழியின்
ஆரம்ப எழுத்து 'அ'. கடைசி எழுத்து 'க்ஷ'. இந்த 'அ'கார 'க்ஷ'கார
எழுத்துக்களினுள்தான், வேத மந்திரங்களும், அனைத்து மந்திரங்களுக்கான
எழுத்துக்களும் அடங்குகின்றன.
அதிலும், சிவபெருமானுக்கே உகந்த பஞ்சாக்ஷரம் வேத மந்திரங்களுக்கு நடுவாகவும், உயர்வானதாகவும் அமைந்துள்ளது.
இந்த
பஞ்சாக்ஷர மந்திரத்தை, ருத்ராக்ஷம் என்பதைக் கொண்டு ஜபிக்கும்போது,
சிவஸாரூபம், சிவஸாயுஜ்யம், சிவலோகம் எனும் முப்பெரும் பதவிகளையும்,
இம்மையில் (இந்த ஜன்மத்தில்) மென்மேலும் வளங்களையும், செல்வங்களையும்,
மறுமையில் (மரணத்திற்குப் பின்) முக்தியையும் தரவல்லது என்பது ஆன்மீக
ஆன்றோர்களின் மேலான கருத்து.
மந்திர சித்தி பெற்றவர்கள், சித்தர்கள் போன்றவர்கள் தமது கண்களினாலேயே விஷத்தை முறிக்க விஷமுறிவு செய்வது போலவும்,
மீன் தனது முட்டைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே பொறிக்கச் செய்து மீன் உருவம் கிடைக்கச் செய்வது போலவும்,
ருத்ராக்ஷம்
அணிந்தவர்க்கு, சிவபெருமான் தனது அக்ஷத்தினாலேயே (கண்களாலேயே) தீட்சை
அளித்து, ஆன்மாக்களுக்கு முக்தி அளிப்பார் எனவும் புராணங்கள் கூறுகின்றன.
தற்போது
நமக்குக் கிடைக்கும் ருத்ராக்ஷம், சிவனார் உறையும் இமயமலையைச் சார்ந்த
பனிபடர்ந்த இடங்களில் விளையக்கூடிய ருத்ராக்ஷ மரங்களில் (Botanical Name : Elacocarpus Ganitrus Roxb) இருந்து
கிடைக்கக் கூடியவை. கண்ணில் உள்ள மணியைப் போன்ற (pupil) சிறு உருண்டை
வடிவத்திலும், நடுவில் இயற்கையாகவே துளையும் கொண்டதாக அமையும்.
ருத்ராக்ஷத்தின் தன்மைகளையும், அதன் சிறப்பம்சங்களையும் ஸூதஸம்ஹிதை உள்ளிட்ட பழைய புராணங்கள் தெரிவிக்கின்றன.
ருத்ராக்ஷம் சிகப்பு (காவி), வெள்ளை, கரிய நிறங்களில் கிடைக்கின்றன.
ருத்ராக்ஷத்தின்
அளவு சிறிது சிறிதாக அதன் சிறப்பம்சம் பெரிதானதாகக் கருதப்படும். மிகச்
சிறிய ருத்ராக்ஷம் அளப்பரிய பலன் தரக்கூடியதாகும்.
ருத்ராக்ஷத்தின் மேல் கோடுகளும், நடுவில் இயற்கையாகவே துளையும் இருக்கும்.
அந்தக் கோடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் தெய்வாம்சம் சிறப்புறக் கூறப்படுகின்றது.
ஒரு முகம் அதாவது ஒரே கோடுள்ள ருத்ராக்ஷம் - சிவாம்சம்,
இரு முகம் - சக்தி அம்சம்
மூன்று முகம் - பிரம்ம, விஷ்ணு, சிவ - திரிமூர்த்தி அம்சம்
நான்கு முகம் - பிரம்ம அம்சம்
ஐந்து முகம் - சதாசிவ அம்சம் (ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாதம்)
ஆறுமுகம் - முருக அம்சம்
ஏழுமுகம் - ஸப்தமாதர்கள் அம்சம்
எட்டு முகம் - அஷ்ட வித்யேஸ்வரர்கள் அம்சம் (அனந்தர் - சிகண்டி)
ஒன்பது முகம் - நவதீர்த்தங்கள் (கங்கை-காவேரி, சோணநதி, துங்கபத்ரா) அம்சம்
பத்து முகம் - அஷ்ட திக் பாலர்கள் + ஆகாய, பாதாள திசைகள் அம்சம்
பதினோரு முகம் - ஏகாதச ருத்திர அம்சம்
பன்னிரு முகம் - விஷ்ணு மூர்த்தி அம்சம்
பதின்மூன்று முகம் - சத ருத்திரர்கள் அம்சம்
பதினான்கு முகம் - அசுவினி தேவர்கள் மற்றும் அஷ்ட வசுக்கள் அம்சம்
பதினைந்து முகம் - சந்திர அம்சம்
பதினாறு முகம் - முப்பத்து முக்கோடி தேவர்கள் அம்சம்
(உருத்திர கணிகையர் புராணம், 1907ம் வருட இலங்கை வெளியீடு)
இது
தவிர, ஜாபால உபநிஷதம் ருத்ராக்ஷ அம்சத்தையும், அவற்றை அணிவதால் ஏற்படும்
பலன்களையும் போற்றுகின்றது. (புருஷார்த்த ப்ரபோதம், 1911ம் வருட வெளியீடு)
ஒரு முகம் - பரமசிவ அம்சம் - பிரம்மஹத்தியை நீக்கும். (ஏக வக்த்ரம் சிவஸ்ஸாக்ஷாத் ப்ரஹ்மஹத்யாம் வ்யபோஹதி)
இரு முகம் - ஸ்ரீகண்ட பரமசிவம் - உயிரினங்களுக்கு செய்யும் பாபத்தினை நீக்கும் (கோவதநாச்யத்துவம்)
மூன்று முகம் - அக்னி - பெண்களால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் (ஸ்த்ரீஹத்யாந்தஹதிக்ஷணாது).
நான்கு முகம் - பிரம்மா - சக மனிதர்களால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் (நரஹத்யாம் வ்யபோஹதி)
ஐந்து முகம் - காலாக்னி ருத்திரர் - உணவுகளால் ஏற்படும் நோய்களை நீக்கும்
ஆறு முகம் - சுப்ரமணியர் - குரு துரோக பாவம் நீக்கும்
ஏழு முகம் - ஆதிசேஷன் - தானங்கள் வாங்கியதால் ஏற்படும் தோஷங்களை நீக்கும்
எட்டு முகம் - விநாயகர் - திருடு சம்பந்தமான தோஷங்களை நீக்கும்
ஒன்பது முகம் - பைரவர் - பில்லி, சூனியங்கள் நீங்கும்
பத்து முகம் - விஷ்ணு - நவக்ரஹ தோஷங்கள் நீங்கும்
பதினோரு முகம் - ஏகாதச ருத்திரர் - அசுவமேத யாகம் செய்த பலன்
பன்னிரு முகம் - துவாதச ஆதித்தர் - மேலான கல்வி கிடைக்கும்
பதின்மூன்று முகம் - சுப்ரமண்யர் - ஸகல கார்ய ஸித்தி
பதினான்கு முகம் - சிவசக்தி - தெய்வங்களின் அருள் எளிதில் கிட்ட அருளும்.
இது தவிர பல்வேறு புராணங்கள் ருத்ராக்ஷ முகங்களைப் பற்றியும், பலன்களைப் பற்றியும் பகர்கின்றன.
பொதுவாக, ஐந்து மற்றும் ஆறு கோடுகள் கொண்ட ருத்ராக்ஷங்களே அதிக புழக்கத்தில் உள்ளன.
ருத்ராக்ஷ கோடுகள் எத்தனையானாலும், அதை அணிவதும், அதற்குரிய புனிதத்தைக் காப்பதும் பற்பல பலன்களை வாரி வழங்கக்கூடியது.
ஒரு முக ருத்ராக்ஷம் மிகவும் போற்றப்படுகின்றது.
எளிதில் கிடைக்காது.
ஆயிரம் சாதாரண ருத்ராக்ஷங்களைக் குவித்து, அதனுள் ஏக முக ருத்ராக்ஷத்தை வைத்தால், அது தானாகவே மேலே ஏறிவரும் என்பது,
ஆயிரம் ருத்ராக்ஷத்தினைக் காட்டிலும், ஒரு முக ருத்ராக்ஷம் மிகவும் மேலானது என்பதைக் குறிப்பதற்காக மட்டுமே தான்.
இரண்டு
ருத்ராக்ஷங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தது போல் சில ருத்ராக்ஷங்கள்
கிடைப்பது உண்டு. அது கெளரிசங்கரம் என்று அழைக்கப்படும். சிவாலய பூஜை
செய்பவர்களும், சிவ பூஜையை நித்தமும் செய்பவர்களும் - சிவசக்தி அம்சம்
கொண்ட கெளரிசங்கரத்தை நிச்சயம் அணிய வேண்டும் என்று சிவபுராணங்கள்
அறுதியிடுகின்றன.
ஆறுமுகம்
கொண்ட ருத்திராக்ஷத்தை உடலின் வலது புறத்திலும், ஒன்பது முகம் கொண்ட
ருத்திராக்ஷத்தை உடலின் இடது புறத்திலும், பதினோரு முகம் கொண்ட
ருத்ராக்ஷத்தை தலையிலும், பன்னிரு முக மணி காதுகளிலும், எந்த முக
மணியாகினும் கண்டம் எனும் கழுத்தில் அணிவது சிறந்த பலனைத் தரக்கூடியது.
மரங்களிலிருந்து கிடைத்த ருத்ராக்ஷத்தைக் காம்பை எடுத்து விட்டு, முதலில் சுத்த தண்ணீரில் ஒரு நாள் முழுக்க ஊற வைத்து,
பின் மறு நாள் முழுக்க காராம்பசுவின் பாலில் ஊறவைத்து,
பிறகு சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்து, (சிலர் எழுமிச்சம் பழச் சாறு கொண்டு சுத்தம் செய்வது உண்டு),
பிறகு விபூதியில் ஒரு நாள் முழுவதும் போட்டு வைத்து,
அடுத்த
நாள் ஏதேனும் ஒரு சிவாலயத்தில் கொண்டு சென்று, தெய்வத்தின் பாதங்களில்
சார்த்தி எடுத்து, குருவின் கரங்களால் (அல்லது பெரியோர்களின் கரங்களால்)
அணிந்து கொள்ளவேண்டும்.
புண்ய நதிகளில் நீராடும் போதும், தானங்கள் கொடுக்கும்போதும், சிவமந்திரங்களை
ஜபிக்கும் போதும், ஹோம பூஜைகளின் போதும், தெய்வங்களை ஆராதனை
செய்யும்போதும் மிக நிச்சயமாக ருத்ராக்ஷம் அணிந்துகொள்ள வேண்டும் என ஜாபால
உபநிஷத் உரைப்பதாக புருஷார்த்த ப்ரபோதம் கூறுகின்றது (ஸ்நானே தான ஜபே ஹோமே
வைச்வதேவே ஸுரார்ச்சநே).
ஒரே ஒரு ருத்ராக்ஷம் மட்டும் கழுத்தில் அணிந்துகொண்டால், அதை எக்காலத்திலும் கழட்ட வேண்டிய அவசியம் இல்லை.
ஒன்றுக்கு
மேற்பட்ட ருத்ராக்ஷங்களை மாலையாகக் கோர்த்து அணிந்து கொண்டால், அதன்
புனிதம் காக்க வேண்டி, தெய்வ பூஜை சார்ந்த நேரங்களில் மட்டும் அணிந்து
கொள்ள வேண்டும்.
108 எண்ணிக்கையிலான ருத்ராக்ஷ மாலை அணிவதே உத்தமம். 52 அல்லது 27 எண்ணிக்கையிலான ருத்ராக்ஷ மாலையும் அணியலாம்.
ருத்ராக்ஷ
மாலை கொண்டு, காலை வேளையில் முகத்திற்கு சமமாகவும், மதிய நேரத்தில்
இதயத்திற்கு சமமாகவும், மாலை வேளையில் வயிற்றுக்கு சமமாகவும் கொண்டு ஜபிக்க
வேண்டும்.
ருத்ராக்ஷ மாலையை பெருவிரல் அல்லது கட்டைவிரலால் நகர்த்தி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்.
ஆட்காட்டி விரலால் ஜபம் செய்தால் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.
நடுவிரல் கொண்டு ஜபம் செய்வது செல்வங்களை சேர்க்கும்.
மோதிர விரல் கொண்டு ஜபம் செய்யின் நல் ஆரோக்கியத் தரும்.
சுண்டு விரல் கொண்டு ஜபம் செய்வது தெய்வ அருளை விரைவில் வழங்கும்.
பெண்கள் ருத்ராக்ஷம் அணிவது பற்றி பல கருத்துக்கள் உள்ளன.
ருத்ராக்ஷம் புருஷ அம்சம் கொண்டது எனவும் அதனை ஆண்கள் மட்டுமே அணிய வேண்டும் என்றும்,
சிவாம்சமாக உள்ளது ருத்ராக்ஷம் - அதனை சிவ சிந்தனை உள்ள யாவரும் அணியத் தகுந்தது என்றும்,
சிவ தீட்சை பெற்ற பெண்கள் அணியலாம் என்றும்,
வயதில் மூத்த பெண்கள் மட்டும் அணியலாம் என்றும்,
விதவைகளும் ருத்ராக்ஷம் அணியலாம் என்றும் பல கருத்துக்கள் உள்ளன.
நேரடியாக சாஸ்திரங்களோ அல்லது ஆகமங்களோ பெண்கள் ருத்ராக்ஷத்தை அணிவதைப் பற்றி சொல்வதாக அறியமுடியவில்லை.
தேவி அல்லது சக்திக்குரிய புராணங்களில், அம்பிகையானவள் ருத்ராக்ஷ மாலை அணிந்து கொண்டிருப்பதாக, குறிப்பிடப்படுகின்றது.
ஜாபல உபநிஷதம் - பொதுவாக ருத்ராக்ஷ தாரண விதி என அதனை அணிந்து கொள்ளும் நியமங்களைக் கூறுகின்றது.
ஆகவே, சிவ சிந்தனை உள்ள யாவருமே அணியத் தகுந்தது என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதன் புனிதம் காக்கப்பட பல்வேறு விதிகளை சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.
சிவாலயங்கள்
சிலவற்றில் ருத்ராக்ஷங்களைக் கொண்டு, சிவலிங்கத்தின் மேல் ருத்ராக்ஷ
பந்தல் அமைக்கின்றார்கள். இது மிகவும் விசேஷமானது என்றும், விரைவில் பலன்
தரக்கூடியது என்றும் ஆன்மீகர்கள் கூறுவார்கள்.
ருத்ராக்ஷம்
- மருத்துவ குணம் வாய்ந்தது. மஞ்சள் கிழங்கு - மங்கலமானதும், அதே போல்
கிருமி நாசினியாகவும் பயன்படுகின்றதோ அது போல, ருத்ராக்ஷம் சிவாம்சம்
கொண்டதாகவும், ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களை நீக்கக் கூடியது எனவும்
நம்பப்படுகின்றது.
ஆக மொத்தத்தில் ருத்ராக்ஷம் - சிவ அம்சம் கொண்டது. மிகப் புனிதம் வாய்ந்தது. சிவ நாம ஜபம் செய்ய மிக மிக உகந்தது.
ருத்ராக்ஷம் அணிவோம் ! சிவ பலனை அடைவோம் !!
Thanks to
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை