நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள். பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள்.
நார் வெட்டும் கைகள் பத்திரம். வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள். பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும்.
அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள். களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள்.
வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து பச்சை வாடை போக காச்சி எடுங்கள். ஆறவையுங்கள். இப்பொழுது காச்சிய பனம்களி தயாராகிவிட்டது.
பணியாரத்துக்கு தேவையான பொருட்கள்
பனங்களி – 1 கிண்ணம்
சீனி- ¼ கிண்ணம்
பொரிக்க எண்ணெய் – அரை லீட்டர்.
அவித்த மைதாமா அல்லது வறுத்த உழுந்துமா அல்லது அரிசிமா – ¼ கிண்ணம்
உப்பு சிறிதளவு.
செய்முறை
காச்சிய பனங்களியுடன் மைதாமா உப்பு சேர்த்து கிளறி எடுங்கள்.
தாச்சியில் எண்ணையை விட்டு நன்கு கொதிக்க மாவைக் கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள்.
மீதிக் களியையும் அவ்வாறே செய்து கொள்ளுங்கள். எண்ணெய்த் தன்மையைப் போக்கிக்கொள்ள காகிதத்தின் மீது போட்டு எண்ணெய் வடியவிட்டு ஆற வைத்த பின் இரண்டு மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுங்கள்.
மீண்டும் மீண்டும் சாப்பிட்டு உடனேயே தட்டுக் காலியாகிவிடும். சற்று நேரத்தில் காலியாகப் போகும் ..
குறிப்பு
கோதுமை மா (மைதாமா) கலந்தால் மெதுமையான பணியாரம் கிடைக்கும். அரிசிமா, உழுந்துமா சற்று உரமாக இருக்கும். மா கலக்காமல் தனியே களியிலும் செய்வார்கள் இது கடித்துச் சாப்பிடும் போது களிப்பிடியாக இருக்கும்.