ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:01 | Best Blogger Tips


கரும்பு ஆலை இல்லாத ஊர்களில் சர்க்கரை கிடைக்காது அதற்க்கு பதில் இலுப்பம்பூ இந்த பூ தித்திப்பு தன்மை உடையது இந்த பூ தான் அவர்களுக்கு சர்க்கரை.

இதன் உட் கருத்து என்ன வென்றால், நாம் ஆசை படும் சில நமக்கு கிடைக்க வில்லை என்றால் அதற்க்காக வருத்தப் படாமல். நமக்கு கிடைக்கக் கூடியதை வைத்து திருப்தி பட்டு கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் கோயிலும், இலுப்பைத் தோப்புகளும் இல்லாத ஊர்களையே பார்க்க முடியாது. ஆனால், இன்றைக்குத் தேடினாலும் கிடைக்காது எனும் அளவுக்கு... அற்றுப் போய்விட்டன, இலுப்பை மரங்கள். இதற்கு நடுவே பாரம்பரியத்தைக் கைவிடாமல், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில கிராமங்களில் மட்டும் இன்றைக்கும் இலுப்பை வனங்களைப் பராமரித்து வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம், ராமநத்தம் கிராமமும் அதில் ஒன்ற
ு. இங்கே கோயிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில், இலுப்பை மரங்களை ஊர் பொதுவில் பராமரித்து வருகின்றனர் மக்கள்!

உச்சிவெயில் உச்சந்தலையில் இறங்கும் மதியவேளையில், அந்த இலுப்பை வனத்துக்குள் நுழைந்தோம். அங்கே நமக்காகக் காத்திருந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம், ''இங்க 100 வருஷத்துக்கு மேல இந்த இலுப்பைத் தோப்பைக் காப்பாத்திட்டு வர்றோம். வெள்ளக்காரங்க ஆட்சியில 1918-ம் வருஷம், வெள்ளாத்தாங்கரைக்கு பக்கத்துல இருக்கற வெலிங்டன் (எமன் ஏரி) ஏரிக்கு தண்ணீர் கொண்டுபோக, வாய்க்கால் வெட்டினாங்க. அப்ப இந்த இலுப்பைத் தோப்பு அழிஞ்சுடக் கூடாதுனு எங்க பகுதியைச் சேர்ந்த பலரும் தங்களோட சொந்த நிலத்தைக் கொடுத்து, வாய்க்கால் வெட்டிக்கச் சொல்லியிருக்காங்க. அதுக்குப் பிறகு, 1950-ம் வருஷம் வாக்குல கண்ணன்ங்கிறவர் கூடுதலா இலுப்பைக் கன்னுங்களை நட்டு... ஆடு, மாடுக கடிக்காம காப்பாத்தி இந்த தோப்பை இன்னும் பெரிசாக்கியிருக்கார். அவரோட, நினைவா தோப்போட ஒரு பகுதியை 'கண்ணுத் தோப்பு'னுதான் எல்லாரும் கூப்பிடறோம். இதெல்லாம்தான் இன்னிவரைக்கும் எங்க ஊர் மக்களுக்கு இலுப்பைத் தோப்பு மேல தனிப்பாசத்தை உருவாக்கி வெச்சுருக்கு'' என்று உருகி உருகிச் சொன்னார்.


உணவாகும் இலுப்பைப் பூ !

கூடவே நின்றிருந்த ரெங்கராஜ், ''இந்த நிலம் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமானது. இங்கிருக்கும் மரங்களை கோயில் தர்மகர்த்தாதான் நிர்வகித்து வருகிறார். மரத்தில் ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் இலைகள் கொட்ட ஆரம்பித்து, பங்குனி மாதக் கடைசியில் பூ விட்டு, சித்திரையில் பிஞ்சு இறங்க ஆரம்பித்து, ஆவணி-புரட்டாசியில் இலுப்பைக் கொட்டைகள் கிடைக்கும். ஊரில் உள்ளவர்கள், கொட்டைகளைப் பொறுக்கி கோயிலில் கொடுப்பார்கள். அதற்கு உரிய சம்பளம், கொட்டைகளாவே கொடுக்கப்படும். வருஷத்துக்கு ஒருமுறை மரத்துக்கு 100 கிலோ அளவுக்கு கொட்டை கிடைக்கும். பொறுக்குக் கூலியாகக் கொடுத்தது போக, மீதியிருக்கும் கொட்டைகளை எண்ணெய் ஆட்டி, ஊர்ல இருக்கும் ஐந்து கோயிலுக்கும் பயன்படுத்தி வருகிறோம். பூக்கொட்டும்போது, இலைகளைக் கூட்டி ஓரமா தள்ளி வைத்துவிட்டு, தரமான பூக்களைச் சேகரித்து உணவு மற்றும் மருந்துக்கு மக்கள் பயன்படுத்துகிறார்கள்'' என்று சொன்னார்.

களைப்பைப் போக்கும் களிசட்டிக்காய் !

அடுத்தாக, ''இலுப்பைத் தொட்டி கட்டினா... தாய்மார்களுக்கு பால் நல்லா சுரக்கும்னு சொல்வாங்க'' என்று இலுப்பையின் பெருமை பேசிய செல்லம்மா, ''சீசன்ல... காலையிலயும், சாய்ந்தரமும் கொட்டை பொறுக்க போவோம். கூலியா கிடைக்கற கொட்டைகளை எண்ணெய் வியாபாரிகக்கிட்ட கொடுத்துட்டு, அவர்கிட்ட இருந்து எண்ணெய் வாங்கிக்குவோம். நாலுபடி கொட்டைகளைக் கொடுத்தா... ஒரு படி எண்ணெய் கொடுப்பார். அந்த எண்ணெயில பலகாரம் செய்றது, விளக்கு எரிக்கறது, குழம்பு தாளிக்கறதுனு எல்லாத்துக்கும் பயன்படுத்துவோம். இலுப்பை எண்ணெயில சமைச்சா மணமாவும், சுவையாவும் இருக்கும்.

பூ சீசன்ல, கொட்டுற பூவையெல்லாம் பொறுக்கிட்டு வந்து, அதுகூட உப்பு, புளி, மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வறுத்து அரைச்சு, சின்னச் சின்ன உருண்டையா பிடிச்சு வெச்சுடுவோம். இந்த உருண்டைகளை களிசட்டிகாய்னு சொல்லுவோம். வயக்காட்டுல வேலை பார்க்குறப்ப, இதுல ரெண்டு உருண்டைய தின்னுட்டு தண்ணியைக் குடிச்சுட்டு வேலையைப் பார்த்தா... களைப்பு இல்லாம இருக்கும். இந்த உருண்டை, பிள்ளைங்களுக்கு நல்ல தின்பண்டமாவும் இருக்கும். குளிக்கறப்ப இலுப்பைப் பிண்ணாக்கைப் பொடியாக்கி தலையில தேய்ச்சு குளிப்போம். பேன், பொடுகுத் தொல்லையே இல்லாம ஓடிப்போயிடும்'' என்று சொன்னார்.

தலைமுறைகளைத் தாண்டிய பலன் !

இலுப்பைத் தோப்புகள் பற்றி ஆய்வுகள் செய்து வரும் அதே ஊரைச் சேர்ந்த ரமேசு கருப்பையா, ''முன்னோர்கள், இலுப்பைத் தோப்பை உருவாக்கியதற்கு சமூகப் பொருளாதாரக் காரணங்கள் நிறையவே இருக்கின்றன. பொது இடங்களில் மரங்களை உருவாக்க நினைத்தவர்கள் மா, பலா, தென்னை, தேக்கு, ஆல், அரசு, அத்தி போன்ற மரங்களை உருவாக்கி இருக்கலாம். ஆனால், தலைமுறை கடந்தும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இலுப்பைத் தோப்புகளை, தாங்கள் குடியேறிய பகுதிகளில் உருவாக்கி இருக்கின்றனர்.

மண்ணெண்ணெய், மின்சாரம் ஆகியவை பயன்பாட்டுக்கு வராத காலத்திலேயே இலுப்பைத் தோப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன் எண்ணெயை விளக்கெரிக்க முக்கியமாகப் பயன்படுத்தியுள்ளனர். பூவை சர்க்கரை எடுப்பதற்கும், சாராயம் காய்ச்சுவதற்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிண்ணாக்கை நிலத்துக்கு உரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்ட எல்லையில் வெள்ளாறு நுழையும் இடத்தில இருந்து விருத்தாசலம் வரை, சுமார் ஐம்பது கிலோமீட்டருக்கு ஆற்றின் இரண்டு பக்கமும் இலுப்பை மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இந்த மரங்களை சில ஊர்களில் முற்றாக அழித்து விட்டனர்.

இந்தப் பழங்களை நம்பி, அரிய உயிரினமான பழந்திண்ணி வெளவால் இருக்கிறது. இம்மரங்கள் மழைக்காலத்தில் பழங்களைத் தருவதால், பழந்திண்ணி வெளவால் இனம், இலுப்பைத் தோப்புகளில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன. இலுப்பை மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டால், பழந்திண்ணி வெளவால் இனமும் அழிக்கப்பட்டு விடும். இந்த மரம் அழிந்து விடக்கூடாது என்பதற்காக, இதன் கன்றுகளை பலருக்கும் நான் இலவசமாகக் கொடுத்து வருகிறேன்'' என்றார் உற்சாகமாக!

இலுப்பையைக் காக்கும் இந்த கிராமத்துக்கு பசுமை வணக்கம்

முழுக்க முழுக்க மருந்து!

இலுப்பையின் மருத்துவ குணங்கள் பற்றி பேசிய இதேபகுதியில் இருக்கும் பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் வரதராஜன், ''முழுக்க முழுக்க மருத்துவ குணம் நிறைஞ்ச மரங்கள்ல இலுப்பைக்கு முக்கிய இடமிருக்கு. இலுப்பைப் பூவுல குழம்பு வெச்சும் சாப்பிடலாம். இதனால நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சர்க்கரை வியாதி உள்ளவங்க, இலுப்பை எண்ணெயில சமைச்ச உணவை சாப்பிடும்போது, பக்கவிளைவு இருக்காது. சித்த மருந்து தயாரிப்புல, கூட்டுப்பொருளா இந்த எண்ணெயைப் பயன்படுத்தறாங்க. இலுப்பை வேர், நாள்பட்ட ஆறாதப் புண், பசி இல்லாமை, காய்ச்சல், தேகச் சோர்வு இதுக்கெல்லாம் நல்ல மருந்து. இலுப்பைப் பிண்ணாக்குல புகைபோட்டா, கொசு பிரச்னை இருக்காது. மேலும், இலுப்பைப் பிண்ணாக்கைப் பொடியாக்கி குளியலுக்குப் பயன்படுத்தலாம். சேற்றுப்புண், விரை வீக்கம் இதுக்கெல்லாம் மருந்தாவும் பயன்படுத்தலாம்'' என்று சொன்னார்.........

நன்றி: பசுமை விகடன்