எந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இளநரை என்றாலே அலர்ஜிதான். இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும். மீண்டும் முடியை கருப்பாக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பார்கள். முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1. தவறான உணவுப்பழக்கங்கள் அனைத்துத் தாதுப்பொருள்களும் அடங்கிய ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ளாதது கூட, உடல்நலத்துக்குக் கேடு விளைவித்து, அதன் காரணமாக தலைமுடிக்கும் கேடு விளைவிக்கலாம். ஏனெனில் தவறான உணவுப்பழக்கங்கள், உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகவும், சருமம், பல் மற்றும் தலைமுடியை மிக மோசமாகப் பாதிக்கும் காரணமாகவும் அமைகிறது.
2. வைட்டமின் பி12 குறைபாடு குறிப்பாக வைட்டமின் பி12 சத்துக் குறைபாடானது, இளநரையைத் தோற்றுவிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. எனவே உணவில், போதுமான அளவு வைட்டமின் பி12 இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3. தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமை தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்கு தான் தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்சனை பெண்கள் மத்தியில் சகஜமாகக் காணப்படுகிறது. எனவே அறிகுறிகளைக் கவனமாக கண்டுபிடித்து, தைராய்டு சோதனைகளைச் செய்து, இதற்கான மருத்துவத்தை உரிய நேரத்தில் மேற்கொண்டால், இளநரை மாறி முடி மீண்டும் கருமையாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
4. பிட்யூட்டரி சுரப்பிகளில் பிரச்சனை
தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கு, மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு காரணமாக அமையலாம். இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது.
5. நீண்டகாலமாகப் புகைப்பிடித்தல் புகைப்பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என்று நமக்குத் தெரியும். ஆனால் அது நமது தலைமுடிக்கும் கேடு என்பது தெரியுமா? இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு நீண்டகாலமாகப் புகைப்பிடித்தலும் ஒரு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே புகையிலிருந்தும், புகைபிடிப்பவர்களிடமிருந்தும் விலகியே இருக்க வேண்டும்.
6. சுற்றுச்சூழல் மாசுபாடு சுற்றுப்புறச் சூழல் மாசு அடைதலால் சருமம் பாதிக்கப்படுகிறது என்று நம்மில் பலரும் அறிவோம். ஆனால் அதே சுற்றுச்சூழல் மாசு அடைவதால், நமது தலைமுடியும் பாதிக்கப்படுகிறது என்று நம்மில் பலருக்குத் தெரியாது. ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
7. தலைமுடிப் பராமரிப்புப் பொருட்கள் தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம். வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும். இப்பொருள்களை அதிகமாகத் தலைமுடிக்குப் பயன்படுத்துதல் கேடு. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை நினைவில் கொண்டு, தலைமுடியை அதிகமான வேதிப் பொருள்களுக்கு உட்படுத்தாமல், முடிந்தவரை அதன் இயற்கைத்தன்மை பாதிக்கப்படாமல் பராமரித்து வர வேண்டும்.
8. மன அழுத்தம் எப்போதும் வேலை வேலை என்று அலைபவரா? பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தத்திகு ஆட்படுபவரா? நெடுங்காலமாக மன அழுத்தத்துடன் வாழ்பவரா? அப்படியெனில் அதற்கு விலையாக தலைமுடியின் நலனை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, மன அழுத்தத்திலிருந்து விடுபடும் விதமாக, தேவையான மருத்துவத்தை மேற்கொண்டு, ரிலாக்ஸான வாழ்க்கை முறையை மேற்கொள்ள முயல வேண்டும்.
9. டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும் பொருள்களில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது இளநரையை உண்டாக்குகிறது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது உடலில் உள்ள தலைமுடிக்கு நிறத்தை உண்டாகும் நொதிகள் மீது எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது. எனவே இதுமாதிரியான பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம், இவற்றால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து ஆலோசனை கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். தலைமுடி நரைப்பதற்கு இவை காரணமாக அமையுமா என்பது குறித்தும் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
10. பரம்பரை இறுதியாக, இளநரைக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நம்மால் தீர்வு ஏதும் சொல்ல முடியாது. பரம்பரையின் காரணமாக இளமையிலேயே தலைமுடி நரைத்தவர்கள் சிலர் நம்மிடையே உள்ளனர். இளநரைக்கு என்ன என்னவெல்லாம் காரணம் என்று இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே இக்காரணிகளைத் தவிர்க்க முயலுங்கள். மேலும் இவற்றைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் மருத்துவரிடம் சென்று பேசி, இளநரை ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்க ஆலோசனை பெறுங்கள்.