ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில், ஜெய்ப்பூர்-ஆக்ரா சாலையில், ஜெயப்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஆபானேரி கிராமம். இந்தியாவின் மிக அழகான படிக்கிணறுகளில் ஒன்றான பிரம்மாண்ட சாந்த் பாவ்ரி கிணறு இந்த கிராமத்தில்தான் உள்ளது. இந்த ஆபானேரி கிராமம் சாம்ராட் மிஹிர் போஜ் என்ற குஜராத் பிரதிஹார் மகாராஜாவால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆபானேரி கிராமம் முதலில் பிரகாசமான நகரம் என்ற பொருளில் ஆபா நக்ரி என்றே பெயரிடப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இந்த பெயர் மாற்றமடைந்து ஆபானேரி என்று ஆகிவிட்டது.
ஆபானேரி கிராமத்தின் பெரும்பான்மையான பகுதிகள் சிதைந்த நிலையிலேயே காணப்பட்டாலும் இன்றும் உலகம் முழுவதுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த நகரில் கோடை காலத்திற்காக மழை நீரை சேமித்து வைக்கும் பொருட்டு ஏராளமான பாவ்ரிகள் (கிணறுகள்) உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சாந்த் பாவ்ரி என்ற படிக்கிணறு அதன் பிரம்மாண்டத்துக்காகவும், கல் கட்டமைப்புக்காகவும் உலகப் பிரசித்தி பெற்றது.
ஆபானேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்டிப்பாக ஹர்ஷத் மாதா கோயிலுக்கு செல்ல வேண்டும். இந்தக் கோயில் இடைக்கால இந்தியாவின் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஹர்ஷத் மாதா என்ற பெண் தெய்வம் நற்பேறு மற்றும் மகிழ்ச்சியின் கடவுளாக கருதப்படுகிறது.
ஆபானேரியின் கலாச்சார முகமும், நாட்டுப்புற நடனமும்!
ஆபானேரி கிராமம் கூமர், கல்பேலியா, பவாய் போன்ற ராஜஸ்தானிய நாட்டுப்புற நடனங்களுக்காக பிரபலமாக அறியப்படுகிறது. இதில் கல்பேலியா என்ற நாட்டுபுற நடனம், கல்பேலியா பழங்குடிப் பெண்களின் நடனமாகும்.இந்த பெண்கள் கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்து, அவற்றிலிருந்து நஞ்சை எடுத்து விற்று, அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
இதுதவிர கூமர் என்ற நடனமும் பில் எனும் பழங்குடி இனத்தவரின் பாரம்பரிய நடனமே. அதேவேளையில் பவாய் நடனம் அம்பா மாதா அல்லது பூமாதேவி சிலையின் முன்னிலையில் நடத்தப்படும் மத சடங்காகும்.
ஆபானேரியை எப்படி அடைவது?
ஆபானேரி கிராமம் ஜெயப்பூருக்கு அருகிலேயே 95 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுலபமாக ஆபானேரியை அடைந்து விடலாம்.இதன் கலாச்சார சிறப்பு காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆபானேரி கிராமத்துக்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
ஆபானேரிக்கு எப்போது சுற்றுலா வரலாம்?
ஆபானேரிக்கு அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றுலா வருவது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த காலங்களில் நிலவும் இதமான வானிலை ஆபானேரி கிராமத்தை சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் பொருத்தமானது.நன்றி தட்ஸ்தமிழ்