
அதி
அற்புதமான விஷயங்களை எல்லாம் உள்ளே வைத்துக் கொண்டு, புறத்தே காண்பவற்றில்
அல்லது ஐம்புலன்களின் மயக்கத்தில் மெய்(யை) மறந்து போகிறோம். உள்ளே என்ன
நடக்கிறது என்பதே நமக்குத் தெரியாது. உணவு உண்பதோடு நம் வேலை முடிந்து
விடுகிறது. அதற்குப் பிறகு
அது
என்னவாயிற்று ? நாளை வெளியே வந்துவிடும். சரி. உள்ளே போனதற்கும், வெளியே
வருவதற்கும் இடையே என்ன நடக்கின்றது. அதைப் பற்றி யாரும் சிந்திப்பதே
இல்லை. உணவு உள்ளே போகிறது ஜீரணமாகிறது, அதில் இருந்து பெறப்பட்ட
சத்துக்களெல்லாம் உடல் முழுவதும் பரவுகின்றன. இதை நாம்தான் செய்கிறோம்.
ஆனால் நம் அறிவுக்குப் புலப்படாமலேயே இதெல்லாம் நடக்கின்றது. உனக்கு மூளை
இருக்கிறதா ? என்று திட்டுவார்கள். உன்மையிலேயே அது நமக்குத் தெரியாது. அது
இல்லாமலா போய்விடும். இருக்கிறது ஆனால் அதன் இயக்கம் குறித்த எந்த
விஷயமும் நமக்குத் தெரியாது. இதயம் துடிக்கிறது . அதுவும் தெரியாது.
இரத்தம் ஓடுகிறது அதுவும் தெரியாது. மூச்சு உள்ளே போகிறது, வெளியே
வருகிறது. இடையே என்ன நடக்கிறது ? தெரியாது. தெரிந்தது உணர்வு நிலை.
தெரியாதது உணர்வு கடந்த நிலை. அந்த மனதின் தொடர்பு இல்லாமல் , புலன்களின்
வழி சொல்லாமல் ஒரு ஒழுங்கு முறையில் இயங்கும் உணர்வு கடந்த நிலையை
அடைவதுதான் பிறவியின் நோக்கம். அதனால் தான் கடந்து உள்ளே போ என்கிறார்கள்.
அதனால்தான் 96 தத்துவங்களாக அதை விளக்கிச் சொன்னார்கள் சித்தர்கள். உள்ளே
மலை இருக்கிறது. மேரு மலை. உள்ளே குகை இருக்கிறது. இதயக் குகை. உள்ளே
தீர்த்தம் இருக்கிறது. சோமத் தீர்த்தம். இப்படி எல்லாமே உள்ளிருக்க, நீ
புறத்தே போய் தேடுவது என்ன ? ஆக உடலியலைப்பற்றி தத்துவார்த்தமாகத் தெரிந்து
கொண்டு, அதன் இயக்கங்களைப் புரிந்து கொண்டு உள்ளே கடந்து போனால் சூக்கும
வழிகளும் இரகசியங்களும் புலப்படும். எல்லாம் கடந்து உள்ளே போனால் வழி
திறக்கும் ஒளி பிறக்கும். எதுவும் தெரியாமல் கண்ணை மூடிக் கொண்டு
உட்கார்ந்திருந்தால் அது குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான்.