மன அமைதி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:17 PM | Best Blogger Tips

 தொடர்புடைய படம்
மன அமைதி மன அமைதி என்று நாம் அடிக்கடி பேசிக் கொள்கிறோம். ஆனால், அதை உணர்ந்த ஜீவன் ஒன்றாவது இன்று உலகத்தில் இருக்குமா ? என்றால் சந்தேகமே. வேண்டுமானால் இருப்பது போலக் காட்டிக் கொள்ளலாம். இருப்பதாக பாவனை செய்து கொள்ளலாம். ஏனென்றால் இங்கே எல்லாமே பாவனைதான். யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. என் மூன்று வயது குழந்தை ஒரு பொம்மையை மடியில் வைத்துக் கொண்டு அதற்கு சோறு ஊட்டுகிறது, தாலாட்டுகிறது, விசிறி விடுகிறது. உண்மையிலேயே அந்த பொம்மை இதையெல்லாம் அனுபவிப்பதாக ஒரு  அழுத்தமான எண்ணம் அவளுக்குள் இருக்கிறது. நமக்கு அது குழந்தைத்தனம். அவளுக்கு அது நிஜம். இதையே கோவில்களில் பூசாரியும் பாவனையாகச் செய்கிறார். அதை நாமும் நம்புவது போல பாவனை செய்து கொள்கிறோம்.

ஆனால், பாவனையாக இல்லாமல் முழு நம்பிக்கையோடு அதைச் செய்பவர்களுக்கு அது உண்மையே. அது எப்படி ? என்று நீங்கள் கேட்கக் கூடும். அதற்கு நீங்கள் அந்த மனநிலைக்கு போனால்தான் உணர முடியும். அது வரை நான் சொல்வது நம்பத் தகுந்ததாக இருக்காது. விளக்கிச் சொன்னால் உணர முடியாது. இன்றைய மனோதத்துவ மேதைகளெல்லாமே ஏற்றுக் கொள்கிறார்கள், ''நீ எதை மனதில் அழுத்தமாக பதிய வைக்கிறாயோ, அதுவாக நீ மாறி விடுகிறாய்.'' எண்ணத்தின் வலிமை அவ்வளவு வல்லமையானது. 63 நாயன்மார்களின் வரலாறும் இந்த எண்ணங்களின் வலிமையை உணர்த்துவதே. கடமையே என்று பாவனை செய்பவர்களுக்கும், திடமான நம்பிக்கையோடு பாவனை செய்பவர்களுக்கும் உள்ள வேறுபாடை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். கண்ணப்ப நாயனார் மனம் நம்பிக்கையில் திடமாக உறுதியாக நின்றது. அதே கோவிலில் பூஜை செய்யும் பூசாரி அவ்வாறல்ல. அவர் கடமையே என்று பொருள்களைப் படைப்பதும், பாவனை செய்வதுமாக இருந்தார். கண்ணப்ப நாயனாரின் நிலைக்கு போக முடியுமானால் உங்கள் பாவனையும் நிஜமாகிவிடும். வேண்டுமானால் முயன்று பாருங்கள் !

விக்ரகம் தேவையா ? அது உண்மையா ? இதெல்லாம் மனதை திடமான நம்பிக்கையின் பால் கொண்டு செல்வதற்குத்தானே அன்றி வேறொன்றும்  இல்லை. சித்தர் சொல்லி விட்டார் என்பதனால் கல்லில் கடவுள் இல்லை என்று அர்த்தமில்லை. கடவுள் இல்லாத இடமே இல்லை, அவர் பூரணமானவர் என்றால், கல்லிலும் இருக்கிறார் தானே ? இது தெரியாதவரா சித்தர் ? அப்படி என்றால் ஏன் அவ்வாறு சொன்னார் ? நாதன் உள்ளே இருக்கிறார் என்ற நம்பிக்கை மனதில் உறுதியாக இல்லாதவரை அது வெறும் கல்தான். தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். மனதில் திடமான நம்பிக்கை இல்லாமல் சுற்றி வருவதும், மந்திரம் சொல்வதும், பூக்களை போடுவதுமாக இருந்தால் அது கல்தான். நமக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி மனதில் திடமான நம்பிக்கை இருந்தால் மட்டுமே கடவுளை உணர முடியும். அப்படி என்றால் பார்க்க முடியாதா ? முடியும். ஏன் முடியாது ? உணர்ந்து கொண்டவர்களுக்கு காண்பதெல்லாம் கடவுளே.

மனதில் அமைதி ஏன் நிலைப்பதில்லை ? சஞ்சலமும், குழப்பமும், கலக்கமும், தெளிவின்மையும் ஏன் ஏற்படுகின்றது ?
வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகள் நம்மை வந்து தாக்கி பலவீனப்படுத்தும் போது, நமக்கு சரியான பக்கபலம் இருந்தால், நாலா பக்கமும் நல்ல ஆதரவு இருந்தால் நமது மனம் சஞ்சலப்படுவதில்லை. உறுதியை இழப்பதில்லை. நாம் கதியற்று விட்டோம், நமக்கு துணை யாருமே இல்லை, ஆதரவு இல்லை, தேற்றுவார் - ஆற்றுவார் இல்லை என்கிற போதுதான் மனம் நிலை குலைந்து அமைதியை இழந்து தவிக்கிறது. ஆனால் மிகப் பெரிய உண்மை என்ன தெரியுமா ? மனிதன் எப்போதுமே கதியற்றவனாக, ஆதரவற்றவனாகத்தான் இருக்கிறான். ஏனென்றால் உண்மையான ஆதரவு எது என்றும், ஆதாரம் எது என்றும் தெரியாதவரை மனிதன் ஆதரவற்றவன்தான். உறவினர்கள், சொந்த, பந்தங்கள், மனைவி, மக்கள் என்று மிகப் பெரிய கூட்டமே நமக்கு ஆதரவாக இருப்பது போலத் தோன்றினாலும், அதெல்லாம் நிலையான ஆதரவல்ல. நமக்கு ஆதரவானவர்கள் என்று கருதக் கூடிய அனைவரும் ஏதாவது ஒரு நிபந்தனையின் பெயரில் அல்லது பிரதி பலன் அடிப்படையில் நமக்கு உதவ நினைக்கிறார்கள் அல்லது ஆதரவானவர்கள் போல நடிக்கிறார்கள். இதுதான் உண்மை. என்னதான் நெருக்கமான உறவாக இருந்தாலும், நம்மிடமிருந்து நிச்சயமான பிரதி பலன் இல்லை என்று தெரிந்தால் யாரும் உதவ முன் வர மாட்டார்கள். ஆனால், நிலையான, நிரந்தரமான, எந்த நிலையிலும் உன்னைக் கைவிடாத ஆதரவு, உறவு ஒன்று இருக்கிறது என்றால், அது இறைவன் மட்டுமே.
''
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனை '' என்கிறார் மாணிக்கவாசகர். எனவே பக்தியாகட்டும், தவநிலையாகட்டும் முதலில் மனப்பக்குவமே அவசியமாகும்.

பக்குவமான நிலத்தில்தான் பயிர் நன்கு செழித்து வளரும். அது போல பக்குப்பட்ட மனதில்தான் தெய்வீகப் பேரோளி விளங்கும், துலங்கும். தெய்வ நம்பிக்கை என்பது மனம் பக்குவமடைவதற்கான தொடக்க நிலை. இந்த நம்பிக்கை தீவிரமடைந்து, உறுதி பெறும் போது மனம் தானாகவே பக்குவமடையத் தொடங்கும். கண்ணை மூடிக் கொண்டு ஒன்றையோ, ஒன்றுமில்லாத ஒன்றையோ பற்றிக் கொண்டிருப்பது போல, கண்ணைத் திறந்து கொண்டு காணும் பொருளிலெல்லாம் அந்த ஒன்றையே கண்டு பற்றிக் கொள்வதும் ஒரு உயர்ந்த நிலையே. எதுவும் குறைந்ததல்ல. இரண்டிலுமே மன உறுதி, வைராக்யம், திட நம்பிக்கை அவசியம்.
Image may contain: 1 person, smiling, sunglasses, phone and outdoor
Via FB மௌனத்தின் குரல்