
நம் சூழ்நிலையின் ஒரு பகுதியே நாம். உதாரணமாக ஒரு மரத்தில் உள்ள பூ மணக்கிறது. காய், கனிகள் ருசியாக இருக்கின்றன. ஆனால் ருசி ஒன்றுக் கொன்று மாறுபடுகிறது. இலை பச்சையாக இருக்கிறது. பட்டை காய்ந்து போய் இருக்கிறது. மரம் ஒன்றான போதிலும் இவையல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுகின்றன. ஒரு மைக்கிராஸ்கோப்பின் அடியில் பூ, காய், கனி, இலை, பட்டை இவற்றின் சிறு பகுதிகளை வைத்துப் பாருங்கள், அவற்றின் அடிப்படை அமைப்பு எல்லாம் ஒன்று போல இருக்கும். மேலும் சொல்லப் போனால் மரமும் அது வாழும் மண்ணும் ஒன்றே. மரம் ஒரே இடத்தில் இருக்கிறது. மனிதன் நடமாடுகிறான். மரத்தையும், மனிதனையும் உற்பத்தி செய்தது மண். எனவேமண்ணும், அது உற்பத்தி செய்த மரமும், மனிதனும் அடிப்படையில் ஒன்றே. இது போல நம் அக உணர்வுகளும், புற நிகழ்ச்சிகளும் ஒன்றே. அக உணர்வுகளையே புற நிகழ்ச்சிகள் என்கிறோம். நமக்கு வெளியே ஒன்று நடக்கப் போவதை நாம் முன்னதாகவே உணர்கிறோம். ஆனால் அதை தெரிந்து கொள்ளக் கூடிய நுட்பமான உணர்வு மையம் நமக்கு வேலை செய்யாத காரணத்தால் அதாவது நாம் அதை உபயோகப்படுத்தாமல் விட்டுவிட்ட காரணத்தால் நம்மால் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அகமும், புறமும் ஒன்றே. நமக்குதான் அது வேறுபாடாகத் தெரிகிறது. இரண்டும் ஒரு பெரிய சூழ்நிலையின் பகுதிகளே. அகத்தில் இருப்பதே புறத்தில் தெரிகிறது. அகத்தை உணர முடியாதவன், புறத்தைப் பார்த்து அகத்தை உணர்ந்து கொள்ளலாம். அவ்வாறு மேன்மை அடைந்த மகான்கள் நிறைய பேர் உண்டு.
Via FB மௌனத்தின்
குரல்