வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.
இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.
அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண் டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக் கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.
ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட் டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.
- நம்மைவிட உடலில் பலசாலி யானை
- நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
- நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.