திருப்புகழ் என்ற மகா மந்திரம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:27 | Best Blogger Tips



அருணகிரிநாதர், தன் பாடல்கள் மூலம் சந்தங்களுக்குத் தனிச் சுவை கூட்டிய முருகனடியார். அவருடைய திருப்புகழ், ஒரு ராணுவ அணிவகுப்பு போன்ற சீரான ஓசை நயத்துடன் கேட்போரை பெரிதும் உற்சாகம் கொள்ள வைக்கும். வாலிப வயதில் காமத்தில் ஆழ்ந்து, அதுதான் வாழ்க்கை எ ன்று கருதிய அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக் காத்தவர் அவரது தமக்கையார். தம்பியைத் திருத்தவே முடியாதோ என்று அஞ்சிய அவர், ஒரு கட்டத்தில் அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யத் தன்னிடம் பணம் இல்லாததால், தன்னையே யாருக்காவது விற்று அதனால் பணம் பெற்று சந் தோஷமாக இருக்கச் சொன்னபோது அதிர்ச்சியடைந்தார் அருணகிரியார்.

உடனே தான் பிறந்து, வாழ்ந்து வந்த திருவண்ணாமலையில் அருணாச லேஸ்வரர் ஆலய கோபுரத்தின் மீதேறி அங்கிருந்து தற்கொலை செய்துகொள்ள குதித்தார். ஆனால், அவரது பரம்பரை தெய்வமான முருகன் அவ ரைத் தாங்கிக் காப்பாற்றி அருளினார். அப்போது முருகன் அருளால் பிறந்ததுதான் ‘முத்தைத் தரு பத்தித் திருநகை...’ என்று தொடங்கும் பாடல். அந்தப் பாடலோடு ஆரம்பித்து திருப்புகழ் இயற்றிய அவர் பின்னாட்களில் திருவகுப்பு, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் என்று மொத்தம் சுமார் 6000 பாடல்களை இயற்றி முருகனுக்கு சேவை செய்தார்.

இவற்றில் வெறும் 1600 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றன! இந்தப் பாடல்கள் சிலவற்றில் காணப்படும் சமஸ்கிருத சொற்களிலிருந்து அவர் அந்த மொழி யையும் நன்கு அறிந்திருந்த புலமை வெளிப்படுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ் இனிமையான இசையாக இன்று ஒலிக்கப்படுவதற்குக் காரணமானவர் வள்ளிமலை சுவாமிகள். இவர் அர்த்தநாரி என்ற இயற்பெயரில் இப்போதைய கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்தவர். மைசூர் சமஸ்தானத்தில் சமையல்காரராகப் பணியாற்றியவர். கன்னட மொழி மட் டுமே தெரிந்தவர். அவர் ஒருமுறை கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு முருகன் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஒரு கணிகை திருப்புகழ் பாடலுக்கு நடனமாடியதைக் கண்டார். நடனத்தைவிட திருப்புகழின் சொல் அலங்காரத்தில் மனம் பறிகொ டுத்தார், அர்த்தநாரி. அன்று முதல் தொடர்ந்து முருகனை வழிபட ஆரம்பித்தார்.
திருவண்ணாமலைக்கு வந்த அவர் ரமண மகரிஷியை தரிசித்தார். தனக்கு ஏதேனும் மந்திரம் உபதேசிக்கும்படி வேண்டி நின்றார். ‘‘கீழே ஒருத்தர் இருக்கார், அவர் சொல்லுவார், போ’’ என்று மலையடிவாரத்துக்கு மகரிஷி அவரை அனுப்பி வைத்தார்.

அவர் சந்திக்கச் சொன்னது சேஷாத்ரி சுவாமிகளை. அர்த்தநாரியைப் பார்த்ததுமே, சுவாமிகள், ‘‘வா’’ என வாஞ்சையுடன் அழைத்தார். ‘‘திருப்புகழ் ஒரு மகா மந்திரம். அதனை இசையோடு பாடு, ஏற்றம் பெறுவாய்’’ என்று உபதேசம் செய்தார். தமிழே தெரியாதிருந்த அர்த்தநாரிக்கு பளிச்சென்று திருப்புகழ் பாட வந்தது - சந்தங்களில் எந்த சிக்கலும் இல்லாமல். அதுவரை சம்பிரதாயமாக ஓதப்பட்டு வந்த திருப்புகழுக்கு இசை அலங்காரம் செய் வித்தார். அவர் வகுத்துத் தந்த இசை வழியாகத்தான் கிருபானந்த வாரியார் சுவாமிகள் பெரும் புகழ் பெற்றார். அனைத்து முருகனடியார்களும் திருப்பு கழைப் பாடிப்பாடி இன்றளவும் வாய் மணக்க, வாழ்க்கை மணக்க வாழ்கிறார்கள்.

பொதுவாகவே ஒரு மந்திரம் என்பது ஒரு கடவுள் சம்பந்தப்பட்டது. ஆனால், அருணகிரியாரின் திருப்புகழ் என்ற மகா மந்திரம், விநாயகர், சிவன், பார் வதி, முருகன், மகாவிஷ்ணு, ஐயப்பன், ஆஞ்சநேயர் என்று ஏழு கடவுளர்களைப் போற்றுகிறது. ‘ஓம், ஐம், க்லீம்...’ என்பன போன்ற மந்திரங்களில் ஒலிதான் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், மகா மந்திரத்திலோ ஒலியுடன், பொருளும் தனிச் சிறப்புப் பெறுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ் என்ற மகா மந்திரத்தில் முருகனுக்குத் தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுவது எதனால் என்றால், அவன் மட்டுமே பிற ஆறு கடவுளர்களுடன் நெருங் கிய சாந்நித்தியம் கொண்டவன். நம்மில் பலர் கணபதி சுப்பிரமணியன், சக்தி வேலன், சிவ சுப்பிரமணியன், ராம (வெங்கட) சுப்பிரமணியன், ஹரிஹர சுப்பிரமணியன், அனுமந்த குமார் என்றெல்லாம் பெயர் கொண்டிருக்கிறோம்.

இதிலிருந்தே முருகன் அந்த ஆறு இறையம்சங்களோடும் இணைந்தவர் என்பது புரியும். இதனாலேயே ‘அதி சமய சாஸ்திரப் பொருளோனே’ என்று அருணகிரியார் முருகனைப் புகழ்கிறார். இத்தகைய மகா மந்திரத்தால் ஏழு சுவாமிகளையும் பூஜை செய்து வருகிறார் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன். அட்சரம் பிசகாத, சந்தங்களில் இட றாமல், படிகள் ஏறி இறங்கும் - ஏறி இறங்கும் தொனியாக இவர் நாவிலிருந்து புறப்படும் திருப்புகழ் பதிகங்கள் புது மெருகு பெறுகின்றன என்றே சொல்லலாம். ஏழு கடவுளர்களில் அந்தந்த சுவாமிக்கேற்ற மலர்களால் திருப்புகழ் பாடி இவர் பூஜை செய்வது குறிப்பிடத்தக்கது.

இடையிடையே பாடல்களில் பதம் பிரித்து, அந்தந்த பதங்களுக்கு விளக்கம், சிலசமயம், புதுமையான விளக்கம் கொடுத்து இவர் பூஜை நடத்துவது கண்ணுக்கும் கருத்துக்கும் அரிய தோர் ஆன்மிக விருந்தாக அமைகிறது என்பது உண்மை. அந்த பூஜையில் கலந்து கொள்வோர் எண்ணமெல்லாம் ஈடேறுவதும் கூடுதல் ஆன்மிக ஆதாயம்! ஆற்றல் மிக்க ஆன்மிக சொற்பொழிவாளராக, கவிஞராக, எழுத்தாளராகப் பரிமளிக்கும்தான், திருப்புகழை அந்தப் பிரிவுகளுக்கு மட்டுமல்லாமல், பூஜைக்காகவும் எடுத்தாள்வது முருகனின் பேரருளே என்று நெகிழ்ந்து சொல்கிறார்.