TNPSC தேர்வு - புதிய பாடத்திட்டம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:41 | Best Blogger Tips

TNPSC தேர்வுக்கு உற்சாகமாக படித்துக் கொண்டிருந்தவர்களை சற்று சோர்வடையச் செய்திருப்பது பாடத்திட்ட மாற்றம் தான். புதிதாக இந்த வருடம் தேர்வெழுத வந்தவர்களை இது பாதிக்கவில்லை.கடந்த காலங்களில் தேர்வெழுதி தேர்வாகாமல் தொடர்ந்து, இந்த வருட தேர்வுகளை எழுதி வெற்றி பெறலாம் எனக் காத்திருந்தவர்களுக்கு சோதனைதான். இந்தப் புதிய பாடத்திட்டத்தை பார்த்து முந்தைய தேர்வுகளில் தோல்வியுற்றவர்கள், 'அடடா போன வருசமே ஒழுங்கா படிச்சு எழுதியிருந்தால் தேர்வாகியிருக்கலாம்.இப்படி ஆகும்ன்னு தெரியாமப் போச்சே' எனப் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இதுவரையில் இருந்த பாடத்திட்டத்தைக் காட்டிலும் இது சற்று கடினமானதாகத்தான் கருதப்படுகிறது. பொதுத்தமிழைக் கூட கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வாவது என்பது கடினமான ஒன்றுதான் என பலவாறாகப் பேசப்படுகிறது.

நடைமுறையில் இருந்த பாடத்திட்டம் தகுதியானதாகவோ தரமானதாகவோ இல்லையென்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வேளையில் பழைய பாடத்திட்டத்தை மாற்றும் பணி முடுக்கிவிடப்பட்டது. விரைவாக நிர்ணயிக்கப்பட்டு புதிய பாடத்திட்டமும் வெளியானது. அந்தப் பாடத்திட்டத்தை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி.காரணம் வழக்கமாக கேட்கப்படும் பொதுத்தமிழ் பகுதியே அதில் காணமால் போயிருந்தது. தமிழ்நாட்டு அரசில் வேலை வாய்ப்பைப் பெற நடக்கும் தேர்வில் தமிழ் புறக்கணிப்பா? என அரசியல் வட்டாரத்திலும் இலக்கிய வட்டாரத்திலும் குற்றச்சாட்டு எழுந்தது.மீண்டும் பாடத்திட்டத்தை மாற்றி அதில் தாய்மொழியாம் தமிழை சேர்க்க வேண்டும் என அரசுக்கு பலரும் கோரிக்கை வைக்க தேர்வாணையம் மீண்டும் பாடத்திட்டத்தை புதுப்பித்து பொதுத்தமிழையும் புகுத்தி வெளியிட்டது. அந்தப் பாடத்திட்டத்தைப் பார்த்து பலர் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்.

காரணம், பாடத்திட்டத்தில் பொதுத்தமிழை சேர்க்க வேண்டும் என போர்க்கொடி துக்கியதற்காக கோபப்பட்ட தேர்வாணையம் "பொதுத்தமிழ்தானே பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.. இதோ சேர்த்தாச்சு பொதுத்தமிழ்ல கிட்டத்தட்ட எல்லாத்தையும் படிங்க என்று அ)மொழிப்பயிற்சி ஆ)இலக்கியம் இ)தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் என மூன்று பிரிவுகளைக் கொடுத்து 'அ' பிரிவில் 20 உட்பிரிவுகளையும் 'ஆ' பிரிவில் 10 உட்பிரிவுகளையும் 'இ' பிரிவில் 20 உட்பிரிவுகளைக் கொடுத்து, ம் போதுமா? இப்ப படிங்க என்று கூறுவதைப் போலிருக்கிறது.

பொது அறிவு பகுதிக்கான பாடத்தில் நுண்ணறிவுத்திறன் பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.அதிலிருந்து கிட்டத்தட்ட 25 வினாக்கள் கேட்கப்படலாம்.இதனால் வரலாறு, புவியியல் போன்ற பாடங்களில் வினாக்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. குரூப் 4 வி.ஏ.ஓ தேர்வில் கிராம நிர்வாகம் அடிப்படைத்தகவல் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. வேறு ஏதும் மாற்றமில்லை.

பொதுத்தமிழ் பகுதிதான் இப்போது தேர்வெழுதும் அனைவரும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கும் பகுதி.காரணம் சென்ற வருடம் வரை இருந்த பாடத்திட்டத்தில் இப்போதைய பாடத்திட்டத்தில் கொடுத்திருக்கும் 'அ' பிரிவு மட்டுமே பொதுத்தமிழ் பகுதிக்கானதாக இருந்தது.அதன் 20 உட்பிரிவுகளிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் 5 வினாக்கள் கேட்கப்படும்.அதற்காக பொதுத்தமிழை யாரும் சிரமமெடுத்து அமர்ந்து படிக்கத் தேவையில்லாமல் இருந்தது.காரணம் மொழிப்பயிற்சி வினாக்கள்தான் அனைத்தும், எனவே நன்றாகத் தமிழ் எழுத, பேச, படிக்கத் தெரிந்திருந்தாலே எளிமையாக மதிப்பெண்கள் பெறலாம்.சென்ற வருடங்களில் தேர்வான அனைவருக்கும் தமிழே கைகொடுத்தது எனலாம்.பொதுத்தமிழ் பகுதியில் குறைவான நேரத்தில் 95 மதிப்பெண்களைப் பெறலாம்.ஆனால் அந்தக் காலம் இப்போது மலையேறிவிட்டது.

மேற்கண்ட 'அ' பிரிவான மொழிப்பயிற்சி மட்டுமல்லாது ஆ,இ என இலக்கியம் மற்றும் தமிழும் தமிழ்த்தொண்டும் போன்ற பகுதிகள் 100 மதிப்பெண்களுக்கான தமிழ்ப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பை போல் இல்லாமல் பகுதி 'ஆ' பகுதி 'இ' என இரண்டிற்கும் நேரம் ஒதுக்கி படித்தால் மட்டுமே தேர்வாக முடியும்.ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 35 வினாக்கள் எதிர்பார்க்கலாம்.இல்லையெனில் 'அ' பிரிவில் 40 வினாக்களும் 'ஆ' பிரிவில் 20 வினாக்களும் 'இ' பிரிவில் 40 வினாக்களும் கேட்கப்படலாம்.எப்படியிருந்தாலும் மூன்று பிரிவுகளையும் நன்றாகப் படித்தால் மட்டுமே தேர்வாக முடியும்.

நாளுக்கு நாள் வருடத்திற்கு வருடம் தேர்வெழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.ஆதலால் பாடத்திட்டத்தையும் அதற்கேற்ப மாற்றம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றுதான். இந்தப் பாடத்திட்டம் மிகச் சிறப்பானது..தமிழை ஓரளவு படித்து தெரிந்துகொள்ள துணை நிற்கிறது. இந்தத் தேர்வில் போட்டியை பலப்படுத்துவதே தமிழ்தான்.தமிழை நன்றாகப் படித்தவன் நிச்சயம் தேர்வாவான்.இதில் சந்தேகமில்லை.

குரூப் 2 தேர்வு முறை மாற்றம்

இந்த முறை அதிரடியாக தேர்வு முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது,முன்பெல்லாம் குரூப் 2 தேர்வில் எழுத்து தேர்வில் மட்டுமே தேர்வானால் போதும் அடுத்ததாக நடக்கும் நேர்முகத்தேர்வில் பங்கு பெறலாம்.ஆனால் இப்போது அப்படி இல்லை.இரண்டு கட்ட எழுத்துத் தேர்வில் தேர்வானால் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு செல்ல முடியும்.இது ஆரோக்கியமான போக்கு.

முதற்கட்டமாக சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுதல், இதில் தேர்வானால் அடுத்தது விரிவான விடையளிக்கும் தேர்வு, இதிலும் தேர்வானால் மட்டுமே நேர்முகத் தேர்வு, இதில் தேர்வானால் பணி நியமனம்.இனி நடக்கும் குரூப் 2 தேர்வுகளில் சாதாரணமாக தேர்வாக முடியாது. அ,ஆ என விடைகளை பெட்டியில் நிரப்பினால் மட்டும் போதாது. இரண்டாம் கட்ட தேர்வில் விரிவான விடையளித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். தேர்வுக்கு தயாராகும் இத்தனை லட்சம் பேரில் எத்தனை பேருக்கு விரிவான விடைகள் தெரியும்?.அப்படித் தெரிந்தாலும் எத்தனை பேரால் என்ணியதை எழுத முடியும்?.அப்படி எழுதினாலும் எத்தனை பேரால் கொடுத்திருக்கும் நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியும்.?யோசிக்க வேண்டிய விஷயம்.

இன்று குரூப் 2 தேர்வுக்கு தயாராகும் பல பேர் பேனா பிடித்து எழுதும் பழக்கத்தையே மறந்தவர்களாக இருப்பீர்கள்.இந்த நிலை தேர்வுக்கு உபயோகப்படாது. எனவே படிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ அதைப் போல எழுதி பயிற்சி எடுப்பது முக்கியம். அனைத்தையும் படித்து கரைத்து குடித்திருந்தாலும் எழுத முடியவில்லையென்றால் சிரமம் தான்.

முன்பு ஒரே தேர்வில் நேர்முகத்தேர்வில் வென்றவர்கள் போக ஏனையோரை நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு தேர்வு செய்வர்.ஆனால் புதிய தேர்வின் படி அதற்கு தனித் தேர்வே நடத்தப்படுகிறது.

இந்த பாடத்திட்ட மாற்றமும் தேர்வு முறை மாற்றமும் சில பேருக்கு கடினமாக இருந்தாலும் இதை பல பேர் வரவேற்கிறார்கள்.இனி நன்றாகப் படித்து தேர்வு எழுதினால் மட்டுமே பணி என்ற நிலை இருக்கிறது.எனவே திட்டமிட்டு படியுங்கள்.. தேர்வில் வெற்றி பெறுங்கள்..வாழ்த்துகள்.

Thanks கல்வி வழிகாட்டி.