*அந்திமக் காலத்தில்* *நாம் படும் சிரமங்கள்*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:31 AM | Best Blogger Tips


 


*அந்திமக் காலத்தில்*

*நாம் படும் சிரமங்கள்*

முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்...

எருதைப் போலவே நாமும் பிறர்க்கென உழைத்து ஓடாய்த் தேய்ந்து சிரமப்படுகிரோம்.அந்திமக் காலத்தில் எழுந்திருக்க முடியாமல் போய்விடுகிறது.

அப்போது என்ன சிரமப்படுகிறோம் என்று சாஸ்திரம் சொல்கிறது பாருங்கள்.


வயதான காலம். உட்கார முடியவில்லை. எழுந்திருக்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. கண் தெரியவில்லை. இன்னொருத்தருடைய தயவிலே எப்போதும் இருக்க வேண்டியதாயிருக்கிறது. அந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டுப் போய்விடுகிறது.

ஆதி சங்கர பகவத் பாதாள் சொல்கிறார்.

‘எல்லாம் இவரை விட்டுப் போய்விடுகிறது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் போக மாட்டேன் என்கிறது: ஆசை!”

அந்த அந்திமக் காலத்திலேயும் சிரமப்படுத்துகிறதே! உடல் கூனி, கேள்விக்குறி போல் போய்விடும் – அந்த மாதிரி ஒரு நிலை ஏற்படுகிறது.



இதுவே கஷ்டம் தான். இன்னொரு கஷ்டம் பாருங்கள்.

அந்திமக் காலத்திலே பத்தினி கூட இருக்க வேண்டும். ஆனால் பத்னியையும் இழந்து விட்டவர் கதி என்ன! அது இன்னமும் கஷ்டமான நிலை!

கல்யாணத்திலே பாணிகிரஹணத்திலே அதற்கு முன்னால் வருகிற சப்தபதி மந்திரத்தில், ‘ இந்த இளமையிலே உன்னைக் கை பிடித்தேன். பிடித்த இந்தக் கையை, எழுந்திருக்க முடியாமல் தொண்டு கிழம் ஆனாலும் நான் விடமாட்டேன். ஜீவிதாந்தம் நீயும் நானும் அப்படியே இருக்க வேண்டும்’ என்று அமைந்திருக்கிறது.

ஆகவே அந்திமக் காலத்தில் பத்னியை இழந்து தவிப்பது இருக்கிறதே… அந்தச் சிரமத்தை சொல்லி முடியாது!

என்ன சிரமத்தைப் படுவார் அவர்?

அடுத்து அதைச் சொல்கிறது சாஸ்திரம்:

எல்லாவற்றுக்கும் பிள்ளைகளிடத்திலேயே கேட்க வேண்டும்! ஒரு தடவை கேட்டால் கொடுப்பார்கள். மறுதடவை கேட்டால் என்ன நினைப்பார்களோ என்று தயக்கம் வரும். பத்னியுமில்லை. உடம்பும் ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. மருமகள் ஏசுகிறாள். அந்த நச்சுப் பேச்சுக்களைத் தாங்கவே முடியவில்லை.

இப்படி விவரித்துக் கொண்டே வருகிற சாஸ்திரம் கடைசியாய்ச் சொல்கிறது. இப்படி ஜீவித்துக் கொண்டேயிருப்பதை விட ‘போய் சேர்ந்து விடுவதே நல்லது!’ அந்த மாதிரி ஒரு நிலை!

இப்படிப்பட்ட நிலையை அடையலாமா? அந்த மாதிரி நிலையை அடைந்தாலாவது விவேகம் வரவேண்டாமா?

அப்போதாவது கிருஷ்ணா, ராமா, கோவிந்தா என்று சொல்லக் கூடாதா?

சொல்லமாட்டார்! அந்த சமயத்திலேயும் விவேகம் வருவதில்லை. சாமான்ய விஷயத்தையே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகையினாலே அந்திமக் காலம் என்பது ரொம்ப சிரமம்.

அதையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதிரி ஒரு காலம் வரும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதிரி நிலையில் பகவான் நம்மை வைக்கக் கூடாது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதற்கு நாம் என்ன பண்ண வேண்டும் என்பதையும் இப்போதே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

நமது நரம்புகளெல்லாம் நன்கு முறுக்கேறி மிடுக்குடன் இருக்கையிலேயே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

எல்லாம் போன பிற்பாடு என்ன பண்ணுவது? ஒன்றும் பண்ண முடியாது!

அப்போதைக்கிப்போதே சொல்லி வைக்க வேண்டும்.

‘பிறர்க்கே உழைத்து’ என்பதில் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. ‘பிறர்’ என்பது பந்து மித்ரர்களைக் குறிக்கிறது போலவே ‘தான்’ அல்லாத தன் ‘சரீரத்துக்கே’ என்றும் குறிக்கும்.

இந்த சரீரம் நாமல்லவே! ஆத்மா தானே நாம். சரீரம் வெறும் உபகரணம். நாம் உயர்ந்து மேலே போய் உத்தம கதியை அடைவதற்காக இந்த கர்ண களேபரங்களையெல்லாம் பரமாத்மா நமக்குக் கொடுத்திருக்கிறான். இதைப் போய் நாம் சாச்வதம் என்று நினைக்கலாமா?

மாமிசத்தாலும் ரத்தத்தாலும் பிசைந்து கடையப்பட்ட சுவர் இது! இது நிற்பதற்கு உள்ளுக்குள்ளே ஸ்தம்பங்கள் எலும்புக்கூடு! அதற்கு மேல் கூரை வேயப்பட்டிருக்கிறது – ரோமங்களைக் கொண்டு! அதற்கப்புறம் வாஸ்து சாஸ்திர ரீதியாக நவத்வாரங்கள்!

பெரியாழ்வார் – இதை – உடலைப் பெரிய பட்டிணம் என்று சொல்கிறார்!

இந்த நகரத்துக்கு ஒன்பது வாயிற்படிகள் பரமாத்மா வைத்திருக்கிறான்.

இந்த வீட்டை நமக்குக் கட்டிக் கொடுத்து க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லக் கூடிய ஆத்மாவைக் கொண்டு வந்து இந்த வீட்டிலே உட்கார வைக்கிறான். க்ருஹப் பிரவேச சுபமுகூர்த்தம்!

வந்து உள்ளே உட்கார்ந்ததும் இது ஒரு தடவை உடலைப் பார்க்கிறது. பார்த்தவுடனே ‘இதுதான் சாச்வதம் – இதுதான் நம்மை ரக்ஷிக்கிறது’ என்று இந்த சரீரத்துக்கே உழைக்கிறது.

ஒருநாள், ஒவ்வொன்றாகக் குறைய ஆரம்பிக்கிறது. சரீரத்திலே இருப்பது ஒவ்வொன்றும் சொன்ன வார்த்தை கேட்காமல் வேறான திக்கிலே போகவே, இது நமக்கு சாச்வதமில்லை என்று தெரிந்து போகிறது. அப்போது ‘வந்து திருவடியை அடைந்தேன்’ என்று விழுகிறான்!

பகவானுடைய காருண்யத்தைப் பாருங்கள். நன்றாயிருக்கும் போது வரவில்லை. எல்லாம் போய்விட்ட பிறகு இப்போது ‘உன்னிடத்திலே வந்தேன்’ என்று சொன்னால் அவன் ‘இப்போதாவது வந்தாயே’ என்று ஏற்றுக் கொள்கிறான்.

‘ஏன் முந்தாநாள் வரவில்லை; ஏன் நேற்று வரவில்லை; ஏன் முன்பே வரவில்லை? என்று அவன் கேட்கமாட்டான். வந்ததைக் கொண்டாடி அனுக்ரஹம் பண்ணுகிறான்!

இந்தக் குழந்தை நம்மிடத்திலே வந்ததே என்று அனுக்கிரஹம் பண்ணுகிறான்.

அதனாலே நினைத்து நினைத்து, நினைத்து நினைத்து வருந்த வேண்டும். பச்சாதாபப்படவேண்டும். கண்ணீர் விட்டுக் கதற வேண்டும்.

கண்களிலிருந்து விழக்கூடிய நீரைக் கைகளால் இரைத்து, வாரி வாரி விட வேண்டும்.

அது தான் நிர்வேதம்!

அந்த நிர்வேதம் யாருக்கு வரும்?

விவேகமுடையவனுக்குத்தான் வரும்.

விவேகமுடையவனுக்குத்தான் நிர்வேதம் வருமேயொழிய அவிவேகிகளுக்கு வருமா!

ஆகவே விவேகம் என்கிற முதல் படிக்கட்டை ஏறினால் தான் நிர்வேதம் என்கிற இரண்டாவது படிக்கட்டை ஏற முடியும்.

விவேகம் வரவில்லையானால் நிர்வேதம் வராது.

ஆன்மீக அன்பன் ஹரி

நன்றி இணையம்


*புரிதலே வாழ்க்கை*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:15 AM | Best Blogger Tips

 


இராணி என்பவர் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.

இராஜா என்பவர் அதே தூரத்தை கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.

இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் இராணி என்றுதான் வரும்.

எனினும் இப்பொழுது இராணி என்பவர் நன்கு பண்படுத்தப்பட்ட சாலையில் அந்த தூரத்தைக் கடந்தார் என்றும்

இராஜா என்பவர் கரடுமுரடான பாதையில் அதைக் கடந்தார் என்றும்

நான் சொன்னால் இப்பொழுது உங்களுடைய பதில் மாறும் அல்லவா?



ஆம் நிச்சயமாக இப்பொழுது இராஜா தான் வேகமானவர் என்று சொல்லுவோம்.

மறுபடி இப்பொழுது இராணிக்கு 50 வயது என்றும் இராஜாவுக்கு 25 வயது என்றும் கூடுதல் தகவலை நான் கொடுக்கும் பொழுது,

உங்களுடைய பதில் மறுபடி மாறும் அல்லவா?

ஆமாம் இப்போது இராணி தான் வேகமானவர் என்று சொல்வோம்.

மேலும் இராஜா என்பவருடைய எடை 140 கிலோ என்றும் இராணியுடைய எடை 65 கிலோ என்று நான் சொல்லும்போது மீண்டும் இந்த பதில் மாறும்.

இப்பொழுது இராஜா தான் வேகமானவர் என்று சொல்லுவோம்.

இதேபோல இராஜா பற்றியும் இராணி பற்றியும் நம்முடைய இந்த முடிவானது அவர்களைப் பற்றிய அதிகத் தகவல்கள், கூடுதல் தரவுகள் கிடைக்கக் கிடைக்க மாறிக்கொண்டே இருக்கும்.

இதுதான் வாழ்க்கையிலும். நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக வேகமாக நம்முடைய *அபிப்பிராயங்களை உருவாக்குகிறோம்.*

*அவர்களோடும், அவர்களின் செயல்பாடுகளோடும் நம்மை ஒப்பிட தொடங்குகின்றோம்*.

*இதனால் நாம் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கின்றோம்*.

*வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாகும்*.

*ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வேறுபட்டதாகும்*.

*ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் அறிவும், பொருளும் வேறாக இருக்கலாம்*.

*ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறாக இருக்கலாம்*.

*அதற்கான தீர்வுகள் கூட வேறாக இருக்கலாம்*.

எனவே வாழ்க்கை என்பது வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும்.

*அதை தேவையில்லாமல் மற்றவர்களோடு ஒப்பிட்டு வீணாக்கிக் கொள்ளாதீர்கள்*.

*நீங்கள் தான் உயர்ந்தவர்கள். நீங்கள் தான் சிறந்தவர்கள்*.

உங்களுடைய முழு சக்தியையும் ஆற்றலையும் பிரயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுடைய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்து முன்னேறுங்கள்.

எப்போதும்

ஆரோக்கியமாக இருங்கள்.

அமைதியாக இருங்கள்.

திருப்தி அடைந்தவராக இருங்கள்.

புன்னகையைப் படர விடுங்கள்.

மனம்விட்டு சிரிக்கப் பழகுங்கள். சமுதாயத்திற்கும்,

இந்த தேசத்திற்கும் ஏதாவது சேவை புரிந்து கொண்டே இருங்கள்.

*இராஜா, இராணி போல் வாழுங்கள்*.

*சிந்திப்போம் செயல்படுவோம்

 

நன்றி இணையம்

மீனாட்சி அம்மன் என்பது

மணக்கால் அய்யம்பேட்டை | 9:59 AM | Best Blogger Tips

 









சிதம்பரம், காசி, திருக்காளத்தி,திருவண்ணாமலை வரிசையில் முக்கியமான 5வது தலமாக திருவாலவாய் உள்ளது...

”திருவாலவாய்”என்பது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆகும்.இது மிகப்பெரிய சிவ தலமாகும்.

இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது.

இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.



மீனாட்சி அம்மன் என்பது தமிழில் ”அங்கையற்கண்ணி”என்று பொருள் அதாவது மீன் போல் கண்ணுடையவள் மீனாட்சி.மீன் எப்போதும் தன் கண்கள் மூலம் தன் முட்டைகளை பாதுகாக்கும் அதைபோலவே எப்போதும் விழித்திருந்து பக்தர்களை பாதுகாப்பவள் மீனாட்சி.

தேவலோகத்தின் அரசனான இந்திரனால் இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கையாகும்.

இராமர், லட்சுமணர், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இக்கோயில் வழிபடப்பட்டுள்ளது.

இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம் பிரசிபெற்றதாகும்.

2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியத்துவமானது.

மதுரை நகரானது திருவாலவாய் ,சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தின் மூலவர் சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார்.

இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர். இவரை வழிபட்டு இந்திரன் தன்னுடைய பாவத்தினை தீர்த்திக் கொண்டான். அதனால் சுயம்பு லிங்கத்திற்கு கோயில் எழுப்பினான்.

இத்தளத்தின் அம்பாள் மீனாட்சியம்மனாவார்.இவரது விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது.அம்பாள் மீனாட்சியின் கருவறையானது 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

இக்கோயில் சொக்கலிங்கரையும்,மீனாட்சி அம்மனையும் வழிபட்டால் அனைத்து சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் இந்த கோயில் நாம் கால் வைத்தாலே அது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகும்.

 

நன்றி இணையம்