*அந்திமக்
காலத்தில்*
*நாம்
படும் சிரமங்கள்*
முக்கூர் லக்ஷ்மி
நரசிம்மாச்சாரியார்...
எருதைப் போலவே நாமும்
பிறர்க்கென உழைத்து ஓடாய்த் தேய்ந்து சிரமப்படுகிரோம்.அந்திமக் காலத்தில்
எழுந்திருக்க முடியாமல் போய்விடுகிறது.
அப்போது என்ன சிரமப்படுகிறோம் என்று சாஸ்திரம் சொல்கிறது பாருங்கள்.
வயதான காலம். உட்கார
முடியவில்லை. எழுந்திருக்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. கண் தெரியவில்லை.
இன்னொருத்தருடைய தயவிலே எப்போதும் இருக்க வேண்டியதாயிருக்கிறது. அந்த மாதிரி ஒரு
நிலை ஏற்பட்டுப் போய்விடுகிறது.
ஆதி சங்கர பகவத் பாதாள்
சொல்கிறார்.
‘எல்லாம்
இவரை விட்டுப் போய்விடுகிறது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் போக மாட்டேன் என்கிறது:
ஆசை!”
அந்த அந்திமக் காலத்திலேயும்
சிரமப்படுத்துகிறதே! உடல் கூனி, கேள்விக்குறி போல் போய்விடும் – அந்த மாதிரி ஒரு நிலை ஏற்படுகிறது.
இதுவே கஷ்டம் தான். இன்னொரு
கஷ்டம் பாருங்கள்.
அந்திமக் காலத்திலே பத்தினி கூட
இருக்க வேண்டும். ஆனால் பத்னியையும் இழந்து விட்டவர் கதி என்ன! அது இன்னமும்
கஷ்டமான நிலை!
கல்யாணத்திலே பாணிகிரஹணத்திலே
அதற்கு முன்னால் வருகிற சப்தபதி மந்திரத்தில், ‘ இந்த இளமையிலே உன்னைக் கை பிடித்தேன். பிடித்த
இந்தக் கையை, எழுந்திருக்க முடியாமல் தொண்டு கிழம் ஆனாலும் நான்
விடமாட்டேன். ஜீவிதாந்தம் நீயும் நானும் அப்படியே இருக்க வேண்டும்’ என்று அமைந்திருக்கிறது.
ஆகவே அந்திமக் காலத்தில்
பத்னியை இழந்து தவிப்பது இருக்கிறதே… அந்தச் சிரமத்தை சொல்லி முடியாது!
என்ன சிரமத்தைப் படுவார் அவர்?
அடுத்து அதைச் சொல்கிறது
சாஸ்திரம்:
எல்லாவற்றுக்கும்
பிள்ளைகளிடத்திலேயே கேட்க வேண்டும்! ஒரு தடவை கேட்டால் கொடுப்பார்கள். மறுதடவை
கேட்டால் என்ன நினைப்பார்களோ என்று தயக்கம் வரும். பத்னியுமில்லை. உடம்பும்
ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. மருமகள் ஏசுகிறாள். அந்த நச்சுப் பேச்சுக்களைத்
தாங்கவே முடியவில்லை.
இப்படி விவரித்துக் கொண்டே
வருகிற சாஸ்திரம் கடைசியாய்ச் சொல்கிறது. இப்படி ஜீவித்துக் கொண்டேயிருப்பதை விட ‘போய் சேர்ந்து விடுவதே நல்லது!’ அந்த மாதிரி ஒரு நிலை!
இப்படிப்பட்ட நிலையை அடையலாமா? அந்த மாதிரி நிலையை அடைந்தாலாவது விவேகம்
வரவேண்டாமா?
அப்போதாவது கிருஷ்ணா, ராமா, கோவிந்தா என்று சொல்லக் கூடாதா?
சொல்லமாட்டார்! அந்த
சமயத்திலேயும் விவேகம் வருவதில்லை. சாமான்ய விஷயத்தையே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகையினாலே அந்திமக் காலம்
என்பது ரொம்ப சிரமம்.
அதையெல்லாம் நாம் நினைத்துப்
பார்க்க வேண்டும். அந்த மாதிரி ஒரு காலம் வரும் என்று நினைத்துப் பார்க்க
வேண்டும். அந்த மாதிரி நிலையில் பகவான் நம்மை வைக்கக் கூடாது என்பதையும்
நினைத்துப் பார்க்க வேண்டும். அதற்கு நாம் என்ன பண்ண வேண்டும் என்பதையும் இப்போதே
நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.
நமது நரம்புகளெல்லாம் நன்கு
முறுக்கேறி மிடுக்குடன் இருக்கையிலேயே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.
எல்லாம் போன பிற்பாடு என்ன
பண்ணுவது? ஒன்றும் பண்ண முடியாது!
அப்போதைக்கிப்போதே சொல்லி வைக்க
வேண்டும்.
‘பிறர்க்கே
உழைத்து’ என்பதில் இன்னொரு அர்த்தமும்
இருக்கிறது. ‘பிறர்’ என்பது பந்து மித்ரர்களைக் குறிக்கிறது போலவே ‘தான்’ அல்லாத தன் ‘சரீரத்துக்கே’ என்றும் குறிக்கும்.
இந்த சரீரம் நாமல்லவே! ஆத்மா
தானே நாம். சரீரம் வெறும் உபகரணம். நாம் உயர்ந்து மேலே போய் உத்தம கதியை
அடைவதற்காக இந்த கர்ண களேபரங்களையெல்லாம் பரமாத்மா நமக்குக் கொடுத்திருக்கிறான்.
இதைப் போய் நாம் சாச்வதம் என்று நினைக்கலாமா?
மாமிசத்தாலும் ரத்தத்தாலும்
பிசைந்து கடையப்பட்ட சுவர் இது! இது நிற்பதற்கு உள்ளுக்குள்ளே ஸ்தம்பங்கள்
எலும்புக்கூடு! அதற்கு மேல் கூரை வேயப்பட்டிருக்கிறது – ரோமங்களைக் கொண்டு! அதற்கப்புறம் வாஸ்து சாஸ்திர
ரீதியாக நவத்வாரங்கள்!
பெரியாழ்வார் – இதை – உடலைப் பெரிய பட்டிணம் என்று சொல்கிறார்!
இந்த நகரத்துக்கு ஒன்பது
வாயிற்படிகள் பரமாத்மா வைத்திருக்கிறான்.
இந்த வீட்டை நமக்குக் கட்டிக்
கொடுத்து க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லக் கூடிய ஆத்மாவைக் கொண்டு வந்து இந்த வீட்டிலே
உட்கார வைக்கிறான். க்ருஹப் பிரவேச சுபமுகூர்த்தம்!
வந்து உள்ளே உட்கார்ந்ததும் இது
ஒரு தடவை உடலைப் பார்க்கிறது. பார்த்தவுடனே ‘இதுதான் சாச்வதம் – இதுதான் நம்மை ரக்ஷிக்கிறது’ என்று இந்த சரீரத்துக்கே உழைக்கிறது.
ஒருநாள், ஒவ்வொன்றாகக் குறைய ஆரம்பிக்கிறது. சரீரத்திலே
இருப்பது ஒவ்வொன்றும் சொன்ன வார்த்தை கேட்காமல் வேறான திக்கிலே போகவே, இது நமக்கு சாச்வதமில்லை என்று தெரிந்து போகிறது.
அப்போது ‘வந்து
திருவடியை அடைந்தேன்’ என்று விழுகிறான்!
பகவானுடைய காருண்யத்தைப்
பாருங்கள். நன்றாயிருக்கும் போது வரவில்லை. எல்லாம் போய்விட்ட பிறகு இப்போது ‘உன்னிடத்திலே வந்தேன்’ என்று சொன்னால் அவன் ‘இப்போதாவது வந்தாயே’ என்று ஏற்றுக் கொள்கிறான்.
‘ஏன்
முந்தாநாள் வரவில்லை; ஏன் நேற்று வரவில்லை; ஏன் முன்பே வரவில்லை? என்று அவன் கேட்கமாட்டான். வந்ததைக் கொண்டாடி
அனுக்ரஹம் பண்ணுகிறான்!
இந்தக் குழந்தை நம்மிடத்திலே
வந்ததே என்று அனுக்கிரஹம் பண்ணுகிறான்.
அதனாலே நினைத்து நினைத்து, நினைத்து நினைத்து வருந்த வேண்டும்.
பச்சாதாபப்படவேண்டும். கண்ணீர் விட்டுக் கதற வேண்டும்.
கண்களிலிருந்து விழக்கூடிய
நீரைக் கைகளால் இரைத்து, வாரி வாரி விட வேண்டும்.
அது தான் நிர்வேதம்!
அந்த நிர்வேதம் யாருக்கு வரும்?
விவேகமுடையவனுக்குத்தான் வரும்.
விவேகமுடையவனுக்குத்தான் நிர்வேதம்
வருமேயொழிய அவிவேகிகளுக்கு வருமா!
ஆகவே விவேகம் என்கிற முதல்
படிக்கட்டை ஏறினால் தான் நிர்வேதம் என்கிற இரண்டாவது படிக்கட்டை ஏற முடியும்.
விவேகம் வரவில்லையானால்
நிர்வேதம் வராது.
ஆன்மீக அன்பன் ஹரி
நன்றி இணையம்