அருள்மிகு செல்வலலிதாம்பிகை அம்மன்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:41 PM | Best Blogger Tips

 


*அருள்மிகு செல்வலலிதாம்பிகை அம்மன் திருக்கோயில், செல்லப்பிராட்டி -604 210. செஞ்சி, விழுப்புரம் மாவட்டம்.*

மூலவர் – செல்வ லலிதாம்பிகை

பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்பு

ஊர் – செல்லப்பிராட்டி, செஞ்சி

மாவட்டம் – விழுப்புரம்

மாநிலம் – தமிழ்நாடு

தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். யாகத்தின் பலனாக இராமபிரான் அவதரித்தார். இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் ரிஷ்யசிருங்க முனிவர். இவர் காஷ்யப முனிவரின் மகனான விபாண்டகருக்கு பிறந்தவர். இவரிடம் ஒரு கற்பலகை இருந்தது. அதை அம்பாளாகக் கருதி அவர் வழிபட்டார். இந்தப் பலகை எப்படியோ இந்த ஊருக்கு வந்துள்ளது. அதற்கு “லலித செல்வாம்பிகை” என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

பிற்காலத்தில், கற்பலகையைப் பிரதிட்டை செய்து, கீழே அம்பாள் விக்ரகம் வைக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் காஞ்சிக்கு செல்லும் போது, அவருக்கு இத்தல அம்மன் காட்சி கொடுத்து வழி கூறியதாக கூறப்படுகிறது.

ரிஷ்யசிருங்கரின் விக்ரகமும் இங்குள்ளது.

கற்பலகையின் வடிவமைப்பு:

மூலவராக வணங்கப்படும் அம்மன் கற்பலகை வடிவில் இருக்கிறாள்.

ஒரு காலத்தில், கற்பலகைகளில் மந்திரங்களை எழுதிக் கடவுளாக வழிபட்டனர். எனவே, இத்தலம் காலத்தால் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது.

கற்பலகை, 4 அடி உயரமும், செவ்வக வடிவமும் கொண்டது. பலகையில் 12 சதுரக்கட்டங்கள் உள்ளன. இந்தக் கட்டங்களைச் சுற்றி, உலக நாயகியான ஆதிபராசக்தியின் பீஜாட்சர மந்திரத்தின் சூட்சும எழுத்துக்கள் உள்ளன. நடுவில் திரிசூலம் உள்ளது. வலது மேல் பக்கத்தில் சூரியனும், இடது மேல் பக்கத்தில், சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன.

நடுநாயகமாக முப்பெரும் தேவியரின் அம்சங்களையும் ஒருங்கிணைத்து, அம்மனின் திருவுருவம் ஓவிய வடிவில் உள்ளது. ஆயினும், உருவ வழிபாடு கருதி, கற்பலகைக்கு கீழே 3 அடி உயரத்தில் அம்மன் சிலை பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.

இத்தல அம்மனுக்கு எட்டு கரங்கள், நெற்றியில் பிறைச்சந்திரன், ஐந்துதலை நாகம், சூலம் ஆகியவற்றுடன், இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு, தாமரை பீடத்தில் சாந்த சொரூபிணியாக அமர்ந்துள்ளாள்.

வலது திருக்கரம் பக்தர்களை காக்கும்படியும், இடது திருக்கரம் பாதத்தை நோக்கியபடியும் அமைந்துள்ளது.

பின்கரங்களில் சரசுவதிக்குரிய அட்சரமாலை மற்றும் கமண்டலம், இலட்சுமிக்குரிய சங்கு, சக்கரம், பார்வதிக்குரிய பாசம், அங்குசம் ஆகியவை உள்ளன. இந்த அம்மனை வழிபட்டால் துர்க்கை, லட்சுமி, சரசுவதி ஆகிய முப்பெரும் தேவியரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மிகவும் பழமையான இத்தலத்தில் தியானம் செய்தால் “ஓம்” எனும் மந்திரம் நம் காதில் ஒலிப்பது போன்ற உணர்வு உண்டாகிறது என்று கூறுகின்றனர். இக்கோயிலை சுற்றி எட்டு திசையிலும் எட்டு அம்மன் கோயில்கள் உள்ளன.

*🌹பக்தியுடன்🌹*

*சோழ.அர.வானவரம்பன்*

வடக்கே காஞ்சிபுரம் காமாட்சி, வட கிழக்கே மயிலாப்பூர் கோலவிழி அம்மன், கிழக்கில் கடும்பாடி அம்மன், தென்கிழக்கே திருவக்கரை வக்கிரகாளி, தெற்கே சமயபுரம் மாரியம்மன், தென்மேற்கே செஞ்சி கமலக்கன்னி, மேற்கே மேல்மலையனூர் அங்காள பரமேசுவரி, வடமேற்கே படவேடு ரேணுகா பரமேசுவரி அருள்பாலிக்க, நடுநாயகமாக செல்வ லலிதாம்பிகை வீற்றிருக்கிறாள்.

தல விநாயகர்: ரிஷ்ய சிருங்க முனிவர் பூஜித்த சித்தி விநாயகர்.

கோயில் அமைப்பு:

ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமானம் ஆகியவை சோழர் கால கட்டட அமைப்பை ஒத்துள்ளது.

பிரகாரத்தில் சிவ சக்தி, விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி உள்ளனர். உள் மண்டபத்தில் மகா கணபதி, சுப்ரமணியர் சன்னதிகள் உள்ளன.

துர்க்கை, லட்சுமி, சரசுவதி ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சங்களும் இணைந்திருக்கும் சிலையை இத்தலத்தில் தரிசிக்கலாம்.

திருவிழா: நவராத்திரி

இந்த அம்மனை வழிபட்டால் துர்க்கை, லட்சுமி, சரசுவதி ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அம்மனுக்கு பால் அபிசேகம் செய்து, புது புடவை சாற்றி வழிபடுகின்றனர்.

மூலவர் – செல்வ லலிதாம்பிகை

பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்பு

ஊர் – செல்லப்பிராட்டி, செஞ்சி

மாவட்டம் – விழுப்புரம்

மாநிலம் – தமிழ்நாடு

*🌹பக்தியுடன்🌹*

*சோழ.அர.வானவரம்பன்*

 

நன்றி இணையம்


*அட்ட_வீரட்ட_தலங்கள்*

மணக்கால் அய்யம்பேட்டை | 1:38 PM | Best Blogger Tips

 



*அறுபடை வீடு தெரியும்... ஈசன் அருள்பாலிக்கும் அட்ட வீரட்ட தலங்கள் தெரியுமா?*

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார்... குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.... அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது....

*1.பிரமசிரக்கண்டீசுவரர் ஆலயம், திருக்கண்டியூர்*

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு சுமார் 4 கி.மீ தொலைவிலிருக்கிறது திருக்கண்டியூர்.... மூலவர் பெயர் வீரட்டேசுவரர்...அம்பிகை மங்கள நாயகி...

ஐந்து தலைகளுடன் படைப்புத் தொழிலைச் செய்து வந்த பிரம்மன், அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டார்.... பிரம்மனின் செருக்கை ஒடுக்க நினைத்த சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையைக் கொய்து செருக்கை அடக்கினார்... பிரம்மாவின் சிரத்தை தன் சூலத்தால் கண்டம் செய்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு கண்டியூர் என்ற பெயர் ஏற்பட்டது... இறைவனுக்கு பிரமசிரக்கண்டீசுவரர் என்று திருப்பெயர்.... இவரை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்...

*2. வீரட்டேசுவரர் ஆலயம், திருக்கோவிலூர்...*

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது வீரட்டேசுவரர் ஆலயம்... வீரட்டேசுவரர் சுயம்புவாக அருள்புரிகிறார்... இறைவன் வீரட்டேசுவரர்.. அம்பிகை பெரியநாயகி, சிவானந்தவல்லி....

அந்தகாசுரனை கீழே தள்ளி, அவன் மேல் சூலாயுதத்தை ஏவும் நிலையில் அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி காட்சிதருகிறார்... அந்தகாசுரன் என்பவன், இறைவனிடம் வரம் பெற்ற செருக்கில் உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் துன்புறுத்தினான்... தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்... தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சிவபெருமான், தம்முடைய அம்சமாக பைரவரைத் தோற்றுவித்து, அந்தகாசுரனை சம்ஹாரம் செய்தார்... அஷ்டமியன்று இந்தத் தலத்துக்கு வந்து பைரவர் உருவில் அருள்புரியும் இறைவனை வழிபட்டால், கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை...

*3. வீரட்டானேசுவரர் ஆலயம், திருவதிகை*

கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ தொலைவில் கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது... இந்தத் தலத்தில் அருளும் இறைவன் திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்தார்... மேலும், திருஞானசம்பந்தருக்கு திருநடனமாடியும், அப்பருக்கு ஏற்பட்ட சூலைநோயைத் தீர்த்தும் அருள் புரிந்திருக்கிறார்....

இறைவனின் திருப்பெயர் வீரட்டானேசுவரர்.. அம்பிகை பெரியநாயகி, திரிபுரசுந்தரி...

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அரக்க சகோதரர்கள் பிரம்மனிடம் வரம் பெற்று தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர்... மூன்று கோட்டைகளும் முப்புரம் என அழைக்கப்பட்டன... முப்புரத்தைப் பெற்ற ஆணவத்தால் மூவரும் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர்... தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்... சிவபெருமான் மூன்று கோட்டைகளையும் தம்முடைய புன்னகையால் எரித்து அசுரர்களை சம்ஹாரம் செய்தார்... சிவபெருமான் முப்புரங்களை அழித்த இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நம் மனதிலிருக்கும் தீய குணங்கள் நீங்குவதுடன், வயிறு தொடர்பான பிணிகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை....

*4.தருப்பறியலூர் வீரட்டானேசுவரர் ஆலயம்,

கீழப்பரசலூர்...*

காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில்... மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது பரசலூர்... திருப்பறியலூர் என்பது புராணப் பெயர்... பரசலூர் என்றே இப்போது அழைக்கப்படுகிறது.... சிவபெருமான் தட்சனின் கர்வத்தை அடக்கிய தலம்...

மூலவர்: வீரட்டானேசுவரர்.. அம்பிகை: இளங்கொம்பனையாள்....

தட்சன், தன் மாப்பிள்ளையான சிவபெருமானை மதிக்காமலும், அவருக்குச் சேரவேண்டிய அவிர் பாகத்தைக் கொடுக்காமலும் ஒரு யாகம் செய்கிறான்... அதனால் கோபம் கொண்ட சிவன் வீரபத்திரர் மூலம் தட்சனின் யாகத்தை நிறுத்தி, யாகத்தில் பங்கு கொண்ட தேவர்களை அழித்ததுடன், தட்சனின் தலையைக் கொய்து அவனது அகங்காரத்தை அடக்கிய தலம் இது... தட்சனின் தலையைப் பறித்ததால் எனவும் அழைக்கப்படுகிறது... இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்..

*5.வீரட்டானேசுவரர் ஆலயம், திருவிற்குடி..*

இந்தத் தலமும் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது... திருவாரூரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவிலுள்ளது திருவிற்குடி...

இறைவன்: வீரட்டானேசுவரர்... அம்பிகை: ஏலவார்க்குழலி, பரிமளநாயகி...

ஜலந்தரன் என்ற அசுரனை சிவபெருமான் சம்ஹாரம் செய்த தலம் இது... ஜலந்தரனின் மனைவி பிருந்தையை துளசியாக ஏற்ற தலம் திருவிற்குடி... முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவிற்குடி...

*6.வீரட்டானேசுவரர் ஆலயம், திருவழுவூர்..*

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் மங்கைநல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது வழுவூர்... இந்தத் தலத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியவர்... இந்தத் தலத்தில்தான் கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் சிவபெருமானின் திருவடியின் உட்புறத்தை தரிசிக்க முடியும்... இறைவன்: வீரட்டானேசுவரர்.. அம்பிகை: இளங்கிளைநாயகி...

இந்தத் தலத்தில் யானை வடிவிலிருந்த கஜமுகாசுரன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சிவபெருமான், அவனுடைய தோலை உரித்து ஆடையாக உடுத்தியிருக்கிறார்... அமாவாசையன்று இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனையும் அம்பிகையையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்...

*7. வீரட்டேசுவரர் ஆலயம், திருக்குறுக்கை..*

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது திருக்குறுக்கை...

இறைவன்: வீரட்டானேசுவரர்.. அம்பிகை: ஞானாம்பிகை...

கயிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமான், தவம் கலைந்து பார்வதி தேவியை மணந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தேவர்களின் தூண்டுதலின் பேரில் மன்மதன் புஷ்ப பாணங்களை சிவபெருமானின் மீது தொடுக்க, நிஷ்டை கலைந்ததால் சினம்கொண்ட சிவபெருமான், மன்மதனை எரித்த தலம் இது...பின்னர் ரதிதேவியின் வேண்டுதலுக்கு இரங்கி, மன்மதனை உயிர்ப்பித்து, ரதியின் கண்களுக்கு மட்டுமே அவன் தெரிவான் என்று வரம் கொடுத்த தலம்... திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோர் வழிபட்ட தலம்...இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி இனிய இல்லற வாழ்க்கை அமையும்...

*8. அமிர்தகடேசுவரர் ஆலயம், திருக்கடையூர்...*

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தில் அருளும் இறைவனின் திருப்பெயர் அமிர்தகடேசுவரர்..

அம்பிகை அபிராமி....

தன் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த யமதேவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டான் மார்க்கண்டேயன்..

ஆணவம் கண்களை மறைக்க, ஈசனின் சந்நிதியில் இறைவனைத் தழுவிக் கொண்ட மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசினான் யமதர்மன்... தன் பக்தனைக் காப்பாற்றவும், யமதர்மனின் ஆணவத்தை அடக்கவும் வேண்டி, சிவபெருமான் யமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்த தலம் இது... இந்தத் தலத்தில் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் பெற ஆயுஷ் ஹோமம் செய்துகொள்வது சிறப்பு... சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் தினமும் நடைபெறும் தலம்...

பிறப்பிலி என்னும்

பெருமைக்கு உரிய சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களை தரிசித்து வழிபட்டால், கருமேகங்களாக நம் மனதை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்றையும் வென்று, இறைவனின் திருவருளைப் பெற்று சிறப்புற வாழலாம்....

ஓம் நமசிவாய

 


நன்றி இணையம்


பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா – வாழ்க்கை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:35 PM | Best Blogger Tips

 


பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா – வாழ்க்கை வரலாறு

தீனதயாள் ஜி, பண்டிட் ஜி என்று நாம் பெருமையோடும் பாசத்தோடும் அழைக்கும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய அவர்கள், உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள மதுரா மாவட்டத்திலுள்ள நாகலா சந்தர்பான் என்னும் ஊரில் பிரிஜ் என்னும் புனிதஸ்தலத்தில் 1916 –ம் வருடம், செப்டெம்பர் மாதம் 25 ம் தேதி பிறந்தார்.

உபாத்யாய அவர்களின் தந்தையார் பகவதி பிரசாத், உதவி ஸ்டேஷன் மாஸ்டர் ஆக ஜாலேசரில் பணிபுரிந்தவர். தாயார் திருமதி ராம்பியாரி சிறந்த இறை பக்தியாளர்.

பண்டிட்ஜியின் பாட்டனாரான பண்டிட் ஹரிராம் உபாத்யாய ஜோதிட சாஸ்திரம் நன்கறிந்தவர்.

குடும்பத்தில் உள்ளோரால் “தீனா” என்று அழைக்கப்பட்ட பண்டிட் ஜி அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கப்பட்டதில் அவர் மிகச்சிறந்த சிந்தனைவியலாளராகவும், நாட்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துகொண்டு மாபெரும் தேசத்தலைவராகவும் உருவெடுப்பார் என்றும் அறியப்பட்டது.


இளைய சகோதரர் ஷிவ்தயாள் பிறந்தபிறகு, தனது மூன்று வயதில் தந்தையாரையும் எட்டு வயதில் தாயாரையும் இழந்தார். பதேபூர் சிக்ரி என்னும் ஊரில் இளைய சகோதரரோடு தனது தாய்வழி பாட்டனாரான சுன்னியால்ஜி சுக்லா அரவணைப்பில் வாழ்ந்த பண்டிட் ஜிக்கு பாட்டனார் பாசமும் நிலைக்கவில்லை. மகள் இறந்த துயரத்தில் வாழ்ந்த அவர் அடுத்த இரண்டே வருடங்களில் 1926-ல் இறந்தார். இதன்பிறகு தனது தாய்மாமனார் ராதாராமன் சுக்லா அவர்களால் பாசத்தோடு வளர்க்கப்பட்ட பண்டிட் ஜிக்கு இன்னொரு இழப்பும் அவருடைய இளைய சகோதரர் வடிவில் வந்தது. பாசத்தோடும் பாதுகாப்போடும் பண்டிட்ஜியால் அரவணைக்கப்பட்ட அவருடைய இளைய சகோதரர் சிவ்தயாள் சின்னம்மை நோயால் கடுமையாக தாக்கப்பட்டு 1934 ம் வருடம் நவம்பர் மாதம் தனது உயிரை இழந்தார்.

பதினெட்டு வயதிற்குள் தனது இரத்த உறவுகள் அனைவரையும் இழந்தார் பண்டிட் ஜி.

பண்டிட் ஜியின் பள்ளிபடிப்பு

சிகார் என்னும் ஊரில் தனது பள்ளிப்படிப்பை மேற்கொண்ட பண்டிட் ஜி, சிறந்த மாணவராக விளங்கியதோடு பள்ளிப்படிப்பில் சிறப்பாக தேர்ச்சி பெற்றதால் அவ்வூரின் ராஜாவான கல்யாண்சிங் அவர்களால் தங்கப்பதக்கம் மற்றும் ரூ.250 பணம் பரிசளிக்கப்பட்டதோடு மாதந்திர உதவித் தொகையாக பத்து ரூபாய் பெறத் தொடங்கினார்.

இதன் பின்னர் கான்பூரில் சனாதன் தர்மா கல்லூரியில் பி.ஏ(கணக்கு) பட்டபடிப்பை மேற்கொண்ட பண்டிட்ஜிக்கு, அவருடைய நண்பர் பல்வந்த் மகாஷப்தே மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னையும் இணைத்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பரமபூஜன்ய டாக்டர்.ஸ்ரீ ஹெட்கவார் அவர்களை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார். கான்பூரில் உடன் படித்த ஸ்ரீ சுந்தர் சிங் பண்டாரி அவர்கள் நட்பும் கிடைத்தது. 1937-ல் பி.ஏ பட்ட படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றபின் ஆக்ராவில் எம்.ஏ பட்டபடிப்பை தொடங்கினார்.

ஆர்.எஸ்.எஸ்.-ல் தீவிர பணியாற்றுதல்

நானாஜி தேஷ்முக் மற்றும் ஸ்ரீ பாகு ஜுகாதே போன்ற மாமனிதர்களோடு இணைந்து பண்டிட் ஜி அவர்கள் தீவிர சங்கப்பணியாற்றத் தொடங்கினார். இந்த காலகட்டத்திலும் பண்டிட் ஜிக்கு இன்னொரு சொந்தத்தையும் இழக்க நேரிட்டது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆக்ராவில் சிகிச்சை மேற்கொண்ட அவருடைய உறவினரான ரமாதேவி என்பவரும் நோயின் பிடியில் சிக்கி உயிரிழந்தார். இதனால் கடும் மனவேதனை அடைந்த பண்டிட் ஜியால் தனது எம்.ஏ படிப்பையும் தொடர முடியாமல் போனது. இதனால் சிகார் மகராஜாவிடமிருந்து பெற்ற உதவிதொகையையும் இழந்தார். இதன்பிறகு அரசாங்க வேலை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கான ஒரு தேர்வை எழுத வேட்டி-குர்தா தலையில் குல்லா அணிந்து சென்ற பண்டிட் ஜியை, மேற்கத்திய உடையணிந்து வந்த சக மாணவர்கள் ‘பண்டிட் ஜி’ என்று கிண்டல் செய்தனர். ஆனால், இதே பெயரில் தான் கோடிக்கணக்கான இந்திய மக்களால் மரியாதையோடும் மாண்போடும் பின்னாளில் அழைக்கப்பட்டார்.

இந்த தேர்விலும் தேர்வானவர்களில் பண்டிட் ஜியே முதலிடம் பெற்றார். மாமாவின் அனுமதியுடன் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பி.டி படிக்க பிரயாக் சென்ற அவர் அங்கும் ஆர்எஸ்எஸ் பணிகளைத் தொடர்ந்து சிரத்தையோடு மேற்கொண்டார். தொழில்நுட்பப்படிப்பை முடித்த பின்னர் 1942-ல் முழுநேர ஆர்எஸ்எஸ் ஊழியரான பண்டிட் ஜி, உ.பி. மாநில லக்கிம்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளராக தனது பணியை தொடர்ந்தார்.

லக்னோவில் 'ராஷ்ட்ர தர்ம பிரகாஷன்' எனும் பதிப்பகத்தை நிறுவிய பண்டிட் ஜி, 'ராஷ்ட்ர தர்மம்' எனும் மாதப்பத்திரிக்கையை வெளியிட்டு தான் புனிதமாக கருதும் தேசியத்தை உணர்வை பரப்பினார். இந்த பத்திரிகையின் ஆசிரியராக தனது பெயரை நிலை நிறுத்திகொள்வதை விட, தான் கொண்ட தேசிய சிந்தனையையும் கொள்கையையுமே பரப்பினர். மேலும், 'பஞ்சஜன்ய' எனும் வாரப்பத்திரிக்கையையும், 'ஸ்வதேஷ்' எனும் தினப்பத்திரிக்கையையும் தொடங்கி நடத்தினார்.

பண்டிட் ஜியின் பாரதிய ஜனசங்கத் தொண்டு

இக்காலகட்டத்தில், 1950-ல் முன்னாள் மத்திய மந்திரி, டாக்டர்.சியாம பிரசாத் முகர்ஜீ அவர்கள், நேரு-லியாகத் உடன்படிக்கையை எதிர்த்து, மந்திரி சபையில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பொதுவான ஜனநாயக சக்திகளின் முன்னணியை உண்டாக்கினார். அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த இளைஞர்களை கட்டமைத்து இந்த முன்னணியை அரசியல் மட்டத்துக்கு முன்னெடுத்து செல்ல, ஆர்எஸ்எஸ்ஸின், பரமபூஜனீய குருஜி ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வால்க்கர் அவர்களிடம் டாக்டர்.முகர்ஜீ உதவி கோரினார்.

இதுவரையில் ராஸ்ட்ரிய சுயம் சேவக் ஆக பணியாற்றிய பண்டிட் ஜி அவர்கள், குருஜி அறிவுறுத்தல் படி அரசியல் களத்தில் டாக்டர் முகர்ஜி உடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். செப்டம்பர் 21, 1951-ல் பண்டிட் தீன்தயாள்ஜி அவர்கள் உ.பியில் அரசியல் மாநாட்டை கூட்டி புதிய கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் மாநில அமைப்பை தொடங்கி அம்மாநில பொதுச்செயலாளரானார். இதன்பின் பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பொறுப்பையும் ஏற்றார்.

பண்டிட்ஜியின் திறனும் அர்ப்பணிப்பும் டாக்டர்.முகர்ஜியை வெகுவாக கவர்ந்தது. இதனாலேயே டாக்டர்.முகர்ஜி அவர்கள், “என்னிடம் இரண்டு தீன்தயாள் இருந்திருந்தால், இந்தியாவின் அரசியல்முகமே முழுவதுமாக மாறி இருக்கும்” என்று கூறுவார்.

1953-ல் டாக்டர்.முகர்ஜியின் எதிர்பாராத இறப்பைத் தொடர்ந்து, பாரதிய ஜனசங்கத்தின் முழு பொறுப்பும் பண்டிட் தீன்தயாள் ஜி அவர்கள் தோளில் விழுந்தது. இதன்பின் சுமார் பதினைந்து ஆண்டுகள் அகில இந்திய பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பாரதிய ஜனசங்கத்தை வலுவாக கட்டமைத்தார். தேசியத்தையும் அர்பணிப்பு உணர்வையும் கொண்ட தொண்டர்களை உருவாக்கினர்.

ஏகாத்ம மானவ வாதம்

கம்யுனிஸ்ட் சித்தாந்தம் மனிதனை இயந்திரமாக பார்த்தது.

மேற்கத்திய சித்தாந்தம் மனிதனை, அறிவும்-உடலும் கொண்ட சமூக விலங்காக பார்த்தது.

ஆனால், பண்டிட் ஜி அவர்கள் மனிதனை, உடல்-அறிவு-ஆத்மாவும் கொண்டவனாக பார்த்தார். தனி மனித ஆத்ம உணர்வுகள் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய முடியும் என்று நம்பினார். இதன் அடிப்படையிலேயே ஒன்றுபட்ட மனித தத்துவம் என்னும் “ஏகாத்ம மானவ வாதம்” என்ற அற்புதமான உலக தத்துவத்தை உருவாக்கினார். ஜனநாயகத்தின் அடிப்படை தர்மமே; மதமோ, அரசியல் சட்டமோ, நீதித்துறையோ தர்மத்தை விட உயர்ந்தது அல்ல; அரசியல் என்பது தர்மமாக இருக்க வேண்டும்; எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் கொண்டு தர்மத்தை கட்டுப்படுத்த முடியாது என்று உறுதியாக நம்பினார்.

பண்டிட் ஜி தலைமையில் ஜனசங்கம்

1968 ஆம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொரிக்கப்பட வேண்டிய நாள் வந்தது – அதுதான் நிகரில்லா தலைவரான, பண்டிட் தீன்தயாள்ஜி அவர்கள் தலைமைப்பொறுப்பேற்ற நாள்.

பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தெற்கிற்கும் பயணம் செய்து ஜன சங்கத்தின் செய்திகளை பரப்பினார். கோழிக்கோட் மாநாட்டில், எந்த ஒரு சாதிக்காகவோ அல்லது பிரிவினருக்காகவோ அல்லாமல், நாட்டிற்காகவே உழைக்க வேண்டும் என நாம் உறுதி கொள்ள வேண்டும்; நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நமது சொந்தமே! என்ற அற்புதமான உரையை நிகழ்த்தினார். இதன்பின் 1968, பிப்ரவரி 11-ம் தேதியின் இருண்ட இரவில் பண்டிட் தீன்தயாள்ஜி, எதிர்பாராத விதத்தில் மர்மமான முறையில் முகால்சரை ரயில்வே யார்டு பகுதியில் மரணத்தின் பிடியில் சிக்கினார்.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் நினைவைப் போற்றும் விதமாக பல நிறுவனங்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பண்டிட் தீனதயாள் உபாத்தியா சேகாவதி பல்கலைக்கழகம், சிகார், (இராஜஸ்தான்)

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சனாதன தர்ம பள்ளி, கான்பூர்

தீனதயாள் உபாத்தியாயா கோரக்பூர் பல்கலைக்கழகம்

தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, புதுதில்லி

பண்டிட் தீனதயாள் உபாத்தியா கல்விக்கூடம், கான்பூர்

தீனதயாள் உபாத்தியாயா கல்லூரி

தீனதயாள் உபாத்தியாயா பெட்ரேலியம் பல்கலைக்கழகம், காந்திநகர், குஜராத்

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மருத்துவக் கல்லூரி, ராஜ்கோட், குஜராத்.

தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, சிம்லா, இமாசலப் பிரதேசம் ...

இந்த நன்நாளில் அவரை வணங்கி நாம் அனைவரும் பெருமிதம் கொள்வோம்..

 

நன்றி இணையம்