பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா – வாழ்க்கை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:35 PM | Best Blogger Tips

 


பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா வாழ்க்கை வரலாறு

தீனதயாள் ஜி, பண்டிட் ஜி என்று நாம் பெருமையோடும் பாசத்தோடும் அழைக்கும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய அவர்கள், உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள மதுரா மாவட்டத்திலுள்ள நாகலா சந்தர்பான் என்னும் ஊரில் பிரிஜ் என்னும் புனிதஸ்தலத்தில் 1916 –ம் வருடம், செப்டெம்பர் மாதம் 25 ம் தேதி பிறந்தார்.

உபாத்யாய அவர்களின் தந்தையார் பகவதி பிரசாத், உதவி ஸ்டேஷன் மாஸ்டர் ஆக ஜாலேசரில் பணிபுரிந்தவர். தாயார் திருமதி ராம்பியாரி சிறந்த இறை பக்தியாளர்.

பண்டிட்ஜியின் பாட்டனாரான பண்டிட் ஹரிராம் உபாத்யாய ஜோதிட சாஸ்திரம் நன்கறிந்தவர்.

குடும்பத்தில் உள்ளோரால் தீனாஎன்று அழைக்கப்பட்ட பண்டிட் ஜி அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கப்பட்டதில் அவர் மிகச்சிறந்த சிந்தனைவியலாளராகவும், நாட்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துகொண்டு மாபெரும் தேசத்தலைவராகவும் உருவெடுப்பார் என்றும் அறியப்பட்டது.


இளைய சகோதரர் ஷிவ்தயாள் பிறந்தபிறகு, தனது மூன்று வயதில் தந்தையாரையும் எட்டு வயதில் தாயாரையும் இழந்தார். பதேபூர் சிக்ரி என்னும் ஊரில் இளைய சகோதரரோடு தனது தாய்வழி பாட்டனாரான சுன்னியால்ஜி சுக்லா அரவணைப்பில் வாழ்ந்த பண்டிட் ஜிக்கு பாட்டனார் பாசமும் நிலைக்கவில்லை. மகள் இறந்த துயரத்தில் வாழ்ந்த அவர் அடுத்த இரண்டே வருடங்களில் 1926-ல் இறந்தார். இதன்பிறகு தனது தாய்மாமனார் ராதாராமன் சுக்லா அவர்களால் பாசத்தோடு வளர்க்கப்பட்ட பண்டிட் ஜிக்கு இன்னொரு இழப்பும் அவருடைய இளைய சகோதரர் வடிவில் வந்தது. பாசத்தோடும் பாதுகாப்போடும் பண்டிட்ஜியால் அரவணைக்கப்பட்ட அவருடைய இளைய சகோதரர் சிவ்தயாள் சின்னம்மை நோயால் கடுமையாக தாக்கப்பட்டு 1934 ம் வருடம் நவம்பர் மாதம் தனது உயிரை இழந்தார்.

பதினெட்டு வயதிற்குள் தனது இரத்த உறவுகள் அனைவரையும் இழந்தார் பண்டிட் ஜி.

பண்டிட் ஜியின் பள்ளிபடிப்பு

சிகார் என்னும் ஊரில் தனது பள்ளிப்படிப்பை மேற்கொண்ட பண்டிட் ஜி, சிறந்த மாணவராக விளங்கியதோடு பள்ளிப்படிப்பில் சிறப்பாக தேர்ச்சி பெற்றதால் அவ்வூரின் ராஜாவான கல்யாண்சிங் அவர்களால் தங்கப்பதக்கம் மற்றும் ரூ.250 பணம் பரிசளிக்கப்பட்டதோடு மாதந்திர உதவித் தொகையாக பத்து ரூபாய் பெறத் தொடங்கினார்.

இதன் பின்னர் கான்பூரில் சனாதன் தர்மா கல்லூரியில் பி.ஏ(கணக்கு) பட்டபடிப்பை மேற்கொண்ட பண்டிட்ஜிக்கு, அவருடைய நண்பர் பல்வந்த் மகாஷப்தே மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னையும் இணைத்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பரமபூஜன்ய டாக்டர்.ஸ்ரீ ஹெட்கவார் அவர்களை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார். கான்பூரில் உடன் படித்த ஸ்ரீ சுந்தர் சிங் பண்டாரி அவர்கள் நட்பும் கிடைத்தது. 1937-ல் பி.ஏ பட்ட படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றபின் ஆக்ராவில் எம்.ஏ பட்டபடிப்பை தொடங்கினார்.

ஆர்.எஸ்.எஸ்.-ல் தீவிர பணியாற்றுதல்

நானாஜி தேஷ்முக் மற்றும் ஸ்ரீ பாகு ஜுகாதே போன்ற மாமனிதர்களோடு இணைந்து பண்டிட் ஜி அவர்கள் தீவிர சங்கப்பணியாற்றத் தொடங்கினார். இந்த காலகட்டத்திலும் பண்டிட் ஜிக்கு இன்னொரு சொந்தத்தையும் இழக்க நேரிட்டது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆக்ராவில் சிகிச்சை மேற்கொண்ட அவருடைய உறவினரான ரமாதேவி என்பவரும் நோயின் பிடியில் சிக்கி உயிரிழந்தார். இதனால் கடும் மனவேதனை அடைந்த பண்டிட் ஜியால் தனது எம்.ஏ படிப்பையும் தொடர முடியாமல் போனது. இதனால் சிகார் மகராஜாவிடமிருந்து பெற்ற உதவிதொகையையும் இழந்தார். இதன்பிறகு அரசாங்க வேலை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கான ஒரு தேர்வை எழுத வேட்டி-குர்தா தலையில் குல்லா அணிந்து சென்ற பண்டிட் ஜியை, மேற்கத்திய உடையணிந்து வந்த சக மாணவர்கள் பண்டிட் ஜிஎன்று கிண்டல் செய்தனர். ஆனால், இதே பெயரில் தான் கோடிக்கணக்கான இந்திய மக்களால் மரியாதையோடும் மாண்போடும் பின்னாளில் அழைக்கப்பட்டார்.

இந்த தேர்விலும் தேர்வானவர்களில் பண்டிட் ஜியே முதலிடம் பெற்றார். மாமாவின் அனுமதியுடன் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பி.டி படிக்க பிரயாக் சென்ற அவர் அங்கும் ஆர்எஸ்எஸ் பணிகளைத் தொடர்ந்து சிரத்தையோடு மேற்கொண்டார். தொழில்நுட்பப்படிப்பை முடித்த பின்னர் 1942-ல் முழுநேர ஆர்எஸ்எஸ் ஊழியரான பண்டிட் ஜி, உ.பி. மாநில லக்கிம்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளராக தனது பணியை தொடர்ந்தார்.

லக்னோவில் 'ராஷ்ட்ர தர்ம பிரகாஷன்' எனும் பதிப்பகத்தை நிறுவிய பண்டிட் ஜி, 'ராஷ்ட்ர தர்மம்' எனும் மாதப்பத்திரிக்கையை வெளியிட்டு தான் புனிதமாக கருதும் தேசியத்தை உணர்வை பரப்பினார். இந்த பத்திரிகையின் ஆசிரியராக தனது பெயரை நிலை நிறுத்திகொள்வதை விட, தான் கொண்ட தேசிய சிந்தனையையும் கொள்கையையுமே பரப்பினர். மேலும், 'பஞ்சஜன்ய' எனும் வாரப்பத்திரிக்கையையும், 'ஸ்வதேஷ்' எனும் தினப்பத்திரிக்கையையும் தொடங்கி நடத்தினார்.

பண்டிட் ஜியின் பாரதிய ஜனசங்கத் தொண்டு

இக்காலகட்டத்தில், 1950-ல் முன்னாள் மத்திய மந்திரி, டாக்டர்.சியாம பிரசாத் முகர்ஜீ அவர்கள், நேரு-லியாகத் உடன்படிக்கையை எதிர்த்து, மந்திரி சபையில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பொதுவான ஜனநாயக சக்திகளின் முன்னணியை உண்டாக்கினார். அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த இளைஞர்களை கட்டமைத்து இந்த முன்னணியை அரசியல் மட்டத்துக்கு முன்னெடுத்து செல்ல, ஆர்எஸ்எஸ்ஸின், பரமபூஜனீய குருஜி ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வால்க்கர் அவர்களிடம் டாக்டர்.முகர்ஜீ உதவி கோரினார்.

இதுவரையில் ராஸ்ட்ரிய சுயம் சேவக் ஆக பணியாற்றிய பண்டிட் ஜி அவர்கள், குருஜி அறிவுறுத்தல் படி அரசியல் களத்தில் டாக்டர் முகர்ஜி உடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். செப்டம்பர் 21, 1951-ல் பண்டிட் தீன்தயாள்ஜி அவர்கள் உ.பியில் அரசியல் மாநாட்டை கூட்டி புதிய கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் மாநில அமைப்பை தொடங்கி அம்மாநில பொதுச்செயலாளரானார். இதன்பின் பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பொறுப்பையும் ஏற்றார்.

பண்டிட்ஜியின் திறனும் அர்ப்பணிப்பும் டாக்டர்.முகர்ஜியை வெகுவாக கவர்ந்தது. இதனாலேயே டாக்டர்.முகர்ஜி அவர்கள், “என்னிடம் இரண்டு தீன்தயாள் இருந்திருந்தால், இந்தியாவின் அரசியல்முகமே முழுவதுமாக மாறி இருக்கும்என்று கூறுவார்.

1953-ல் டாக்டர்.முகர்ஜியின் எதிர்பாராத இறப்பைத் தொடர்ந்து, பாரதிய ஜனசங்கத்தின் முழு பொறுப்பும் பண்டிட் தீன்தயாள் ஜி அவர்கள் தோளில் விழுந்தது. இதன்பின் சுமார் பதினைந்து ஆண்டுகள் அகில இந்திய பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பாரதிய ஜனசங்கத்தை வலுவாக கட்டமைத்தார். தேசியத்தையும் அர்பணிப்பு உணர்வையும் கொண்ட தொண்டர்களை உருவாக்கினர்.

ஏகாத்ம மானவ வாதம்

கம்யுனிஸ்ட் சித்தாந்தம் மனிதனை இயந்திரமாக பார்த்தது.

மேற்கத்திய சித்தாந்தம் மனிதனை, அறிவும்-உடலும் கொண்ட சமூக விலங்காக பார்த்தது.

ஆனால், பண்டிட் ஜி அவர்கள் மனிதனை, உடல்-அறிவு-ஆத்மாவும் கொண்டவனாக பார்த்தார். தனி மனித ஆத்ம உணர்வுகள் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய முடியும் என்று நம்பினார். இதன் அடிப்படையிலேயே ஒன்றுபட்ட மனித தத்துவம் என்னும்ஏகாத்ம மானவ வாதம்என்ற அற்புதமான உலக தத்துவத்தை உருவாக்கினார். ஜனநாயகத்தின் அடிப்படை தர்மமே; மதமோ, அரசியல் சட்டமோ, நீதித்துறையோ தர்மத்தை விட உயர்ந்தது அல்ல; அரசியல் என்பது தர்மமாக இருக்க வேண்டும்; எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் கொண்டு தர்மத்தை கட்டுப்படுத்த முடியாது என்று உறுதியாக நம்பினார்.

பண்டிட் ஜி தலைமையில் ஜனசங்கம்

1968 ஆம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொரிக்கப்பட வேண்டிய நாள் வந்தது அதுதான் நிகரில்லா தலைவரான, பண்டிட் தீன்தயாள்ஜி அவர்கள் தலைமைப்பொறுப்பேற்ற நாள்.

பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தெற்கிற்கும் பயணம் செய்து ஜன சங்கத்தின் செய்திகளை பரப்பினார். கோழிக்கோட் மாநாட்டில், எந்த ஒரு சாதிக்காகவோ அல்லது பிரிவினருக்காகவோ அல்லாமல், நாட்டிற்காகவே உழைக்க வேண்டும் என நாம் உறுதி கொள்ள வேண்டும்; நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நமது சொந்தமே! என்ற அற்புதமான உரையை நிகழ்த்தினார். இதன்பின் 1968, பிப்ரவரி 11-ம் தேதியின் இருண்ட இரவில் பண்டிட் தீன்தயாள்ஜி, எதிர்பாராத விதத்தில் மர்மமான முறையில் முகால்சரை ரயில்வே யார்டு பகுதியில் மரணத்தின் பிடியில் சிக்கினார்.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் நினைவைப் போற்றும் விதமாக பல நிறுவனங்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பண்டிட் தீனதயாள் உபாத்தியா சேகாவதி பல்கலைக்கழகம், சிகார், (இராஜஸ்தான்)

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சனாதன தர்ம பள்ளி, கான்பூர்

தீனதயாள் உபாத்தியாயா கோரக்பூர் பல்கலைக்கழகம்

தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, புதுதில்லி

பண்டிட் தீனதயாள் உபாத்தியா கல்விக்கூடம், கான்பூர்

தீனதயாள் உபாத்தியாயா கல்லூரி

தீனதயாள் உபாத்தியாயா பெட்ரேலியம் பல்கலைக்கழகம், காந்திநகர், குஜராத்

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மருத்துவக் கல்லூரி, ராஜ்கோட், குஜராத்.

தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, சிம்லா, இமாசலப் பிரதேசம் ...

இந்த நன்நாளில் அவரை வணங்கி நாம் அனைவரும் பெருமிதம் கொள்வோம்..

 

நன்றி இணையம்