சுவாமி விவேகானந்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips

 





சுவாமி விவேகானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்* 2

- _சுவாமி ஆசுதோஷானந்தர்_

09.09.2021. பதிவு ( 51 )

அத்தியாயம் 36

கல்கத்தாவில்

*விஜய கிருஷ்ண கோசுவாமியுடன்*

பிரம்மானந்தரிடம் கூறியது போலவே சுவாமிஜி ஒரு நாள் விஜயரின் வீட்டிற்குச் சென்றார் . சுவாமிஜி சென்றதும் இருவரும் ஒருவருக்கொருவர் நீண்ட நேரம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர் . பிறகு விஜயர் , ' ஜெய் ராமகிருஷ்ணா ! உங்கள் உள்ளிருந்து குருதேவரே எல்லாவற்றையும் செய்கிறார் . நான் டாக்காவில் பூஜை செய்து கொண்டிருந்தேன் . எனக்கெதிரே அவரை உயிருணர்வுடன் கண்டேன் . என்னால் அவரைத் தொடக்கூட முடிந்தது . தட்சிணேசுவரத்திற்குச் சென்றபோது பஞ்சவடியிலும் அவரது அறையிலும் தரிசனம் பெற்றேன்' என்றார் . அதற்கு சுவாமிஜி , 'ஆம் . நானும் மேலை நாட்டில் இதுபோல் பல தரிசனங்கள் பெற்றேன் . என்னுள் இருந்து அவரே வேலை செய்கிறார் , நான் கருவி மட்டுமே என்பதை என் உள்ளத்தில் உணர்ந்தேன் ' என்றார் .

இவ்வாறு பேச்சு தொடர்ந்தது . சுவாமிஜி தமது செயல் திட்டங்களையெல்லாம் அவரிடம் கூறிவிட்டு , 'நீங்கள் பெரியவர் , குருவிற்குச் சமமாகப் போற்றத்தக்கவர் . எனது திட்டங்கள் எல்லாம் விரைவில் கைகூட வேண்டும் என்று ஆசீர்வதியுங்கள்' என்றார் . அதற்கு விஜயர் , ' நினைப்பதை நிறைவேற்றும் வல்லமை பெற்றவர் நீங்கள் . நீங்கள் எது நினைத்தாலும் அது நடக்கும் . இந்த உங்கள் திட்டங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல ; உண்மையில் இவற்றை உங்களிடம் குருதேவரே

தோற்றுவிக்கிறார் ' என்றார் .

இவ்வாறு நீண்ட நேரம் அவர்கள் இருவரும் குருதேவர் மற்றும் பழைய நாட்களின் நினைவுகளில் மிதந்தனர் .

பிப்ரவரி 28 - ஆம் நாள் சுவாமிஜிக்கு ராஜா சர் ராதாகாந்த் தேவ் பகதூரின் பெரிய மாளிகையில் பொது வரவேற்பு அளிக்கப்பட்டது . உள்ளே செல்வதற்கு அனுமதிச் சீட்டு வைக்கப்பட்டிருந்தது . கட்டணம் இல்லை எனினும் முன்பே அனுமதிச் சீட்டு பெற்றிருப்பது தேவையாக இருந்தது . ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தனர் . வரவேற்பு உரைகள் வாசித்து , வெள்ளிப் பேழைகளில் வழங்கப்பட்டன . சுவாமிஜி பதிலுரை அளித்தார் . அதைத் தொடர்ந்து கல்கத்தாவில் சில சொற்பொழிவுகள் நிகழ்த்தினார் அவர்.

( ஜெய் ஸ்ரீ சுவாமிஜி மஹராஜ் ).

நன்றி இணையம்