காலம் தந்த தீர்க்கதரிசி !

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:39 | Best Blogger Tips

 




கருணாநிதி, இந்திரா முதல் எதிர்த்து பேசினாலே கொல்லும் விடுதலைப்புலிகள் வரை கிழித்து தொங்கவிட்டவர் இவர்தான்.

அரசியலில் இருந்தார் அரைகாசு ஊழல் செய்தார் என எதிரியும் சொல்லமுடியாது, பத்திரிகையாளனாய் இருந்தார் தரம்குறைத்து எழுதினார் என ஒரு வார்த்தை சொல்லமுடியாது

கலைதுறையிலும் இருந்தார் ஒரு கிசுகிசு கூட யாரும் முணுமுணுக்க முடியாது

இந்துமதம் பற்றி எழுதினார் அது மதவெறி என எந்த கொம்பனும் ஒரு புள்ளி கூட வைக்க முடியாது

அவர் ஒரு வரம், காலம் தந்த #தீர்க்கதரிசி.!

அந்த பெருமகன் இருள் சூழ்ந்த காலத்தின் விடிவெள்ளி, கரு நாகங்களும் சுழலும் வாள்களும் கழுத்தருகே சுற்றிய காலத்திலும் அஞ்சாத மாவீரன், தமிழகத்தில் மானமும் அறிவும் கொண்ட இந்துகுரலாக ஒலித்த ஆலயமணி

தமிழகத்தின் வீரசிவாஜியும் அவனே,

ஆழ்வாரும் அவனே,

இரண்டாம் சாணக்கியனும் அவனே,

தெனாலி ராமனும் அவனே

தமிழகம் கண்ட ஒப்பற்ற அறிவாளி, மிக நாகரீகமான பத்திரிகையாளன், அப்பழுக்கற்ற தேசபக்தன், மிக சிறந்த இந்து, கலகலப்பான நடிகன் , சுவாரஸ்யமான மனிதன் என ஏகபட்ட முகங்கள் அவருக்கு உண்டு

இன்று இந்துத்வாவினை பேசுவது எளிது, திராவிட கும்பலை எதிர்ப்பது மகா எளிது,

காரணம்....

தற்போது மாறிவிட்ட காலங்கள், பாஜகவின் எழுச்சி, இந்துக்களின் மத அபிமானமெல்லாம் வந்துவிட்ட காலங்கள்.

அதுபோக சமூக வலைதளம் முதல் ஏகபட்ட காவலும் பாதுகாப்பும் உண்டு

ஆனால் அக்காலம் அப்படி அல்ல, காமராஜரையே வீழ்த்தி திராவிட கும்பல் இங்கே வெற்றிமேல் வெற்றி பெற்று கொண்டிருந்தது, தேசம் முழுக்க கம்யூனிஸ்டுகள் பலமாய் இருந்தார்கள்

காங்கிரஸ் எனும் அகில இந்திய திமுகவும் சிறுபான்மை, சமதர்மம் என திமுகவின் கொள்கையோடு துதிபாடிய காலம் அது

அப்பொழுதெல்லாம் தமிழகத்தில் இந்து என சொன்னாலே பரிகசிப்பார்கள், இந்துத்வா பேச்சோ எழுத்தோ எல்லாம் யாரும் நினைக்கமுடியா காலம்

திருமுருக கிருபானந்தவாரியே தாக்கபட்ட காலமும் உண்டு

அந்த காலங்களில்தான் ராமர் படத்தை செருப்பால் அடித்த சர்ச்சையெல்லாம் வந்தது, இந்துக்களுக்கு இனி யாருமில்லை என்ற அவலம் வந்தது

டெல்லி காங்கிரசும் தமிழகத்தை கைகழுவ தொடங்கி இருந்தது

அப்பொழுதுதான் சோ ராமசாமி எனும் #யுகபுருஷன் எழுந்தார். இங்கே திராவிடம் அங்கே காங்கிரஸ் என இரு பெரும் தேசவிரோதிகளை எதிர்த்து அவன் எழுத தொடங்கினார்

ஆயிரமாயிரம் மிரட்டல்கள், வழக்குகள் என எதிர்ப்பு இருந்தாலும் அவர் சொன்ன #உண்மையும் அதை நயம்பட சொன்ன அந்த நகைச்சுவை பாணியும் பெரும் ஆதரவினை கொடுத்தன, மக்கள் ரகசியமாக அவரை கொண்டாடினார்கள்

கருணாநிதி, இந்திரா, முதல் எதிர்த்து பேசினாலே கொல்லும் விடுதலைப்புலிகள் வரை கிழித்து தொங்கவிட்டவர் அவர்தான்

தமிழகத்தில் தேசபக்தன் எப்படி இருக்க வேண்டும்,

இந்து எப்படி இருக்க வேண்டும் ,

நல்ல பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டிய உதாரண புருஷன் அவர்.

நகைச்சுவை நடிகர், நடிகர்களில் முதன் முதலாக அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை எம்.ஆர் ராதா தொடங்கி வைத்தாலும், பின்னாளில் அதனை உச்சமாக்கினவர் சோ ராமசாமி அவர்தான் தொடங்கி வைத்தார்

கட்டுகடங்காத பொய்களும், இன்னும் பலவிதமான ஏமாற்றுவேலைகளும் பெருகிய காலத்தில் அவர் குரல் உண்மையினை ஓங்கி ஒலித்தது

காங்கிரஸ் அவருக்கு பிடிக்காது எனினும், காமராஜருக்கு அவர் பக்கபலமாக நின்றதை மறுக்கமுடியாது. இவ்வளவிற்கும் காமராஜர் சோவின் நாடகங்களை தடை செய்த காலமும், அதை எதிர்த்து சோ வெற்றிபெற்று பின் காமராஜரையே அழைத்து வைத்து நாடகம் நடத்திய காட்சிகளும் உண்டு.

காமராஜரை முழுக்க புரிந்தவர் சோ, அதனால்தான் அவர் இறந்த அன்று, இந்திராவும் கருணாநிதியும் காமராஜர் உடல் அருகே நின்றபொழுது ஆத்திரத்தின் உச்சியில் எழுதினார் சோ

"யார் காமராஜரை கொன்றார்களோ அவர்களே அஞ்சலியும் செலுத்துகின்றார்கள்".... என அவர் எழுதிய வரிகள் சாகா வரம் பெற்றவை.

நல்ல அறிவாளியும், சிந்தனையாளரும், தொலைநோக்கு பார்வையும் எல்லாவற்றிற்கும் மேல் மிகுந்த #தைரியமும் கொண்ட எழுத்தாளர் அவர்

திமுக புரட்சி காலம், மிசா காலம், புலிகள் கொலைக்கார காலம் என எல்லாவற்றிலும் அவரின் பேனா சீறிகொண்டே இருந்தது

எல்லாவற்றையும் விட மேலாக வணங்க வேண்டியது அவரின் #நாட்டுபற்று

திராவிட போலிகள் பிரிவினை வாதம் அது இது என பேசும்பொழுது, பகுத்தறிவு பேசும்பொழுது....

அவர் பாரம்பரியமாக கட்டமைக்கப்பட்ட மத நம்பிக்கை பேசினார்

அவர் கொடுத்த துணிச்சலின் பேரிலே கண்ணதாசன் போன்றவர்கள் பின் அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற காவியங்களை எழுத முடிந்தது, ஜெயகாந்தன் போன்றோர் #தேசியம் பேச முடிந்தது.

அவரிடம் மத நெறி உண்டே தவிர மதவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது, இந்துமதத்தை சாடியே வளர்த்த போலிகளை அவர் கண்டித்து, கிண்டலடித்து உண்மையினை எழுதினார்

இன்றுவரை அவர் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு #இதுவரை எந்த பகுத்தறிவாளனிடமும் பதில் இல்லை

பிராமணன் எங்கே ஆண்டான், ஒரு பிராமண அரசனை காட்டுங்கள் என அவர் கேட்டதற்கும், ராமன் சத்திரியன் கண்ணன் வேறு சாதி ஆனாலும் இந்துமதம் அவர்களை கடவுளாக காட்டவில்லையா என கேட்டதற்கும் யாரிடமும் பதில் இல்லை

புலிகளை தமிழகம் கொண்டாடிய போது....

1986லே எச்சரித்தது அவர்தான், பெரும் தைரியமாக அவர்களை எதிர்த்து எழுதினார்.

அவர் வீட்டுக்கு மிக அருகில்தான் பத்மநாபா கொலை நடந்தது, அப்பொழுதும் அவர் புலிகளை கண்டித்து எழுதினார்

பின்னாளில் அவர் கணித்து எழுதியதுதான் நடந்தது, புலிகள் அழிந்தும் போயினர்

பத்மநாபா அஞ்சலியின் பொழுது இன்னமும் பொறுங்கள் பல அஞ்சலிகளை செய்யவேண்டி இருக்கின்றது என அவர் எச்சரித்த பின்புதான் ராஜிவ் கொலை எல்லாம் நடந்தது.

இவ்வளவிற்கும் கொழும்பு சென்று சிங்கள அரசிடம் தமிழர்களுக்காக வாதாடியவர் சோ. சிங்கள அடக்குமுறை இன்னும் பல புலிகளை உருவாக்கும் என தீர்க்கமாக சொன்னவர் அவர்

ஜெயவர்த்தனவேவினை தமிழக பத்திரிகையாளர் சந்தித்து உண்மை அறிய முயன்றார் என்றால் அது சோ ராமசாமி ஒருவர்தான்.

மிக சிறந்த தமிழக அறிவாளி சோ என்பதில் மாற்று கருத்தே இல்லை..

இவர் ஒரு அரசியல் சாணக்கியன்.

சாணக்கியன் இன்ன்னொருவனை திறம்பட உருவாக்குவானே தவிர தான் சென்று சிம்மாசனத்தில் அமரமாட்டான்

அப்படி சாணக்கியன் சோவினால் உருவாக்கபட்டவர் தான் மறைந்த #ஜெயலலிதா, இந்திரா ஜெயலலிதாவினை கொண்டாட முதல் காரணமாக இருந்தது சோ எழுதிகொடுத்த எழுத்துக்கள்.

ஜெயலலிதா பிரகாசிக்க அவரும் காரணம்,

பின்பு தமாகா அமையவும் அவரே காரணம்,

பின்பு விஜயகாந்தினை எதிர்கட்சி தலைவர் என அமர வைத்ததிலும் சோ பங்கு உண்டு

தமாகா உருவானதிலும் அவருக்கு நிச்சயம் பங்கு உண்டு

வயது இருந்திருந்தால் நிச்சயம் இன்னொரு அரசன் அல்லது அரசியினை அவர் உருவாக்கி கொடுத்திருப்பார், ரஜினிகாந்தே இப்பொழுது சோ இருந்திருந்தால் ஆயிரம் யானை பலம் எனக்கிருக்கும் என சொன்ன செய்தி சாதாரண விஷயம் அல்ல.

எத்தனை அரசியல் பத்திரிகைகள் வந்தாலும் துக்ளக் இடமே தனி, இன்னொரு பத்திரிகையாளன் இவ்வளவு துணிச்சலாக வரமாட்டான், வந்தாலும் சோ சொல்லும் விதத்தின் நக்கலும் அழகும் ஆழமும் இன்னொருவருக்கு வராது.

கருணாநிதியினை அவர் காய்ச்சி எடுத்தது போல இன்னொருவன் எழுத முடியாது, ஆனால் இருவரும் அவ்வப்போது சந்திப்பார்கள்.

சோ ராமசாமி தன் "அண்ணாயிசம்" கொள்கையினை கிழிப்பதை கண்டு....

அதை நினைப்பதை மறந்தே விட்டார் எம்.ஜி.ராமசந்திரன்.

சோவின் ஏராளமான நகைச்சுவை தெறிப்புகள் வந்து போகின்றன,

#தமிழுணர்வை இப்போது வெளிப்படுத்த ஒரே வழி புலிகளை ஆதரிப்பது என அவர் சொன்னபொழுது சிரிக்காதோர் யாருமில்லை

இன்னும் ஏராளமான பேட்டிகள், கவிஞர் கனிமொழி பற்றி என கேட்டபொழுது....

"நானும் மனோரமாவுடன் சேர்ந்து ஆடிய நடனங்களுக்கு நானே பாடெழுதியிருக்கேன் ஸ்ஸ்க்கு ஸ்ஸ்கு இஸ்கானா என , என்னையும் கவிஞர் என அழையுங்கள்" என அவர் சொன்னபொழுது ஊரே விழுந்து விழுந்து சிரித்தது.

"சீனா பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுப்பது கவலையே இல்லை, காரணம் சீன தயாரிப்பு பற்றி எல்லோருக்கும் தெரியும், ஆனால் அமெரிக்கா கொடுத்தால் நாம் கவனமாக இருக்க வேண்டும்.." என சொன்ன இடமாகட்டும்

கம்யூனிஸ்டுகள் மாஸ்கோவில் மழை பெய்தால் சென்னையில் குடை பிடித்த காலத்தில், "கருப்பு பணம் போல சிகப்பு பணமும் இருக்கும் போல.." என சொன்னதாகட்டும் , தனித்து நின்றார் சோ.

ஏராளமான எழுத்துக்கள், #அர்த்தமுள்ள வாதங்கள், #குறும்பான பதில்கள்.

தமிழகத்தில் இது ஒரு வகையான உதிர் காலம், பெரும் மரங்கள் எல்லாம் சாய்ந்து பெரும் வெற்றிடம் உருவாகிகொண்டிருக்கின்றது

அம்மரங்களில் இளைபாறிகொண்டிருந்த பறவைகள் எல்லாம் கதறிகொண்டு எதிர்காலம் தெரியாமல் கலங்கி திரிகின்றன‌

சோ ராமசாமி இல்லாத அரசியல் பக்கங்களை படிக்கவே மனம் ஒப்பவில்லை, இதில் மு,க ஸ்டாலின் முழக்கங்கள் என்றொரு பக்கம் வருகின்றது , ஒரு பக்கம் உதயநிதியின் தீர்க்க தரிசனம் என ஒரு கோஷ்டி வருகின்றது

அத்தோடு அந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டு ஓடிவிடலாம் போலிருக்கின்றது

அன்று அவரின் "#முகமது_பின்_துக்ளக்" நாடகம்தான்...

#இன்று தமிழக அரசாங்கமாகவே நடக்கின்றது.

தங்க பதக்கத்து வைகை வளவனை மறக்க முடியுமா?

தன் பணக்கார திமிர்பிடித்த தகப்பன் வேலைகாரர்களை படுத்தும் பாட்டை கண்டு, காரில் செல்லும்பொழுது டிரைவரை பிடித்து "டேய் எங்கப்பா முன்னால சரிக்கு சமம் அமர்ந்து வண்டியோட்ட எவ்வளவு தைரியம் ராஸ்கல், எழுந்து நின்று காரோட்டு" என மிரட்டிய காட்சி.

அந்தக் காட்சிதான் தற்போது தமிழக அரசியலில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

அதே நேரத்தில்...

இந்திராகாலத்தில் இருந்து 🇮🇳#இந்நாட்டுக்கு எது எது #அவசியம் என சோ சொல்லி கொண்டே இருந்தாரோ அதை எல்லாம் தற்போது திரு #மோடி அவர்கள் செய்து கொண்டே இருக்கின்றார்.

மோடிக்கு குஜராத் கலவரத்தையொட்டி பெரும் கரும்பிம்பம் தமிழக பத்திரிகளைகளால் சூட்டபட்ட பொழுது மோடியினை தமிழகத்துக்கு அழைத்து வந்து....

இவரால் ஒருநாள் 🇮🇳பாரதம் #தலை_நிமிரும் என சொன்னவர் சோ

மோடி மரணவியாபாரி என சோனியா குற்றம்சாட்டியபொழுது,

ஆம் #ஊழகுக்கு மரணம் கட்டும் வியாபாரி என சோ பதிலுக்கு சீறி சொன்னார்

இன்று சோ ராமசாமி சொன்னதுதான் நடந்தது, இதுதான் தீர்க்க தரிசனம்

தமிழகம் கண்ட மிகசிறந்த நாட்டுபற்றுமிக்க பத்திரிகையாளரும், தன் கருத்துக்களை கொஞ்சமும் அச்சமின்றி இறுதிவரை சொன்ன, போலிகளை தோலுரித்துகாட்டிய‌ பத்திரிகையாளரும் இன்றுவரை அவர் ஒருவர்தான்

பகுத்தறிவினை காட்டி அரசியலை பலர் ஆட்டிபடைத்தபொழுது உண்மையான பகுத்தறிவு பேசி மக்களை சிந்திக்க சொன்ன பெரும் "#பகுத்தறிவு_பகலவன்" சோ ராமசாமி ஒருவரே..

அப்படி ஒரு தைரியமும் அறிவும் இனி எந்த பத்திரிகையாளனுக்கும் நடிகனுக்கும் வரப்போவதே இல்லை.

ராமர்கோவில் அடிக்கல் நாட்டபட்ட நிலையில் சோ ராமசாமிக்கு கூடுதல் நிறைவுடன் அஞ்சலி செலுத்தவேண்டியது கடமை

காஷ்மீர் இணைப்பை அவர் வலியுறுத்தினார், அமெரிக்க நல்லுறவை அவர் எக்காலமும் தேவை என சொல்லி கொண்டே இருந்தார்

இதுதான் பலமான இந்தியாவுக்கு வழிவகுக்கும், முழுமையாக ரஷ்ய பிடியில் இந்தியா சிக்குவது நல்லது அல்ல என எச்சரித்தார்

👉அவர் சொன்ன #வழியில்தான் 🇮🇳தேசம் #பலம் பெற்றிருக்கின்றது

அவரின் எழுத்தும் பேச்சும் 1950 முதல் 2015 வரை தமிழகம் பயணித்த அரசியல் வரலாற்றின் தொகுப்புகள், எக்காலமும் கல்வெட்டு போல் அவை உண்மை பேசி கொண்டே இருக்கும்

ஒரு காலம் வரும், அப்பொழுது சோ ராமசாமியும் அவர் சொன்ன உண்மையும் நிலைத்து ஒளிவீசும், திராவிட பொய்களும் அதை சொன்னவர்களும் வரலாற்றில் மறைந்தே போவார்கள்

சோ ராமசாமியின் தேசாபிமான சிந்தனையும் எழுத்தும் ஒரு காலம் இங்கே பள்ளி பாடத்தில் வரும், கட்டாயம் வரும், காலம் வழிவிடும்

கொலைமிரட்டலுக்கும் உயிருக்கும் அஞ்சாமல் உண்மையினை பேசி நின்ற அரிசந்திரனின் சாயல் அவர், ஒரு தவமுனியின் அம்சம் அவர்

அவரை நினைத்து வணங்காமல் தேசாபிமான எழுத்தும் இந்து எழுத்தும் வராது, வந்தாலும் நிலையாது. தேசமும் தெய்வீகமும் எழுதும் எல்லோருக்கும் அவர் எக்காலமும் வழிகாட்டி.

துக்ளக்கின் எழுத்துக்கள் இந்திய அரசியல் வரலாற்றை வெகு எளிதாக பதிந்து வைத்திருக்கும் பொக்கிஷம் அது.

அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததற்காக சந்தோஷபடலாம்.

இன்று சோ ராமசாமி பிறந்தநாள்.

நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டு , நிறைவாக எழுதிவிட்டு நாட்டுபற்றும் அதற்குரிய எழுத்தும் எப்படி இருக்கவேண்டும் என தேசத்திற்கு வழிகாட்டிய தீர்க்கதரிசி சோ அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.✨🙏🌺🌿



நன்றி இணையம் 

Courtesy

Stanley Rajan ji ✨

Edited